Home » சிறுகதைகள் » இதை விடப் பகை எது ?
இதை விடப் பகை எது ?

இதை விடப் பகை எது ?

ஆபீஸை விட்டு வெளியே வரும் போது மழை சோ வெனப் பெய்யத் தொடங்கியது. ஏற்கனவே பாஸிடம் திட்டு வாங்கியதில் மூடு-அவுட் ஆகியிருந்த மாறன் இன்னும்எரிச்சலடைந்தான். இன்றைக்கு பார்த்து குடை கொண்டுவர மறந்து விட்டான்.நனைந்து ஈரமாகி விட்ட உடம்பை வேகமாக வீசிய குளிர் காற்று நடுங்க வைத்தது.எதிரே வேகமாக வந்த ஆட்டோ ஒன்று தேங்கியிருந்த சேற்றை வாரி தலை முதல் கால் வரை இறைத்து விட்டுப் போய் விட்டது. ஆட்டோக் காரனை திட்டிக் கொண்டேகோபத்தின் உச்சத்தில் வீட்டிற்குள் நுழைந்தான்.

ஏங்க குடையை எடுத்து போக வேண்டியது தானே என்று மனைவி எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றினாள். அப்பா ! இதப் பாருங்களேன் ! என்று ஓடி வந்த ஐந்து வயது மகள் திவ்யா அப்படியே கட்டிக் கொண்டாள். ஏய் ! சனியனே ! ஏன் வந்ததும் வராததுமா மேல வந்து விழறே ? என்று கோபத்துடன் கத்தவே பயந்து போய் தள்ளி நின்றாள். மனைவியும் உள்ளே போய் விட்டாள்.

வென்னீரில் குளித்து உடை மாற்றிய பின் கோபமெல்லாம் தணிந்து போயிருந்தது.மனைவி சூடாக காபியைக் கொடுத்து விட்டு அருகில் அமர்ந்தாள். “திவ்யா வகுப்பில் முதல் ரேங்க் எடுத்திருக்கிறாள் ! அதைச் சொல்லத்தான் ஓடி வந்தாள்” என்றதும் மாறனுக்கு மனதை என்னவோ செய்தது. பாவம் குழந்தை ! சே ! என்ன மனுஷன் நான் ? யார் யார் மீதோ இருக்கும் கோபத்தில் என்ன ஒரு முட்டாள்தனம் செய்து விட்டேன். ஒரு தவறும் செய்யாத அந்த பிஞ்சு மனசை இப்படி நோகடித்து விட்டேனே !

திவ்யா எங்கே ? பெட் ரூமில் தரையில் உட்கார்ந்து அந்தப் பக்கம் திரும்பியபடி பாடம் படித்துக் கொண்டிருந்தாள். மாறன் மெல்ல பின் புறமாக சென்று அவளை அலேக்காக தலைக்கு மேலே தூக்கி அப்படியே சுற்றினான். அப்பா ! அப்பா ! அப்பா ! என்று பயமும் சந்தோஷமும் கலந்து திவ்யா கத்தவே அடுப்படியில் இருந்து மனைவி எட்டிப் பார்த்து புன்னகத்தாள்.

அந்த வீட்டில் சிரிப்பும், மகிழ்ச்சியும் மீண்டும் தலை தூக்கியது.

இதைத்தான் திருவள்ளுவர் 304 வது குறளில் இப்படி சொல்லியிருக்கிறார்.

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற – (304)

பொருள் : சிரிப்பையும்மகிழ்ச்சியையும் கொல்லக்கூடிய கோபத்தை விட கொடிய பகைவன் வேறு ஏதாவது உண்டா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top