சகாக்களிடமிருந்து விக்டர் மார்ஷலுக்கு கடைசியாகத் தகவல் வந்தது இரவு ஒரு மணிக்கு! அதன் பிறகு ஒரு தகவலும் இல்லை. விக்டர் ஃபோன் செய்தால் ரிங் போனது; எடுப்பாரில்லை. இரவு இரண்டு மணிக்கு மேல் எல்லாமே நிசப்தம்!
ஏதோ விபரீதம்! “ஸ்வர்ணகிரியா? ஸ்தனகிரின்னு ஞாபகம்! ” லாரலின் வார்த்தைகள் காதில் ஒலித்தன!
கொலை வெறியோடு புறப்பட்டான் லாவண்யாவைத் தேடி….!
லாவண்யாவின் வீடு
கதறி அழுது கொண்டிருந்தாள் லாவண்யா! எதிரில் லாவண்யாவின் தாய் பட்டுப்புடவை, தங்க வளை அணிந்த நிலையில் தூக்கில் பிணமாகத் தொங்கியிருந்தாள். விக்டர் மார்ஷல் லாவண்யாவின் முகத்தைப் பற்றி தூக்கினான்.
“லாவண்யா டார்லிங்! உங்கம்மாவை மாதிரி உன்னைக் கொல்ல மாட்டேன்; உன்னை ஏடாகூடமா போட்டோ எடுத்து தெருத் தெருவா ஒட்டினா எப்படி இருக்கும்? உன் காதலன் நரேனுக்கு எப்படி இருக்கும்?”
லாவண்யா மேலும் அழுதாள்.
“தில்வாலியா நீ? அதுக்குத்தான் உனக்குப் பாதுகாப்பா ஒரு போலிஸ் கான்ஸ்டபிளை போட்டிருக்காரா?”
லாவண்யாவுக்கு இது புது விஷயம்! அவ்வளவு அக்கறையா அவருக்கு என் மேல்? அப்படியானால்…. அப்படியானால்….அவர் மனதில் எனக்கு இடமிருக்கிறது!
அவள் முகத்தில் பிரகாசத்தை கண்ட விக்டர் மார்ஷல் குழம்பினான்!
சட்டென்று பதறியவளாக லாவண்யா கேட்டாள், “விக்டர், அந்த போலிஸ் கான்ஸ்டபிளை என்ன பண்ணே? ”
“ கவலைப்படாதே! அவன் கதையையும் முடிச்சிட்டேனில்ல? ”
லாவண்யாவுக்கு உடல் நடுங்கியது.
“மனுஷனா நீ? அந்தாள் உன்னை என்ன பண்ணார்? ஏன் இப்படி வெறி பிடிச்சி அலையிற? போற போக்குல உன் கழுத்தை நீயே வெட்டிக்குவ போலிருக்கே? ”
“ஏ, ” அலட்சியமாக நெற்றி முடியை நீவிக் கொண்டான் விக்டர். “எனக்கு இடைஞ்சலா வந்தவங்கள என்ன பண்ண சொல்றே? நான் தேடுறது கிடைச்சுட்டா நான் இந்த மண்ணுல ஒரு நொடி கூட நிக்க மாட்டேன்.. ஒரு நாளா, ரெண்டு நாளா? ஜென்ம ஜென்மமா தேடி அலையிற மாதிரியே இருக்கு ! ! ”
பிரமித்து நின்ற லாவண்யாவை அதட்டினான், “இப்பவே என்னோட வா! ஸ்தனகிரிக்கு….! ”
தனகிரி வலப்பக்கம்
மேப் லாவண்யாவிடம் இருந்தாலும் விக்டர் மார்ஷல்தான் மேப்பை பார்த்தபடி அவளை நடத்திக் கொண்டு போனான். அவன் தசைகளில் இன்று பலவீனமில்லை. ஊசி மருந்தின் வேகம் போலும். என்ன, இரண்டு மலைகளுக்கு இடையில் போகாமல் மலைகளுக்கு வலப்பக்கம் போய்க் கொண்டிருந்தான். கண்ணில் தென்பட்ட குகையை சற்று நேரம் ஆராய்ந்தவன் லாவண்யாவை தீர்க்கமாகப் பார்த்தான்.
“சொல்லு லாவண்யா! எப்படி போகணும்னு சொல்லு!”
தனகிரி பின்பக்கம்
நடந்தது எதுவுமே தெரியாமல் இயற்கையாக விளைந்த கஞ்சாச் செடிகளை பறிப்பதற்காக அங்கு சுற்றிக் கொண்டிருந்தான் நல்லமுத்து- லாவண்யாவின் அப்பா. அதே சமயம் துணிச்சலுக்குப் பேர் போன தேசிய நாளிதழான “பல்ஸ்” பத்திரிக்கையின் நிருபர் நாராயண் நல்லமுத்துவை பிடித்தால் செய்தி கிடைக்குமென்ற நப்பாசையில் ஒரு ஐந்நூறு ரூபாயைக் கொடுத்து அவன் கூட்டாளியாகி அவனும் அங்கே சுற்றிக் கொண்டிருந்தான்.
தனகிரி வலப்பக்கம்
“எப்படி கேட்டாலும் வாயை திறக்க மாட்டேங்கிறியே? அப்ப ஆரம்பிச்சிடலாமா? ”
ஒவ்வொரு அடியாக வைத்து லாவண்யாவை நெருங்கினான் விக்டர். அவன் மூச்சுக்காற்று அவள் மேல் படுகிற நெருக்கத்தில் வந்தான். லாவண்யா துடிக்கத் துடிக்க அவள் கைகளை பின்னுக்கு கொண்டு போய் ஒரு கையால் அமுக்கிப் பிடித்தான். தன் முழங்கால்களால் அவள் கால்கள் நகராதபடிக்கு இறுக்கினான்.
“இப்பவாவது சொல்லு! பத்திரமாப் போயிடலாம், இல்லே அலங்கோலமாயிடுவே! உன் நரேன் முகத்தில முழிக்க வேண்டாமா? ”
“என்னை கொன்னு போட்டுடு! எனக்குத் தெரிஞ்சது சொல்லிட்டேன் நீ நம்ப மாட்டேங்கிறே! ”லாவண்யா அரற்றினாள். அவள் அறிவாள், அவன் கண்களில் காமத் தகிப்பு! உண்மையைச் சொன்னாலும் இவன் விடப் போவதில்லை! அவன் அணுகுமுறையில் தன்னை விட பலசாலிப் பெண்களை ருசி பார்த்த அனுபவம் தெரிகிறது! இவனுக்கு இரையாவதை விட காட்டு மிருகங்களுக்கு இரையானால் உடம்பை வளர்த்த பலனாவது கிடைக்கும்…………..
அவன் துப்பட்டாவை தூக்கி எறிந்தான். அதே வேளை…
குகை வாயிலில் உறுமல் சத்தம் கேட்டது. கொள்ளிக் கண் ஒளிர புள்ளி சிறுத்தை!
சிறுத்தை குகைக்குள் வந்து விட்டால் இருவரும் அதற்குப் பலகாரமாக வேண்டியதுதான்.
இத்தனைக்கும் விக்டரிடம் துப்பாக்கி இருந்தது. துப்பாக்கியால் சிறுத்தையை சுட வேண்டிய அவசியம் இல்லை; எதையாவது சுட்டிருந்தால் கூடப் போதும்- சிறுத்தை ஓடியிருக்கும். ஆயினும் தோட்டாவை வீணாக்க விரும்பாத விக்டர் லாவண்யாவை அப்படியே பிடித்திழுத்து சிறுத்தையிடம் தள்ளி விட்டான்.
லாவண்யா சிறுத்தையை லாவகமாகப் பிடித்து ஓரடி தள்ளி நிறுத்தினாள். மார்ஷலிடமிருந்து அவளைக் காப்பாற்ற மரணதேவன் வந்து விட்டான், இனி என்ன பயம்?
தெளிவான ஃபிரஞ்சு மொழியில் பேசினாள் லாவண்யா!
“மார்ஷல்! உனக்கு நன்றி; நீ என் நரேன் மனதைத் தெரியப்படுத்தினாய்! உன் மீது நாகத்தை ஏவியது நான்தான்! எப்படி என் பரிசு? உன் சகாக்கள் ஒரு போதும் திரும்பப் போவதில்லை! ”
அவள் சொன்னது அவ்வளவுதான். அவள் மார்ஷலின் சகாக்களிடம் கொடுத்தனுப்பியது காட்டு வாசிகளின் கடவுள் நோவாவின் பொம்மையல்ல! காட்டுவாசிகளின் பரம எதிரி நகோடாவின் உருவப் பொம்மை. இதைத்தான் அன்று சுதர்சனாவிடம் விசாரித்தாள். பிரிண்ட் அவுட்களை வைத்துக் கொண்டு நகோடாவின் உருவத்தைச் செதுக்கியது அவள்தான்!
இதற்குள் சிறுத்தை அவள் இடக்கை, மார்பு, தொடை என்று குதறி விட்டது!
“மார்ஷல்! உன்னை அழிக்க இன்னொருத்தர் தேவையில்லை! நீயே போதும்”
விக்டர் மார்ஷலுக்கு அரை குறை வெளிச்சத்தில் என்ன நடக்கிறதென்று தெளிவாகத் தெரியவில்லை. ஒருமுறை சில நொடிகள் டார்ச் அடித்துப் பார்த்தவன், பயத்தில் உறைந்து போனான்;
லாவண்யா…
சிறுத்தை குதறியதால் வடிந்த ரத்தத்தில் ஒரு பக்கம் சிவந்தும், ஒரு பக்கம் கருத்தும் தரைக்கேசம் நாலா திசைகளிலும் புரண்டு தன் நிழலோடு சேர்ந்து பயங்கரமாய் நெடிய வடிவம் எடுத்து நின்றாள். இடக்காலை வளையமாக்கி சிறுத்தையை நெருக்கியிருந்தாள். சிறுத்தையின் வாய் அவள் தொடையில் பதிந்திருந்தது. கொஞ்சம் பொறு என்கிற பாவனையில் சிறுத்தையின் தலையை இடக்கையால் தடுத்திருந்தாள். விக்டர் மார்ஷல் முகத்தில் ரத்தமிழந்தான்! ஆங்காங்கே பிய்ந்து தொங்கிய சதையோடு தள்ளாடிக் கொண்டிருந்தாலும் லாவண்யாவின் வார்த்தைகளில் பிசிறில்லை!
சிறுத்தை அவள் கழுத்தைக் கவ்வி அப்படியே இழுத்துக் கொண்டு போனது! மேப் லாவண்யாவின் வலக்கையில்….!
“ ஐயையோ, அங்க பாரு!” நாராயண் நல்லமுத்துவை உலுக்கினான். “சிறுத்தை யாரையோ இழுத்துட்டு போகுது”
தன் மகள்தான் அது என்றறியாமல் நல்லமுத்துவும், நாராயணும் மறைந்து மறைந்து சிறுத்தையைத் தொடர்ந்தனர்.
ஒரு குகைக்குள் லாவண்யாவை போட்ட சிறுத்தை அங்கிருந்து வெளியே போனது. சிறுத்தை கழுத்தைக் கவ்வியபோது லாவண்யாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது உண்மை. ஆனால் அது உயிரை எடுக்கும் அளவுக்குத் தீவிரமாயில்லை. ஏனெனில் லாவண்யாவுக்கு நீளமான மெல்லிய கழுத்து. இருப்பினும் சிறுத்தை குதறி வைத்த காயமும் ரத்த சேதமும் அவள் உயிரை ஊசலாட வைத்தன. குறிப்பாக தொடையின் ரத்தக்குழாய் அறுந்து போயிருந்தது!
தள்ளாடி எழுந்தாள் லாவண்யா. தன் ஆடையைக் கிழித்து ரத்தத்தில் தொட்டு குகை சுவற்றில் எழுதினாள்.
விக்டர் மார்ஷலின் வண்டவாளம், அவனுக்கு உதவிய இங்கிலாந்து தூதரக அதிகாரியின் பெயர், பதவி- குகை முழுதும் எழுதினாள். ரசவாத வேட்டை என்று எழுதாமல் தங்க வேட்டை என்று குறிப்பிட்டாள். வார்த்தைகள் மிக எளிதாக வந்தன. அவள் பயிற்சி எடுத்தது வீண் போகவில்லை!
சிறுத்தை எதற்கு அவளை உயிருடன் குகையில் விட்டது என்று இப்போது தெரிந்தது! தாய் பின் தொடர தாவி வந்த மூன்று சிறுத்தைக் குட்டிகள் பசியோடு லாவண்யா மேல் பாய்ந்தன!
தொடரும்…