அன்று புதன் கிழமை.
ஒன்றரை மாதம் அசம்பாவிதம் இல்லாமல் ஓடி விட்டது- அதாவது நான் பிரைவேட் செக்யூரிட்டி வைத்த நாளிலிருந்து! என் முதலாளி கூட இதற்காக என்னைப் பாராட்டினார். நான் கேட்ட பத்திரிக்கைகள் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை.
ஒரு வாரத்துக்கு முன் நவீனை சந்தித்தேன். தன் கான்ட்ராக்டை வெற்றிகரமாக முடிக்கப் போகிறார் என்றே தோன்றியது. வீட்டுக்குச் சென்று முதலாளியைப் பார்த்து பேசி விட்டு வந்தார். நானும் கூடப் போயிருந்தேன். வரும் வழியில் அவர் பாணியில் பேசிக் கொண்டு வந்தார். “ பொண்ணை வச்சுத்தான்யா மடக்க வேண்டியிருந்துச்சு,” என்றார். “ அந்த ஜோசப் என் மேல கொலை வெறியோட இருப்பான்! ”
சட்டென்று அவரை இது வரை காத்து வந்த பாதுகாப்பு கவசம் அகன்று போனது போல் தோன்றி எனக்கு நெஞ்சுக்குள் பிசைந்தது!
அந்த நாளில் நடந்த சம்பவங்களை நினைத்துப் பார்க்கிறேன். பார்வதி சுரத்தின்றி காணப்பட்டாள். வட இந்திய ரெசிபி கற்றுக் கொடுத்தேன். ரெசிபி தீய்ந்து பாத்திரம் கரியாகி சமையலறை நாஸ்தியானது. பார்வதிக்கு கையிலும் இடது புறங்கழுத்திலும் தீப்புண் பட்டது. சமையலறையை சுத்தப்படுத்தி ரூம் ஃப்ரெஷ்னர் அடித்தேன். வித்தியாசமான மருக்கொழுந்து வாசம்.. தெரியாத்தனமாக பார்வதி மேலும் அடித்து விட்டேன்!
அன்றைக்கு ஹோட்டல் போனபோது இன்னொரு திருப்பம்.
நவீன் ஆரோக்கியமாக இருப்பதால் பிரத்யேக சமையல்காரி தேவையில்லை என்று மிதுன் பாண்டே சொல்லி விட்டதாக என் முதலாளி தெரிவித்தார். ஆனாலும் பலீனா விரும்பினால் ஹோட்டலில் தொடரலாம்…
நான் கண் மூடி தலையைப் பிடித்துக் கொண்டு என் அறையில் அமர்ந்திருந்தேன். பலீனா வந்தார். தரையில் கிடந்த என் பேனாவை குனிந்து எடுத்து மேஜையில் வைத்தார். காலையில் கிளம்பி விடுவதாகச் சொன்னார். நான் பலீனாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்தேன்.
பலீனா வேலையை விட்டுப் போய் இன்றோடு ஒரு வாரமாகிறது. பலீனா மீது எனக்கு சந்தேகம் இருக்கும் பட்சத்தில் அவர் ஹோட்டலை விட்டுப் போனது எனக்கு நிம்மதியைத் தந்திருக்க வேண்டும்..எனக்கென்னவோ சதித் திட்டம் நிறைவேறி விட்டதால் பறவை பறந்து விட்டது என்றே இன்றளவும் தோன்றுகிறது! அதுவும் அந்த சதி என் கண்ணுக்கு எதிரேயே நடந்து முடிந்து விட்டது போல் தோன்றுகிறது! ஒரு வேளை இது என் பிரமையோ?
நான் பெருமூச்செறிந்து விட்டு வேலையை கவனித்தேன். நடப்பது நடக்கட்டும்!
இரவு பதினோரு மணியிருக்கும்.. ஹோட்டல் அடங்க இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. அந்த நேரத்தில் எமெர்ஜென்சி அலாரம் நிற்காமல் அடித்தது! நவீன் அறையிலிருந்து தான் அழைப்பு!
எல்லோரும் அங்கே ஓடினோம். டாக்டரும் வந்து விட்டார். வாடிக்கையாளர்களும் கூடி விட்டனர். நவீன் படுக்கையில் படுத்திருந்தார். டாய்லெட்டை காட்டினார். வாந்தி பேதியாகி இருக்கிறது. எங்கள் பணியாள் டாய்லெட்டை சுத்தப்படுத்தினார். போன வியாதி திரும்ப வந்து விட்டது என்றே அனைவரும் நினைத்தோம்!
திடீரென்று நவீனின் உடல் வில்லாக வளைந்தது. தசைகள் இறுகின. கையும் காலும் வெட்டி வெட்டி இழுக்க ஆரம்பித்தது. அத்தனை பேரும் அமுக்கிப் பிடித்தாலும் வலிப்பு நிற்கவில்லை. வாயோரம் நுரை தள்ளி கண்கள் நிலை குத்தின. ஒரு மிருகம் மரண ஓலமிடுவதைப் போல வித்தியாசமான சப்தம் அவரிடமிருந்து வெளிப்பட்டது. உடல் அப்படியே எகிறி காகிதக்கூழ் பொம்மையின் காலடியில் விழுந்தது. விழுந்த வேகத்தில் பொம்மையின் கையிலிருந்த கருநீல மலர்கள் நவீன் நெஞ்சில் விழுந்தன. அதே நொடி நவீன் உயிர் பிரிந்தது!
தொடரும்..