Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » மர்ம சந்நியாசி – 8

மர்ம சந்நியாசி – 8

நீதிபதி ஒரு விஷயத்தில் மிகவும் உறுதியாக இருந்தார். சுரேந்திர சக்ரவர்த்தி அளித்த அறிக்கையை அப்படியே ஏற்றுக் கொள்ளமுடியாது. தரம் தாஸ், சுந்தர் தாஸ் போன்ற பெயர்களை வட நாட்டில் பலரும் வைத்திருக்கிறார்கள். இவைகளெல்லாம் பொதுப் பெயர்கள். சுரேந்திர சக்ரவர்த்தியின் அறிக்கையில் கண்டுள்ள விவரங்கள் உண்மையானதுதான் என்பதை நிரூபிக்க தனிப்பட்ட சாட்சிகளை விசாரித்தாக வேண்டும் என்று சொல்லிவிட்டார். டாக்கா வரை வந்து சாட்சியம் சொல்லமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை, சாட்சிகள் லாகூரிலேயே விசாரணை கமிஷன் முன்னர் ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம் என்றார்.

சந்நியாசி ஹிந்துஸ்தானிதான் என்பதை நிரூபிப்பதற்காக, முதல் சாட்சியாக தரம் தாஸ் என்று ஒருவரைப் பிரதிவாதியினர் டாக்கா நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அவர் சாட்சிக் கூண்டில் ஏறி “நான் தான் தரம் தாஸ். நான் தான் கவுரவ மாஜிஸ்திரேட்டான ரகுபிர் சிங்கிடம் நான்கு வருடங்கள் முன்னர் சாட்சியம் அளித்தேன். இந்த வழக்கில் வாதியாக இருப்பவர் வேறு யாரும் இல்லை. அவன் என்னுடைய சிஷ்யப் பிள்ளையாண்டான்தான். அவன் இதுவரைக்கும் டார்ஜிலிங் பக்கமே போனதில்லை” என்றார் அந்த சாட்சி. வாதியினுடைய உண்மையான பெயர் மால் சிங் என்றும், அவனுடைய சொந்த ஊர் பஞ்சாப் மாகாணத்தில் லாகூருக்கு அருகில் உள்ள அவுலா என்றும் கூறினார் தரம் தாஸ் என்ற பெயரில் சாட்சியம் அளித்த சாது.

தரம் தாஸ் என்று சொல்லிக்கொண்டு வந்த சாட்சியை சந்நியாசியின் வழக்கறிஞர் சாட்டர்ஜி குறுக்கு விசாரணை செய்தார். குறுக்கு விசாரணையில் அந்த சாட்சி இடக்கு மடக்காக பதில் சொல்லி மாட்டிக்கொண்டார்.

தரம் தாஸ் என்ற அந்த சாட்சி தனக்கு பஞ்சாபி அல்லது உருதுதான் தெரியும், ஹிந்தியும் வங்காள மொழியும் தெரியாது என்றார். வங்காளத்திலோ, ஹிந்தியிலோ தன்னிடம் கேள்வி கேட்டால், அதை பஞ்சாபி மொழியிலோ அல்லது உருது மொழியிலோ மொழிபெயர்ப்பு செய்து சொல்லவேண்டும் என்றார். ஆனால் கவுரவ மாஜிஸ்திரேட்டான ரகுபிர் சிங் முன்பு ஆஜரான தரம் தாஸ், தன்னுடைய சாட்சியத்தை ஹிந்தியில்தான் கொடுத்திருந்தார். மேலும் சுரேந்திர சக்ரவர்த்தி தன்னுடைய அறிக்கையில், தான் தரம் தாஸை சந்தித்தபோது இருவரும் ஹிந்தியிலும், வங்காள மொழியிலும் கலந்துரையாடினோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

விசாரணையின் போது தரம் தாஸ் என்ற சாட்சியிடம், நீதிமன்றத்தில் குறியீடு செய்யப்பட்ட ஆவணமான A-24 காட்டப்பட்டது. அந்த ஆவணம் சந்நியாசியின் புகைப்படம். அந்தப் புகைப்படத்தில் சந்நியாசி லுங்கி கட்டி அமர்ந்திருந்தார். புகைப்படத்தைப் பார்த்த சாட்சி தரம் தாஸ், இது என்னுடைய சிஷ்யனுடைய புகைப்படம் என்றார்.

ஆவணம் A-24 புகைப்படம் அசலானது இல்லை, அது ஒரு நகல். அசல் புகைப்படம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. அசல் எங்கே போனது என்ற கேள்விக்கு பிரதிவாதி தரப்பில் சரியாக பதிலளிக்க முடியவில்லை. அந்த புகைப்படத்தில் கவுரவ மாஜிஸ்திரேட்டான ரகுபிர் சிங்கின் கையெழுத்து எதுவும் இல்லை. மேலும் ஒரு புகைப்படத்தில் மால் சிங் என்று சொல்லப்படுபவரின் கையில் பச்சை குத்தப்பட்டிருந்தது. ஆனால் தரம் தாஸ் என்ற சாட்சி விசாரணையின் போது, தன்னுடைய சிஷ்யனின் கையில் பச்சை எதுவும் குத்தப்பட்டிருக்காது என்று அப்பட்டமாகத் தெரிவித்தார். மேலும் குறுக்கு விசாரணை செய்ததில் தரம் தாஸ் என்ற அந்த சாட்சி, தனக்கு கவுரவ மாஜிஸ்திரேட்டின் முன் காட்டப்பட்ட புகைப்படமான ஆவணம் A1 சந்நியாசியியுடையது இல்லை என்று ஒப்புக் கொண்டார்.

உண்மையில் அந்தப் புகைப்படத்தில் இருந்தது சந்நியாசி இல்லை. அது வேறு ஒருவரின் புகைப்படம். குட்டு வெளிப்பட்டுவிடும் என்று ஆவணம் A1 நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. குறிப்பிட்ட அந்த ஆவணம் எங்கே என்று நீதிபதி கேட்டதற்கு, பிரதிவாதியின் வழக்கறிஞர் சவுத்ரி தனக்கு அந்தப் புகைப்படம் எங்கே இருக்கிறது என்று தெரியாது என்று கூறினார். காவல்துறை ஆய்வாளரான மம்தாஜூதின், வடநாட்டில் சந்நியாசியைப் பற்றிய தன்னுடைய விசாரணையை முடித்துவிட்டு விசாரணைக்கு உண்டான ஆவணங்களை டாக்கா கலெக்டரிடம் பத்திரமாக வைத்திருக்குமாறு ஒரு வாக்குமூலம் எழுதிக் கொடுத்து ஒப்படைத்துவிட்டார். காவல்துறை ஆய்வாளர் கலெக்டருக்கு எழுதிய வாக்கு மூலம் இருக்கிறது. ஆனால் அவர் கலெக்டரிடம் ஒப்படைத்த புகைப்படம் இல்லை.

பிபாவதி தரப்பில் ஒரு புகைப்படத்துக்கு பதிலாக இன்னொரு புகைப்படத்தை மாற்றி வைத்து நீதிமன்றத்தை ஏமாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள். தரம் தாஸ் என்று தன்னை சொல்லிக் கொள்பவர் கவுரவ மாஜிஸ்திரேட் ரகுபிர் சிங் முன்னர் சாட்சியம் அளிக்கவில்லை. தரம் தாஸ் என்று சொல்லிக் கொள்பவர் வாதியின் (சந்நியாசின்) உண்மையான குருவும் இல்லை.

பிபாவதியின் தரப்பில் மேலும் பத்து பேர் கமிஷன் முன் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அவர்கள் சொன்ன சாட்சியத்தில் வேறுபாடுகள் இருப்பினும், அவர்கள் பொதுவாகக் கூறியது என்னவென்றால், இரண்டு வருடங்களுக்கு முன்னர் லாகூரில் ஒரு குருத்வாராவில் அர்ஜுன் சிங் என்பவர் ஒரு சந்நியாசியின் புகைப்படங்களை எங்களிடம் காட்டினார். அந்தப் புகைப்படங்கள் மால் சிங் என்பவருடையது. ஒரு படத்தில் சந்நியாசி லுங்கி அணிந்து கொண்டு அமர்ந்து கொண்டிருப்பதாக இருந்தது. மற்ற புகைப்படங்களில் என்ன இருக்கிறது என்பதே தெரியவில்லை. காரணம் ஏனைய புகைப்படங்கள் சேதம் அடைந்திருந்தது. ஆனால் சாட்சியம் அளித்த பத்து நபர்களும் இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் மால் சிங்கேதான் என்று தெரிவித்தனர்.

ஆனால் மால் சிங் என்று சொல்லப்படுபவரின் உறவினர்கள் யாரும் கமிஷன் முன் ஆஜராகி, மால் சிங் எங்களுடைய சொந்தக்காரன் தான் என்று சொல்ல முன்வரவில்லை. மேலும் கவுரவ மாஜிஸ்திரேட் ரகுபிர் சிங் முன்னர் சாட்சியம் அளித்த எவரும் விசாரணைக் கமிஷன் முன்னர் ஆஜராகி சாட்சியம் அளிக்கவில்லை.

லாகூர் சாட்சிகள் மால் சிங்கினுடைய உடல் நிறம், முடியின் நிறம், மீசையின் நிறம், நீண்ட தாடி, கருமையான கண்கள், தடித்த மூக்கு என்று அனைத்தையும் பற்றிக் கூறினர். மால் சிங்கின் தந்தையின் முடியைப் போன்றே மால் சிங்கின் முடியும் கரு கரு என்று இருக்கும் என்று தெரிவித்தனர். ஆனால் அவர் தந்தையார் யார் என்ற விவரத்தை சொல்லவில்லை. கவுரவ மாஜிஸ்திரேட் முன், மால் சிங்கின் உறவினர்கள் சிலரின் விவரங்களைப் பற்றி சாட்சிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் லாகூர் சாட்சிகள் அந்த உறவினர்களைப் பற்றி எந்த விவரத்தையும் சொல்லவில்லை.

லாகூர் சாட்சிகள் அனைவருமே பொய் சாட்சிகள். அவர்கள் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த விவசாயிகள். அவர்களுக்கும் மால் சிங்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்களிடம் சந்நியாசியின் புகைப்படத்தைக் காட்டி, அவரைப் பற்றிய விவரங்களைச் சொல்லிக்கொடுத்து, பிபாவதியின் சார்பில் கமிஷன் முன்னர் சாட்சியம் சொல்ல அழைத்துவரப்பட்டிருந்தார்கள்.

நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் சுரேந்திர சக்ரவர்த்தியின் அறிக்கை ஒரு மோசடி. சுரேந்திர சக்ரவர்த்தியும், காவல் துறை ஆய்வாளரான மம்தாஜுதினும் சாது தரம் தாஸை பார்க்கவே இல்லை. கலெக்டர் லின்ஸ்டே இவர்கள் இருவருக்கும் இட்ட கட்டளை, எப்பாடுபட்டாவது அந்த சாதுவை கண்டுபிடித்தாகவேண்டும். ஆனால் சுரேந்திர சக்ரவர்த்தியும், மம்தாஜுதினும் அர்ஜுன் சிங் என்பவனின் துணையுடன் ஒரு சாதுவை தயார் செய்து, அவர்தான் தரம் தாஸ் என்று அவரிடமே சாட்சியம் பெற்றனர். பணத்துக்காக யாரோ சிலருடைய தூண்டுதலின் பேரில், சுரேந்திர சக்ரவர்த்தியும் மம்தாஜுதினும் போலியான சாட்சிகளைத் தயார் செய்திருக்கிறார்கள். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், கவுரவ மாஜிஸ்திரேட்டான ரகுபிர் சிங்கிடம் தரம் தாஸ் என்று சாட்சியம் அளித்த நபரைக் கூட இவர்கள் பார்க்கவில்லை. ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் சுரேந்திர சக்ரவர்த்தியும் மம்தாஜுதினும் தங்களுடைய கடமையைச் சரிவரச் செய்யாமல், டாக்கா திரும்பிவிட்டனர். இவர்களுடைய செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. மிகவும் பொறுப்பற்றத்தனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் வெளியிட்டார்.

நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் ஒரு அடிப்படை உண்மையைத் தெரிவித்தார். சந்நியாசி டாக்கா வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் அவர் யார் என்று பிபாவதியால் கண்டுபிடிக்க முடியவில்லை. பிபாவதிக்கு ஜமீனின் வசதியும், ஆள் பலமும் இருக்கிறது. போதாத குறைக்கு ஆங்கிலேயே அரசாங்கத்தின் ஆதரவு வேறு இருக்கிறது. இவ்வளவு இருந்தும் பிபாவதியால் சந்நியாசி யார் என்று அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் சந்நியாசி எங்கேயும் மறைந்தோ அல்லது ஒளிந்துகொண்டோ இருக்கவில்லை. அவர் சர்வ சுதந்திரமாக கல்கத்தாவையும், டாக்காவையும் சுற்றி வந்துகொண்டிருக்கிறார்.

சரி, சந்நியாசி ஹிந்துஸ்தானி இல்லை என்றால் அவர் வங்காளியா?

சந்நியாசி யாரும் எளிதில் புரிந்து கொள்ளமுடியாத ஹிந்தியில் பேசுகிறார். அவர்  தாய்மொழி வங்காளம் இல்லை. இது பிரதிவாதிகளின் வாதம்.

சந்நியாசியின் கூற்று இது. “நான் 12 ஆண்டுகாலம் சாதுக்களுடன் வாழ்ந்து வந்தேன். எனக்கு நினைவு திரும்பும் வரை சாதுக்களுடன்தான் இருந்தேன். முழு நேரமும் அவர்களுடன்தான் சுற்றித்திரிந்து வந்தேன். ஒரு சந்நியாசியின் வாழ்க்கை மிகவும் கடினமானது. உடுத்த உடை கிடையாது. பிச்சை எடுத்துதான் உண்ண வேண்டும். சில சமயம் உணவு எதுவும் கிடைக்காமலும் போகும். படுக்க வசதியெல்லாம் கிடையாது. கட்டாந்தரையிலோ அல்லது மரத்தின் மீதோ படுத்துக்கொள்ளவேண்டும். வெறும் காலில் தான் காடு, மலையெல்லாம் கடக்க வேண்டும்.  12 வருடங்களாக, மற்ற சாதுக்கள் ஹிந்தியில் பேசிவருவதைத்தான் கேட்டு வந்தேன். அவர்களுடன் நான் தொடர்பு கொள்ளவேண்டும் என்றால் ஹிந்தியில் தான் பேசியாகவேண்டும். ஹிந்தி இல்லாமல் என் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாது என்னும் கட்டாயம். அதனால் அவர்களுடைய பாஷை, பேச்சு வழக்கு எல்லாம் தொற்றிக்கொண்டது. இது  தவிர்க்க இயலாதது. ”

மேஜோ குமார் சில சமயங்களில் ஹிந்தியில் பேசியிருந்தாலும், பொதுவாக அவர் எந்தக் கலப்பும் இல்லாத பாவாலி பிரதேச வங்காள மொழியில்தான் பேசுவார். அதாவது தமிழில் கோவைத் தமிழ், நெல்லைத் தமிழ், மதுரைத் தமிழ் என்று தமிழ்நாட்டிலேயே இடத்துக்கு இடம் பேச்சுத் தமிழ் மாறுபடுவது போல், வங்காளத்திலும் பிரதேச வாரியாக வங்காளமொழி பேச்சு வழக்கில் மாறுபட்டு காணப்படும். மேஜோ குமார் பாவல் ராஜ்ஜியத்தில் பிறந்து வளர்ந்து வந்ததால், அவர் பாவாலி பிரதேச வங்காள மொழியில்தான் பேசுவார். மேஜோ குமார் பாவாலி பிரதேச வங்காள மொழியில் பேசுவதை, வங்காள மொழி பேசுபவர்களாலேயே அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது என்று நீதிமன்றத்தில் சிலர் சாட்சியம் அளித்தனர்.

நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும் போதுகூட, சந்நியாசி வங்காளத்தையும் ஹிந்தியையும் கலந்தே பேசினார். சாட்சியம் அளிக்கும் போது அவர் பயன்படுத்திய சில வார்த்தைகள் பின்வருமாறு :

குயிலுக்கு ஹிந்தியில் தித்தர் என்று பெயர். வங்காள மொழியில் குயிலுக்கு தித்திர் என்று பெயர். அதுவே பாவாலி பிரதேச பாஷையில் குயிலை தித்தர் என்றுதான் குறிப்பிடுவார்கள்.

அதேபோல் கணக்கு என்ற சொல் ஹிந்தியில் ஜிண்டே என்று குறிப்பிடப்படும். பாவாலி பிரதேச பாஷையிலும் கணக்கு என்ற சொல் ஜிண்டே என்ற வார்த்தையால் தான் அறியப்படுகிறது.

கல்கத்தாவை ஹிந்தியில் கல்கட்டா என்று சொல்வார்கள். அதே போல் பாவாலி பிரதேச பாஷையில் அச்சிடப்பட்ட ஒரு துண்டு பிரசுரத்திலும் கல்கட்டா என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே ஒருவர் பேசும் பாஷையை வைத்து அவருடைய தாய் மொழி என்னவென்று முடிவு செய்வது தவறு.

ஒருவர் 12 ஆண்டு காலம் தொடர்ந்து ஹிந்தியில் பேசிவிட்டு, திடீரென்று வங்காளத்தில் பேசினால் அவர் ஹிந்தியை முழுவதுமாக புறக்கணித்து விடுவார் என்று சொல்வதற்கில்லை. சந்நியாசி தன்னுடைய சாட்சியத்தில் பிஸ்கட், பாடிகார்ட், ஃபாமிலி, ஜாக்கி போன்ற சுமார் 50 ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தி இருக்கிறார். அதனால் அவர் ஆங்கிலேயர் என்று முடிவுக்கு வரமுடியுமா என்ற கேள்வியை நீதிபதி எழுப்பினார். சந்நியாசி ராஜ்பாரியில் தான் யார் என்று அனைவரிடமும் வெளிபடுத்தியவுடன் ஹிந்தி பேசுவதை நிறுத்திவிட்டார் என்று பிரதிவாதி தரப்பில் உள்நோக்கம் கற்பிப்பது ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்று என்று நீதிபதி திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.

பிபாவதியின் வழக்கறிஞரான சவுத்ரி, சந்நியாசி பேசும் வங்காள மொழி ஏன் தெளிவாக இல்லை என்ற கேள்வியை எழுப்பினார். அவருடைய கூற்று சந்நியாசியின் தாய்மொழி வங்காள மொழி இல்லை, அதனால்தான் அவரால் வங்காள மொழியைத் தெளிவாகப் பேச முடியவில்லை என்பதாகும்.

ஆனால் அதற்கு சந்நியாசியின் வழக்கறிஞரான சாட்டர்ஜி, சந்நியாசி எந்த மொழி பேசினாலும் அப்படித்தான் இருக்கும். சிப்பிலிஸ் நோய் தாக்கத்தின் காரணமாக நாக்கு பாதிப்பு அடைந்திருக்கிறது. அதனால் பேசும்போது நாக்கு குளறும். அதன் காரணமாக சந்நியாசி எந்த வார்த்தைகள் பேசினாலும் அது தெளிவாக இருக்காது. அவர் பேசுவதைக் கேட்பவர்களுக்கு அவர் என்ன பேசினார் என்று எளிதில் புரிந்து கொள்ளமுடியாது. இப்பொழுது மட்டுமல்ல, சந்நியாசி டாக்காவுக்கு திரும்பி வந்த காலந்தொட்டே அவர் பேசிய வங்காள மொழி ஹிந்தி ஒலியின் தன்மையைக் கொண்டதாகவே இருக்கிறது. அதற்கு ஆதாரமாக பல சாட்சிகள் நீதிமன்றத்துக்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். 1921ம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி ஜெய்தேபூர் காவல்துறையின் நாட்குறிப்பில்கூட, சந்நியாசியைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் என்றும், மக்கள் அவரை இரண்டாவது குமாராக கருதுகிறார்கள் என்றும், சந்நியாசி மக்களுடன் வங்காள மொழியில் பேசி வருகிறார் என்றும் குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது என்ற விவரத்தை வழக்கறிஞர் சாட்டர்ஜி மேற்கோளாகக் காட்டினார்.

ஒருவருக்கு பல பாஷைகள் தெரிந்திருக்கும். அதனால் அவருடைய தாய் மொழி என்னவென்று முடிவு செய்வது கடினமாக இருக்கும். ஆனால் ஒருவருக்குப் பல மொழிகள் தெரிந்திருந்தாலும் அவருடைய பூர்வீக அடையாளம் என்று ஒன்று இருக்கும். அவருடைய புத்தி, சிந்தனை அந்தப் பூர்வீக அடையாளத்தைச் சார்ந்துதான் இருக்கும். அது அவர் பேசும்போது வெளிப்படும். அதை வைத்து அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று எளிதில் சொல்லிவிடமுடியும். இந்த அடிப்படையில் பிபாவதியின் வழக்கறிஞர் செயல்பட ஆரம்பித்தார். சன்னியாசி எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று நிரூபிக்கும் பொருட்டு, சவுத்ரி சந்நியாசியைச் சில கேள்விகள் கேட்டு குறுக்கு விசாரணை செய்தார். சவுத்ரி சிலேடையாகப் பேசி சந்நியாசியை மடக்கலாம் என்று பார்த்தார். ஏனென்றால் சவுத்ரியின் கணிப்பின் படி, வெளித்தோற்றத்தில்தான் அவர் ஒரு வங்காளி. ஆனால் அவருக்கு ஒரு வங்காளிக்கே உண்டான எண்ணமோ சிந்தனையோ இல்லை என்பதுதான்.

சவுத்ரி: சுவேத்தபர்னா என்றால் என்ன?

சந்நியாசி: வெள்ளை நிறம்

சவுத்ரி: ரக்தபர்னா?

சந்நியாசி: சிவப்பு

சவுத்ரி: பயஞ்சபர்னா?

சந்நியாசி: கத்தரிக்காயின் நிறம்

சந்நியாசி சொன்ன முதல் இரண்டு பதில்களும் சரி. பர்னா என்றால் வங்காள மொழியில் வர்ணம். பயஞ்சபர்னா என்றால் அது ஒரு எழுத்தைக் குறிப்பதாகும். ஆனால் சந்நியாசி குழம்பிவிட்டார். தொடர்ந்து வர்ணங்களைப் பற்றியே கேட்டு வந்ததால் சந்நியாசி மூன்றாவது கேள்விக்கும் வர்ணம் சம்பந்தமான பதிலைக் கூறி தவறு செய்துவிட்டார். உடனே சவுத்ரி, பயஞ்சான் என்றால் பஞ்சாபி மொழியில் கத்தரிக்காய் என்று அர்த்தம். சந்நியாசி ஒரு பஞ்சாபி, அதனால்தான் அவர் அந்த பதிலை தெரிவித்திருக்கிறார். அவர் வங்காளியாக இருந்திருந்தால் சரியான பதிலைக் கொடுத்திருப்பார் என்று வாதிட்டார். மேலே கொடுக்கப்பட்ட கேள்வி பதில், ஒரு உதாரணம் தான். சவுத்ரி சந்நியாசியைப் பல கேள்விகள் கேட்டு மடக்கப் பார்த்தார்.

ஆனால் நீதிபதி இதை ஏற்றுக்கொள்ளவில்லை. “படிப்பறிவில்லாத ஒருவரை ஒரே மாதிரியாக கேள்வியைக் கேட்டு வந்தால் அவர் அது தொடர்பான பதில்களைத்தான் தருவார். அதை வைத்துக்கொண்டு அவர் இந்த இனத்தவர், இந்த மொழி பேசுபவர் என்று முடிவு செய்துவிட முடியாது. சந்நியாசி ஹிந்துஸ்தானியாக இருந்தால், அதை வேறுவிதத்தில் நிரூபித்திருக்கலாம். ஆனால் அதை செய்வதை விட்டு விட்டு தேவையற்ற கேள்விகளைக் கேட்டு சவுத்ரி நேரத்தை வீணடித்து விட்டார். ஒருவர் உண்மையாகவே ஹிந்துஸ்தானியாக இருந்தால் அவர் எத்தனை ஆயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் அவருடைய அடிப்படை எண்ணத்தை, சிந்தனையை, குணாதிசயத்தை மாற்ற முடியாது. அதை வெளிக்கொணர்வது என்பது பெரிய கஷ்டமான விவகாரம் ஒன்றும் கிடையாது. அதுவும் சந்நியாசி போன்ற படிப்பறிவில்லாத நபரிடம்.”

சவுத்ரி சந்நியாசியை ஒரு ஹிந்துஸ்தானி என்று நிரூபிக்கக் கையாண்ட ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

சந்நியாசி தொடுத்த வழக்கில் சாட்சி விசாரணை, விவாதம் எல்லாம் முடிந்தது. வழக்கு விசாரணை மூன்று ஆண்டுகள் நடைபெற்றது. மொத்தமாக சுமார் 1548 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 2000 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டன. 21 வயது முதற்கொண்டு 100 வயது நிரம்பியவர்கள் வரை சாட்சியமளித்தனர். சாட்சியமளித்தவர்களில் இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், நாக சன்னியாசிகள், திபெத்தியர்கள், ஆங்கிலேயர்கள் என்று பலரும் அடக்கம். வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், பண்டிதர்கள், புகைப்படக்காரர்கள், சிற்பக் கலைஞர்கள், ஜமீன்தார்கள், விவசாயிகள், யானைப் பாகன்கள், வண்டி இழுப்பவர்கள், விலை மாதர்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் சன்னியாசி வழக்கில் சாட்சியம் அளித்திருந்தனர். பதிவு செய்யப்பட்ட சாட்சியங்கள் மட்டும் 26 புத்தகங்களாக தொகுக்கப்பட்டன.

டாக்கா மாவட்ட நீதிபதியான பன்னாலால் பாசு, தான் நடத்திய வழக்கு விசாரணையின் போது தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் பரிசீலனை செய்தார். 26 புத்தகங்களில் தொகுக்கப்பட்ட சாட்சியங்களையும் படித்தார். பின்னர் சுமார் 600 பக்கங்கள் கொண்ட தன்னுடைய தீர்ப்பை தயார் செய்தார். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி 1936ம் வருடம்.

இந்தத் தீர்ப்புக்காக டாக்கா, கல்கத்தா மட்டுமல்ல, வங்கதேசம் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு உட்பட்ட அனைத்து பிரதேசங்களுமே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தன. இம்மாதிரி ஒரு வழக்கு இதுவரைக்கும் நடந்ததேயில்லை. இந்த வழக்கில் நீதிபதி என்ன தீர்ப்பு வழங்கப்போகிறாரோ என்று இருதரப்பினரும், அவர்களைச் சார்ந்தவர்களும் கையைப் பிசைந்து கொண்டு காத்திருந்தனர்.

தீர்ப்பு அளிக்கப்பட்டது.

“நான் வழக்கில் கொடுக்கப்பட்ட அனைத்து சாட்சியங்களையும் மிகுந்த கவனத்துடன் அலசினேன். இரு தரப்பு வழக்கறிஞர்களும் வழக்கு தொடர்பான எந்த ஒரு விஷயத்தையும் விட்டு வைக்கவில்லை. இந்த வழக்கில் நான் வழங்கும் தீர்ப்பின் தாக்கம் அளப்பரியதாக இருக்கும் என்பதை நான் உணர்வேன். சாதாரண மனிதர்கள் தொடங்கி மெத்தப் படித்த மேதாவிகள் வரை அனைவரும் இந்த வழக்கில் சாட்சியம் அளித்திருக்கிறார்கள். இவர் தான் அவர் என்று முடிவு செய்வது அவ்வளவு எளிமையான செயல் இல்லை. ஆனால் எது எப்படியோ ஒரு விஷயத்தை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஒரு மனிதனின் உடம்பில் இருக்கும் அனைத்து அங்க அடையாளங்களும் ஒரு சேர இன்னொரு மனிதனிடம் காணமுடியாது.

“இந்த வழக்கே சந்நியாசியின் சதி என்று எதிர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் சதி எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இந்த வழக்கு இவ்வளவு தீவிரமாக நடத்தப்பட்டதற்கு காரணம் ஒருவர் தான். அவர் வேறு யாரும் இல்லை. பிபாவதியின் சகோதரனான சத்திய பாபு. இந்த வழக்கை எப்படியாவது ஜெயிக்கவேண்டும் என்று சத்திய பாபு பல தகிடுதத்தங்களைச் செய்திருக்கிறார். அவருக்குத் துணையாக ஆங்கில அரசாங்கம் செயல்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் மக்களுக்கே இந்த வழக்கு சந்நியாசிக்கும் பிபாவதிக்கும் இடையே நடக்கவில்லை, ஆங்கிலேய அரசாங்கத்துக்கும் சந்நியாசிக்கும் இடையே நடக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்தத் தவறவில்லை.

“இந்த வழக்கின் முடிவால், பிபாவதிக்கு எந்த நன்மையோ அல்லது பாதிப்போ ஏற்படப்போவதில்லை. பிபாவதி ஒரு கைப்பாவை. இந்த வழக்கின் நல்லது கெட்டது அனைத்தும் சத்திய பாபுவைத்தான் பாதிக்கும். சத்திய பாபு என்ன சொல்கிறானோ அதன்படிதான் நடந்து கொண்டிருக்கிறாள் பிபாவதி. பிபாவதி மேஜோ குமாரின் மனைவி என்று அறியப்பட்டதை விட, அவள் சத்திய பாபுவின் சகோதரி என்பது மக்களுக்கு பரிட்சயம். உண்மையை மறைக்க சத்திய பாபு பலவாறாகப் போராடினான். இருந்தும் என்ன பயன்? உண்மையை யாராலும் மறைக்க முடியாது. சாட்சிகளின் அடிப்படையில் பார்க்கும்பொழுது தெள்ளத் தெளிவாக தெரிவது, சந்நியாசிதான் மேஜோ குமார், பாவல் ராஜ்ஜியத்தின் இரண்டாவது குமாரான ராமேந்திர நாராயண் ராய்”.

இப்படி நீதிபதி சொன்னது தான் தாமதம், நீதிமன்றத்தில் கூடி இருந்த கூட்டம் உணர்ச்சி வயப்பட்டது. அதுவரைக்கும் குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு நீதிமன்றத்தில் அமைதிகாத்த கூட்டம், சந்நியாசி தான் மேஜோ குமார் என்று அறிவிக்கப்பட்டவுடன் சந்தோஷத்தில் கத்த ஆரம்பித்துவிட்டது. நீதிமன்றத்தில் உள்ளே நுழைய முடியாதபடி இருந்த கூட்டத்தினர் ஒவ்வொருவர் முகத்திலும் சந்தோஷம் கரை புரண்டோடியது. நீதிமன்றத்துக்கு வெளியே நின்ற கூட்டத்தினருக்கு செய்தி கிடைத்தவுடன் பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்துவிட்டன. தீர்ப்பைக் கேட்க வந்த பெருந்திரளான கூட்டத்தினர் ‘ராமேந்திரா வாழ்க’ என்று கோஷம் போட ஆரம்பித்து விட்டனர்.

இந்த தீர்ப்பைக் கேட்ட மாத்திரத்தில் பிபாவதிக்கு மயக்கமே வந்துவிட்டது. சத்திய பாபுவுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் முகத்தில் ஈயாடவில்லை. பிபாவதி தரப்பினரை நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே கூட்டிச் சென்று காரில் ஏற்றுவதற்குள், காவல் பாதுகாப்பு வழங்கியவர்களுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

நீதிபதி பன்னாலால் எழுதி வழங்கிய தீர்ப்பை படித்தவர்கள், அதை வெகுவாகப் பாராட்டினர். அதில் சட்ட ரீதியாகவோ அல்லது சம்பவ ரீதியாகவோ ஒரு தவறைக் கூட சுட்டிக்காட்ட முடியவில்லை என்று பலர் புகழ்ந்திருக்கிறார்கள். நீதிபதி பன்னாலால் பாசு தன்னுடைய தீர்ப்பை செம்மையாகவும், மிகவும் கவனத்துடனும், தெளிவாகவும் எழுதியிருக்கிறார்.

இவ்வளவு கடினமான வழக்கின் விசாரணையை நடத்தி, அனைவரும் பாராட்டும் வகையில் தீர்ப்பளித்த நீதிபதி பன்னாலால் பாசுவைப் பற்றி நாம் கண்டிப்பாக தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.

1887ம் ஆண்டு பன்னாலால் பாசு கல்கத்தாவில் பிறந்தார். அவருடைய தந்தையார் பெயர் தாக்குர்தாஸ் போஸ். பள்ளிக்கூடத்திலிருந்தே அவர் சிறந்த மாணவனாக திகழ்ந்திருக்கிறார். கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியமும் தத்துவமும் பயின்றார். இவ்விரு துறைகளிலும், பன்னாலால் பாசு முதல் வகுப்பில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். ஆங்கில இலக்கியம், தத்துவத்துக்கு அடுத்ததாக பாசு வங்க இலக்கியம் மற்றும் சரித்திரம் பயின்றிருக்கிறார். சாஸ்திரிய சங்கீதமும் பயின்றார். பின்னர் பன்னாலால் பாசு கல்கத்தாவில் உள்ள புனித பால் கல்லூரியிலும், டில்லியில் உள்ள புனித ஸ்டீபன் கல்லூரியிலும் விரிவுரையாளராக பணியாற்றி இருக்கிறார். 1910ம் ஆண்டு வங்காள நீதித் துறையில் சேர்ந்து நீதிபதியாக பணியாற்றத் தொடங்கியிருக்கிறார். பாவல் சந்நியாசி வழக்கில் தீர்ப்பளித்த பிறகு, பன்னாலால் பாசு நீதித் துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 49. அந்த வயதில் அவர் டாக்கா போன்ற ஒரு முதன்மையான மாவட்ட நீதிமன்றத்தில் அமர்வு நீதிபதியாக செயல் புரிந்திருக்கிறார் என்றால், அவர் வெகு விரைவிலேயே கல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்று உயர்நீதிமன்ற நீதிபதியாகி இருக்கக்கூடும். ஆனால் பன்னாலால் பாசு அதற்கு விரும்பவில்லை. இந்தியாவில் மட்டும் இல்லை, இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளிலும் அவருக்கு நல்ல பெயர் இருந்தது. பாவல் சந்நியாசி வழக்கை சிறந்த முறையில் கையாண்டதால் அனைவரின் பாராட்டையும் பெற்றார். இந்த வழக்கில் பன்னாலால் பாசு வழங்கிய தீர்ப்பு இந்திய ஆவணக் காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.

பாவல் சந்நியாசி வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த சமயத்தில் நீதிபதி பன்னாலால் பாசு ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். அந்த வீட்டுக்கு தினமும் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்க வரும் ஒருவரிடம் அந்த வீட்டில் இருந்த ஒரு பெண்மணி, ஏம்பா சந்நியாசி வழக்கைப் பற்றி ஊரெல்லாம் பேச்சு, நீ என்ன நினைக்கிறாய்? அந்த சந்நியாசி உண்மையாகவே ராஜ்குமாரா அல்லது போலியா என்று பேச்சு வாக்கில் விசாரித்தார். அதற்கு அந்தக் காய்கறி வியாபாரி, அம்மா அந்த சந்நியாசி தான் உண்மையான குமார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த ஜட்ஜு இருக்கான் பாருங்க, அவன் தான் அதைச் சொல்லி இந்த வழக்கை சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்றார்.

காய்கறிக்காரர் சொல்வதைக் கேட்டு சிரித்துக் கொண்ட அந்தப் பெண்மனி ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டார். பாவம் அந்த காய்கறிக்காரருக்குத் தெரியாது, அந்தப் பெண்மணிதான் நீதிபதி பன்னாலால் பாசுவின் மனைவி என்று.

பாவல் சந்நியாசி வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு எழுதுவதற்கு நீதிபதி பன்னாலால் பாசுவுக்கு மூன்று மாதங்கள்தான் தேவைப்பட்டன. சிக்கலான ஒரு பெரிய வழக்கில், வசதிகள் குறைந்த அக்காலத்தில் இவ்வளவு சீக்கிரம் தீர்ப்பு வெளியிட்டது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். இன்றைய நீதிமன்றங்களிலெல்லாம் சாதாரண வழக்குகளில்கூட தீர்ப்பு வழங்குவதற்கு பல மாத காலம் எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

பன்னாலால் பாசு தினமும் காலையில் சுறுசுறுப்பான நடைப்பயணம் மேற்கொள்வார். பின்னர் காலை உணவை முடித்துவிட்டு மாலை வரை தீர்ப்பு எழுதுவதில் தன்னுடைய நேரத்தை செலவிடுவார். தன்னுடைய தீர்ப்பை தன் கைப்பட எழுதுவார். பின்னர் அவரே அதை தட்டச்சு இயந்திரத்தில் டைப் செய்வார். அரசாங்கம் அவருக்கு இரண்டு டைப்பிஸ்ட்/ஸ்டெனோ அளித்திருந்த போதும் அவர்களுடைய சேவையை அவர் உபயோகிக்கவில்லை. காரணம், விசாரித்த வழக்கு அப்படிப்பட்டது. தன்னுடைய தீர்ப்பு விவரங்கள் தன்னால் வெளியிடப்படும் வரை யாருக்கும் தெரியக்கூடாது என்று மிகவும் கவனமாக பார்த்துக்கொண்டார். தன்னுடைய தீர்ப்பு மேல் முறையீட்டுக்கு ஆட்படும் என்று உணர்ந்த நீதிபதி பன்னாலால் பாசு, தன்னுடைய தீர்ப்பை தெளிவாகவும், சுருக்கமாகவும், சரியாகவும் இருக்கும்படி மிகவும் கவனத்துடன் எழுதினார். அவர் தீர்ப்பில் இடம்பெற்ற ஒவ்வொரு வார்த்தையும், வரியும், பத்தியும் முக்கியமானவை.

மாலையில் தன்னுடைய வேலையை முடித்துக்கொண்டு தன்னுடைய படிக்கும் அறையை பூட்டுபோட்டு பூட்டி விட்டு உணவருந்தச் சென்றுவிடுவார். இரவில் தூங்கும் போது படிப்பறையின் சாவியை தன் தலைமாட்டிற்கு கீழ் உள்ள தலையணையின் அடியில் வைத்துவிட்டு தூங்கச் செல்வார்.

அவருடைய படிப்பறையின் சுவர்களில் வழக்கு சம்மந்தமான ஆவணங்களும், புகைப்படங்களும், நாளேடுகளில் வந்த செய்திகளும் மாட்டப்பட்டிருக்கும்.

நீதிபதி பன்னாலால் பாசு, எப்படி ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தாரோ அதே போல் தாய் மொழியான வங்காளத்திலும் புலமை பெற்றிருந்தார். ரபிந்தர நாத் தாகூர் வங்காளத்தில் இயற்றிய ‘குதித்த பாஷன்’ என்னும் சிறுகதையை பன்னாலால் பாசு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். அந்த மொழியாக்கத்தைப் படிக்க நேர்ந்த ரபிந்தரநாத் தாகூர், பன்னாலால் பாசுவை வெகுவாகப் பாராட்டினார். மேலும் தாகூர், “பன்னாலால் பாசு, என்னுடைய ஏனைய சிறு கதைகளையும் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தார் என்றால் என்னைவிட பாக்கியசாலி யாரும் இந்த உலகத்தில் இருக்கமுடியாது” என்று தெரிவித்தார்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top