அப்போது எதிர்பாராத நேரத்தில் அச்சம்பவம் நிகழ்ந்தது. பளீரென ஒருவித நீலநிற வெளிச்சமானது அந்த வண்டிக்கு இடதுபுறமாகத் தோன்றியதுதான் தாமதம், அந்த வண்டிக்காரர் படக்கென வண்டியிலிருந்து இறங்கி எங்கேயோ மறைந்து காணாமல் போய்விட்டார்.
ஜோனாதனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. எவ்வித அசைவுமின்றி அப்படியே உட்கார்ந்திருந்தபோது, ஓநாய்களின் சத்தம் மெல்லக் குறைந்தது. அப்போது அந்த வண்டிக்காரர் திரும்பவும் அங்கே வந்து சேர்ந்தார். மீண்டும் பயணம் தொடர்ந்தது.
இதே சம்பவம் திரும்பத் திரும்ப நிகழ்ந்தபோதும் ஜோனாதனுக்கு ஏதும் புரியவில்லை. கடைசி முறையாக திரும்பவும் அந்த நீலநிற வெளிச்சம் பரவியபோது வண்டிக்காரர் நீண்ட தொலைவுக்குச் சென்றுவிட்டார்.
அச்சமயம் அந்தக் குதிரைகள் அடக்குவாரின்றி பீதியுடன் அலறியபடி கால்களைத் தூக்கிக் குதித்தன.
என்னதான் நடக்கிறது என்று அறிவதற்காக ஜோனாதன் வெளியே எட்டிப் பார்த்தபோது நிலவு பொழிந்து கொண்டிருந்தது. அதன் சுற்றுப்புறம் சற்று வெளிச்சமாகத் தெரிந்தது. அப்போதுதான் அந்த பயங்கரக் காட்சியைப் பார்த்து நடுங்கிப் போனார் ஜோனாதன்.
பளிச்சென – வெள்ளை வெளேரென கூர்மையான நீளமான பற்களுடன், செக்கச் செவேலென தொங்கிய நாக்குடன் பிடரிமயிர் சிலிர்க்க, ஜொலிக்கும் கண்களுடன் எண்ணற்ற பெரிய ஓநாய்கள் அந்த வண்டியைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்தன.
தங்களுடைய நாக்கால் உதடுகளை நீவியபடி, எச்சிலை விழுங்கிக் கொண்டு அசைவின்றி அவரை மூர்க்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தன.
அந்தக் காட்சி அந்த ஓநாய்களின் ஊளைச் சத்தத்தைவிட மிகக் கொடூரமாக- நூறு மடங்கு பயம் ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது.
ஜோனாதனுக்கு தொண்டை வறண்டு நாக்கு இழுத்து மிகவும் மிரண்டுபோய் விட்டார். அந்தக் காட்சியைப் பார்த்தமாத்திரத்தில் சாதாரண சராசரி மனிதர்களை சட்டென மரணம் தாக்கிவிடும்.
அந்தக் குரூரம் நிறைந்த ஓநாய்கள் யாருடைய உத்தரவையோ செயல்படுத்துவதுபோல, திடும்மென ஒன்று சேர்ந்து பெருஞ்சத்தத்துடன் ஊளையிட்டன.
அவ்வளவுதான்… குதிரைகள் நடுநடுங்கின. சாரட் வண்டியைப் பின்புறமாக உந்தித் தள்ளின. அந்த ஓநாய்களின் பிடியிலிருந்து குதிரைகளாலும் தன்னாலும் தப்பிக்க முடியாது என்பது மட்டும் ஜோனாதனுக்கு அந்த நேரத்தில் புரிந்தது.
அந்த ஓநாய்கள் எந்த நொடியிலும் தன்மீது பாய்ந்து கடித்துக் குதறலாம் என்று தோன்ற, அந்த வண்டிக்காரனை அழைப்பதற்காக வண்டியின் பக்கவாட்டில் தட்டி ஒலி எழுப்பினார் அவர். அந்த சத்தத்தில் ஓநாய்கள் கொஞ்ச தூரத்திற்காகவாவது நகர்ந்து போகும் என்று நினைத்தார். அவற்றை விரட்டவும் முயற்சித்தார்.
ஆனால் அந்த ஓநாய்களோ ஒரு அங்குலம்கூட நகரத் தயாராயில்லை. அச்சமயம் அந்த வண்டிக்காரர் ஏதோ உத்தரவிடும் தொனியில் சத்தமிட்டதும் ஜோனாதனுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.
அடுத்த சில நிமிடங்களில் அவர் கண்ட காட்சி தேகமெங்கும் சில்லிட வைப்பதாக இருந்தது. ஆம்… அந்த வண்டிக்காரர் அந்த பயங்கர ஓநாய்களை செல்ல ஆட்டுக்குட்டிகளைக் கையால் பிடித்துத் தள்ளுவதைப் போல அவற்றை விலக்கியபடி வந்தார்.
அந்த ஓநாய்களும் உடம்பை நெளித்தபடி பின்னால் நகர்ந்து போயின. அச்சமயம் நிலவானது கருமேகத்துக்குள் மறைந்துபோய் விட்டிருந்ததால் அவரால் வேறு ஒன்றையும் கவனிக்க முடியவில்லை.
அதற்குள் அந்த ஓநாய்க்கூட்டம் எங்கோ போய் மறைந்து விட்டன. நினைத்தாலே அந்தச் சம்பவம் நெஞ்சை மரத்துப் போகச் செய்வதாக இருந்தது.
வண்டிக்காரர் குதிரைகள்மீது சவுக்கை சுழற்றி அடிக்க, மீண்டும் பயணம் மலைப்பகுதியின் செங்குத்தான இடங்களில் ஏறி இறங்கி சுற்றி வந்து தொடர்ந்தது.
அப்போது திடும்மென வண்டிக்காரர் குதிரைகளின் கடிவாளத்தைப் பற்றி இழுத்தபோது சாரட் வண்டி சட்டென நின்றது. கன்னங்கரேலென பிரம்மாண்டமான ஒரு கோட்டைக்கு முன்பாக அந்த வண்டி நிற்பதை ஜோனாதன் நிமிர்ந்து பார்த்தார்.
அந்தக் கோட்டையின் மேல்புறத்தில் வாசல்பகுதியில் ஒரு சிறிய வெளிச்சம்கூட தென்படவில்லை. அந்த இருட்டில் கோட்டை யைப் பார்க்கப் பார்க்க பயம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
வண்டிக்காரர் ஜோனாதனை வண்டியிலிருந்து கீழே இறங்குவதற்கு உதவி செய்தபோது, அவரது கரங்களில் இருந்த அசாத்திய வலு புலப்பட்டது. அந்த வண்டிக்காரர் மட்டும் நினைத்தால் ஒரு நொடியில் தன்னுடைய முரட்டுக்கரங்களாலேயே ஜோனாதனை நெரித்துக் கொன்றுவிட முடியுமென்று தோன்றியது.
அவர் இறங்கியதும் வண்டிக்காரர் அவரது பெட்டியைக் கீழே இறக்கி வைத்தார். புராதனமான அந்தக் கருங்கல் கோட்டைச் சுவரையும் பெரிய பெரிய இரும்பு ஆணிகளால் பட்டை அடித்து நிறுத்தப்பட்டிருந்த பெரிய கதவையும் பார்த்து ஜோனாதன் பிரமித்துப் போய் நின்று கொண்டிருந்தபோது, எந்த வார்த்தையும் அவரிடம் பேசிக் கொள்ளாமல் வண்டிக்காரர் வண்டியில் ஏறியமர்ந்து வண்டியை ஓட்டிச் சென்றார்.
பீதியைக் கிளப்பும் அந்த அமைதியான நேரத்தில், தனிமை யாகத் தான் விடப்பட்ட சூழ்நிலையில் ஜோனாதன் சுற்றும்முற்றும் பார்த்தார். கோட்டைக்குள்ளே தன்னுடைய வருகையைச் சொல்வதற்கு எந்த ஒரு மார்க்கமும் இருப்பதாகப் புலப்படவில்லை.
தான் கதவைத் தட்டித் தெரிவிக்கலாம் என்றாலும் அத்தகைய பெரிய கதவுக்கு அந்தப்புறம் அந்தச் சத்தம் கேட்குமா என்பது சந்தேகமாக இருந்தது.
தொடரும்…