பாண்டிச்சேரி
தன் வீட்டு தங்கத்தண்டு ஓவியத்தை தலை கீழாகப் புரட்டி ஆராய்ந்து கொண்டிருந்தாள் சுதர்சனா. வெற்றிடமாகத் தெரிந்த ஓவியத்தின் பின்புறம் லேசாக அமிலம் சேர்த்து அகச்சிவப்பு கதிரில் வைத்து போட்டோ எடுத்தாள். போட்டோவை சில்வர் நைட்ரேட் கரைசலில் முக்கி இன்னொரு போட்டோ எடுத்து ஸ்கேன் பண்ணி பார்த்தபோது….
எழுத்துக்கள் தெரிந்தன!
ஏதோ பாட்டு.. “ஸ்தன மத்ய” என்று தொடங்கியது! இரண்டு மார்பகங்களுக்கு இடையில் புறப்பட்டு நாபியில் லாண்ட் ஆவதா? ஐயையே? காமாந்திரப் பாட்டாக அல்லவா இருக்கிறது? இதையா இவ்வளவு ரகசியமாக எழுதி வைத்திருக்கிறார்கள்?
பாட்டு முடிந்து விட்டது. இது சிற்றின்ப பாட்டென்றால் நாபியோடு முடியாதே? இல்லை! இதன் உள்ளர்த்தம் வேறு! என்ன அது?
ரசவாத ரகசியமா? அப்படியானால் நிறைய மூலிகைகள் பேர் வருமே? ஸ்தனம், நாபியை விட்டு விட்டால்… பாட்டு எங்கிருந்தோ புறப்பட்டு எங்கேயோ சேரச் சொல்கிறது! இடத்தைப் பற்றிய குறிப்பு! ஸ்தனம் என்பது ஒரு இடம்; நாபி இன்னொரு இடம்! வெளிப் பார்வைக்கு சிற்றின்பப் பாடலைப் போல கவனத்தை திசை திருப்புகிறது!
நரேன் வீடு
கம்யூட்டரில் டைப்படித்துக் கொண்டிருந்தான் நரேன். லாவண்யா பக்கத்தில் வந்து ஒரு கடிதத்தை நீட்டினாள். அவளின் ராஜினாமா கடிதம்- ஹெல்த் பிளஸிலிருந்து. மாவட்ட ஆட்சியருக்கும் நகல் அனுப்பி இருந்தாள். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தன்னிடம் எதற்கு லெட்டரை நீட்டுகிறாள்?
“சார், இது என்னோட காபி. நான் மாத்திரமே வச்சுக்குவேன்! இந்த லெட்டர்ல உங்க கையெழுத்தை போட்டு தர்றீங்களா சார்? நான் எப்போதுமே என். லாவண்யாவாதான் இருக்கணும்! ”
நரேன் புரிந்து கொண்டான். லாவண்யாவின் அப்பா பேர் நல்லமுத்து. திருமணத்துக்குப் பிறகு பெண்ணுக்கு இனிஷியல் மாறும். அது மாறக் கூடாது என்கிறாள். நரேன் கணவனாகிற பட்சத்தில் இனிஷியல் மாறாது!
நரேன் நாற்பத்தைந்து டிகிரி கோணத்தில் அவளைப் பார்த்தான். அந்த வீட்டில் இரவு பகல் எந்நேரமும் கிடுகிடுவென்று நுழைகிறாள்; சுத்தம் செய்கிறாள்; சமைத்துப் போடுகிறாள். நரேன் தடுக்கவில்லை. அவன் உயிரைக் காப்பாற்றி இருக்கிறாள், அவனால் முடியாத காரியத்தையும் செய்திருக்கிறாள்- விக்டர் மார்ஷலை தடுத்திருக்கிறாள்; எப்போதும் அவன் நலம் விரும்புகிறாள். இது வரை பார்வையால் யாசித்தாள்- இன்று முன்னேற்றம்…
நரேன் பெருமூச்செறிந்தான். மஞ்சள் கயிறு எங்கும் கிடைக்கும், அதை கழுத்தில் போடுவதில் என்னென்ன சிக்கல்!
லாவண்யாவின் அப்பா குடிகாரன், கஞ்சா அடிப்பவன்; திருடனும் கூட. மனைவியை விரட்டி விட்டு இன்னொரு பெண்ணுடன் குடித்தனம் செய்பவன். லாவண்யாவின் தாய் கணவனை விட்டு ஓடி வந்தவள். இன்னொருத்தன் பெண்டாட்டியை துரத்தி விட்டு அவள் ஸ்தானத்தில் இருப்பவள். ஏழைக் குடும்பம் என்றால் அப்பா மறுக்க மாட்டார். இத்தகைய பின்னணி என்றால் கட்டையால் அடிப்பார்! ஐஏஎஸ் ஐபிஎஸ் எதுவும் உதவிக்கு வராது! மகள் உத்தமி என்றால் நம்பவா போகிறார்? இப்பேர்பட்ட பெண்ணை உன்னுடன் இணைத்துக் கொண்டதால்தான் பணியிடை நீக்கம் என்று கூடச் சொல்வார்! இத்தனைக்கும் சூரத்தில் அந்தஸ்துள்ள நல்ல குடும்பத்துப் பெண்கள் இரண்டு டஜன் தேறுவார்கள். இருந்தும் லாவண்யாவின் நிழலுக்கு நிகரா அவர்கள்?!
எல்லாம் சரியாகட்டும்! அப்பாவை இங்கு வரச் சொல்லலாம்… லாவண்யாவை நேரில் பார்த்துப் பழகி விட்டால் புரிந்து கொள்வார்.
பிறர் மனதை நிமிடத்தில் புரிந்து கொள்கிற நரேன் தன் மனதை மறைப்பதில் படு சமர்த்தன்! அவன் பேச்சு பிள்ளையைக் கிள்ளி விடும்; தொட்டிலையும் பதமாய் ஆட்டும்…!
“ என்ன, உனக்கு இனிஷியல் மாறக் கூடாது, அவ்வளவுதானே? நாகராஜ், நீலகண்டன், நைனியப்பன்- எவ்வளவு பேர் இருக்கு! அதுல ஒருத்தனை பிடிச்சி கல்யாணம் பண்ணிக்கோ; ப்ராப்ளம் தீர்ந்தது! ”
அவள் இறுகக் காதைப் பொத்திக் கொண்டாள், “ எனக்கு கல்யாணமே வேணாம்! ”
“ நீ இப்போதும் என் லாவண்யாதானேமா? ” இரு பொருள்பட பேசினான்.
லாவண்யா முகத்தை மூடிக் கொண்டு ஓடி விட்டாள்.
விக்டர் மார்ஷல் உயிர் பிழைத்திருந்தாலும் பாம்பு விஷம் அவன் நரம்பு மண்டலத்தை பாதித்து விட்டது. அவனால் சரியாக நடக்க முடியாது, பேச முடியாது, ஏன், சாப்பிடக் கூட முடியாது!
பாண்டிச்சேரி மியூசியம்
தூங்கி வழிகிற மாதிரியான ஒரு கால நிலை… சுதர்சனா மண்டையை போட்டு உடைத்துக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில்தான் உள்ளே வந்தனர் அந்தரீஸும், நரேனும்.
“என்ன கண்டு பிடிச்சே? ” என்றான் அந்தரீஸ்.
ஏற்கெனவே எரிச்சலில் இருந்த சுதர்சனா பாட்டின் பொருளை அப்படியே சொன்னாள்.
“ஐயே! உன்னை நல்ல பொண்ணுன்னு நினைச்சேன், இப்படியெல்லாம் பேசறியே, காலைல மட்டன் சிக்கன் பச்சையா சாப்பிட்டியா? ” செல்லக் கோபத்தில் குதித்தான் அந்தரீஸ்.
நரேன் வாய்க்குள் சிரித்தபடி நிதானமிழக்காமல் அப்புறம் என்பது போல் சுதர்சனாவைப் பார்த்தான்.
“ அடச் சே! ” என்ற சுதர்சனா அதன் பிறகு விளக்கமாகப் பேசினாள்.
நரேன் ஸ்கேன் செய்த பிரிண்ட் அவுட்டைப் பார்த்தான். நாலு வரிக் கவிதை. ஆயினும் நரேனின் எண்ணம் கவிதையல்ல; கவிதையைப் படிப்பது போல் சுதர்சனாவை அளந்தான். அதுதான் அவன் பழக்கம். பெண்களை நேருக்கு நேர் பார்க்க மாட்டான்.
நரேன் தன்னை அறிவான்; அந்தரீஸையும் சும்மா சொல்லக் கூடாது; ஆள் பார்க்க ஜம்மென்று இருக்கிறான். சுதர்சனா அனுமதித்தால் அவளை மடியில் போட்டு கொஞ்சி விடுவான் போல இருக்கிறது. ஆனால் தங்களின் ஆண்பிள்ளைத்தனம் சுதர்சனாவை பயமுறுத்தவும் இல்லை; கிஞ்சித்தும் சலனப் படுத்தவும் இல்லையே! பிரம்மசரியத்தின் ருசியில் லயித்து கற்பதிலும் கற்பிப்பதிலும் மனதை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறாள்!
அந்தரீஸுக்கு மொபைல் அழைப்பு வந்தது. அவன் அந்த பக்கம் போனதும்…
பழைய ஓலைச்சுவடி பற்றிய புத்தகத்தை தூக்கி நரேனிடம் கொடுத்தாள் சுதர்சனா. என்ன என்று கண்களால் கேட்டான் நரேன்.
“நாலு வரியை கைல வச்சிட்டு எவ்வளவு நேரம் என்னை கணக்கு பண்ண முடியும்? அதான்… புத்தகத்தைக் கொடுத்தேன். பத்து நிமிஷம் தாராளமாக் கழியும்…”
கடகடவென்று சிரித்தான் நரேன். புத்தகத்தை மூடி விட்டு சுதர்சனாவை நேருக்கு நேர் பார்த்தான்.
இருவரும் புறப்பட்டு போயினர். நரேன் தன் கர்சீப்பை விட்டு விட்டுப் போய் விட்டான்.
சரியாக ஒரு மணி நேரம் கழித்து இன்னொரு விசிட்டர்!
பூங்கொடியாய் தோற்றம், ஸ்படிகம் போன்ற கண்கள்; நெளிநெளி கூந்தல்! பூமியின் ஆற்றல்!!!
வந்தவள் “என் பெயர் லாவண்யா ” என்றாள். “ நான் ஒரு இக்கட்டில் மாட்டிக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு ஆர்க்கியாலஜிஸ்ட் உதவி தேவைப்படுகிறது. நெட்டில் சர்ச் செய்தேன்; உங்கள் பெயர் வந்தது… ”
“உள்ளே வாருங்கள் ” அவளை பாதுகாப்பான பிரத்யேக அறைக்கு அழைத்துச் சென்றாள் சுதர்சனா.
லாவண்யா விரற்கடை உயரமிருந்த மரப்பாச்சியை காட்டினாள். “இது யாரோட பொம்மை?
“இது காட்டுவாசிகளின் கடவுள் நோவாவின் உருவப் பொம்மை! ”
லாவண்யா இன்னும் சில கேள்விகள் கேட்டாள். கம்யூட்டரில் சில படங்களை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டாள்.
கிளம்பும்போது நரேனின் கர்சீப் கண்ணில் பட்டது. ஆயிரம் மின்னல்களுடன் “இது…. ” என்றாள்.
“ ஐஏஎஸ் ஆபிசர் நரேனோட கர்சீப்.. நீங்க எடுத்துக்குங்க; நெருக்கமானவங்க கிட்ட கர்சீப் தரக் கூடாதுன்னு சொல்வாங்க; அவர் கைல தர வேணாம், எதிர்ல போட்டுடுங்க! ”
“ அவரை….அவரை… ” லாவண்யாவின் உதடு துடித்தது.
“நரேன் தனியா இல்ல; நானும் அந்தரீஸும் அவரோட இருக்கோம்! அவரை கவனிச்சுக்குவோம்!”
லாவண்யா சுதர்சனாவை கையெடுத்துக் கும்பிட்டாள். புறப்பட யத்தனித்தவளை சுதர்சனா அழைத்தாள், “நில்லுங்க! உங்க பிரசினைதான் என்ன? ”
“என்னைப் பத்தி நான் கவலைப்படலைங்க! ”
“நரேன் கவலைப் படலாமில்லையா? நான் கவலைப் படலாமில்லையா? ”
சுதர்சனா பிறரையும் புரிந்து கொள்வாள்; தன் மனதையும் சட்டென்று வெளிப்படுத்துவாள்!
நரேன் அந்தப் பேப்பரில் கையெழுத்துப் போட்டுத் தரவில்லை. பேசி மழுப்புகிறார், அவர் மனதில் நானில்லை- இப்படித்தான் லாவண்யா நினைத்தாள். இதுதான் அவள் துக்கத்துக்குக் காரணம்!
“ அவரே கவலைப் படாதப்போ எனக்கு… எனக்கு… ” பொங்கி வந்த கண்ணீரை மறைத்தவளாய் அங்கிருந்து வெளியேறினாள்.
தொடரும்…