“நான் மிதக்கிறேன்.” கேத்தரின் முணகினாள்.
“நீ எந்த நிலையில் இருக்கிறாய்?”
“இல்லை. நான் மிதக்கிறேன். எட்வர்ட் எனக்கு ஏதோ கடன் பட்டிருக்கிறார். . . . . . ஏதோ கடன் பட்டிருக்கிறார்.”
“என்ன என்று உனக்குத் தெரியுமா?”
“இல்லை. . . . . . ஏதோ எனக்கு புரியவைக்க வேண்டியது தொடர்பாக . . . . . எனக்கு கடன் பட்டிருக்கிறார். எனக்கு அவர் சொல்லவேண்டிய விஷயம் இருக்கிறது. என் சகோதரியினுடைய குழந்தை சம்பந்தமாக என்று நினைக்கிறேன்.”
“உன் சகோதரியின் குழந்தை விஷயமாகவா?”
“ஆமாம். அந்த பெண்குழந்தையின் பெயர் ஸ்டீஃபைன்.”
“அவளைப் பற்றி உனக்கு என்ன தெரியவேண்டும்?”
“நான் அவளை எப்படி தொடர்புகொள்ளவேண்டும் என்று எனக்குத் தெரியவேண்டும்.” கேத்தரின் இதற்குமுன் ஸ்டீஃபைனைப் பற்றி என்னிடம் கூறியதில்லை.
“அவள் உனக்கு மிகவும் நெருக்கமானவளா?”
“இல்லை. ஆனால் அவள் அவர்களை கண்டுபிடிக்க விரும்புகிறாள்.”
“யாரைக் கண்டுபிடிக்க விரும்புகிறாள்?”
“என்னுடைய சகோதரியையும், அவள் கணவரையும் என் மூலமாகத்தான் அவள் கண்டுபிடிக்க முடியும். எட்வர்டுக்கு அதைப் பற்றித் தெரியும். ஸ்டீஃபைனுடைய தந்தை ஒரு டாக்டர். வெர்மண்ட் என்ற ஊரில் வசிக்கிறார். எனக்குத் தேவையான நேரத்தில், இதைப் பற்றிய தகவல்கள் எனக்குத் தெரியவரும்.”
பிறகுதான், நான் கேத்தரினுடைய சகோதரி பற்றிய விஷயங்களை அறிந்துகொண்டேன். கேத்தரினுடைய சகோதரியும், அவள் காதலனும் பதின்மவயதில், திருமணத்திற்கு முன்பே பிறந்த குழந்தையை தத்து கொடுத்துவிட்டார்கள். அந்த தத்துக்குழந்தைதான் ஸ்டீஃபைன். தத்து கொடுத்த காலக்கட்டத்தில் பெற்றோர் விவரங்கள் குறித்து வைத்துக் கொள்ளப்படவில்லை. சர்ச் மூலமாகத்தான் தத்து கொடுத்திருக்கிறார்கள். ஸ்டீஃபைன் தன்னுடைய பெற்றவர்களைப் பற்றி அறிய விழைகிறாள் என்று புரிந்துகொண்டேன்.
“ஆமாம். நேரம் வரும்பொழுது அறிந்துகொள்ள முடியும்.” பதிலளித்தேன்.
“ஆமாம். எட்வர்ட் என்னிடம் கூறுவார்.”
“வேறு என்னென்ன விஷயங்கள் அவரிடமிருந்து எதிர்பார்க்கிறாய்?”
“தெரியவில்லை. ஆனால் அவர் இன்னும் எனக்கு விஷயங்கள் கூற கடமைப் பட்டிருக்கிறார். என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆ . . . . . அவர் கடன்பட்டிருக்கிறார்.” அமைதியானாள்.
“களைப்பாக இருக்கிறாயா?”
“நான் குதிரையின் கடிவாளத்தைப் பார்க்கிறேன். சுவரில் இணைக்கப்பட்டிருக்கிறது . . . . . .கடிவாளம் . . . . . . வெளியே அங்கி ஒன்று கிடக்கிறது.”
“நீ பண்ணையில் இருக்கிறாயா?”
“இல்லை. இங்கு நிறைய குதிரைகள் உள்ளன. ஏகப்பட்ட குதிரைகள்.”
“வேறென்ன காண்கிறாய்?”
“நிறைய மரங்களைப் பார்க்கிறேன். . . . . மஞ்சம் நிறப் பூக்கள் உள்ள மரங்கள். என் தந்தை அங்கே இருக்கிறார். அவர் குதிரைகளை கவனித்துக் கொள்கிறார்.” நான் ஒரு குழந்தையுடன் பேசிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்.
“அவர் எப்படி காட்சியளிக்கிறார்?”
“உயரமாக இருக்கிறார். நரைமுடியுடன் இருக்கிறார்.”
“உன்னைப் பார்க்கமுடிகிறதா?”
“நான் சிறுமியாக இருக்கிறேன்.”
“உன் தந்தை குதிரைகளின் உரிமையாளரா? அல்லது குதிரை லாயத்தில் வேலை செய்கிறாரா?”
“அவர் வேறு வேலை செய்கிறார். நாங்கள் அருகில்தான் வசிக்கிறோம்.”
“உனக்கு குதிரைகளை மிகவும் பிடிக்குமா?”
“ஆமாம்.”
“உனக்கு விருப்பமான குதிரை எது?”
“ஆமாம். என் குதிரையின் பெயர் ஆப்பிள்.” கேத்தரின் “மாண்டி” என்ற பிறவி எடுத்ததும், அதில் ஆப்பிள் குதிரையைப் பற்றி அவள் கூறியதும் நினைவுக்கு வந்தது. மீண்டும் “மாண்டி” என்ற பிறவிக்கு திரும்பியிருக்கிறாளா? வேறொரு கோணத்தில் இருந்து வந்திருக்கிறாள்.”
“ஆப்பிள் . . . . . உன் தந்தை உன்னை ஆப்பிளில் சவாரி செய்ய அனுமதிப்பாரா?”
“இல்லை. ஆனால் நான் அதற்கு புற்களைக் கொடுக்க முடியும். எஜமானரின் வண்டியை அது இழுக்கும். ஆப்பிள் மிகவும் பெரியதாக உள்ளது. பெரிய கால்களும் அதற்கு உண்டு. கவனமாக இல்லாவிட்டால் அது உங்கள் கால்களை மிதித்துவிடும்.”
“உன்னுடன் யாரெல்லாம் இருக்கிறார்கள்?”
“என் அம்மா, ஒரு சகோதரி . . . . . அவள் என்னைவிட பெரியவள். வேறு யாரையும் இங்கு என்னால் பார்க்க முடியவில்லை.”
“இப்பொழுது என்ன பார்க்கிறாய்?”
“குதிரைகளை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.”
“உனக்கு இது மிகவும் மகிழ்ச்சியான நேரமா?”
“ஆமாம். எனக்கு பண்ணையின் வாசனை மிகவும் பிடிக்கும்.” பண்ணையில் தற்பொழுது, குறிப்பாக அந்த நிமிடத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று அவளால் கூற முடிகிறது.
“குதிரைகளின் மணத்தை உன்னால் உணரமுடிகிறதா?”
“ஆமாம்.”
“வைக்கோலின் மணம்?”
“நுகரமுடிகிறது . . . . . குதிரையின் முகம் மிகவும் மிருதுவாக இருக்கிறது, இங்கு நாய்களும் உள்ளன . . . . . கறுப்பு நாய் . . . . . இன்னும் கறுப்பு நாய்கள், கார்கள் . . . . . விலங்குகளும் உள்ளன. நாய்கள் வேட்டையாட உதவி செய்யும். நாய்கள் பறவைகளை விரட்டும். நாய்களைக் கட்டிப்போடவில்லை. அவை எங்கும் செல்லலாம்.”
“உனக்கு எதுவும் அடிபட்டு விட்டதா?”
“இல்லை.” நான் என் கேள்வியில் குறிப்பிட்டு எந்த சம்பவத்தையும் கூறவில்லை.
“நீ பண்ணையில்தான் வளர்கிறாயா?”
“ஆமாம். குதிரை லாயத்தில் வேலை செய்பவர் என் உண்மையான தந்தை இல்லை.” மௌனமானாள்.
“உன் உண்மையான தந்தை இல்லையா?” குழம்பினேன்.
“எனக்குத் தெரியவில்லை . . . . . . என் உண்மையான தந்தை இல்லை. ஆனால் எனக்கு தந்தையைப் போன்றவர். என்னிடம் அன்பாக இருக்கிறார். அவருக்கு பச்சை நிற கண்கள் இருக்கிறது.”
“அவர் கண்களைப் பார். அவரை உனக்கு அடையாளம் காணமுடியும்.”
“அவர் என் தாத்தா. . . . . . தாத்தா. எங்களிடம் அவர் மிகவும் பிரியமாக இருப்பார். எங்களை எப்பொழுதும் வெளியில் அழைத்துச் செல்வார். வெளியில் அழைத்துச் செல்லும்பொழுது பானங்கள் வாங்கித் தருவார். எங்களுடன் மிகவும் அன்பாகப் பழகுவார்.” கேத்தரின் அந்த பிறவியிலிருந்து வெளியேறி, நிகழ்கால பிறவியில் உள்ள தாத்தாவைப் பற்றி பேசுகிறாள் என்று நினைக்கிறேன்.
“அவர் இல்லாததை நினைத்து வருத்தமாக உள்ளதா?”
“ஆமாம்.” மென்மையாக கூறினாள்.
“உன்னுடதான் இவ்வளவு நாட்கள் இருந்திருக்கிறாரே?” அவள் சோகத்தைக் குறைப்பதற்காக சமாதானமாகக் கூறினேன்.
“எங்களிடம் மிகவும் பிரியமாக இருந்தார். எங்களுக்கும் அவரை மிகவும் பிடிக்கும். அவர் எங்களை திட்டியதே கிடையாது. எங்களுக்குப் பணம் தருவார். எங்கு சென்றாலும் அழைத்துச் செல்வார். அவருக்கும் அது மிகவும் பிடிக்கும். ஆனால் அவர் இறந்துவிட்டார்.”
“ஆமாம். ஆனால் நீ அவரிடம் மீண்டும் சேரமுடியும். உனக்கும் அது தெரியுமல்லவா?”
“ஆமாம். அவர் என் தந்தையைப் போல அல்ல, மிகவும் நல்லவர்.”
“ஒருவருக்கு உன்னை மிகவும் பிடிக்கிறது. நன்றாக நடத்துகிறார். ஆனால் மற்றொருவர் வித்தியாசமாக நடத்துகிறார். என்ன காரணம்?”
“ஒருவர் அந்த கடனை கழித்துவிட்டார். என் தந்தை இன்னும் பிறவிக் கடன்பட்டிருக்கிறார். சரியாக கற்றுக்கொள்ளாமல் மீண்டும் பிறந்திருக்கிறார். அவர் மீண்டும் பிறவி எடுத்தாக வேண்டும்.”
“ஆமாம். அவர் அன்பும், அரவணைப்பும் அவர் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள்.” பதிலளித்தேன்.
“ஆமாம்.”
“குழந்தைகளை ஜடப்பொருட்கள் போல நினைக்கிறார்கள். அது தவறு. குழந்தைகளை அன்புடன் வளர்க்க வேண்டும்.”
“ஆமாம்.” ஒத்துக்கொண்டாள்.
“ஆமாம். உன் தந்தை இன்னும் இந்த விஷயத்தில் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.”
“ஆமாம். உன் தாத்தா இதில் தேறியிருக்கிறார்.”
“எனக்குத் தெரியும்.” இடைமறித்தாள். “சரீர நிலையிலும் நாம் வேறு வேறு பரிமாணங்களைக் கடக்க வேண்டும். . . . . . . ஸ்தூல நிலையில் உள்ளதைப் போல, குழந்தைப் பருவம், பதின்ம பருவம், வாலிபப் பருவம் . . . . . . என்று வேறுபட்ட நிலைகளைக் கடக்க வேண்டும். . . . . . நமது பிறவிக்கான இலட்சியத்தின் எல்லையைத் தொடும்வரைக் கடக்கவேண்டும். சரீர நிலையின் பருவங்கள் மிகவும் கடினமானவை. ஸ்தூல நிலையின் எல்லைகள் எளிமையானவைகள். அங்கு நாம் காத்திருக்க வேண்டும். சரீர நிலையின் எல்லைகள் சிரமம் மிகுந்தவைகள்.”
“ஸ்தூல நிலையில் எத்தனை பரிமாணங்கள் உள்ளன?”
“ஏழு பரிமாணங்கள்.”
“அவைகளைப் பற்றி விளக்கமுடியுமா?” முன்பு ஒருமுறை அவள் கூறியதை உறுதி செய்து கொள்வதற்காக வினவினேன்.
“எனக்கு இரண்டு பரிமாணங்களைப் பற்றி மட்டுமே தெரியும். ஒன்று நிலைகளை அசைபோடும் பரிமாணம். மற்றொன்று காத்திருக்கும் பரிமாணம்.”
“எனக்கும் இவை இரண்டுமே புரிந்துள்ளது.”
“மற்றவைகளைப் பற்றி காலம் கூடும்பொழுது அறியமுடியும்.”
“இன்று பிறவி கடனைப் பற்றி அறிந்துகொண்டோம். நான் கற்றுக்கொள்ளும் நேரத்தில் நீயும் கற்றுக்கொள்ள முடிகிறது இல்லையா?”
“நான் என்ன நினைவில் நிறுத்த வேண்டுமோ அதை மட்டுமே நினைவில் நிறுத்த முடியும்.” உறுதியாக பதிலளித்தாள்.
“உனக்கு இந்த பரிமாண நிலைகளைப் பற்றி நினைவு இருக்குமா?”
“இல்லை. எனக்கு அவற்றைப்பற்றி தெரியவேண்டிய அவசியமில்லை. ஆனால் உங்களுக்கு அவை முக்கியமான பாடங்கள்.” முன்பே அவள் இதைப்பற்றி கூறியிருக்கிறாள். வருகிற தகவல்கள் எனக்காக; அவளுக்கு உதவி செய்வதற்காக; அதையும் தாண்டி அதற்கு வேறு காரணங்களும் இருக்கின்றன. அந்த காரணங்கள் என்னவென்று என்னால் அனுமானிக்க முடியவில்லை.
“உனக்கு நன்கு குணமாகி வருகிறது. முன்பைவிட உன் நிலையில் நல்ல வரவேற்கத்தகுந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. உன்னால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது.”
“ஆமாம்.” ஒத்துக்கொண்டாள்.
“ஏன் மற்றவர்கள் உன்னால் கவர்ந்திழுக்கப் படுகிறார்கள்?”
“நான் அச்சங்களைத் தவிர்த்து விட்டேன். என்னால் அவர்களுக்கு உதவி செய்ய முடிகிறது. என்னிடம் ஏதோ ஒருவித காந்தம் போன்ற கவரும் சக்தியை உணர்கிறார்கள்.”
“உன்னால் இவற்றை சமாளிக்க முடிகிறதா?”
“முடிகிறது. எனக்கு இப்பொழுது அச்சம் எதுவுமில்லை.” எனக்கும் அதைப் பற்றி எந்தவித சந்தேகமும் இல்லை.
“நல்லது. நானும் உனக்கு உதவி செய்வேன்.”
“எனக்குத் தெரியும். நீங்கள் என்னுடைய ஆசான்.” பதிலளித்தாள்.
தொடரும்…