Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » மிரட்ட வரும் பேய் – 10 இறுதி அத்தியாயம்.

மிரட்ட வரும் பேய் – 10 இறுதி அத்தியாயம்.

நகரிலிருந்து சற்று தூரத்தில் நாலாப்புறமும் வனப்பகுதிகளால் சூழ்ந்த இயற்க்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம். அந்த கிராமத்தில் தினமும் காலைக்கதிரவன் வெளிவருமுன்பிருந்து மாலை வெயில் மறைந்து இரவு எட்டிப் பார்க்கும் வரை எந்நேரமும் சுற்றுப்புற நகரிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் வண்ண வண்ணக்கார்களும் ஆட்டோக்களும் சகிதமாக அந்த கிராமத்துக் குறுகிய சாலையை அடைத்துக் கொண்டு வந்துபோகும்வண்ணமாக இருக்கும். அக்கிராமமே அந்தப் பகல்ப்பொழுது முழுவதும் பரபரப்புடன் காணப்படும். .காரணம் அந்தக்கிராமத்தில் பேய், பிசாசு, செய்வினை, சூனியம் ஆகியவற்றை நீக்குவதாக தன்னை பிரபல்யப்படுத்திக் கொண்டு ஒரு மந்திரவாதி ஒருவர் இருந்தார்.

தனக்குள்ள குறைகளையும் பயத்தினையும், குடும்பப்பிரச்சனைகளையும் சொல்லித் தீர்வுகாண தினம் தினம் பலதரப்பு மக்களும் வந்து பார்த்துவிட்டுப் போவார்கள். சிலருக்கு பேய் பிடித்துள்ளதாகச் சொல்லி பரிகாரம் செய்தால் பேயை ஒட்டிவிடுவேனென்று பகிரங்கச் சவால் விட்டபடி இரவில் அங்கேயே தங்க வைப்பதும் உண்டு.

மாலைக் கதிரவன் மங்கி இருள் வெளிவரும் நேரத்திற்க்கெல்லாம் அந்த கிராம ஜனங்கள் யாரும் வெளியே வர பயப்படுவார்கள். ஏனென்றால் மந்திரவாதி பேயை விரட்டும் போதுஅந்த வழியாக யார் எதிரே வந்தார்களோ அவர்களை பேய் பிடித்துக் கொள்ளுமாம். அப்படி ஒரு நம்பிக்கையை அந்த மந்திரவாதி மக்களுக்குச் சொல்லி பயமுறுத்தி வைத்திருக்கிறார்.

ஆகவே பகல்ப் பொழுது முழுவதும் பரபரப்புடன் காணப்பட்ட அந்த கிராமத்துச்சாலை இரவு ஆனதும் இருக்கும் இடம் தெரியாமல் அவ்வளவு அமைதியாய் நிசப்தமாய் வெறிச்சோடிக் கிடக்கும்.   அந்த அமைதி நிசப்பதத்தில் இந்த மிரட்டவரும் பேயை விரட்டியடிப்பதாகச் சொல்லிப் புலப்படாத மொழியில் உச்சரித்து பயமுறுத்தும் மந்திரவாதியின் ஓசை மட்டும் கணீர் குரலில் தனியாக ஒலித்துக் கொண்டு இருக்கும்.

அப்போது ஒரு நாள்…

நடுஇரவு நேரம்….அமைதியும் சேர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் அந்த நள்ளிரவு வேளையில் அந்த மந்திரவாதி வீட்டிலிருந்து அழுகைச் சப்தம் அமைதியைக் கிழித்துக் கொண்டு வந்தன…யாராச்சு வந்து எம்புருசன காப்பாத்துங்களேன்…காப்பாத்துங்களேன்… பேய ஓட்ட மந்திரம் சொல்லிக்கிட்டு இருந்தவரு இப்புடி பேச்சி மூச்சி இல்லாம கெடக்குறாரே. யாராச்சும் வாங்களேன்…எம்புருசன பேயி அடிச்சிப் புடிச்சே…என்று அலறலுடன் அந்த நிசப்த இரவு வேளையில் அழுகுரலைக் கேட்ட அந்தப்பகுதியில் வசிக்கும் தைரியசாலிகள் சிலர் ஓடிவந்தார்கள்.

வீட்டினில் புகுந்த அவர்கள்… என்னாச்சுமா..மந்திரவாதிக்கு என்று கேட்டவாறுவந்தவர்கள்… வீட்டில் மாந்திரீக மந்திர வேலைகள் செய்வதற்கென தனியாக பயன்படுத்தும் அந்த சிறிய ரூமுக்குள் நுழைய முற்ப்பட்டனர்… அந்த ரூமிற்குள் நுழைய முடியாதபடி மல்லிகைப்பூ, சாம்பிராணி பத்தி வாசனை சகிதமாகபுகைமண்டலத்தின் நடுவில் மந்திரவாதி மூர்ச்சையாகிக் கிடந்தார்.

வந்தவர்களில் சற்று விபரம்தெரிந்த ஒருவர் அந்தமந்திரவாதியின் கைநாடியை பிடித்துப் பார்த்தார். அவர் உயிர் பிரிந்து விட்டதை ஊர்ஜிதப்படுத்தி கொண்டவராய்….பேயி ஒன்னும் அவர அடிக்கலம்மா இந்தப்புகமூட்டத்துல மூச்சித்தெனரி மந்திரவாதி செத்துப் போய்ட்டார்ம்மா…..என்று சொன்னதும் அங்கு… சலசலப்புக்கு நடுவில் அந்த அம்மாவின் அழுகுரலும், ஒப்பாரியும் ஓங்கி ஒலித்தன. நா இவர்ட்ட அப்பவே சொன்னேனே… கேட்கலயே..கேட்கலயே…இந்த மந்திர வேலையெல்லாம் நமக்கு வேணாமுங்க… வேற நல்ல வேலையாபாத்து சம்பாரிக்கப் போங்கண்டு…ஊரு சனத்தெ நம்பவைக்க எனக்கு சத்தியிருக்கு.. சத்தியிருக்குண்டு சொல்லி நம்பவச்சி இந்தக்காசுக்காக மந்திர வேலைய… தொடங்குனீங்களே.. எந்த சக்தியும் இப்பவந்து உங்கள காப்பாத்தலயே… காப்பாத்தலயே… ஆ..அஹ்…அஹ்..அஹ்..இப்ப யாரு எனக்கு தொண இருக்கா…யாரு எனக்கு தொண இருக்கா நா… என்னத்தே செய்யிறது.. என்னத்தே செய்யிறது…இப்புடி என்னத்தன்னந்தனியா உட்டுப்புட்டு போயிட்டீங்களே…போயிட்டீங்களே..அஹ்…அஹ்..அஹ்..என்று ஒப்பாரிவைத்து தேம்பியழ ஆரம்பித்தார் அந்த மந்திரவாதியின் மனைவி.

அழாதீங்கம்மா இப்ப அழுது என்ன புண்ணியம். அப்பாவீங்க வெவரமில்லாதவங்கட்ட எல்லாம் பேய ஓட்டுவேன் ஒன்ன பணக்காரனா ஆக்கிப்புடுவேன் அதெச்செய்வேன் இதச் செய்வேன் என்கிட்ட சக்தியிருக்குன்டு சொல்லி பல குடிகளையும் பொம்பளைங்களையும் நாசப்படுத்தியிருக்கார்ம்மா ஒம்புருஷன். அந்த சனங்களோட சாபம் சும்மா விடும்மாம்மா.. அதான் இவர இந்ததொழிலே சாவடிச்சிடிச்சி என்று தன் ஆதங்கத்தை எடுத்துச் சொல்லி அந்த அம்மாவை ஆறுதல் அடைய வைத்தார் அந்த ஊரில் கொஞ்சம் விபரம் தெரிந்த மூடநம்பிக்கையை எதிர்க்கும் ஒரு நபர்…

இந்த போலி மந்திர விஷயம் காட்டுத்தீபோல் பரவி அனைவருக்கும் அறியவந்தது. அன்றுமுதல் அந்த கிராமத்து மக்கள் விழிப்புணர்வு அடைந்து பேய் பிசாசு மந்திரம் இவைகளின் மேல் நம்பிக்கை கொள்ளாமல் மனதில் உள்ள அச்சத்தை நீக்கி மகிழ்வுடன் வாழ ஆரம்பித்தனர்.

இத்தொடர் நிறைவுபெரும் நிலையில் இறுதியாகச் சொல்லவருவது யாதெனில்…

பேய் காத்து கறுப்பு என்று மூடநம்பிக்கையில் மூழ்கிப் போய் இருப்பவர்களையும், பணத்தை பன்மடங்கு பெருக்கித்தருவதாகவும், குழந்தை பாக்கியத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும்,குடும்ப கஷ்டத்தை நீக்கிவிடுவதாகவும் சொல்லி மாய மந்திரத்தை நம்புபவர்களைத்தனது மூலாதனமாக வைத்துக் கொண்டு பணத்திற்காக மந்திரவாதி என்ற போலி மாயையை மக்கள் மத்தியில் உருவாக்கிக் கொண்டு சிலர் பணம் சம்பாரிக்கும் உத்தியை கையாண்டு கொண்டிருக்கிறார்கள்.. இத்தகையோரால் நிறைய குழந்தைகள் நரபலியாகவும். நிறைய பெண்களின் கற்ப்பும் சூறையாடப்பட்டுள்ளது. இத்தகைய மந்திரவாதி என்கிற போர்வையில் மறைந்து வாழும் போலிகளின் சொல்லுக்கு மயங்கி விடாமல் மக்கள் தான் விழிப்புணர்வு அடைய வேண்டும்.

ஆனால் மிரட்டவரும் பேய் பற்றிய நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது.!?

முற்றும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top