மறு நாள் காலை எட்டரை மணி. டாக்டர் ரங்கபாஷ்யத்தின் கிளினிக்கிலிருந்து சற்று தொலைவில் காரை நிறுத்திய அப்பா என்னை மட்டும் உள்ளே போகச் சொன்னார். கிளம்பும்போது அன்பளிப்பாக ஒரு வாட்சை கையில் கட்டி விட்டார்.
டாக்டர் ரங்கபாஷ்யத்தின் கன்சல்டேசன் அறை. சத்தமில்லாத ஏ.சி. இடப்பக்கம் சின்னப் படுக்கை, உபகரணங்கள், மருந்துகள், பக்கவாட்டு ஷெல்ஃபில் அவர் வாங்கிய மெடல்கள்…டாக்டர் ரங்கபாஷ்யம் என்னை ஆர்வத்தோடு வரவேற்று அமர வைத்தார். பட்டாம்பூச்சியாய் ஓடிய நர்ஸை வெளியே துரத்தினார். என் ஆரோக்கியம் பற்றி விசாரித்தார். காப்சூல்களை தொடர்ந்து சாப்பிட்டு வருவதாகச் சொன்னேன். இல்லினாய் யூனிவர்சிட்டி பயிற்சியில் சேர மனப்பூர்வமாக சம்மதித்து விட்டதைச் சொன்னேன்.
அடுத்த நொடி…
கண்களில் வெறியோடு ஒரு அரக்கன் எழுவதைப் போல எழுந்து நின்றார் ரங்கபாஷ்யம். ‘‘முட்டாள் பெண்ணே!’’ இரண்டு கைகளாலும் மேஜையை ஓங்கி அறைய, மேஜை மீதிருந்த பொருட்கள் எழும்பி அடங்கின. கத்த ஆரம்பித்தார்.
‘‘இல்லினாய் யூனிவர்சிட்டி என் லட்சியம், வெறி! அதுக்கு தடங்கலா நின்றது நீதான்…நீ மட்டும்தான். உன்னைத் தேடி கண்டுபிடிக்கறதுக்கே ரெண்டு லட்சம் செலவு செஞ்சேன். நீ இந்த என்ட்ரன்ஸ் எக்ஸாம்ல கலந்துக்க கூடாது. அப்படியே கலந்துகிட்டாலும் நீ ஜெயிக்கக் கூடாதுன்னு நினைச்சேன். காதல் கல்யாணமுன்னு ஆசை காட்டினேன், நீ மசியல. பணத்துக்கும் விலை போகல. சந்தர்ப்பத்துக்கு காத்திருந்தேன். சாதாரண மஞ்சகாமாலையோட எங்கிட்ட வந்தே. அதை கல்லீரல் கான்சர்னு பொய் சொன்னேன். நீயும் ஊரும் உலகமும் அதை நம்புறதுக்காக நம்பர் ஒன் கான்சர் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ஜான் லீவர்ட்டை யூஸ் பண்ணிகிட்டேன். அவர் பத்தின ஒரு ரகசியம் எனக்குத் தெரிய வந்துச்சு. அவர் இல்லாத சமயம் உன்னை அவர் ஹாஸ்பிடலுக்கு வரவழைச்சேன். ஹாஸ்பிடல் ஒர்க்கர்ஸ் ரெண்டு பேரை பணத்தால அடிச்சி ஜனவரி பதினேழாம் தேதி டாக்டர் ஜான் லீவர்ட்டா உன் முன்னாடி ஒட்டுதாடியோட உட்கார்ந்திருந்தது நான்தான்!’’
எனக்கு தூக்கி வாரிப்போட்டது! அடப்பாவி! அப்ப எனக்கு கல்லீரல் கான்சர் இல்லையா? நான் சாகப்போகிறவள் இல்லையா? அதனால் தான் போகப் போக உடம்பு தேறியதா? இடக்கை பழக்கம் உள்ள டாக்டர் ஜான் லீவர்ட் வலக் கையால் எழுதிய மர்மம் இப்போது புரிகிறது. மேலும் அந்த அறையிலிருந்து வந்த கோந்து வாசம் இவன் ஒட்டுதாடிக்கு பயன்படுத்திய கோந்திலிருந்து வந்த வாசம்! என் ரிபோர்ட்ஸ் ஒன்று கூட அந்த ஆஸ்பத்திரியில் கிடைக்காத காரணம் அவையெல்லாம் உண்மையான ரிபோர்ட்ஸ்ஸே அல்ல. எல்லாம் இவன் பித்தலாட்டம்! அப்பா இவன் வெறியோடு அலைகிறான் என்று சொன்னதும் நினைவுக்கு வந்தது. காதல் வெறியல்ல, கொலை வெறி!
ரங்கபாஷ்யம் பேசிக் கொண்டே போனான், ‘‘உனக்கு மரண பயம் காட்டினேன். காப்சூல் சாப்பிடச் சொன்னேன். அந்த காப்சூல் எப்படிபட்டதுன்னு தெரியுமா உனக்கு? உன்னை மாதிரி நார்மல் ஆளுங்க அதைத் தொடர்ந்து சாப்பிட்டா கல்லீரல் செயலிழந்து போயிடும். ஏன், சாவே வந்துடும்… உன்னை சாகடிக்கிறது என் நோக்கமில்ல. ஆனா என் வழியில குறுக்க வந்தா இப்படியும் நடக்கும்..நீ அந்த காப்சூல்களை ரெகுலரா சாப்பிடுறியான்னு செக் பண்ணிகிட்டேன். நான் நினைச்சா மாதிரியே உனக்கு தீவிர மஞ்சகாமாலை வந்துடுச்சு. அதுக்கப்பறம் உன்னை நான் ஃபாலோ பண்ணல. அதான் நான் செஞ்ச தப்பு. இல்லினாய் யூனிவர்சிட்டி எக்ஸாம்காக தயார் பண்ண ஆரம்பிச்சுட்டேன். ஆனா நீ? எப்படி முளைச்சு வந்தே?’’ என் தோள்களை அப்படியே குலுக்கினான்.
‘‘காப்சூல்களை ரெகுலரா சாப்பிட்டு வர்றேன்னு பொய் சொல்றியா? அப்படியிருந்தா நீ இன்னேரம் பரலோகம் போயிருக்கணும் இல்ல, படுத்த படுக்கையா கெடந்திருக்கணும். நானே ஒரு கிரிமினல்; நீ என்னை ஜெயிச்சிட்டதா என்கிட்டயே வந்து சொல்றியா?’’
இது என்ன புதுக்கதை? இவ்வளவு கிரிமினலா இவன்?
நான் அந்த இடத்தை விட்டு ஓட யத்தனித்தேன். என்னை முந்திப் போய் கதவை தாளிட்டான் அவன். வெறித்தனமாய் இளித்தான். பக்கத்தில் வந்தான். ‘‘ரிலாக்ஸ் சௌதாமினி, எனக்கு கிடைக்காத இல்லினாய் சான்ஸ் உனக்கும் கிடைக்கக் கூடாது! ஊர் உலகத்தை பொறுத்த வரை லிவர் கான்சர் வந்தவங்க திடீர்னு மூச்சுத் திணறி செத்துப் போறது சகஜம்!’’
கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு பாலிதீன் கவரை எடுத்து அதில் கரியமில வாயுவை நிரப்பி என் தலை வழியாகக் கவிழ்த்து இறுக்கினான்.
தொடரும்…