கேத்தரின் ஹிப்னாடிச அமர்வுக்குப் பிறகு ஒரு வாரம் கழித்து அடுத்த அமர்வுக்கு என் கிளினிக்கு வந்தாள். நான் சென்ற வாரத்தில் அவளிடமிருந்து பெறப்பட்ட, நம்புவதற்கரிய, ஆடியோ டேப்புடன் தயாராக இருந்தேன். முற்பிறவி நினைவுகளுடன், தெய்வீக தன்மை பொருந்திய செய்திகளைக் கொண்ட கவிதைகளையும் தருபவள் என்பதால், அவளுக்கும் அந்த டேப்பைப் போட்டு காண்பிக்கலாம் என்று நினைத்தேன். இறப்புக்கும், பிறப்புக்கும் இடைப்பட்ட ஆவி நிலையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அவளுடைய நினைவில் இருக்காதென்பது எனக்குத் தெரியும். எனவே அவள் அந்த டேப்பைக் கவனித்தால், அவளுக்கும் விஷயங்கள் புரியும் என்று கூறினேன்.
ஆனால் அவளுக்கு அதனைக் கேட்பதற்கு விருப்பமில்லை. இருப்பினும் நான் சொல்வதற்காக, கேட்பதற்கு ஒத்துக்கொண்டாள். எதிர்பார்த்ததைவிட அவள் நன்கு குணமாகி இருப்பதால், அந்த டேப்பை கவனிப்பதால், அவளுக்கு எந்தவித முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்புகள் கிடையாது. அதனால் அவளுக்கு டேப்பினைக் கேட்பதற்கு எந்தவித அவசியமும் இல்லை. மேலும் அது அவளுக்கு அச்சமூட்டுவதாகவும் கூறினாள்.
நான் வற்புறுத்தி அவளை அந்த டேப்புகளைக் கேட்க வைத்தேன். அற்புதமான, அழகான, உற்சாகமூட்டும் தகவல்கள் அவள் வழியாகத்தான் வந்தன. அவளுடன் அதனைப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். சில நிமிடங்கள் மட்டும் அவள் அந்த டேப்பைக் காதுகொடுத்து கேட்டாள். அதுவும் அவள் மென்மையான குரலில் பேசிய வார்த்தைகளை மட்டும் கேட்டுவிட்டு, என்னை டேப்பை நிறுத்துமாறு கட்டாயப்படுத்தினாள். நானும் நிறுத்திவிட்டேன். அவள் வினோதமாகவும், சங்கடமாகவும் உள்ளதாகக் கூறினாள். “இந்த தகவல்கள் உனக்காக” என்று அசரீரி ஒலித்தது என் நினைவுக்கு வந்தது.
நான் இன்னும் எவ்வளவு நாட்கள் இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று வியந்தேன். ஏனெனில், கேத்தரின் ஒவ்வொரு வாரமும், நன்றாக குணமடைந்து வருவது தெரிந்தது. ஓரிரு பிரச்சனைகளைத் தவிர அவள் முற்றிலும் குணமடைந்து விட்டாள். ஸ்டூவர்டிடம் அவளது உறவில் முன்னேற்றம் இல்லை. அவர்கள் உறவு பட்டும், படாமலுமே இருந்துகொண்டிருந்தது. மூடப்பட்ட அறைகளில் அவளுக்கு பயம் விட்டபாடில்லை. இவைகளைத்தவிர, அவள் நிலையில், முன்னேற்றம் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது.
பொதுவாகத் தரப்படும், மனநல சிகிச்சைகள் அவளுக்குத் தரப்பட்டு, மாதக்கணக்கில் ஆகிறது. அவ்வித சிகிச்சைகள், தற்போதுள்ள நிலையில் தேவையும் இல்லை. நாங்கள் அந்த வாரத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பற்றி சிறிது நேரம் அளவளாவிவிட்டு, உடனே ஹிப்னடைஸ் சிகிச்சைக்குத் தாவிவிடுவோம். உண்மையில் நிகழ்ந்த பேரதிர்ச்சி நிகழ்வுகளாலோ, அல்லது தினம் தினம் அனுபவிக்கும் நெருக்கடியினாலோ மனஉளைச்சலாலோ அல்லது வேறு அனுபவங்களாலோ பாதிக்கப்பட்டிருந்த கேத்தரின் கிட்டத்தட்ட குணமாகிவிட்டாள் என்பது தெளிவாகத் தெரிந்தது.
அவளிடம் காணப்பட்ட பதற்ற நிலையும், மூச்சுத்திணறலும், பயங்களும் இருந்த இடம் தெரியவில்லை. அவளிடம் இறந்துவிடுவோம் என்ற கவலையும், இறப்பைப் பற்றிய பயமும் இல்லாமல் போனது. தன் கட்டுப்பாட்டை இழந்துவிடுவோமோ என்ற கவலையும் இப்போது அவளிடம் இல்லை.
கேத்தரின் போன்ற நோயாளிகளைக் குணப்படுத்த, மனோதத்துவ மருத்துவர்கள், தற்சமயம் தூக்கமாத்திரைகளையும், மனச்சோர்வுகளுக்கான மருந்துகளையும் தருகிறார்கள். இதைத் தவிர கடுமையான மனநல சிகிச்சைப் பயிற்சிகளும் தரப்படுகிறது. இப்படிப்பட்ட நோயாளிகளை குழுக்களாக இணைத்து தரப்படும் அமர்வுகளுக்கும் அனுப்பப்படுகிறார்கள். அதிக மனோதத்துவ நிபுணர்கள், கேத்தரின் போன்றவர்களுக்கு தோன்றும் அறிகுறிகள், உடல் சம்பந்தப்பட்டவைகள் என்று நம்புகிறார்கள். மூளையில் உள்ள ரசாயனங்களின் குறைபாடுகள் என்று கருதுகிறார்கள்.
கேத்தரினை ஹிப்னடைஸ் செய்து சமாதி நிலைக்கு கொண்டுசென்றேன். எந்தவித மருந்து மாத்திரைகளும் இல்லாமல், எந்தவித வழக்கமான ஆலோசனை சிகிச்சைகளும் இல்லாமல், எந்தவித குழு சிகிச்சையும் தரப்படாமல் கேத்தரின் குணமாகியிருக்கிறாள். மிகவும் அற்புதமாக, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருக்கிறாள். இது பல்லைக் கடித்துக்கொண்டு நோயின் விளைவுகளைப் பொறுத்துக்கொள்வதோ, அல்லது நோயின் தன்மையை மறைத்துவைப்பதோ இல்லை. இது பயத்தினால் பீடிக்கப்பட்ட வாழ்க்கையை குணப்படுத்திய நிகழ்ச்சி. அறிகுறிகளை முற்றிலுமாக நீக்கிய நிகழ்ச்சி. என்னுடைய எதிர்பார்ப்புகளைத் தாண்டி அமைதியான, மகிழ்ச்சியான, ஒளிபொருந்திய கேத்தரினைக் காண்கிறேன்.
கேத்தரின் மீண்டும் மென்மையாக முணுமுணுக்க ஆரம்பித்தாள். “நான் ஒரு கட்டிடத்தில் நிற்கிறேன். குவிந்த மேற்கூரையைக் கொண்ட கட்டிடம். மேற்கூரை நீலம் மற்றும் பொன்னிற வண்ணங்களைக் கொண்டிருக்கிறது. என்னுடன் வேறுசிலரும் இருக்கிறார்கள். அவர்கள் பழமையான அங்கிகளை அணிந்திருக்கிறார்கள். . . . . . . மிகவும் பழைய அங்கிகள் . . . . . . அழுக்கான அங்கிகள். நாங்கள் இங்கு எப்படி வந்தோம் என்று புரியவில்லை. அங்கு கற்களினாலான மேடையில் ஏதோ இருக்கிறது. பொன்னிறத்திலான சிற்பம், அறையின் ஓரத்தில் இருக்கிறது. அது வருகிறது. . . . . . மிகவும் பெரியதாக இருக்கிறது. இறக்கைகளுடன் உள்ளது. பார்ப்பதற்கு மிகவும் கொடியதான தோற்றம் கொண்டுள்ளது. இந்த அறையின் வெப்பம் தாங்கமுடியவில்லை. மிகுந்த வெப்பம். . . . . . . . இந்த அறையில் எந்தவித திறப்பும் இல்லாததே வெப்பத்துக்குக் காரணம். நாங்கள் கிராமத்தில் உள்ள மக்களை விட்டு தூரத்தில் இருக்கவேண்டும். எங்களிடம் ஏதோ பிரச்சனை இருக்கிறது.
“நீ உடல் நலமின்றி இருக்கிறாயா?” – நான்.
“ஆம். எங்களுக்கு உடல் நலமில்லை. எங்களுக்கு என்னவென்று தெரியவில்லை. ஆனால் எங்கள் தோல்கள் அழுகிக்கொண்டிருக்கின்றது. கறுத்துவிட்டது. நான் மிகவும் குளிராக உணர்கிறேன். காற்றில் ஈரமில்லை. காற்று அசையவேயில்லை. நாங்கள் கிராமத்துக்குத் திரும்பமுடியாது. இங்கேயே இருக்க வேண்டும். சிலருடைய முகங்கள் விகாரமாகிவிட்டது.” அவள் கூறுவதைக் கேட்டால் தொழுநோய்போல பயங்கரமான நோயாகத் தெரிகிறது. அவளுக்கு இதுவரை, எந்தப் பிறவியிலும் மனதைக் கவரும் வாழ்க்கை அமைந்ததாகத் தெரியவில்லை. “எவ்வளவு நாட்கள் நீ அங்கு இருக்க வேண்டும்?” – நான்.
“காலம் முழுவதும்” வருத்தமாகத் தெரிவித்தாள். “நாங்கள் இறக்கும்வரை இங்குதான் கழிக்கவேண்டும். இதனைக் குணப்படுத்த எந்த மருந்தும் கிடையாது.”
“இந்த நோயின் பெயர் உனக்குத் தெரியுமா?”
“இல்லை. சருமங்கள் காய்ந்து சுருங்கிவிடுகிறது. நான் இங்கு வந்து மூன்று வருடங்களாகிறது. இன்னும் சிலர் இப்பொழுதுதான் வந்திருக்கிறார்கள். மீள்வதற்கு வழியே கிடையாது. நாங்கள் தள்ளிவைக்கப்பட்டவர்கள். . . . . . இறப்பதற்காக.”
துர்பாக்கியமான நிலையில், குகையில் வருத்தத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். “நாங்கள் உணவுக்காக வேட்டையாடவேண்டும். நாங்கள் வேட்டையாடும் காட்டுவிலங்கைப் பார்க்கிறேன். அதற்கு கொம்புகள் இருக்கின்றன. பழுப்பு நிறத்துடன், பெரிய கொம்புகள் உள்ள மிருகம்.”
“உங்களை யாரும் வந்து சந்திப்பார்களா?”
“இல்லை. எங்கள் அருகில் யாரும் வரமாட்டார்கள். வந்தால் அவர்களுக்கும் இந்த கொடுமையான நோய் தொற்றிக்கொள்ளும். நாங்கள் சபிக்கப்பட்டவர்கள். . . . . . . நாங்கள் ஏதோ பாவம் செய்திருக்கிறோம். அதன் பலனை அனுபவிக்கிறோம்.” கால ஓட்டத்தில் இறையியல் கொள்கைகள் அவளது பிறவிகளில் பிரதிபலிப்பது தெரிந்தது. மரணத்துக்குப் பிறகு, ஸ்தூல நிலையில் மட்டுமே எப்பொழுதும் மாறாத நம்பிக்கையும், உறுதியும் அளிக்கப்படுகிறது.
“எந்த வருடம் என்று கூறமுடிகிறதா?”
“நாங்கள் காலம் பற்றிய எண்ணங்களையே இழந்துவிட்டோம். எங்கள் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. மரணத்துக்காகக் காத்திருக்கிறோம்.”
“எதிர்காலம் குறித்து ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா?” அற்புதம் நடக்காதா என்ற ஆதங்கத்துடன் கேட்டேன்.
“எந்த நம்பிக்கையும் இல்லை. நாங்கள் அனைவரும் இறந்துவிடுவோம். கைகளை மிகவும் வலிக்கிறது. என் உடல் மிகவும் பலகீனமாக இருக்கிறது. எனக்கு வயதாகிவிட்டது. என்னால் நகரக்கூட முடியவில்லை.”
“உன்னால் நகரமுடியாவிட்டால் என்ன செய்வார்கள்?”
“வேறு குகைக்கு மாற்றி விடுவார்கள். அங்கேயே இறந்துவிடுவோம்.”
“இறந்தவர் உடல்களை என்ன செய்வார்கள்?”
“குகையின் வாசலை மூடிவிடுவார்கள்.”
“இறப்பதற்கு முன்பே எப்பொழுதாவது மூடிவிடுவார்களா?” அவளுக்கு மூடப்பட்ட தனியறையில், பயம் வருவதற்கான காரணத்திற்கு ஏதாவது தொடர்பு இருக்குமா என்று அறிவதற்காகக் கேட்டேன்.
“எனக்குத் தெரியாது. நான் அங்கு சென்றதில்லை. என்னுடன் இன்னும் சிலரும் இருக்கிறார்கள். இங்கு மிகவும் வெப்பமாக இருக்கிறது. நான் சுவரில் சாய்ந்து படுத்திருக்கிறேன்.”
“அந்த அறை எதற்காக உள்ளது?”
“கடவுளை வழிபடுவதற்காக உள்ளது. . . . . நிறைய கடவுள்கள். மிகவும் வெப்பமாக உள்ளது.”
நான் அவளை காலத்தில் முன்னோக்கி அழைத்துவந்தேன். “நான் ஏதோ வெண்மையாகக் காண்கிறேன். ஒருவிதமான மேற்கூரை. யாரையோ நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.”
“உன்னையா?”
“தெரியவில்லை. நான் மரணத்தை வரவேற்கிறேன். என்னால் உடல்வலியைத் தாங்கமுடியவில்லை.” கேத்தரினுடைய உதடுகள் வலியில் துடித்தன. குகையின் வெப்பம் தாளமுடியாமல் அவளுக்கு இறைத்தது. நான் அவளை, இறக்கும்நாளை நோக்கி அழைத்துவந்தேன். அவளுக்கு இன்னும் மூச்சிறைத்துக்கொண்டிருந்தது.
“மூச்சுவிட சிரமமாக இருக்கிறதா?” வினவினேன்.
“ஆம், மிகவும் வெப்பமாக இருக்கிறது. . . . . . வெப்பம் . . . . . கும்மிருட்டு. என்னால் பார்க்க முடியவில்லை. . . . . . என்னால் நகரமுடியவில்லை.” தன்னந்தனியாக, நகர முடியாத நிலையில் இறந்துகொண்டிருந்தாள். குகையின் வாசல் அவள் உயிருடன் இருக்கும்பொழுதே மூடப்பட்டுவிட்டது. மிகவும் பயந்துபோய், பரிதாபத்துக்குரியவளாக இருந்தாள். அவள் மூச்சுவிடுவது சீரற்றதாகவும், வேகமாகவும் இருந்தது. வேதனையான, பரிதாபத்திற்குரிய அவளுடைய வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்தது.
“நான் ஒளியைக் காண்கிறேன். . . . . மிதப்பதுபோல் உணர்கிறேன். மிகவும் வெளிச்சமாக உள்ளது. ஆகா! அற்புதம்!”
“இன்னும் வலி இருக்கிறதா?”
“இல்லை.” சற்றுநேர மௌனம். நான் வழிகாட்டி ஆவிகளுக்காகக் காத்திருந்தேன். ஆனால் அவள் வேறு இடத்திற்கு சென்றுவிட்டாள். “நான் வேகமாக விழுந்துகொண்டிருக்கிறேன். வேரொரு சரீரத்திற்கு சென்றுகொண்டிருக்கிறேன்.” என்னைப்போல் அவளும் வியப்புக்குள்ளானாள்.
தொடரும்…