“அக்ஷய் உனக்கு நினைவு திரும்புவது மிக முக்கியம். ஏதோ பெரியதாக நடக்கப் போகிறது. அதைத் தெரிந்து கொண்ட ஆச்சார்யா வெளியே சொல்லி விடுவார் என்றுதான் அவரைக் கொலை செய்திருக்கிறார்கள். உன்னையும் அவர்கள் கொல்ல முயற்சி செய்வதும் அதனால்தான். அது நடப்பதற்கு முன் உனக்கு நினைவு திரும்பினால்தான் நாம் ஏதாவது செய்ய முடியும்”
“எனக்கு புரிகிறது ஆனந்த். ஆனால் நான் என்ன முயற்சி செய்தும் நினைவு வரமாட்டேன்கிறது. எல்லா நினைவும் அழித்து வைத்த மாதிரி வெறுமைதான் மிஞ்சுகிறது”
“அன்றைக்கு ஆச்சார்யா வீட்டு போன் நம்பர் நினைவு வந்ததே. அதேபோல் முயற்சி செய்து பாரேன்”
“அன்றைக்கு அபூர்வமாய் நினைவு வந்தது. பிறகு வரவில்லை” அக்ஷய் சிறிது வருத்தத்துடன் சொன்னான்.
சிறிது நேரம் இருவரும் பேசவில்லை. பின் தன்னைச் சுதாரித்துக் கொண்டு அக்ஷய் சொன்னான். “சரி நான் எதற்கும் அம்மாவை ஒரு தடவை பார்த்து விட்டு வருகிறேன். நம் வீட்டு அட்ரஸ் சொல்.”
ஆனந்த் சொன்னான். “நானும் கூட வரட்டுமா?”
“அவர்கள் இப்போது உன்னைத்தான் பின் தொடர்கிறார்கள். நீ என் கூட வந்தால் என்னையும் அவர்கள் அடையாளம் தெரிந்து கொள்வார்கள். அதனால் வேண்டாம்”
அவன் சொல்வதும் சரி என்றே ஆனந்துக்கு பட்டது. ஆனால் அம்மாவுக்குத் காணாமல்போன தன் மகனைத் திடீரென்று பார்க்கையில் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது. அவன் அம்மாவை சந்திக்கும் நேரத்தில் தானும் கூட இருந்தால் நல்லது என்றும் தோன்றியது. மெல்லச் சொன்னான். “அக்ஷய் அம்மாவுக்கு இதயக் கோளாறு இருக்கிறது. ஜாக்கிரதையாய் பக்குவமாய்ச் சொல்.”
அக்ஷய் அண்ணனைப் பார்த்து புன்னகையுடன் தலையசைத்தான். “சரி நீ போய் வராந்தாவில் அவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார். இனி நான் இங்கே இருக்கிறது ஆபத்துதான்.”
“நீ சென்னைக்கு எப்போது போகிறாய்?”
“இன்று ராத்திரியே கிளம்புகிறேன்”
“சரி நாம் இனி எப்போது சந்திப்பது? எப்படிச் சந்திப்பது?”
“நானே வந்து உன்னை சந்திக்கிறேன்.”
“சரி. உனக்கு பழைய நினைவு ஏதாவது வந்தால் எனக்கு உடனே தெரிவி. எப்படி தெரிவிப்பாய்?”
“எப்படியாவது தெரிவிக்கிறேன்”
ஆனந்திற்குப் பிடி கொடுக்காமல் பேசும் தம்பி மீது சற்று எரிச்சல் வந்தது. ஆனால் அதே நேரத்தில் அவன் ப்ராக்டிகல் ஆகப் பேசுகிறான் என்பதும் அறிவுக்கு எட்டியது. எந்தந்த நேரத்தில் எப்படி எப்படி சௌகரியப்படுகிறதோ, எப்படி செயல்படுவது நல்லதோ அப்படி செயல்படுவதுதான் புத்திசாலித்தனம் என்பது அவனுக்குத் தெரியும். அதையெல்லாம் முன்கூட்டியே எதிர்பார்த்துக் கணக்குப் போட முடியாது என்பதும் தெரியும். ஆனால் ஏனோ கையாலாகாத, ஒருவித எரிச்சல் வருவதை அவனால் தடுக்க முடியவில்லை.
அக்ஷய் சொன்னான். “இனி இந்த ஓட்டலிலேயே நாம் வெளியே பார்த்துக் கொண்டாலும் அன்னியர்கள் தான் ஓகே. வெளியே பார்”
ஆனந்த் கதவைத் திறந்து வெளியே பார்த்தான். வராந்தாவில் யாரும் இல்லை என்று தலையாட்டினான். அக்ஷய் மிக வேகமாக அங்கிருந்து சென்று தனதறையில் தஞ்சம் அடைந்தான். அவன் உள்ளே சென்று கால் மணி நேரத்தில் யாரோ கதவைத் தட்டினார்கள்.
“கமின்” என்றான்.
ஒரு இளைஞன் உள்ளே நுழைந்தான். பார்த்தவுடன் இவன் வேவு பார்க்க வந்தவன் என்பது அக்ஷயிற்கு புரிந்தது. ஆனால் கோபத்தோடு கேட்டான். “கூப்பிட்டு எத்தனை நேரம் ஆயிற்று. காபி எங்கே?”
வந்தவன் முகம் சிறுத்தது. “நான் ரூம் பாய் அல்ல?”
“அப்படின்னா யார் நீ?”
“நான் விவேக். மிஸ்டர் பொன்னம்பலம் ரூம் இது தானே?” என்றபடியே அந்த அறையை பார்வையால் கூர்மையாக அலசினான்.
“யாரு பொன்னம்பலம்?”
“சாரி நான் ரூம் மாறி வந்து விட்டேன் போல இருக்கிறது”
அவன் மெல்ல வெளியேறினான். அவன் பின்னாலேயே சென்று வராந்தாவைப் பார்த்தபடியே அக்ஷய் எரிச்சலோடு முணுமுணுத்தான். “என்ன ஓட்டல் இது. காபி கேட்டு அரை மணி நேரமாகிறது.”
அக்ஷயின் அறைக்கு வந்த இளைஞன் அவனை ஓரக் கண்ணால் பார்த்தபடியே எதிர் அறை 212ஐ தட்டினான். ஒரு கிழவர் வந்து கதவைத் திறந்தார். உள்ளே எட்டிப்பார்த்தபடியே அவன் “மிஸ்டர் பொன்னம்பலம்” என்றான்.
“அப்படி யாரும் இங்கே இல்லையே. நான் வாசுதேவன்”
அந்த நேரத்தில் ஆனந்த் அறையைப் பூட்டிக் கொண்டு வெளியே போனான்.
அதற்கு மேல் நின்று வேடிக்கை பார்க்காமல் அக்ஷய் கதவை சாத்தினான்.
அந்த நள்ளிரவு நேரத்தில் அந்தக் குறுகலான தெருவில் அதிக ஆள் நடமாட்டம் இருக்கவில்லை. குறுந்தாடி இளைஞன் இயல்பாக ஒரே வேகத்தில் நடந்து சென்று கொண்டிருந்தான். சற்று தூரத்தில் இருந்த பஞ்சாபி தாபாவில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்த இருவரைத் தவிர தெருவில் ஆளே இல்லை. ஒரு முறைகூட குறுந்தாடி மனிதன் பின்னால் திரும்பிப் பார்க்கவில்லை. அவனை யாராவது பின் தொடர்கிறார்களா என்ற எண்ணம்கூட இல்லாததுபோல் அவன் நடந்து கொண்டிருந்தான். கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்த ஆசாமிகள் அவனை ஒரு கணம் பார்த்துவிட்டுத் தங்கள் பேச்சைத் தொடர்ந்தார்கள்.
அவன் அந்தத் தெருக்கோடியின் இறுதியில் திரும்பிய போது இன்னொரு தெரு ஆரம்பித்தது. அங்கு ஒரு மூடிய மளிகைக்கடை வாசலில் டெல்லி குளிருக்கு கந்தல் ஆடைகளைப் போர்த்துக் கொண்டு ஒரு பிச்சைக்காரன் அமர்ந்திருந்தான். இவனைப் பார்த்ததும் அவன் தன் கையிலிருந்த அலுமினியப் பாத்திரத்தைப் பிச்சைக்காக நீட்டினான். ஆனால் அதைக் கவனிக்காதவன் போல குறுந்தாடிக்காரன் நடந்தான். அந்த பிச்சைக்காரன் இரண்டு நிமிடங்கள் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் நிறைய தூரம் போனபின் தன் கந்தலில் இருந்து ஒரு செல்போனை எடுத்து ஒரு எண்ணை அழுத்தினான். மறுபக்கத்தில் குரல் கேட்ட போது “யாரும் அவனைப் பின் தொடரவில்லை” என்று சொல்லி விட்டுப் பழையபடி கந்தலில் புதைந்தான்.
அந்தத் தெருவின் இறுதியில் இருந்த ஒரு பழங்காலத்திய சிறிய ஓட்டு வீட்டுக் கதவைத் தட்டினான். கதவு திறக்கப்பட்டது. கதவைத் திறந்தவன் ஒரு பதினான்கு வயதுச் சிறுவன். குறுந்தாடிக்காரன் நுழைந்ததும் அவன் வெளியே போய் நின்று கொண்டான். உள்ளே ஒரு மங்கலான விளக்கு வெளிச்சத்தில் ஒரு நடுத்தர வயது ஆள் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவன் குறுந்தாடிக்காரனைப் பார்த்ததும் தன் எதிரே காலியாக இருந்த நாற்காலியில் அமரக் கைகாட்டினான்.
குறுந்தாடிக்காரன் பயபக்தியுடன் அங்கு அமர்ந்தான். ஒரு நிமிடம் அமைதியாக ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்திருந்த அந்த நடுத்தர வயதுக்காரன் பின் தன் மௌனத்தைக் கலைத்தான். “சரக்கு வந்து விட்டது. பொருட்களை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். நம் ஆபரேஷன் தேதியும் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. அந்த அமானுஷ்யனைப் பற்றிப் புதியதாய் எதாவது தகவல் இருக்கிறதா?”
“அவனுக்கு காரில் லிப்ட் கொடுத்த பெண்ணைக் கண்டுபிடித்து விட்டார்கள். அவள் அவனுக்கு டிரஸ் வாங்கித் தந்ததாய் ஒத்துக் கொண்டிருக்கிறாள். அவன் டில்லியில் கரோல் பாகில் தன் வீடு இருக்கிறதாய்ச் சொல்லி இருக்கிறான். ஆனால் டெல்லி வந்த பிறகு நடுவில் எங்கேயோ ஒரு சிக்னலில் இறங்கி ஓடி விட்டானாம்.”
உணர்ச்சியே இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்த அந்த ஆள் கேட்டான். “இப்போது என்ன நிலவரம்?”
“இப்போது அவன் ஆனந்தை எப்படியாவது தொடர்பு கொள்வான் என்று எதனாலோ அந்த சிபிஐக்காரன் நினைக்கிறான். ஆனந்த் இருக்கும் ஓட்டல் முன்னால் போலீசும் நிற்கிறது. நம் ஆட்களும் நிற்கிறார்கள். எப்படியும் அவன் சீக்கிரம் சிக்குவான் என்று மந்திரி சொல்கிறார்”
கேட்டு விட்டு அந்த ஆள் முகம் லேசாக முகம் சுளித்தான். “சைத்தானைக் கூட நம்பலாம். ஆனால் அரசியல்வாதியை எப்போதும் நம்பக்கூடாது. வாய்ப் பேச்சில் தான் வல்லவர்கள். செயலில் அல்ல. நம் ஆபரேஷன் நாளுக்கு முன் அவன் பிணத்தைப் பார்த்து எரித்து விட்டால் பின் நிம்மதியாக இருக்கலாம்”
குறுந்தாடி மனிதன் அந்த வார்த்தைகளை மனதிற்குள் அசை போட்டான். ‘பிணத்தைப் பார்ப்பது மட்டுமல்லாமல் எரித்து சாம்பலாக்கினால் தான் அவன் உண்மையாகவே செத்து விட்டான் என்று நம்ப முடியும்’ என்பது போல் சொன்னது அமானுஷ்யன் விஷயத்தில் அவர்களுக்கிருந்த அபிப்பிராயத்தை தெளிவாகப் புரிய வைத்தது.
அந்த நடுத்தரவயதுக்காரன் அங்கலாய்த்துக் கொண்டான். “அவனுக்கு என்று ஏதாவது உறவு இருந்தால் அவன் நேசிக்கிற மனிதர்களோ, உடன் பிறந்தவர்களோ, குழந்தைகளோ, அம்மா அப்பாவோ இருந்தால், அவன் எங்கே ஒளிந்திருந்தாலும் அவனை வெளியே வர வைத்து விடலாம். ஆனால் அவன் தனியனாய் போய் விட்டது நம் துரதிர்ஷ்டம்.”
குறுந்தாடிக்காரன் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தான். மற்றவன் தொடர்ந்து சொன்னான். “அந்த போலீஸ்காரர்கள் அவனைக் கண்டுபிடித்து விட்டால் உடனே நம் ஆட்கள் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். அவனைக் கொல்லும் வேலையில் போலீசை முழுவதும் நம்புவது முட்டாள்தனம். இனி உனக்கு ஒரே வேலை அவன் எங்கிருக்கிறான் என்று தகவல் சொல்வதுதான். மீதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்”
(தொடரும்)