இறுதியாக கேத்தரின் மீண்டும் பேச ஆரம்பித்தாள்.
“நகைகள் சென்றுவிட்டன. . . . . . ஒளியும் மறைந்துவிட்டது. . . . . . . எல்லாம் மறைந்துவிட்டன.”
“அசரீரிகளும் சென்றுவிட்டனவா?”
“ஆமாம். என் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை.” தலையை பக்கவாட்டில் அசைக்க ஆரம்பித்தாள்.
“ஒரு ஆன்மா என்னை நோக்குகிறது.”
“உன்னையா?”
“ஆமாம்.”
“அது யாரென்று அடையாளம் காணமுடிகிறதா?”
“சரியாகத் தெரியவில்லை. . . . . . அது எட்வர்ட் என்று நினைக்கிறேன்.” எட்வர்ட் ஒரு டாக்டர். சென்ற வருடம் இறந்துவிட்டார். எப்பொழுதும் கேத்தரினுக்கு உதவி செய்வதற்காக அவளுடன் அவர் இருப்பதுபோல் தோன்றுகிறது.
“அந்த ஆன்மா எப்படி தோற்றமளிக்கிறது?”
“வெண்மையான ஒளிபோல் தோன்றுகிறது. . . . . ஒளிபோல் தோன்றுகிறது. . . . . . அதற்கு முகம் எதுவும் இல்லை. ஆனால் அது எட்வர்ட் என்று என்னால் உணரமுடிகிறது.”
“உன்னுடன் பேசுகிறாரா?”
“இல்லை. என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார்.”
“நான் பேசுவதை அவர் கேட்கிறாரா?”
“ஆமாம். ஆனால் இப்பொழுது அவர் சென்றுவிட்டார். நான் நலமாக இருப்பதை உறுதிசெய்ய விரும்பியிருக்கிறார்.” நாம் அனைவரும் கூறக்கூடிய பாதுகாக்கும் தேவதைகள் (Guardian Angels ) குறித்து சிந்தித்தேன். எட்வர்ட் அதுபோலவே வாஞ்சையுடன், கேத்தரினை, ஒரு பாதுகாக்கும் தேவதையாக கவனித்துக் கொண்டிருப்பது புரிந்தது. முன்பே கேத்தரின் பாதுகாக்கும் தேவதைகளைக் குறித்து கூறியுள்ளாள். குழந்தைகளாக இருக்கும்பொழுது நமக்குத் தோன்றும் கற்பனைகள், எந்த அளவுக்கு நமது பூர்வஜென்ம நினைவுகளை கொண்டிருக்கிறது என்று எண்ணி வியந்தேன்.
மேலும் ஆன்மாக்களிடம் அமைந்திருக்கும் வேறுவேறு நிலைகளும் எனக்கு வியப்பை அளித்தன. சில ஆன்மாக்கள் பாதுகாக்கும் தேவதைகளாக உள்ளன. சில வழிகாட்டும் நிலையில் உள்ளன. சில இன்னும் கற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கின்றன. ஆன்மாக்களுக்கு இருக்கும் அனுபவம் மற்றும் ஞானத்தைப் பொறுத்து அவைகளின் நிலைகள் அமைகின்றன என்று யூகிக்கிறேன். இறைவனுக்குரிய குணநலன்களுடன், இறைவனுடன் இரண்டற கலப்பதுதான் அவைகளின் இறுதி இலக்காக இருக்கிறது என்பதையும் உணர்கிறேன். இறைவனுடன் ஒன்றுகலந்து பேரின்பம் அடைந்து முக்தி பெறுவதைத்தான் ஆன்மீகவாதிகள் இறுதி இலக்காகக் கொண்டிருக்கிறார்கள். இறைவனுடன் இரண்டறக் கலப்பது என்பது அவர்களுடைய அறிவுக்கு எட்டியிருப்பது புரிகிறது. அத்தகைய அனுபவ அறிவு அமையாமல் இருந்தபோதிலும், கேத்தரின் ஒரு ஊடகமாக செயல்பட்டு, அவள் மூலமாக கிடைக்கப்பெறும் ஞானம் உண்மையைத் தெள்ளத் தெளிவாக்குகிறது.
எட்வர்ட் மறைந்ததும் கேத்தரின் மௌனமானாள். அவள் மிகுந்த அமைதியுடன் இருப்பது அவள் முகத்தில் தெரிந்தது. பிறவிக்கப்பால், இறப்புக்கு அப்பால் சென்று இறைவனிடம் உரையாடி, அந்த அறிவைப் பகிர்ந்துகொள்ளக் கூடிய, என்ன ஒரு அருமையான பாக்கியத்தைப் பெற்றிருக்கிறாள்! நாங்கள் ஞானத்தின் ஊற்றிலிருந்து இனிமேலும் தடைசெய்யப்படாத ஆப்பிள் கனிகளை உண்கிறோம். இன்னும் எவ்வளவு ஆப்பிள்கள் மிச்சமிருக்கின்றன என்று என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
கேத்தரினுடைய அன்னை மின்னட்-க்கு மார்பக புற்றுநோய் கடந்த நான்கு வருடங்களாக உள்ளது. தற்சமயம் அது உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி, சிகிச்சைகளுக்கும் கட்டுப்படாத நிலையை அடைந்துள்ளது. கேத்தரினுடைய அன்னை மிகுந்த மனோதைரியத்துடன் நோயை எதிர்கொண்டிருக்கிறாள். ஆனால் நோய்பரவும் வேகம் அதிகரித்து மரணவாயிலில் இருக்கிறாள்.
கேத்தரின் தனது சிகிச்சையின் விவரங்களை தன் தாய் மின்னட்-இடம் பகிர்ந்திருக்கிறாள். மின்னட்டும் கேத்தரின் கூறுவதை மிகுந்த நம்பிக்கையுடன் கேள்வியில்லாமல் ஒத்துக்கொண்டது எனக்கு சிறிது ஆச்சரியத்தை அளித்தது. அவளுக்கு ஆன்மீகம் தொடர்பான புத்தகங்களை அளித்தேன். நானும் என் மனைவி மற்றும் மின்னட் மூவரும் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான வருடங்கள் பழமையான “கபல்லா” என்ற யூத ஆன்மீக கருத்துக்குகளை கற்பதற்கு மின்னட் ஏற்பாடு செய்தாள். அவை இன்றைய நாகரிக யூதர்களுக்கு தெரியாத விஷயங்கள். மறுபிறவி கருத்துகள், வேறுபட்ட பரிமாணங்கள் ஆகியவைகள் கபல்லாவின் கோட்பாடுகள் ஆகும். மின்னட்டின் மனோபலம் அதிகரித்தது.
அதே நேரத்தில் அவளது உடல்நிலை மோசமடைந்துகொண்டேவந்தது. அவள் இறைவனுடன் கலக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தாள். ஆன்மா அழிவில்லாததென்று மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தாள். அந்த நம்பிக்கை அவளது உடல் உபாதைகளை மறக்க வைத்தது. அவளது மகள் “டோனா”-வின் முதல் குழந்தையின் வரவுக்காக உயிரைக் கையில் பிடித்துவைத்திருந்தாள். காத்தரினுடைய ஹிப்னாடிச அமர்வுக்கு ஒருமுறை வருகையளித்தாள். காத்தரினுடைய நேர்மையும், உண்மையான பரிவும், மின்னட்-ஐ இறப்புக்குப்பின் ஆன்மா இருப்பதை நம்ப வைத்தது.
மரணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக மின்னட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். நானும் என் மனைவியும் மின்னட்–டுக்காக நேரத்தை ஒதுக்கி, பிறப்பு மற்றும் இறப்புக்குப் பிறகு நமக்கு என்ன காத்திருக்கிறது என்றும் உரையாடினோம். மிகுந்த சுயமரியாதையுடைய மின்னட், கௌரவத்துடன் தாதிகளுடைய அரவணைப்பில், மருத்துவமனையிலேயே உயிர்நீக்க விரும்பினாள். அவள் மகள் “டோனா” ஆறுவார குழந்தையுடன், தாயை சந்தித்து இறுதிவிடையளித்தாள். நானும் என் மனைவியும் மின்னட் உடன் அதிக நேரம் செலவழித்தோம். மின்னட் மரணமடைந்த இரவு, மாலை ஆறு மணிக்கு நானும் என் மனைவியும் ஏதோ ஒருவிதமான உந்துதலால் மருத்துவமனை செல்ல விரும்பினோம். மருத்துவமனைக்குச் சென்று மின்னட் உடன் பொழுதைக் கழித்தோம். அந்த ஆறுமணி நேரங்களில், அந்த அறை முழுவதும் அமைதி மற்றும் ஆன்மீக ஒளியினால் நிறைந்திருந்தது.
மின்னட் சுவாசிக்க சிரமப்பட்டாலும் வலி எதையும் உணரவில்லை. இறப்புக்குப் பிறகு, காணக்கூடிய பிரகாசமான ஒளி, இடைப்பட்ட நிலை மற்றும் ஆன்மாக்களின் வரவு குறித்து உரையாடினோம். மின்னட் தான் வாழ்ந்த வாழ்க்கையை மீண்டும் கண்ணோட்டமிட்டாள். வாழ்வில் நேர்ந்த சில தவறுகளை அவளுக்கு ஒத்துக்கொள்வதில் சிரமமிருந்தாலும், ஒத்துக்கொள்ளும்வரை அந்த செயலாக்கம் நிறைவு பெறாது என்று அவள் உணர்ந்துகொண்டதுபோல் தோன்றியது. அவள் குறிப்பிட்ட நேரத்திற்காக காத்திருப்பதை உணர்ந்தோம். அந்த நேரம் வருவதற்குள் அவள் பொறுமையிழப்பது தெரிந்தது. அதிகாலையில் அவள் ஆன்மா உடலை விட்டு பிரிந்தது. நான் ஒருவரை மரணத்தை நோக்கி வழிநடத்துவதென்பது இதுதான் முதல்முறை. மன உறுதியுடன் அவள் ஆன்மா பிரிந்தது எங்கள் வருத்தத்தைத் தணித்தது.
நோயாளிகளை குணப்படுத்தும் திறமை என்னிடம் குறிப்பிடதக்க அளவு முன்னேற்றம் அடைந்துள்ளதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்தேன். பதற்றங்களையும், அச்சங்களையும் போக்குவது மட்டுமல்லாது, மரணம் குறித்து மனக்கலக்கங்களையும் என்னால் நன்கு களையமுடிகிறது. என்ன நோய், எப்படிக் குணப்படுத்த வேண்டும் என்று என் உள்மனது தன்னிச்சையாக எனக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கிறது. தன்னம்பிக்கையூட்டுவதும், அமைதி வழிக்கு நோயாளிகளைத் திருப்புவதும் எனக்கு மிகவும் எளிதான செயலாக மாறியுள்ளது. கேத்தரினுடைய அன்னையின் மறைவுக்குப் பிறகு, மரணவாயிலில் இருப்பவர்களை சாந்தப்படுத்தவும், வழிநடத்தவும் எனது உதவிகேட்டு ஏகப்பட்ட அழைப்புகள் வந்தன.
அப்படிப்பட்டவர்களும்கூட கேத்தரினுடைய அனுபவத்தைக் கேட்கவோ, இறப்புக்குப்பின் ஆன்மாவின் பயணத்தை அறியவோ விருப்பமில்லாதவர்களாக இருந்தனர். இருப்பினும், என்னால் ஓரளவுக்கு அவர்களுக்கும் ஆன்மீகத்தைப் புகட்ட முடிந்ததாக உணர்கிறேன். அன்பான வார்த்தைகள், அடுத்தவர்களுடைய அச்சங்களையும், கலக்கங்களையும் நன்கு புரிந்துகொள்ளுதல், கனிவான பார்வை, வாஞ்சையுடனான ஸ்பரிசம், இனிமையான ஒரு சொல் – மறந்துவிட்ட மனிதநேயத்தையும், ஆன்மீகத்தையும், எதிர்கால நம்பிக்கையையும், மற்றனைத்தையும் சரியாகப்பற்றிவிட இவை போதும். மேலும் அறிய விருப்பப்பட்டவர்களுக்கு தேவையான புத்தகங்களைப் பரிந்துரைத்தேன். காத்தரினுடைய அனுபவங்களையும் கூறினேன்.
அது அவர்களின் வாழ்வில் ஒரு புதிய ஜன்னலைத் திறந்ததை அறிகிறேன். விருப்பப்பட்டு கற்றவர்கள் புத்துணர்ச்சி அடைந்தனர். வாழ்வைப்பற்றிய புரியாத புதிர்களையும், அதற்கான பதில்களையும் விரைவில் கண்டறிந்தனர்.
மனோவியலாளர்கள் இன்னும் திறந்த மனதுடன் செயல்பட வேண்டுமென்று எண்ணுகிறேன். காத்தரினுடைய சிகிச்சையை அறிவியல் முறைப்படி, ஆவணப்படுத்தியதுபோல் முக்கியமான அனைத்து சிகிச்சைகளையும் ஆவணப்படுத்துதல் மிகவும் அவசியம். அதே சமயத்தில் மனோவியலாளர்களின் அனுபவங்களையும் கருத்தில் கொள்வது அவசியம். இறப்புக்குப்பின் உள்ள நிலைக்கான வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டு மனோவியலாளர்கள் சிகிச்சை அளித்தல் நலமென்று நம்புகிறேன். ஒவ்வொரு முறையும் நோயாளிகளின் பழைய நினைவுகள் அனைத்தையும் கிளற வேண்டுமென்ற அவசியமில்லை. இருப்பினும் நோயாளிகளின் அனைத்து அனுபவங்களையும் கருத்தில்கொண்டு, தங்களது அனுபவத்தையும் உபயோகித்தால் நல்ல பயன் கிடைக்கும்.
மக்கள் மரணத்தை நினைத்து அச்சம் கொண்டிருக்கிறார்கள். அணுஆயுதப் பேரழிவு, எய்ட்ஸ், பயங்கரவாதம், நோய்கள் ஆகிய ஆபத்துகளை எப்பொழுது வேண்டுமானாலும் எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்திலுள்ளனர். பதின்மவயதிலேயே சிலர், எதிர்காலத்தைப்பற்றி நம்பிக்கையில்லாமல் இருக்கின்றனர். இத்தகைய எண்ணங்கள் முழுமையான சமூகத்தின் மன அழுத்ததைக் காட்டுகிறது.
தனிப்பட்ட முறையில் மின்னட், காத்தரினுடைய சிந்தனைகளை புரிந்து ஏற்றுக்கொண்டது மன நிம்மதியை அளிக்கிறது. அவளுடைய நம்பிக்கையின் பலம் அதிகரித்தது. அது உடல் உபாதைகளை பொறுத்துக்கொள்ள வழிவகுத்தது. நம் அனைவருக்கும் இதனால் கிடைக்கும் செய்தி, எதிர்காலத்தில் நம்பிக்கை கொள்வதே ஆகும். காத்தரினுக்கு நேர்ந்துபோல் வேறு சிலருக்கும் நேர்ந்திருக்கலாம். அதனை மனோவியலாலர்களும், அறிவியலாளர்களும், பொதுமக்களும் வெளிக்கொணர வேண்டும். நமது ஆன்மா அழிவில்லாதது. நமது அனைத்து கேள்விகளுக்கும் பதில் உள்ளது. நாம் எப்பொழுதும் இணைந்தே இருப்போம்.
தொடரும்…