Home » அதிசயம் ஆனால் உண்மை » நாவல்கள் » ஹோட்டல் கோல்டன் பாலஸ் – 6

ஹோட்டல் கோல்டன் பாலஸ் – 6

அன்று வெள்ளிக் கிழமை.

விடிந்ததும் விடியாததுமாக எலக்ட்ரீஷியனை வெளியே அழைத்துக்கொண்டு போனேன். கூட்டமே இல்லாத பெட்டிக்கடையில் உட்கார்த்தினேன்.

“என்ன சார், எந்த ஹோட்டல்காரனும் அவனோட ஹோட்டல்ல டீ குடிக்க மாட்டானோ? ” – அவர் கேலியை புறந் தள்ளினேன்.

“சொல்லுங்க, ராத்திரி நடந்தது ஆக்ஸிடெண்டா, சதியா? ”

தீவிரத்தை புரிந்து கொண்டார் எலக்ட்ரீஷியன்.
“ சார், ஷாட் சர்க்யூட் ஆனா தீப்பொறி வரும். அப்புறம்தான் பவர் கட்டாகும். அந்த தீப்பொறியிலேயே தீ விபத்து வரலாம்; பார்த்தீங்கள்ள? ஸ்விச்சை சுத்தி மரக் கட்டில் எப்படி கருகிப் போயிருந்துச்சின்னு!”

ஆக ஷாக்கடித்து மேலே போவதல்ல, தீப்பிடித்து டிக்கெட் வாங்குவதுதான் ஐடியாவா? பிரில்லியண்ட்!

எலக்ட்ரீஷியன் பேசிக்கொண்டே போனார்.

“ ஆனா தீ விபத்து வராமலும் போகலாம். பாதி சதி பாதி விதிங்கிற மாதிரி பண்ணியிருக்கான்….ஒண்ணு சொல்ல முடியும். இது சதியா இருந்தா ஒரு புரஃபஷனல் எலக்ட்ரீஷியன் இதை செஞ்சிருக்க மாட்டான். புரஃபஷனல் எலக்ட்ரீஷியன் சேஃப்டி சிஸ்டத்தைதான் முதல்ல முடக்குவான். அப்புறம்தான் வோல்டேஜ் ப்ரசினைய கொண்டு வருவான். தப்பிக்க சான்ஸே கிடையாது.”

“ஒத்துக்கறேன். வேற யார் செஞ்சிருக்க முடியும்? ”

“வெளியாள் செஞ்சிருக்க முடியாது. ஏன்னா இதைச் செய்ய அரை மணி நேரம் முழுசாய் வேணும். நவீன் சார் ரூம்ல பத்து நிமிஷமாவது இருக்க முடிஞ்ச ஆளா இருக்கணும். புது ஆளும் செஞ்சிருக்க முடியாது. ஏன்னா நம்ம வயரிங் கன்சீல்டு. அதுக்கான வரைபடம் லாக்கர்ல சேஃபா இருக்கு. அந்த சாவிங்க உங்க கிட்டதான் இருக்கு.”

சட்டென்று கேட்டேன், “பார்வதி மேடம் செய்ய சான்ஸ் உண்டா? ”

“ஜோக்கடிக்காதீங்க சார். பார்வதி மேடம் ஹோட்டல் திசைப் பக்கம் வந்தே பல நாளாச்சு. ஒரு முதலாளியம்மா ஸ்பானரை பிடிச்சி ஃப்ளோர் ஃப்ளோரா ஏறி…அபத்தம்…. ” எலக்ட்ரீஷியன் நிதானித்தார். “சார், நான் ஒண்ணு சொன்னா கோபிக்க மாட்டீங்களே? இது சதின்னா இதச் செய்ய போதுமான அருகதை, அவகாசம் உங்க ஒருத்தருக்குத்தான் இருக்கு! நீங்களா செஞ்சாலும் சரி; பார்வதி மேடம் ஏவி விட்டிருந்தாலும் சரி.”

அப்படிப் போடு!

என் முதலாளி ஜெகதீஷ் குமார் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்க, நான் எதிரில் நின்றிருந்தேன். நேரம் பகல் பத்து மணியிருக்கும்.

“என்ன சூரி, வீட்டுல நெருப்பு பத்திட்டுருக்கு, அஞ்சு வருசமா ஒரு அசம்பாவிதமும் நடக்காத ஹோட்டல்ல ஒரு முக்கியமான கெஸ்ட் வந்ததும் வராததுமா மயக்கம் போட்டு விழறார், ஷாட் சர்க்யூட்டாகி கட்டில் எரிஞ்சிடுச்சிங்கறீங்க, எனக்கு இது நல்லதாப் படலையே? ”

“சார், மாப்பிள்ளை சார் பயணக் களைப்பால மயக்கம் வந்துடுச்சின்னார். பார்வதி இப்பத்தான் சமைக்கப் பழகுறாங்க. அதுல அஜாக்கிரதையா இருந்ததால நெருப்பு பத்திகிச்சு. நேத்து ராத்திரி முழுக்க இடி, மின்னல், மழை… மின்னல் தாக்கி ஷாட் சர்க்யூட்டாகி இருக்கலாம்னு எலக்ட்ரீஷியன் சொல்றாரு. இதெல்லாமே எதிர்பாராத விபத்துதான். இதுல கவலைப்பட என்ன இருக்கு? ”

சொல்லி விட்டேனே ஒழிய அவருக்குள்ள அத்தனை கவலையும் எனக்குள் இருந்தன!

“ஏன் சூரி, ஹோட்டல்ல அத்தனை ரூம் இருக்கற போது மாப்பிள்ளை ரூம்தான் மின்னலுக்கு கண்ணு தெரிஞ்சுதா? இல்ல, எங்கயோ தப்பு நடக்குது… மாப்பிள்ளையோட ஹெல்த் கன்டிசன் எப்படி இருக்கு? ”

“நல்லா இருக்கு சார். உங்களையும் என்னையும் மாதிரி நார்மல் சாப்பாடுதான் சாப்பிடறார். பிசினஸ் விஷயமா எங்க போனாலும் நம்ம ஹோட்டல் சாப்பாடுதான் கூடப் போகும். அவரோட நம்பிக்கையான டிரைவர் வெளியில அவரை கவனிச்சுக்குறார். அவர் ரொம்ப நேரம் வெளியிலும் தங்கறதில்லே. ரூம்லேயே ஆளுங்களை வரவழைச்சு பிசினஸ் பேசிடுறார். ”

“எல்லாம் நல்லபடி இருக்குதுங்கறீங்க.. ஆனாலும் எனக்கு படபடப்பா இருக்கு… அடடா, உட்காருங்க சூரி.. எனக்கு இருக்கற டென்சன்ல உங்களை உட்கார வைக்கக் கூட மறந்திட்டேன்… ”

“பரவாயில்ல சார்”

“உட்காருங்க, உட்காருங்க.. உங்களை ஹோட்டல் ஆளாவா நடத்தறேன்? என் வீட்டு மனுஷன் மாதிரி நடத்தறேன்; இவ்வளவு மனசு பாரத்தை வேற எங்க போய் கொட்டுவேன்? ”

நான் உட்கார்ந்து கொண்டேன். அவர் தொடர்ந்தார்.

“ஏன்னா, இவரை மாப்பிள்ளையா ஏத்துக்க என் மனைவியும் ஒத்துக்கல, மகளும் ஒத்துக்கல. நான்தான் பிடிவாதமா முடிவு பண்ணேன். ”

“சார், ” நான் தயங்கினேன். “பார்வதி மேடம் கலகலப்பாவே இல்ல. யார் மேலயோ ஆத்திரம்… அன்னைக்கு காரட்டை போட்டு அந்த குத்து குத்துனாங்க! ”

விரக்தியாக சிரித்தவர் மேஜை டிராயரிலிருந்து ஒரு போட்டோவை எடுத்து என் முன் போட்டார். கன்னாபின்னாவென்று குத்திக் கிழிக்கப்பட்ட அவருடைய போட்டோ!

“நான் இல்லாதபோது என் ரூமுல வந்து பார்வதி என் போட்டோவை என்ன பண்ணியிருக்கா பாருங்க! ”

இந்தப் பெண் எல்லாத்தையும் குத்துவா போல…

“ஏன் சார் இப்படி? ”

“மாப்பிள்ளை, பொண்ணுங்க விஷயத்துல முன்னே பின்னேன்னு ஒரு வதந்தி. அப்பாவிப் பொண்ணுங்களை வேட்டையாடுவாராம்… வதந்தியப் போய் இவ பெருசா எடுத்துக்கறா. மாப்பிள்ளை மேல போலிஸ் கேஸ் எதுவும் இல்ல. நாம பிராக்டிகலா தானே பார்க்கணும்? இந்த ஒரு விஷயத்தை விட்டுட்டு பார்த்தா நல்ல சம்பந்தம்தான். நிறைய பணம்…நிறைய பிசினஸ் டீலிங்…! ”

“பின்ன ஏன் குழம்பறீங்க? ”

“பொண்ணுங்க சாபம் வியாதியா வந்துடுச்சிங்கறாங்க. கேக்க கஷ்டமாயிருக்கு. ”

“சார், இவருக்கு வந்தது பால்வினை நோயில்ல. கதிரியக்கம்.. இவர் நியூக்ளியார் பிசிக்ஸ் படிச்சப்போ நடந்த விபத்து… ”

“அதைத்தான் நானும் கேட்கிறேன், இவருக்கு மாத்திரம் ஏன் இத்தனை விபத்து? ”

இதற்கு நான் என்ன சொல்ல?

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top