அடுத்த அமர்வுக்கு கேத்தரின் வருவதற்குள் மூன்று வாரங்கள் ஓடிவிட்டன. எனக்கு உடல்நிலை சரியில்லாததனாலும் கேத்தரின் விடுமுறையில் சென்றிருந்ததனாலும் சற்று தாமதமாகிவிட்டது. இடைப்பட்ட காலங்களில் கேத்தரினின் உடல்நிலை முன்னேற்றம் திருப்திகரமாக இருந்தது. ஆனால் இந்த முறை ஹிப்னாடிஸ அமர்வு ஆரம்பித்ததும் கேத்தரினிடம் பதற்றம் காணப்பட்டது. கேத்தரின் தன் மனநிலை மற்றும் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், ஹிப்னாடிஸம் இதற்குமேலும் தனக்கு உதவி செய்யக்கூடும் என்று நினைக்கவில்லை என்று கூறினாள்.
சாதாரணமாக கேத்தரினுடைய நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, சில வாரங்களுக்கு முன்னரே ஹிப்னாடிஸத்தை தவிர்த்திருப்பேன். வழிகாட்டி ஆன்மாக்களிடமிருந்து பெறும் தகவல்களும், கேத்தரினுக்கு இன்னும் இருக்கும் சிற்சில உபாதைகளுமே ஹிப்னாடிஸ அமர்வை தொடர்வதற்கான முக்கிய காரணங்களாகும். கேத்தரின் கிட்டத்தட்ட குணமாகிவிட்டாள்.
அவளுடைய முற்பிறவி ஞாபகங்களில் நினைவில் வந்த பிறவிகளே, திரும்பவும் வர ஆரம்பித்திருக்கின்றன. ஆனால் வழிகாட்டி ஆன்மாக்கள் இனியும் எனக்கு தகவல்கள் கூறவிழைந்தால்? கேத்தரின் உதவியில்லாமல் நாங்கள் எப்படி உரையாடிக் கொள்ளமுடியும்? நான் கட்டாயப்படுத்தியிருந்தால் கேத்தரின் ஹிப்னாடிஸ அமர்வுக்கு ஒத்துக்கொண்டிருப்பாள்.
ஆனால் அது எனக்கு நியாயமாகப் படவில்லை. வருத்தத்துடன் கேத்தரினுடைய யோசனைக்கு இணங்கினேன். பழைய அமர்வுகளைப் பற்றி விவாதித்தோம். ஆனால் என் மனம் விவாதத்தில் செல்லவில்லை.
ஐந்து மாதங்கள் கழிந்தன. கேத்தரினால் அவள் உடல்நிலையில் முன்னேற்றத்தை நன்கு தக்கவைத்துக்கொள்ள முடிந்தது. அவளுடைய பயங்களும், பதற்றங்களும் வெகுவாக குறைந்துவிட்டது. அவளுடைய வாழ்க்கையில் நிம்மதி மற்றும் உறவுகளின் நெருக்கம் சிறப்பான நிலையை அடைந்தது. ஸ்டூவர்ட் அவள் வாழ்வில் தொடர்ந்தாலும் அவள் தனக்கு பிடித்தமான துணையை நாடும் முயற்சியில் இருந்தாள். வாழ்வில், முதல்முறையாக மகிழ்ச்சிக்கான அர்த்தத்தை உணர்ந்துகொண்டாள். சில சமயங்கள் வழியிலோ, கேன்டீனிலோ சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அப்பொழுதும் டாக்டர், நோயாளிபோல இல்லாமல் நண்பர்கள் போலவே எங்களது உரையாடல்கள் இருந்தன.
குளிர்காலம் முடிந்து வசந்தகாலம் துவங்கியது. கேத்தரின் மீண்டும் ஒருமுறை என் கிளினிக்கு வந்தாள். அவளுக்கு மீண்டும் மீண்டும் ஒரு கனவு வந்துகொண்டிருப்பதாகக் கூறினாள். பாம்புகள் குழியில் கிடப்பதுபோலவும், மதத்துக்காக ஏதோ பலிகொடுக்கப்படுவதாகவும் கனவு வருவதாகக் கூறினாள். அவளும் பாம்புகளுடன் குழியில் இருப்பதுபோலவும், குழியைவிட்டு மேலே வர தான் முயற்சி செய்யும்பொழுது கனவு கலைந்து விடுவதாகவும் கூறினாள்.
நீண்டகால இடைவெளி இருந்தாலும், கேத்தரின் விரைவில் சமாதிநிலையை அடைந்தாள். அவள், உடனடியே பழையகாலத்திற்கு சென்றுவிட்டதில் எனக்கு வியப்பேதுமில்லை.
“நான் இருக்கும் இடத்தில் மிகவும் வெப்பமாக இருக்கிறது. இரண்டு கருப்புநிற ஆடவர்களைக் காண்கிறேன். ஈரமாக உள்ள சுவரில் அருகருகே நிற்கிறார்கள். தலையில் ஏதோ அணிந்திருக்கிறார்கள். வலது கணுக்காலில் மணிகள் கோர்த்த கயிற்றை கட்டியிருக்கிறார்கள். கற்களாலும், களிமண்ணாலும் தானியம் சேமிக்கும் கலனை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதனுள் கோதுமை, உடைக்கப்பட்ட கோதுமையை கொட்டுகிறார்கள். இரும்பு சக்கரங்களைக் கொண்ட வண்டியில், கோதுமை எடுத்துவரப்படுகிறது. நன்கு நெய்யப்பட்ட துணிகள் அந்த வண்டிக்குள் தென்படுகின்றன. நீலநிறத்தில் நீரைக்காண்கிறேன்.
யாரோ ஒருவர் அனைவருக்கும் ஆணையிடுகிறார். உணவு களஞ்சியத்துக்குள் செல்ல மூன்று படிகள் உள்ளன. அதற்கு வெளியே கடவுள் சிலை உள்ளது. கடவுள் சிலை, பறவையின் தலையையும், மனித உடலையும் கொண்டுள்ளது. அது பருவகாலங்களுக்கான கடவுள். உணவுகளஞ்சியத்துள் அவர்கள் தார்போன்று ஏதோ அரக்கு வைத்து நன்கு மூடியிருக்கிறார்கள். அப்பொழுதுதான், தானியங்கள் காற்றினால் கெட்டுப்போகாதிருக்கும். என் முகத்தில் அரிக்கிறது. . . . . . . நீலமணிகள் என் கூந்தலை அலங்கரிக்கின்றன. சுற்றிலும் ஈக்களும், பூச்சிகளும் பறக்கின்றன. அதனால் என் கைகளிலும், முகத்திலும் அரிப்பு ஏற்படுகிறது. அதிலிருந்து காப்பாற்றிக்கொள்ள முகத்தில் எதையோ தடவிக்கொள்கிறேன் . . . . . . அது மரத்திலிருந்து எடுக்கப்பட்ட மெழுகு . . . . . ஒரே நாற்றம்.
என் கூந்தல் பின்னப்பட்டிருக்கிறது. பொன்னிறமான கயிற்றால் கட்டப்பட்ட மணிகள் என் பின்னலில் இருக்கிறது. அரசவையில் நான் வேலை செய்கிறேன். ஏதோ விருந்து நடப்பதால் நானும் அங்கு வந்திருக்கிறேன். துறவிகளின் தலையில் எண்ணை பூசப்படுவதைக் காண்பதற்காக வந்திருக்கிறேன். வரப்போகும் அறுவடைக்காக விழா நடத்துகிறோம். மிருகங்கள் பலியிடப்படுகின்றன. நரபலி எதுவும் இல்லை. பலியிடப்பட்ட மிருகங்களின் இரத்தம், வெண்ணிற மண்ணில் ஓடி ஒரு பாத்திரத்தை நிரப்புகிறது . . . . . . ஒரு பாம்பு சிலையின் வாய்ப்புறத்தை அடைகிறது. ஆடவர்கள் சிறிய தங்கத்திலான தொப்பியை அணிந்திருக்கிறார்கள். அனைவருடைய நிறமும் கருப்பாக உள்ளது. கடல் கடந்து அழைத்துவரப்பட்ட அடிமைகளும் இருக்கிறார்கள் . . . . . “
அமைதியானாள். பொறுமையாகக் காத்திருந்தோம். வழக்கம்போல திடீரென்று அவளிடம் பரபரப்பு காணப்பட்டது. எதனையோ உற்றுக் கேட்பதுபோல தோன்றியது.
“அனைத்தும் விரைவாகவும், சிக்கலான செயல்களாகவும் இருக்கின்றன. . . . . . . வேறு வேறு பரிமாணங்களில் ஏற்படும் மாற்றங்களைக் குறித்து கூறப்படுகிறது. விழிப்புணர்வும் அதனால் மாற்றங்களும் ஒரு பரிமாணத்தில் ஏற்படுகிறது. கற்றுணர்வதற்காக பிறவி ஒன்றை எடுக்கிறோம். தேவையானவைகளைக் கற்று முடித்தபிறகே அடுத்த நிலையில் உள்ள பிறவி எடுக்கிறோம். ஒரு விஷயத்தை இங்கு நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும். கற்றுத்தேறும்வரை அடுத்தகட்ட பிறவிக்கு அனுமதி கிடையாது. அந்த நிலையிலேயே மீண்டும் தொடர நேரிடும். பெற்றுக் கொள்வதற்கும் தெரிந்துகொள்ள வேண்டும். கொடுப்பதற்கும் தெரிந்து கொள்ள வேண்டும். அனைத்து கோணங்களிலும் அனுபவங்களைப் பெறவேண்டும். தெரிந்துகொள்வதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளதால் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆன்மாக்கள் ஈடுபட்டிருக்கின்றன. வழிகாட்டி ஆன்மாக்கள் . . . . . இந்த பரிமாணத்தில் மட்டுமே உள்ளன.”
கேத்தரின் நிறுத்தினாள். வழிகாட்டி ஆன்மாவின் குரலில் அறிவுரை வந்தது. வழிகாட்டி ஆன்மாவிடமிருந்து எனக்காக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன!
“இப்பொழுது நீ செய்யவேண்டியது இதுதான். உன்னுடைய உள்ளுணர்விலிருந்து நீ கற்றுக்கொண்டாகவேண்டும்.”
நிமிடங்கள் கழிந்தன. கேத்தரின் மென்மையான குரலில் பேச ஆரம்பித்தாள். “கருப்பு நிற வேலியைப் பார்க்கிறேன் . . . . . . வேலிக்குள்ளே கல்லறைகள் உள்ளன. உங்களுடைய கல்லறையும் இருக்கிறது.”
“என்னுடைய கல்லறையா?” கேத்தரின் கண்ட காட்சி என்னை வியப்புள்ளாக்கியது.
“ஆமாம்.”
“கல்லறையில் உள்ளதை படிக்க முடிகிறதா?”
“நோபல் 1668 – 1724. அதில் மலர் ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது . . . . . . இந்த இடம் ஃப்ரான்ஸ் அல்லது ரஷ்யா? நீங்கள் சிவப்பு நிற சீருடை அணிந்திருந்தீர்கள். . . . . . . குதிரையிலிருந்து தூக்கியெறியப்பட்டீர்கள் . . . . . . தங்கத்தாலான மோதிரம் ஒன்று உள்ளது. அதில் சிங்கமும் பொறிக்கப்பட்டுள்ளது. . . . . . அது அரசவிருதுக்கான அடையாளம் போல் தோன்றுகிறது.”
கேத்தரினிடமிருந்து வேரெந்த வார்த்தைகளும் வரவில்லை. வழிகாட்டி ஆன்மாவின் கூற்றுப்படி, கேத்தரினுடைய நினைவிலிருந்து இனி எந்த அறிவுரைகளும் தொடர வாய்ப்பில்லை. ஹிப்னாடிச அமர்வுகளின் முடிவுக்கு வந்துவிட்டோம். அவளுக்கு உடல்நிலை குணமாகிவிட்டது. நினைவுகளை மீட்பதன் மூலமாக பெறவேண்டிய தகவல்களைப் பெற்றுவிட்டேன். எதிர்காலத்தில் என் உள்ளுணர்வின் மூலமாக நான் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதனையும் உணர்ந்துகொண்டேன்.
தொடரும்…