அதே சமயம் மிகுந்த பரபரப்புடன் ஜோனாதன் தன்னுடைய பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு அவரது அறையிலிருந்து வெளியேறி சற்றுத் தொலைவு வந்தபோது, அவருக்கு முன்பாக ஏராளமான ஓநாய்கள் உரத்த சத்தமுடன் ஊளையிட்டதைக் கண்டு அப்படியே அதிர்ந்துபோய் நின்றுவிட்டார். இது முழுக்க முழுக்க டிராகுலா பிரபுவின் ஏற்பாடுதான் என்பது விளங்கியது.
அதன்பின்பு எதுவுமே நடக்காததைப்போல முன்னால் சென்ற டிராகுலா பிரபு அந்த கருங்கல் கோட்டையின் தாழ்ப்பாளை நீக்கிக் கதவைத் திறந்தபோது, ஓநாய்கள் கூட்டம் கூட்டமாக கதவின் முன்புறம் அணிதிரள ஆரம்பித்தன.
அந்த சமயத்தில் டிராகுலா பிரபுவுக்கு கட்டுப்படுவதைத் தவிர ஜோனாதனுக்கு வேறு வழி தெரியவில்லை. “சரி, நீங்கள் கூறியபடியே விடிந்தவுடன் செல்லலாம். இப்போது அந்தக் கதவை மூடுங்கள்” என்று சத்தமாக ஜோனாதன் கூறினார்.
டிராகுலா பிரபு கதவை மூடிய பின்பு இருவரும் ஒரு வார்த்தையும் பேசாமல் அவரவர் அறைக்குச் சென்று விட்டனர்.v சிறிது நேரத்தில் கதவுக்கு வெளியே யாரோ பேசிக் கொள்ளும் ரகசியக் குரல்கள் கேட்டதை உணர்ந்தார். விளக்கை ஏற்றாமலேயே மெல்ல கதவை நெருங்கி காதுகளைக் கூர்மையாக்கி பேச்சைக் கவனித்தார்.
டிராகுலா பிரபுவின் குரல் கேட்டது. உடன் பேசிய குரல்கள் அந்த ரத்தக் காட்டேரிகள் மூன்று பேர்களுடையது என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.
“இன்றைக்கு தயவு செய்து திரும்பிப் போய்விடுங்கள். இன்னும் உங்களுக்கான நேரம் கனியவில்லை. நாளை இரவு கண்டிப்பாக உங்களுடையதுதான்” என்ற டிராகுலா பிரபுவின் வார்த்தைகளை அடுத்து கிளுகிளுப்பு ஏற்படுத்தும் அவர்களின் சிரிப்புச் சத்தம் கேட்டது.
ஜோனாதனுக்கு பயத்துக்கு பதிலாக அடக்க முடியாத கோபம் தலைக்கேற படீரென கதவைத் திறந்தார்.
ரத்த தாகம் கொண்ட அந்தப் பெண் பிசாசுகள் கொள்ளிவாய் கண்களோடு கள்ளத்தனமான புன்னகையோடு நின்று கொண்டி ருந்தன.
ஜோனாதனைப் பார்த்த மாத்திரத்தில் அந்தப் பிசாசுகள் அவருடைய அறைக்குள் பாய்ந்து நுழைய முற்பட்டன.
ஆனால் அவர் கழுத்திலிருந்த ஜெபமாலை தடுக்க, அவை உள்ளே நுழையாமல் பின்வாங்கி வெளியேறிவிட்டன. அந்த ஜெபமாலை போட்ட மூதாட்டியை நன்றியோடு இப்போது நினைத்துக் கொண்டார்.
பின்னர் கதவைச் சாற்றிவிட்டு கட்டிலில் அமர்ந்தவர் வாய்விட்டு அழுது பிரார்த்தனை செய்தார். இந்த இரவுக்குப் பின்னால் தன்னால் உயிர் வாழவே முடியாதா என்ற பயம் சூழ்ந்தது.
தொலைவில் எங்கோ சேவல் கோழிகள் கூவும் சத்தம் கேட்டு, கண்ணயர்ந்து போன ஜோனாதன் விழித்தார்.
அப்போது முழந்தாளிட்டுப் பிரார்த்தனை செய்தார். வெளியே வெயிலின் அதிர்வுகள் தோன்ற ஆரம்பித்ததும் கதவைத் திறந்து கொண்டு எப்படியாவது தப்பித்து சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் மீண்டும் துளிர்த்தது. ஓடிச் சென்று கதவைத் திறக்க முயன்று ஒன்றும் பலனளிக்காது போகவே ஏமாற்றத்துடன் திரும்பினார்.
தொடரும்…