……………………………………………கி.மு. ஐம்பதாம் வருடம்…………………………………
உள்ளுக்குள் கொந்தளித்துக் கொண்டிருந்தது எரிமலை.. கல்மேடையில் அமர்ந்திருந்தார் அம்பல சித்தர். அவரை சாஷ்டாங்கமாக வணங்கி, எழுந்து நின்றான் சுதர்சனன்.
“ சுதர்சனா, ஒரு முழ ஆரத்துக்கு குழி வெட்டு! ”- வெட்டினான். எரிமலையிலிருந்து கரும்புகை வெளி வந்தது! சுதர்சனன் அசரவில்லை!
“ சுதர்சனா, இந்த துலாக்கோல் நட்சத்திரத்தைப் பார்! இதன் நடுமுள் ஈசான திசையோடு பாகை பத்து ஏற்படுத்தும் போது இந்த எரிமலை வெடிக்கும் ” – வெடித்தது!
குழிக்குள் சேகரமான எரிமலைக் குழம்பில் ஒவ்வொரு உருண்டையாகக் கலக்கினான்! வெப்பத்தைத் தாங்கினான்! பத்து நாள் கழித்து பச்சை தெரிந்தது.
“ எதையாவது இடு சுதர்சனா! ”
“குருதேவா, இந்த மரத்தண்டு போதுமா? ”
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்:
கலெக்டர் நரேன் முன் அமர்ந்திருந்தான் விக்டர் மார்ஷல்- தன் நெற்றி முடியை பாம்பு விரலால் நீவி சுருட்டிக் கொண்டே…. அவனோடு மூன்று ஆங்கிலேயர்கள்.. லாரல், டேவிட், வார்னே. அவர்களும் ஹெல்த் ப்ளஸ் நிறுவனத்தில் வேலை செய்வார்களாம். லாவண்யா ஓரமாக உட்கார்ந்திருந்தாள். அறிமுகம் முடிந்தது.
அந்நேரம் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பாடகம் என்னும் ஊரின் மகளிர் வளாகம் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை நீட்டினார் ஒருவர்.
“ பாடகம்= பாடு + அகம்; என்ன அர்த்தம்? ” கேட்டார் நரேன்.
வந்தவர் விழிக்க, விக்டர் இடைபுகுந்தான்.. “ சார், அது பாடு + அகம் இல்ல; பாடை+ அகம்! யு நோ பாடை? த ட்ரான்ஸ்போர்ட் வெகிளிள் ஃபார் லாஸ்ட் ஜர்னி ! தமிழ்நாட்டுல போர் சகஜம். இரண்டு பக்கமும் நிறைய வீரர்கள் செத்துப் போவாங்க.. அவங்களை ராஜமரியாதையோடு அடக்கம் பண்ண ஊரே திரண்டு ஒரு இடத்துல கூடி பாடை செய்வாங்க! அந்த இடம்தான் பாடகம்! ”
நரேன் மார்ஷலின் தமிழறிவை பிரமித்தார்!
“ தமிழை இவ்வளவு நல்லா தெரிஞ்சி வச்சிருக்கீங்களே? ” பாராட்டி கை குலுக்கினார்!
“ எங்க பாஷைய நீங்க இன்னும் தலையில தூக்கி வச்சு கொண்டாடும் போது உங்க பாஷைய நான் தெரிஞ்சிக்கக் கூடாதா? ”
நரேனுக்கு சுரீரென்றது! தமிழறிவு இருக்கிறது; தமிழன் மேல் இளக்காரமும் இருக்கிறது, இவன் ஏன் தமிழ்நாடு வந்தான்? அதுவும் இங்கிலாந்து தூதரகத்தின் சிபாரிசோடு!
அமரேசன் வீடு
மூன்று நாள் விடுப்பெடுத்து வெளியில் போயிருந்த பெரியசாமிக்கு சரியான சந்தர்ப்பம் வாய்த்தது!
அன்று பௌர்ணமி இரவு. எப்போதும் போல கௌரிப்பாட்டி மட்டும் வீட்டிலிருந்தாள். கிரிவலப் பாதையிலிருந்து மிகவும் உள் தள்ளிய வீடு என்பதால் அக்கம் பக்கம் நாதியில்லை. கணவனும் மனைவியுமாக யாரோ தெரிந்தவர்கள் வந்தனர். தங்கள் கைக்குழந்தையை பாட்டியின் பராமரிப்பில் விட்டு விட்டு கிரிவலம் கிளம்பினர். வருவதற்கு நாலைந்து மணி நேரமாகும்…
பெரியசாமி வீட்டுக்குள் நுழைந்தான். பாட்டி பதறிப் போய் கதற கதற, தூளிப் பிள்ளையை கால் பிடித்து தூக்கினான். “சாமி சிலைக்குள்ள இருக்கிறத எடுத்து எங்கைல கொடு, இல்லே, புள்ளய அப்படியே கீழே போட்ருவேன்! ”
குழந்தை வீறிட்டு அழுதது!
எம்மா நேரம்! பாட்டி பீடத்தில் தாளம் போட்டுக் கொண்டிருந்தது! பயத்துல அதுக்கு கையும் ஓடல; காலும் ஓடல. “ இன்னா கெயிவி கொயந்தய பரலோகம் அனுப்பிரலாமா? ”
“ அடப்பாவி! கைப்பிள்ளையை கொல்லாதடா! என் உயிரை வேணா எடுத்துக்கடா! என் பேரனுக்குத் தெரிஞ்சா வேட்டையாடிடுவான்! இப்பிடி மெரட்டுறியே? எல்லாம் மறந்து போகுதே? ”
கத்திக் கத்தி புள்ள போய்ச் சேந்துரும் போல! புள்ள செத்துட்டா கெயிவி கிட்ட விஷயம் வாங்க முடியாது! ஆளுங்க வந்துட்டா ஆபத்து! கெயவிய நம்பி பிரயோஜனம் இல்ல. இன்னா சேதின்னு தெரிஞ்சுட்டு நாமளே எறங்க வேண்டியதுதான்..சோலி முடிஞ்சதும் கெயவிய தூக்கிரலாம்!
பாட்டியிடம் ரகசியத்தை கிரகித்தவன் பாட்டியையும் குழந்தையையும் அறையில் அடைத்துப் பூட்டினான்.
பாட்டி சொன்னது போல் பீடத்திலுள்ள எழுத்துக்களில் கை வைத்து அழுத்தினான். மூன்று முறையல்ல; முப்பது முறை அழுத்தியும் பீடம் எழும்பவில்லை!
அதே சமயம்…
விஷ்ணு துர்க்காவின் தலை கீழே குனிந்தது! “ ஹ்ம்ம்ம்… ” என்ற சப்தம் அவள் வாயிலிருந்து வெளிப்பட்டது! பிறகு பழையபடி ஆனது!
பெரியசாமி பயந்து போனான்! சற்று முன் நடந்தது நிஜமா? பிரமையா?
அப்போதுதான் அந்த சிற்பத்தை சரியாகப் பார்த்தான். சிலையே மெர்சலா கீதே? சாமிங்க கைல சாம்பிளுக்கு ஒவ்வுரு வெப்பன்தானே வச்சிருக்கும்… இது டபுள் டபுளா கீதே?
சிலை பேசுமா? டாஸ்மார்க் சரியில்லடா, பெரியசாமி!
திரும்பவும் அழுத்தினான் – வேக வேகமாக; வியர்வை கசகசத்தது!
சிற்பத்தின் கைகளிலிருந்த கதாயுதங்கள் இரு புறமும் மின்னல் வேகத்தில் பெரியசாமியின் தலையில் இறங்கின; இறங்கின வேகத்தில் முன் போல் எழுந்து நின்றன! பெரியசாமி அடித்தது எதுவென்று கூடத் தெரியாமல் அலறியடித்து வெளியே ஓடினான்…..! “ ஐயோ! பேய்! பூதம்! காப்பாத்துங்க! காப்பாத்துங்க!” கத்திக் கொண்டே வீட்டைத் தாண்டி, ரோட்டை தாண்டி, அந்தப் பகுதியையே தாண்டி ஓடினான்………!
ஓரிடத்தில் லாரியை நிறுத்தி விட்டு பீடி வலித்துக் கொண்டிருந்த டிரைவரும், மொபைல் ஃபோனை நோண்டிக் கொண்டிருந்த கிளீனரும் இவன் கத்திக் கொண்டே ஓடி வருவதை ஆச்சரியத்துடனும், பயத்துடனும் பார்த்தனர். வந்தவன் நின்றிருந்த லாரி மேலேயே மோதி சுருண்டு விழுந்து இறந்தான் !
தொடரும்…