ஒன்றும் புரியவில்லை. என்ன செய்வது என்றும் தெரிய வில்லை. நடுக்கமும் வியர்வையும் வழிய நின்று கொண்டிருந்த அவர் தன்னுடைய நிலை இப்படியாகி விட்டதே என்று வருந்தினார்.
தான் லண்டனில் இருப்பதாகவும் தனக்கு நேர்ந்ததெல்லாம் ஒரு கனவுதான் என்பது போல நினைக்கத் தோன்றியது. நடந்த உண்மை கனவாக முடியாதே! வழக்கறிஞர்களின் உதவியாளர் களுக்கெல்லாம் தன்னைப் போன்ற நிலைமைதானா?
தான் இப்போது டிரான்சில்வேனியாவின் கார்பெத்தியன் மலைப் பகுதியில்தான் இருக்கிறோம் என்ற நிஜம் அவரை பயங்கொள்ளச் செய்தது. பொழுது விடியும்போதுதான் இந்தக் கோட்டையின் வாசல் கதவு திறக்குமோ? வேறு வழியில்லை; அதுவரை காத்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்!
இப்படியான சிந்தனை வயப்பட்டிருந்தபோது கோட்டைக் குள்ளேயிருந்து யாரோ நடந்து வரும் தடித்த காலடியோசை கேட்டது. கதவுக்கிடையே தோன்றிய மெல்லிய வெளிச்சம் அது உண்மைதான் என்பதைப் புலப்படுத்தியது.
அதே சமயம் கதவின் பூட்டில் சாவியை நுழைத்துத் திறக்கும் சத்தமும் கேட்டது. நீண்ட நாட்களாகத் திறக்கப்படாத அந்தக் கதவின் தாழ்ப்பாள் துரு ஏறி கரகரவென இழுத்துத் திறக்கப்படுவது தெரிந்தது. அதைத் தொடர்ந்து அந்த பிரம்மாண்டமான கதவு திறந்தது.
மிகுந்த படபடப்புடன் திறந்த அந்தக் கதவைப் பார்த்தார் ஜோனாதன்.
நரைத்த தலைமுடி, தடித்த மீசை, தீக்கங்குகள் போன்ற கண்கள், உடம்பு முழுவதும் போர்த்தப்பட்ட கறுப்பு உடையுமாக உயரமான – ஒல்லியான -ஒரு வயதான மனிதர் அந்த வாசலில் நின்று கொண்டிருந்தார்.
புராதன காலத்து வெள்ளி விளக்கு ஒன்று அவர் கையில் இருந்தது. அந்த விளக்கிலிருந்த தீ நாக்கு காற்றில் ஒருமுறை ஆடி அலைந்தது.
“வாலிபரே! என்னுடைய அரண்மனைக்கு தங்கள் வரவு நல்வரவாகுக. சந்தோஷமாக உங்கள் சுயவிருப்பத்துடனும் சுதந்திரத்துடனும் நீங்கள் உள்ளே வரலாம்” என்று அந்த முதியவர் மிடுக்காக ஆங்கிலத்தில் அழைத்தார்.
ஜோனாதன் உள்ளே நுழைந்தபோது அந்த வயதான மனிதர் அவருடைய கைகளைப் பற்றிக் குலுக்கினார்.
அவ்வளவுதான்… ஜோனாதன் துடிதுடித்துப் போய்விட்டார்! அந்த வயதான மனிதரின் கையானது இறந்துபோன ஒருவரின் மரத் துப் போன கைபோன்று – பனிக்கட்டி மாதிரி சில்லென்றிருந்தது.
பரிபூரண சுதந்திரமாய் உள்ளே வாருங்கள். மிகவும் பத்திரமாகத் திரும்பிச் செல்லுங்கள். போகும்போது உங்களின் மகிழ்ச்சியான நினைவுகளுக்காக எதையாவது இங்கே விட்டுச் செல்லுங்கள்.”
அப்போது, டிராகுலா பிரபு எங்கிருக்கிறார்” என்று ஜோனாதன் கேட்டார்.
அதனைக் கேட்ட அவர் பணிவாகத் தலைகுனிந்தபடி, “நான்தான் டிராகுலா… மிஸ்டர் ஜோனாதன் ஹார்க்கர். நீங்கள் தேடி வந்த நபர் நான்தான். வாருங்கள்… வாருங்கள். நாம் உள்ளே போகலாம். வெளியில் கடுங்குளிர் வீசுகிறது. சாப்பிட்டுவிட்டு நீங்கள் ஓய்வு எடுக்க வேண்டியது இப்போது அவசியம்” என்றார்.
தன்னுடைய கையில் கொண்டு வந்திருந்த அந்த வெள்ளி விளக்கை சுவரில் இருந்த ஆணியில் தொங்கவிட்டு, மறுநிமிடம் ஜோனாதனின் பெட்டிகளைக் கையில் எடுத்தார்.
ஜோனாதன் அதற்கு மறுப்பு தெரிவித்தபோது, தடுக்க வேண்டாம். நீங்கள் என்னுடைய விருந்தாளி. ராத்திரிப் பொழுது மிகவும் நேரங்கடந்து விட்டதால் வேலைக்காரர்கள் யாரும் இங்கே இல்லை. உங்களுக்கு வேண்டியதை நான் செய்வதற்கு நீங்கள் அனுமதி தரவேண்டும்” என்று அவர் கூறினார்.
அவ்வாறு சொல்லியபடி டிராகுலா பிரபு பெட்டியைத் தூக்கிக் கொண்டு முன்னால் நடக்க, ஜோனாதன் எதுவும் பேசாமல் அவர் பின்னால் சென்றார்.
அரண்மனைக்குள் அப்படியே நடந்துபோய், பின்னர் வளைவு வளைவாகச் செல்லும் மாடிப் படிக்கட்டுகளில் ஏறிச் சென்றபோது மேலே ஒரு அகலமான வராந்தா தென்பட்டது.
அதன் ஒரு மூலையில் இருந்த பெரிய அறையைத் திறந்த டிராகுலா பிரபு ஜோனாதனை உள்ளே வருமாறு அழைத்தார்.
அந்த அறையின் நடுவில் ஒரு பெரிய மேஜை இருந்தது. அதில் உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டு மூடி வைக்கப்பட்டிருந்தன.
மற்றொரு மூலையில் அப்போதுதான் பற்ற வைத்த விறகுகள் கனப்பு அடுப்பில் எரிந்து கொண்டிருந்தன.
தான் தூக்கிக் கொண்டு வந்த பெட்டியை அப்படியே கீழே வைத்துவிட்டு நின்றார் டிராகுலா பிரபு. அதன்பின் கதவுகளைத் தாழிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறி மற்றோர் அறைக்குள் நுழைந்தனர்.
அந்த அறை மிகவும் அழகான படுக்கை அறையாக இருந்தது கண்டு ஜோனாதன் மிகவும் வியப்பாகப் பார்த்துக் கொண்டு நின்றார்.
நீங்கள் மிகவும் களைப்பாக இருக்கிறீர்கள். முதலில் நீங்கள் குளிக்கலாம். அதற்குத் தேவையான அனைத்தும் இங்கேயே உள்ளன. குளித்தபின் அந்த அறைக்கு வந்துவிடுங்கள். அங்கே உங்களுக்கு உணவு தயாராக இருக்கிறது” என்றார் பிரபு.
அவருடைய கனிவான பேச்சும் விருந்து உபசரிப்பும் ஜோனாதனுக்குள்ளிருந்த பயத்தைக் குறைத்தது.
ஒருவிதமான நிம்மதி ஏற்பட்டபோது வயிறு பசிப்பதை உணர முடிந்தது. உடனே குளியலறைக்குச் சென்று குளித்துவிட்டு சீக்கிரமே தயாரானார் ஜோனாதன்.
உடைமாற்றிவிட்டு அருகிலிருந்த அறைக்கு வந்தபோது, மேஜையை சுட்டிக் காட்டி அமரச் சொன்னார் பிரபு.
உங்களுக்கு என்ன விருப்பமோ அவ்வாறே உண்ணலாம். உங்களோடு சேர்ந்து அமர்ந்து சாப்பிட முடியாமல் போனதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் ஏற்கெனவே சாப்பிட்டு விட்டேன்” என்றும் கூறினார்.
சாப்பிடுவதற்கு அமர்வதற்கு முன்பாக வழக்கறிஞர் ஹாக்கின்ஸ் கொடுத்தனுப்பிய கடிதத்தினை ஜோனாதன், டிராகுலா பிரபுவிடம் கொடுத்தார்.
தொடரும்…