‘குணா, ஏன் கோவமா பேசுறீங்க..?’ என்று மறுமுனையில் குணாவை தாஸ் சமாதானப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தான்.
‘பின்ன என்ன உங்கிட்ட கொஞ்சுவாங்களா..?’ என்று குணா கோபம் குறையாமல் பேசினான்.
‘ப்ளீஸ் குணா, காம் டவுன்…’
‘யோவ், நீ அந்த கோவில்ல விட்டுட்டு போனதும், ஒரு மணி நேரம், கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரி ஆயிடுச்சி…! எப்படி தனியா துடிச்சேன் தெரியுமா..?’
‘அங்கே என்ன நடந்து… நீங்க எப்படி தப்பிச்சு வந்தீங்க… அதை சொல்லுங்க..’ என்று பேசியபடி, தாஸ் தனது மொபைலை ஸ்பீக்கர் ஃபோன் மோடில் போட்டான். இப்போது, அருகில் நின்றிருக்கும் அவனது அஸிஸ்டென்ட் சந்தோஷூம், இந்த உரையாடலை ஆர்வமாக கேட்டான்.
‘எப்படி தப்பிச்சேனா..? யோவ், தற்கொலை பண்ணிக்கலாம்னு அந்த கிணத்துல குதிச்சேன்… முழிச்சு பாத்தா பாம்பேல இருக்கேன்… அதுவும் கரெக்டா நான் என் க்ளையண்ட்-ஐ பாக்குறதுக்காக புக் பண்ணியிருந்த ஹோட்டல் ரூம்ல இப்ப இருக்கேன்…. கூடவே என் பேக், மொபைல், பர்ஸ் எல்லாம் சேஃபா இருக்கு… கண்முழிச்சு 2 மணி நேரமாச்சு… எப்படி… எப்படின்னு ஒண்ணும் புரியாம மண்டையப் பிச்சிக்கிட்டிருக்கேன்…’
‘ரொம்ப சந்தோஷம்…’
‘யோவ், நான் மண்டைய பிச்சுக்கிறது உனக்கு சந்தோஷமா இருக்கா…’
‘குணா, you are in a trauma… ரிலாக்ஸ் பண்ணுங்க, மண்டையப் போட்டு குழப்பிக்காதீங்க… நீங்க எப்போ சென்னைக்கு வர்றீங்க..?’
‘இன்னைக்கு நைட் மெயில்ல வர்றேன்… ஏன்..?’ வேண்டாவெறுப்பாக சொன்னான்.
‘இல்லை, நீங்க சென்னை வந்ததும், முதல் வேலையா… என்னை வந்து பாருங்க… உங்ககிட்ட நிறைய பேச வேண்டியிருக்கு…’
‘முடியாதுயா… நான் ஏன் உன்னை வந்து பாக்கணும், உன் சகவாசமே வேணாம்…’
‘இல்ல குணா… நான் சொல்றதை…’
‘யோவ், உன்னை திட்றதுக்குத்தான், ஒரு பப்ளிகேஷனுக்கு ஃபோன் பண்ணி, உன் கதைகளோட தீவிர விசிறி நானுன்னு பொய் சொல்லி, உன் மொபைல நம்பரைப் பிடிச்சேன். திட்டிட்டேன்… இதுக்கு மேலயும், உங்கூட பேசிட்டிருந்தா, எனக்கு கெட்ட கெட்ட வார்த்தையா வரும்… வை ஃபோனை..’ என்று கடுமையாக பேசி, குணா ஃபோனை கட் செய்தான்.
தாஸ் அருகில் நின்றிருக்கும் சந்தோஷை ஏறிட்டுப் பார்த்தான்.
அவன், ‘என்ன பாஸ்… இவன் இவ்ளோ லோக்கலா பேசுறான்..’
‘You know what..? இவன் ஒரு சாஃப்டுவேர் ப்ரொஃபஷனல்…’ என்று கூற, சந்தோஷ் சிரித்துக் கொண்டான்.
‘இப்பவாவது நான் சொன்ன விஷயங்களெல்லாம் உண்மைன்னு நம்பறியா சந்தோஷ்..’
‘நம்பறேன் பாஸ்…’
‘ஒரு வகையில இந்தாளு திட்றதுல அர்த்தமிருக்கு, நான் பண்ணதும் தப்புதானே… என்ன நடக்கும்னு தெரியாம, பயந்துப்போயிருக்கிற ஒருத்தரை தனியா விட்டுட்டு வந்தது… என் தப்புதான்..’ என்று தாஸ
‘பாஸ், எனக்கு ஒரு விஷயம் இடிக்குது..’
‘என்ன..?’
‘நீங்க, அந்த கிணத்துக்குள்ள இறங்கினதும், 30 மணி நேரம் பின்னாடி பாஸ்ட்-க்கு வந்து, 24ஆம் தேதிலருந்து, 23ஆம் தேதிக்கு வந்ததா சொன்னீங்க..?’
‘ஆமா..’
‘இப்ப ஃபோன்ல இந்தாளு சொன்னதை வச்சி பாத்தா, நீங்க இறங்குன கொஞ்ச நேரத்துல, அதே கிணத்துல 24ஆம் தேதி இறங்கியிருக்கான். ஆனா, பாம்பேல, ஹோட்டல்ல இப்ப 2 மணி நேரம் முன்னாடி, 25ஆம் தேதி கண்முழிச்சியிருக்கான்.’
‘ஆமா..?’
‘அப்படின்னா, அதே கிணறுல முன்னாடியும், பின்னாடியும் டைம் டிராவல் பண்ண முடியுமா..?’
‘அட ஆமா..? இதை நான் யோசிக்கலையே..? அவன் மட்டும் எப்படி ஃப்யூச்சர்ல வந்து சேர்ந்தான்..?’
‘ஆச்சர்யமா இருக்கு பாஸ்… நீங்க சொல்றதை மட்டும் வச்சி எப்படி நம்புறதுன்னு குழம்பிட்டிருந்தேன்… ஆனா, இப்ப இன்னொருத்தனும் அதே கிணறுல மூலமா டைம் டிராவல் பண்ணியிருக்கான்னு கேட்டதும்… இனிமே எனக்கு சந்தேகமே இல்ல…’
‘At any cost, அந்த கிணறு, என்னவா இருக்கும்னு கண்டுபிடிச்சாகனும் சந்தோஷ்…’
‘கண்டிப்பா பாஸ்…’
‘அதுக்கு நான், எப்படியாவது இந்த குணாகிட்ட பேசியாகனும்… அதுவரைக்கும், இந்த விஷயத்தை குணா யார்கிட்டயும் சொல்லாம இருக்கணுமே..?’ என்று டேபிளில் விரித்து வைத்திருந்த, அந்த காட்டுக்கோவில் ஓவியத்தை வெறித்துப் பார்த்தபடி தாஸ் வருந்தி கொண்டிருந்தான்…
———————-
2 நாளைக்கு பிறகு…
குணா, தனது க்ளையண்ட் மீட்டிங்கை குழப்பமாக முடித்துவிட்டு, களைப்புடன் சென்னைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தான்.
பேஸின் ப்ரிட்ஜ் ஜங்கஷனை கடந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சமீபித்துக் கொண்டிருந்த அவனது ரயில், அவனைப் போலவே குழப்பமாக, நிற்பதா, வேண்டாமா..? என்று குழம்பியபடி, ஒரு ப்ளாட்ஃபார்மில் வந்து நின்றது.
நீண்ட பயணத்துக்குப்பிறகு, மக்கள் களைப்புடன், தமது உடமைகளை சுமந்தபடி இறங்கிக் கொண்டிருந்தார்கள். குணாவும் சோர்வாக இறங்கிக் கொண்டிருந்தான்.
ஒரு அழகான இளம்பெண், தனது சூட்கேஸை இரண்டு கையால், இழுப்பதற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டே குணாவை கடந்து சென்றாள்.
குணா, அவளைப் பார்த்தான். அசத்தும் அழகு…
சே..! கிடத்தட்ட இரண்டு நாட்களாக இந்த பெண் தன்னுடன் இதே ரயிலில் பயணித்திருந்தும், இவளை பார்க்காமல் விட்டுவிட்டோமே என்று அலுத்துக் கொண்டான்.
மாம்பழக் கலர் டீ-ஷர்ட்டும், கருப்பு ஜீன்சும் அணிந்திருந்த அவளை ரசித்தபடி, அவளையே பின்தொடர்ந்து, அவள் வேகத்துக்கு ஈடுகொடுத்து நடந்துக் கொண்டிருந்தான்..
அந்த பெண்ணின், மொபைல் ஃபோன் ஒலித்தது… you’re my honeybunch என்ற குழந்தையின் பாடல் ரிங்டோன்… அதை ஆன் செய்து பேசியபடி அவள் அழகாக நடந்து சென்றதில், அவளுக்கு பின்னால் வந்த குணா, மெய்மறந்து நடந்து கொண்டிருந்தான். அவள் ஃபோன் பேசியபடி, தனது ஹெவி சூட்கேஸை தள்ள மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். இதுதான் சமயம் என்று அவளை நெருங்கி…
‘மே ஐ ஹெல்ப் யூ..?’ என்று குணா, அவளிடம் கேட்க… அவள் குணாவை ஒரு ஆழப்பார்வை பார்த்துவிட்டு…
‘ஓகே..’ என்று ஏளனமாக கூற… குணாவுக்கு, ஏன்தான் இவளுக்கு உதவுகிறோமோ.. என்று ஒரு சின்ன எண்ணம் வந்து போனது. இருப்பினும், அவள் அழகுக்காக இதைச் செய்யலாம் என்று தன் மனதுக்குள் தீர்ப்பளித்தபடி நடந்தான். அவள் அவனுக்கு பின்புறம், ஹிந்தியில் ஃபோனில் பேசியபடி கைவீசி நடந்து வந்தாள்.
சென்ட்ரல் மெயின் வாயிலை கடந்து, ‘ப்ரிபேட் ஆட்டோ ரிக்ஷா’ புக்கிங் கவுண்டருக்கு நீளும் க்யூவில், குணா நிற்க, அவள் ஃபோனை அவசர அவசரமாக கட் செய்து… ‘நோ… நோ… ஐ ஹேவ் எ கார்..’ என்று கூறி அவள் வேறு திசையில் நடக்க…
‘ஓ… ஓகே..’ என்றபடி, குணா அவளைப் பின்தொடர்ந்தான்.
இருவரும் காரை சமீபித்தனர்… குணா, அவளது பெரிய சூட்கேஸை கார் டிக்கியில் வைத்தான்.
‘ஓகே… பாய்…’ என்று அவன் நாகரிகமாக கிளம்ப எத்தணிக்க… அவள், ‘ரொம்ப தேங்க்ஸ்..’ என்று கூற… நின்றான்
‘உங்களுக்கு தமிழ் தெரியுமா..?’ என்று குணா ஆச்சர்யமாக கேட்டான்.
‘நான் தமிழ்தான்…’
‘இல்ல, ஃபோன்ல ஹிந்தியில பேசிட்டிருந்தீங்களே..?’
‘எனக்கு 7 லாங்குவேஜஸ் தெரியும்… ஆனா, அக்மார்க் தமிழ் பொண்ணு… மஞ்சரி’ என்று கைநீட்டினாள்…
குணா மனதிற்குள் அவள் அழகுக்கு அந்த பெயர் கச்சிதமாக பொருந்தியிருப்பதை ரசித்தான். அவள் இன்னும் கைநீட்டியபடியே இருக்க, அவன் சட்டென்று அவளுடன் கைகுலுக்கினான். கையா அது… உலகத்திலுள்ள மிகவும் மெல்லிய பொருள் என்னவென்று கேட்டாள், அவள் கைதான் என்று பதலளிக்க குணாவிற்கு தோன்றியது…
‘ஐ அம் குணா..’ என்றான்.
அவள், ‘நீங்க எந்த ஏரியா போறீங்க..?’
சொன்னான்…
‘நானும் அந்த வழியாத்தான் போறேன்… வாங்க உங்களை ட்ராப் பண்ணிடுறேன் என்று கூற, அவன் சற்றே தயங்கி, பிறகு ஏறிக் கொண்டான்.
அவர்களது கார்… சிட்டியின் கலங்கலான டிராஃபிக்கில் கலந்து நீச்சலடித்துக் கொண்டிருந்தது…
‘மறுபடியும் தேங்க்ஸ், இவ்ளோ பெரிய சூட்கேஸ்… எப்படிடா கார் வரைக்கும் தூக்கிட்டு போறதுன்னு இருந்தேன். நல்லவேளை நீங்க ஹெல்ப் பண்ணீங்க…’
‘இதுலென்னங்க இருக்கு… ஜஸ்ட் ஒரு சின்ன ஹெல்ப்..’ என்று குணா வழிந்தான்.
‘ஆனா, நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்கன்னு நான் எதிர்ப்பார்த்தேன்’ என்று கூற, அவன் அவளை குழப்பமாக எப்படி என்பது போல் பார்த்தான்.
‘ஏன்னா, நீங்க என்னை சைட் அடிச்சிக்கிட்டே பின்னாடி நடந்து வந்துட்டிருந்தது எனக்கு தெரியும்..’ என்று கேஷூவலாக சிரித்துக்கொண்டாள்.
குணா வெட்கப்பட்டான், ‘இல்லன்னு பொய் சொல்ல விரும்பலை மஞ்சரி… நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க… அதான்..’ என்று அவன் இழுக்க…
அவள் முகம் திடீரென்று சோகமாக மாறியது… ஒரு சின்ன மௌனத்துக்கு பிறகு ‘ஆனா, என் அழகு எனக்கு அலுத்துப்போச்சு…’ என்று விரக்தியாக சொல்ல…
‘ஏன்..?’ என்றான்
‘உண்மைய சொல்லனுமா..?’
‘உங்களுக்கு ஆட்சேபனையில்லன்னா சொல்லுங்க..?’ என்று குணா கூற
ஒரு சின்ன இடைவெளி விட்டு, ‘நான் ஒரு எஸ்கார்ட்…’ என்றாள்
‘அப்படின்னா..?’
‘இந்த வார்த்தைக்கு லிட்டரல்லா அர்த்தம் வேறதான்… ஆனா, இங்க அதுக்கு அர்த்தம், ஹை ப்ரொஃபைல் ப்ராஸ்டிட்யூட்…’ என்று கூற, குணாவுக்கு அதிர்ச்சி… இதை வண்டி ஓட்டியபடி அவள் கவனித்தாள். மீண்டும் வண்டியில் கவனம் செலுத்தியபடி தொடர்ந்தாள்…
‘பெரிய பெரிய பணக்காரங்களுக்கு, அவங்ககூட பார்ட்டிக்கு போகவோ… வெளியூருக்கு டூர் போகவோ… எங்களை மாதிரி ஆளுங்களை புக் பண்ணுவாங்க… அவங்களுக்கு, எல்லா வகையிலயும் கோ-ஆப்பரேட் பண்ணனும்…’ என்று கூறிய மஞ்சரி ஒரு சின்ன இடைவெளிவிட்டு, குணாவைத்திரும்பி பார்த்தபடி ‘எல்லா விதமாவும்…’ என்றாள்…
குணாவின் முகத்தில் ஏக மாற்றங்கள்…
‘என்ன குணா, ஏண்டா என்கூட கார்ல வந்தோமோன்னு இருக்கா..?’
‘இல்லை… இல்லை… உங்களை மாதிரி ஒரு பொண்ணு இப்படியா..ன்னு கொஞ்சம் கலவரமாயிருக்கு’ என்றான்.
‘ம்ஹ்ம்…’ என்று சிரித்தபடி அவள் தொடர்ந்தாள், ‘என் ஃபேமிலில கூட யாருக்கும் இது தெரியாது…’
‘எங்கிட்ட ஏன் இதை சொன்னீங்க..? சொல்லாமலேயிருந்திருக்கலாம்…’
‘அப்பப்போ, சில பேர்கிட்டயாவது நெஜமா நடந்துக்கனும்னு தோணுது…’ என்று கூற, அவள் கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளிர்ப்பதை குணா கவனித்தான்.
‘ஹலோ… ஏன் அழறீங்க… ப்ளீஸ்… காரை நான் ட்ரைவ் பண்ணவா..?’
‘இல்ல வேண்டாம்… ஐ கென் மேனேஜ்…’ என்று கண்ணீரை துடைத்துக் கொண்டாள். ஒரு 2 நிமிட மௌனம் அந்த காரை நிறைத்திருந்தது.
‘என்ன பேச்சையே காணோம்..?’ என்று மீண்டும் அவளே பேச்சை ஆரம்பித்தாள்…
‘இல்லை மஞ்சரி… ஏன்னே தெரியல, கடந்த 4 நாளாவே, எனக்கு ஏகப்பட்ட அதிர்ச்சி, ஏகப்பட்ட குழப்பம்… ஏன்தான் வாழ்க்கை இப்படி இருக்கோன்னு கவலையாயிருக்கு..’ என்று குணாவும் புலம்ப ஆரம்பித்தான்
‘அப்படி என்ன நடந்துச்சு..’
‘சொன்னா நம்பமாட்டீங்க… நான் 2 நாள் முன்னாடியே சாக வேண்டியவன்… இன்னிக்கி உங்களை மாதிரி ஒரு அழகான பொண்ணு கூட கார்ல போயிட்டிருக்கேன்..’
‘என்ன சொல்றீங்க… 2 நாள் முன்னாடி சாக வேண்டியவரா..?’ என்று அவள் வண்டி ஓட்டியபடி அதிர்ச்சி காட்டினாள்.
‘ஆமாங்க… 2 நாள் முன்னாடி நான் ஒரு கோவிலுக்கு போயிருந்தேன்… அது ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள இருக்கு..’ என்று குணா 2 நாளுக்கு முன் தனக்கு நேர்ந்த அனுபவத்தை தெள்ளத்தெளிவாக விவரிக்க ஆரம்பித்தான்.
கார் இப்போது கோட்டூர்புரம் பாலத்தில் ஏறிக்கொண்டிருக்க… குணா முழுவதுமாக கூறிமுடித்திருந்தான். அவன் கூறியதை கேட்ட மஞ்சரி, எதுவும் பேசாமல், வண்டியை ஓட்டிக்கொண்டிருக்க…
‘என்னை நீங்க நம்பலையா..?’ என்று கேட்டான்.
‘நம்பாம இல்ல… இதையெல்லாம் ஏன் என்கிட்ட சொல்லுறீங்கன்னு தோணுச்சு..’
‘இல்லை… நீங்க உங்களைப் பத்தின விஷயத்தை, நம்பிக்கையோட என்கிட்ட சொன்னீங்க… அதான் நானும் சொன்னேன்… நாம இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் உண்மையா இருக்கலாமேன்னு சொன்னேன்…’
‘ஆமாமா… நாம சந்திச்சிக்கிட்ட இந்த சில நிமிஷங்களாவது லைஃப்ல உண்மையா இருக்கலாம்… எப்படியும் இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல, ரெண்டு பேரும் பிரியப் போறோமில்லியா..?’ என்று அவள் விரக்தியாக கூற
குணா, சற்று மௌனமாக இருந்து, பிறகு கோபமாக ‘ஏன் அப்படி சொல்றீங்க… நாம ஏன் பிரியணும்..?’ என்று சத்தமாக கூறினான்.
மஞ்சரி சிரித்தபடி, ‘ஏன் குணா, என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு, எனக்கொரு வாழ்க்கை கொடுக்கப்போறேன்னு டயலாக்கெல்லாம் பேசபோறீங்களா..?’
மீண்டும் ஒரு சின்ன இடைவெளி விட்டு, ‘ஏன் கூடாதா..? எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு மஞ்சரி… ஓபனாவே சொல்றேன்… உன்னை கல்யாணம் பண்ணிக்க நான் ரெடி..’ என்று குணா தீர்க்கமாக சொல்ல, மஞ்சரி வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினாள். அவனை குழப்பமாக பார்த்தாள்…
‘குணா… உங்களுக்கென்ன பைத்தியமா..?’ என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.
‘அதெல்லாமில்ல… இதைவிட தெளிவா நான் இருந்ததேயில்ல… எனக்கு மாசத்துக்கு 40 ஆயிரம் சம்பளம், சொந்த வீடிருக்கு.. பேங்க்ல எந்த லோனும் இல்ல…’ என்று அவன் தனது விஷயங்களை அடுக்க ஆரம்பிக்க, மஞ்சரி அவனை நிறுத்தினாள்.
‘நிறுத்துங்க குணா… யு ஆர் மேட்..’ என்றாள்… மீண்டும் சிரித்துக் கொண்டாள்…
‘ஏன் மஞ்சரி… உனக்கு என்னை பிடிக்கலியா..?’ என்று கேட்க… அவள் சற்று யோசித்துவிட்டு…
‘பிடிக்காம இல்ல குணா… நாம சந்திச்சு முழுசா ஒரு மணி நேரம்கூட ஆகலை… என் அழகு உங்களை பாதிக்குது… அவ்ளோதான்… அதுக்காக கல்யாணமெல்லாம் டூ மச்… நான்… நான் யாருன்னு தெரியுமில்ல… எப்படி என்கூட நீங்க உங்க லைஃபை ஷேர் பண்ணிப்பீங்க…’
‘நான் பண்ணிப்பேன்… நான் ரெடி…’ என்று கூற…
‘This is impossible… We need to talk.. எங்கேயாவது போய் பேசலாமா..?’ என்றாள்…
‘நான் ரெடி… எவ்ளோ நேரம்னாலும் பரவாயில்ல..’ என்றான்
அவனையே பார்த்திருந்துவிட்டு, ‘குணா… நீங்க ரொம்ப எமோட் ஆகுறீங்க…’
‘அதெல்லாம் இல்ல…’ என்று குணா திடீரென்று அவள் கைக்களை அழுத்தமாக பற்றினான்… அவள் அதிர்ந்தபடி அவனைப் பார்க்க, ‘மஞ்சரி, Listen to me… நான் ரொம்ப நிதானமாத்தான் இதை சொல்றேன்… பாத்ததும் உன்மேல பயங்கர க்ரஷ் வந்திடுச்சு… I don’t want to miss you…’ என்று அவளை கூர்ந்து நோக்கியபடி கூறினான். அவன் பிடியிலிருந்து கைகளை விடுவித்துக் கொண்டு, அவனையே பார்த்தாள்.
‘சரி, எங்கே போய் பேசலாம்… சொல்லுங்க’ என்று கேட்டாள்.
‘நீயே சொல்லு… உன் சாய்ஸ்தான்.. Somewhere Private?’ என்றான்
மஞ்சரி சற்று நேரம் யோசித்துவிட்டு, ‘Then lets go…’ என்று வண்டியை கிளப்பினாள்.
திருவான்மியூர் ரெஸிடென்ஷியல் ஏரியாவுக்குள் அவள் கார் நுழைந்தது…
‘இங்க என் ஃப்ரெண்டு ஒருத்தியோட அண்ணன் ஆஃபீஸ் இருக்கு, அதுக்கு பின்னால ஒரு பீச் வியூ பார்க் இருக்கு… அங்கே போய் பேசலாம்.. ஈவ்னிங் வரைக்கும் எந்த ஒரு டிஸ்டர்பென்சும் இருக்காது..’ என்று கூறியபடி, ஒரு கட்டடத்திற்கு முன் நிறுத்தினாள்.
காரிலிருந்து இறங்கிய மஞ்சரி, காருக்குள் இருக்கும் குணாவை குனிந்து பார்த்து
‘இங்கேயே இருங்க, நான் என் ஃப்ரெண்டோட அண்ணன்கிட்ட, பேசிட்டு வந்துடுறேன்…’ என்று கூறியபடி அந்த கட்டட்டத்திற்குள் நுழைந்தாள்.
2 நிமிடம்…
குணாவிற்குள் ஏதேதோ எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது…
அவசரப்பட்டு வாக்கு கொடுத்துவிட்டோமோ..?
முதலில் நன்றாக பழகுவோம், கல்யாணமெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்…
மஞ்சரி அழகான பெண்… வாக்கு கொடுத்ததில் தப்பில்லை… இருந்தாலும், கல்யாணம் செய்து கொள்வது சாத்தியமா… சாத்தியமே இல்லை. ஆனால், ஒரு அந்தரங்க தோழியாக பழகிக்கொ ள்ளலாம்…
அந்தரங்க தோழியென்றால்… வைப்பாட்டியா?
சே! என்ன எண்ணங்களிது..! மஞ்சரி போன்ற ஒரு அழகான பெண்-ஐ இப்படியா நினைப்பது..?
இப்படியெல்லாம், குணாவிற்குள் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க, மீண்டும் மஞ்சரி கார் கதவு வழியாக குனிந்து பார்த்தாள்
‘என்ன குணா, அவசரப்பட்டு வாக்கு கொடுத்துட்டோமேன்னு குழம்பிட்டு இருக்கீங்களா..?’ என்று சரியாக கேட்க, குணா ஆடிப்போனான்
‘சே! என்ன மஞ்சரி, என்னை அப்படி நினைச்சிட்டே’ என்று சமாளித்தான்
அவள் சிரித்தபடி, ‘சாரி, சும்மதான் கேட்டேன்… வாங்க, நான் பேசிட்டேன். இந்த கேலரிக்கு பின்னாடி பீச் வியூ பார்க்ல உக்காந்து பேசுவோம்..’ என்று அழைக்க, குணா காரிலிருந்து வெளியேறினான்.
இருவரும் கட்டடத்துக்குள் நுழைந்தனர்.
உள்ளே… மியூஸியம் போன்றதொரு கூடம். ஆங்காங்கே மிகவும் பழைய கலைப்பொருட்களும் ஓவியமும் நிறைந்திருந்தது. கூடத்தை கடந்து, பின்வழியாக படிக்கட்டில் இறங்கியதும், அங்கே ஒரு மிக அழகான பார்க் தெரிந்தது. சற்றே தூரத்தில் கண்ணுக்கு இனிமையாக கடல் தெரிந்தது.
‘உட்காருங்க குணா..’ என்று அவள் கை காட்ட, ஒரு பெஞ்சில் அமர்ந்தான்.
‘நீயும் உக்காரு மஞ்சரி; என்று தன்னருகிலேயே கைகாட்டினான்.
அவள் அவனுக்கு எதிரில் இருக்கும் பெஞ்சில் அமர்ந்தாள்..
‘நடக்கிறதெல்லாம் கனவா இல்ல நினைவான்னு குழப்பமா இருக்கு…’ என்று குணா பேசிக்கொண்டிருக்க, அவனுக்கு பின்புறமாய் ஒரு குரல் கேட்டது
‘கனவே இல்ல குணா… எல்லாம் நிஜம்தான்…’ என்ற அந்த ஆண்குரல் குணாவுக்கு மிகவும் பரிச்சயமாக பட்டது… திரும்பிப் பார்த்தான்.
பின்வாசல் வழியாக இப்போது, தாஸும், அவன் அஸிஸ்ட்டென்ட் சந்தோஷும் அந்த பார்க்குக்குள் இறங்கிக் கொண்டிருந்தனர்.
‘மை டியர் குணா.. வெல்கம் டு மை ஏன்ஷியன்ட் பார்க்…’ என்று அவன் முன் வந்து நின்றான்.
மஞ்சரி எழுந்து சென்று சந்தோஷை நெருங்கி நின்று கொண்டாள்.
தாஸ், அவளிடம் திரும்பி ‘தேங்க்ஸ் லிஷா, நீ இந்தாளை இங்க கூட்டிக்கிட்டு வந்து ரொம்ப பெரிய ஹெல்ப் பண்ணியிருக்க…’ என்று கூற
‘எனிடைம்…’ என்று தாஸிடம் கூறிவிட்டு, குணாவை ஏளனமாக பார்த்தாள்.
குணா குழப்பமாக மூன்று பேரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்…
தொடரும்…