Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » விடமாட்டேன் உன்னை – 9
விடமாட்டேன் உன்னை – 9

விடமாட்டேன் உன்னை – 9

அதே நேரம் நான்கு தெரு தள்ளி இருக்கும் குமணன் தெருவில் உள்ளவர்களில் சிலர் வெளியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

அவர்களில் கார்த்தியும் ஒருவன். அவனுக்கு வயது 17 இருக்கும். சங்கருக்கு ஒரு வகையில் தூரத்து உறவினன் ஆவான். அவன் வீட்டு வாசலில் கட்டில் போட்டு,  அதில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவனை வெள்ளையாய் ஒரு உருவம் தட்டி எழுப்பியது. அரை தூக்கத்தில் இருப்பவனை எழுப்பியது போல், தூக்க கலக்கத்தினூடே கண்விழித்துப் பார்த்தான் கார்த்திக்.

அந்த உருவம் அப்படியே அவன் மேல் ஏறிக் கொண்டு, அவனது வயிற்றுப் பகுதியில் ஏறி அமர்ந்து கொண்டது. அவனைப் பார்த்து கோரமாய் சிரித்தபடி அவனது கழுத்தை நெறிக்க ஆரம்பித்தது

அவ்வளவுதான் கார்த்திக்கின் தூக்கம் கணப்பொழுதில் கரைந்து போனது. திகில் அவனது நெஞ்சில் அறைய, அந்த உருவத்தை கீழே தள்ள முயன்றான். முடியவில்லை. அக்கம் பக்கத்தில் உள்ளோரை உதவிக்கு கூப்பிடலாமென்று வாயைத் திறக்க முயன்றும் அவனால் முடியவில்லை.

அந்த உருவத்தை கீழே தள்ளவும் முடியவில்லை. உதவிக்கு கூப்பிட நினைத்தாலும் தன்னால் பேசமுடியவில்லையே என்று நொடிப் பொழுதில் யோசித்தவன், விரைந்து ஏதேனும் செய்யவில்லை என்றால், இன்னும் சற்று நேரத்தில் தனது சப்தநாடியும் அடங்கிவிடும் என்பதை நினைத்து உள்ளுக்குள்ளேயே அலறத் தொடங்கினான்.

திடீரென்று எங்கிருந்து அவனுக்கு தைரியம் வந்ததோ தெரியவில்லை. அந்த உருவத்தின் கழுத்தை எட்டிப் பிடித்துக் கொண்டான். கட்டிலுக்கு கீழே கிடந்த செருப்பை எடுத்து அந்த உருவத்தை பலங்கொண்ட மட்டும் அடிக்கத் தொடங்கினான்.

வெள்ளை உருவத்தின் பிடி தளரத் தளர இவனது குரல் மெல்ல மெல்ல வெளியே கேட்கத் துவங்கியது.

‘’என்னை விட்டுட்டு போயிடு… யாருகிட்ட வந்து விளையாடற… ஆ..ஆஆஆஆஆஆஆஆ’’ என்று உச்சகட்ட குரலில் கத்தினான். இவனது குரல் தூங்க முயற்சித்துக் கொண்டிருக்கும் நவநீதன் காதுகளில் விழுந்தது.

‘யாருடா இது… இந்த நேரத்துல இப்படி காட்டுக் கத்து கத்தறது…’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டே இருந்தவன் அப்படியே தூங்கிப் போனான்.

கார்த்திக்கின் சத்ததைக் கேட்டு அந்த தெருவில் படுத்திருந்தவர் எல்லாம் திடுக்கிட்டு எழுந்து பார்த்தனர்.

கார்த்திக் காற்றில் செருப்பை வீசிக்கொண்டிருப்பது அவர்களது கண்களுக்கு புலப்பட்டது.

கார்த்திக்கின் சத்தம் கேட்டு எழுந்து வந்த அவனது அம்மா “என்னடா கார்த்திக் ஆச்சு… என்னடா கண்ணு பண்ணற… ஏன் இப்படி சத்தம் போட்ட…” என்று பதற்றத்தோடு கேட்க ஆரம்பித்தார். நடந்த விஷயத்தை அவன் சொல்லவும் “நீ வெளியில படுக்காதடா… வா உள்ள வந்து படு” என்றபடியே அவனை உள்ளே அழைத்துச் சென்றார்.

அடுத்த நிமிடத்தில் அந்த தெருவில் வெளியே படுத்திருந்தவர்கள் அத்தனை பேரும் ‘’நான் அப்பவே சொல்லல… இங்க பேய் நடமாடுதுன்னு…’’ என்று அவரவர்களும் முணுமுணுத்தப்படியே வீட்டுக்குள் போய் படுத்துக் கொண்டனர்.

வெண்ணிலவும் இந்த சம்பவத்தைக் கண்டு பயந்து போனதைப் போல் மேகங்களுக்குள் சென்று பதுங்கிக் கொண்டு, கதிரவனின் வருகைக்காக காத்திருக்கத் தொடங்கியது.

காலைக் கதிரவன் தன் கதிர்களை பூமியெங்கும் விசாலமாக பரப்பி சோம்பலை முறித்துக் கொண்டான். நவநீதன் எழுவதற்குள் அவனது அம்மாவும் அப்பாவும் கோவிலுக்கு சென்றிருந்தனர்.

எழுந்து கடிகாரத்தைப் பார்த்தான். அது ஏழரையைக் காட்டியது. அம்மாவைக் கூப்பிட்டு பார்த்தான். பதில் வராமல் போகவே, ‘ஓ இன்னிக்கு சனிக்கிழமை… அப்ப ரெண்டு பேரும் சனீஸ்வரன் கோயிலுக்கு போயிருப்பாங்க’ என மனதில் நினைத்துக் கொண்டவன், இன்று தனக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருப்பதையும் நினைத்துக் கொண்டான்.

அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அவனது வேலைகளை முடித்து, குளித்து ரெடியாகி விட்டான். அம்மா சமைத்து வைத்திருந்த இட்லியை சாப்பிட்டு முடிதுவிட்டு, காலேஜிற்கு தேவையான புத்தங்களை எடுத்துக் கொண்டு வெளியே வந்த போது வாட்ச்சைப் பார்த்தான். அது மணி 8.50 என காட்டியது.

9.00 மணிக்கு பஸ் பிடித்தால் போதும் சரியான நேரத்தில் காலேஜிற்கு போய்விடலாம் என மனதிற்குள் கணக்கு போட்டபடியே, பஸ் ஸ்டாப்பிற்கு வந்தான் நவநீதன். பஸ் வரவே ஏறிக் கொண்டான்.

அடுத்த 20 நிமிடத்தில் கல்லூரி முன் வந்து நின்ற அந்த பஸ், நவநீதனை இறக்கி விட்டுச் சென்றது.

நவநீதன்  நேரே வகுப்புக்கு சென்றான். அவனது நண்பர் நண்பிகள் நலவிசாரிப்பு முடிந்தது. வகுப்புக்கு ஆசிரியர் வரவே மாலை 3 மணி வரை கல்லூரியில் மூழ்கிப் போனான்.

கல்லூரி முடிந்து வீட்டிற்கு போக பஸ் ஏறினான். ஒரு சீட் காலியாக இருக்கவே, அங்கு உட்கார்ந்து கொண்டான். அவனது மூளை நாளைய பொழுதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தது. ‘நாளை ஞாயிற்றுக்கிழமை, கண்டீப்பாக கிரிக்கெட் விளையாட வேண்டும். பக்கத்து ஊர் டீமுக்கும் நமக்கும் மேட்ச் இருக்கிறது. நம்ம இடத்தில் வந்து வந்து விளையாடற டீமை பஞ்சராக்கிடணும். ச்சே சங்கர் இருந்தான்னா டீமுக்கு ரொம்ப பலமா இருக்கும். அவன் இன்னிக்குள்ள சரியாகிடுவானா? சரியாகிட்டானா ஒரு ஆல்ரவுண்டர் பலம் நம்ம டீமுக்கு கிடைக்கும்.’ என்று சிந்தித்துக் கொண்டிருந்தவனை, ஒரு கை இழுத்துப் பிடித்தது.

யாரென்று திரும்பி பார்த்த நவநீதனின் கண்களுக்கு கார்த்திக் தெரிந்தான். “என்னடா கார்த்திக்… இந்த பஸ்ஸுல வர…’’ என்றான் நவநீதன்.

“தலைவாசல்ல இருக்கிற மாகாளி அம்மன் கோவிலுக்கு போயிட்டு வரேன்” என்றான் கார்த்திக்.

“என்னடா குன்றத்தூர்ல இல்லாத கோவிலாடா..? தலைவாசல்ல இருக்கிற கோவிலுக்கு போயிட்டு வர. ஏதேனும் வேண்டுதலா..?”

“வேண்டுதல் எல்லாம் ஒண்ணும் இல்லன்னே… நேத்து நைட்டு எங்க தெருவுல ஒரு பிரச்சினை ஆயிடுச்சிண்ணே.? அதானால மாகாளி கோவிலுக்கு போயிட்டு வான்னு எங்க அம்மா சொன்னாங்க. அதான் போயிட்டு வரேன்.”

“ஆமாண்டா… நேத்து நைட்டு உங்க தெருவுல இருந்து யாரோ கத்தின மாதிரி கேட்டுச்சி… ஆனா நான் தூக்கத்துல இருந்தனா..? எனக்கு ஒண்ணும் தெரியலடா… என்னடா ஆச்சி… யார் கத்தினா..?”

” அப்படி  கத்தினதே நான்தான்… தெரியுமா உங்களுக்கு?”

திடுக்கிட்டு நிமிர்ந்த நவநீதன்… “உனக்கு என்னடா ஆச்சி.. ஏண்டா கத்தின..?”

நேற்று நடந்த விஷயங்களை ஒன்று விடாமல் சொல்லி முடித்த கார்த்திக் “எனக்கு ரொம்ப பயமாயிடுச்சி… அதான் என் அம்மா மாகாளி கோயிலுக்கு போயிட்டு வரசொன்னாங்க…” என்றான் கார்த்திக்

“டேய் கார்த்திக் பேயெல்லாம் ஏதுமில்லடா.. எல்லாம் சும்மாடா…” என்றான் நவநீதன்.

“அண்ணே… அப்போ நேத்து நான் நேர்ல பாத்தது எல்லாம் பொய்யின்னு சொல்றீங்களா…”

“ஆமாம்… நீ கனவு ஏதேனும் கண்டிருப்ப… சரி… நேர்ல பார்த்தேன்னு சொல்றியே… நீ அந்த உருவத்தை கீழே தள்ளி விட்டேன்னு சொல்றியே… தள்ளிவிட்டதுக்கப்புறம் அந்த உருவத்தை பார்த்தியா..?”

“இல்லண்ணே… அதுக்கப்புறம் நான் பார்க்கல…”

“உண்மையில அந்த மாதிரி பேயே இல்ல.. அதான் உண்மை… ஆமாம்… யாராச்சும் உன்னிடம் பேய்கதை ஏதாச்சும் சொன்னாங்களா..?”

“இல்லண்ணே”

“நேத்து நைட்டு ஏதாச்சும் படம் பார்த்தியா..?”

“ஆமாம்ணே…”

“என்ன படம்டா பார்த்த…”

“ஈவில் டெட் படம் பார்த்தேன்… ஸ்டார் மூவிஸ்ல…”

“நீ பேயை பார்தேங்கறதுக்கான காரணம் என்னன்னு தெரிஞ்சு போச்சு… அது ஒரு பேய் படம்… பனம் முழுக்க திகிலாத்தன் இருந்திருக்கும்… நேத்து எத்தனை சீன்ல பயந்திருப்ப..?”

“படம் முழுக்க பயம்தாண்ணே… எந்திருச்சி வரவே இல்ல.. அவ்ளோ பயமா இருந்திச்சி…”

“அதாவது உன் ஆழ்மனசுல… நேத்து பார்த்த படம் பதிஞ்சி போயிருச்சி… நீ நல்ல தூக்கத்துல இருக்கும் போது, உன் ஆழ்மனசு விழிச்சிருக்கு… அது கனவா வந்திருக்கு… அவ்ளோதான்… இதுக்கெல்லாம் பயப்படக்கூடாது. புரியுதாடா…” என்றான் நவநீதன்.

புரிந்தும் புரியாமல் போல் விழித்தான் கார்த்திக்…

அப்போது கண்டக்டரின் குரல் அவர்களை திடீரென்று ஈர்த்தது.

“குன்றத்தூர் எல்லாம் இறங்குங்க… குன்றத்தூர்…” என கண்டக்டர் அழைக்கவே, இருவரும் பஸ்ஸிலிருந்து இறங்கினர்.

இறங்கியவர்கள் தங்களது வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்தனர்… அப்போது கிரிக்கெட் விளையாடும் நண்பர்களில் ஒருவனான பெரியசாமி பஸ் ஸ்டாப்பை நோக்கி ஓடிவந்தான்.

அவனை தடுத்து நிறுத்திய நவநீதன், “ஏண்டா இப்படி வேகமா ஓடிவர..?” என்று கேட்டான்.

அப்படி அவன் வேகமாய் ஓடிவந்ததற்கான காரணத்தை சொல்லவும்… நவநீதன் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க… கார்த்திக் மயங்கி விழுந்தான்.

தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top