பெரும் பாறைக்கற்கள் தன் மீது பறந்து வருவதைக் கண்டு மிரண்டு கிரானைட் குவாரி இருக்கும் திசையில் ஓடினான் ரெட்டி. செல்வியின் மீது இருந்த ப்ரவீணா அதைக் கண்டு கெக்கலித்து சிரித்தாள். ஏய் ரெட்டி! என்னை எப்படி கதற கதற கற்பழித்து கொன்றாய்? உன் பணத்திமிரும் ஜாதி வெறியும் இப்போது எங்கு போயிற்று! முடிந்தால் உன்னை காப்பாற்றிக் கொள்! என்று கத்தினாள்.
ரெட்டியால் ஒன்றும் பேச முடியவில்லை! அவன் நிற்கும் போது மேலே பறந்து வந்த கற்கள் அவனை நிற்க விடாமல் துரத்தின. குவாரியினுள் ஓடினான்.
எவுருப்பா அதி ? பாம் பெட்டேஸ்தினாரு! தூரங்கா போ! என்று குவாரி ஆட்கள் கத்த கத்த அதை பொருட் படுத்தாமல் உள்ளே ஓடினான்.
அடுத்த சில நொடிகளில் டமால் என பெரும் வெடிச் சத்தம்! பெரும் பாறை ஒன்று அப்படியே வெடித்து ரெட்டியின் மீது விழ மண்டை பிளந்து உயிரை விட்டான் ரெட்டி.
இதைப் பார்த்துக் கொண்டு வெடிச்சிரிப்பு சிரித்த செல்வியும் அப்படியே மயங்கி விழுந்தாள்.
தூரத்தில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து முதலில் சுவாமிஜியும் பின்னர் வினோத் முகேஷ் இறங்கினர். வெடிச்சத்தம் கேட்பதை அறிந்து சற்று தள்ளியே காரை நிறுத்தியிருந்தார் சுவாமிஜி. ஒரு பதினைந்து நிமிட வெடி சத்த ஓயலுக்கு பிறகு குவாரியினுள் நுழைந்தனர்.
வாசலிலேயே மயங்கி கிடந்த செல்வியை பார்த்து செல்வி செல்வி! உனக்கு ஒண்ணும் ஆகலியே! கண்ணை திறந்து பாரும்மா! என்றான் வினோத்.
சுவாமிஜி தன் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து கொஞ்சம் தண்ணீரை செல்வியின் முகத்தில் தெளித்தார். தூங்கி விழித்தார்ப்போல முழித்துக் கொண்டாள் செல்வி.
வினோத் இது எந்த இடம்? நான் எப்படி இங்கு வந்தேன்? என்றாள் வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகி போல.
அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம் முதல்ல ரெட்டிகாரு என்ன ஆனாருன்னு பார்க்கலாம் என்று உள்ளே செல்லவும் கற்குவியலில் பிணமாக கிடந்தார் ரெட்டி காரு!
தன் வினை தன்னை சுட்டது! முணுமுணுத்த சுவாமிஜி திரும்பினார். அடுத்த சில நொடிகளில் அங்கு ஆம்புலன்ஸ் வந்தது. போலீஸ் வந்தது. சுவாமிஜியிடம் விசாரித்தது. அதற்கு சுவாமிஜி கூறினார். ரெட்டிகாருக்கு ஸ்வாதீனம் தப்பி போயிந்தி! அதே இக்கட ஒச்சி இப்படி ஆயி போயிந்தி! என தெலுங்கில் மாட்லாடினார்.
ரெட்டியின் பிரேதத்தை ஆம்புலன்சில் ஏற்றும் போது செல்வி கண்களை மூடிக் கொண்டாள்.
அடுத்த அரைமணியில் அனைவரும் குஹாத்ரி மலையில் இருந்தனர்.
செல்வியை பிடித்த ப்ரவீணா இப்போது இல்லை! செல்விக்கு இனி பயமில்லை! பர்பெக்டா இருக்கா என்று சுவாமிஜி கூறினார். மந்திர தாயத்தும் விபூதியும் தந்தார். ரவிக்கும் அப்படி ஒன்றை தந்தார். இனி கவலை இல்லை! சௌக்கியமா இருப்பா என்றார்.
சித்தப்பா எனக்கு எதுவும் கத்து தரமாட்டீங்களா? என்றான் முகேஷ்!
இது நொடியில கத்துக்கற விசயம் இல்லேப்பா! பல வருசங்கள் கடினமா முயற்சி பண்ணி கத்துக்க வேண்டிய விசயம். நீ இங்க வந்து தங்கி முறையா கத்துக்கறதுல எனக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை! உங்கப்பா அம்மா சம்மதம் வாங்கிட்டு வந்து கத்துக்கோ! தாரளமா சொல்லித்தறேன்! என்றார் சுவாமிஜி.
அனைவரும் விடைபெற்றனர். அடுத்த நாள் மாலை! ராகவா! ரொம்ப தேங்க்ஸ்டா! உன் ஒத்துழைப்பு இல்லேன்னா செல்விக்கு குணமாகி இருக்காது! நாங்க கிளம்பறோம்! என்று காரில் ஏறினான் வினோத்.
செல்வியும் ரொம்ப நன்றி அண்ணே! அவசியம் எங்க ஊருக்கு வாங்க என்றாள்.
கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்திட்டா போச்சி என்றான் ராகவன் செல்வியின் முகம் வெட்கத்தால் சிவந்தது.
பாருப்பா வெக்கத்தை! அதெப்படி எங்கிருந்து வருமோ தெரியலையே! கோபத்தையே பார்த்த செல்வி முகத்துல இப்ப வெட்கத்தை பார்க்கிறது சந்தோஷமா இருக்குது! நல்லபடியா போய் வாங்க! என்று விடை கொடுத்தான் ராகவன்.
அதே சமயம் பஞ்செட்டியில் முகேஷும் ரவியும் உரையாடிக் கொண்டிருந்தனர்.
டேய் ரவி! பேய் இல்லைன்னு சொல்லிகிட்டு இருந்த நீ பேய் வேசம் போட்டு என்னையே ஏமாத்திட்டே இல்லை!
ஏமாறச் சொன்னது நானா? என் மீது கோபம் ஏனோ? என ரவி நக்கலாய் பாட அவனை அடிக்க துரத்தினான் முகேஷ்.
வேணாம்டா! வேணாம்! நான் பேய் இல்லைன்னு சொன்னாலும் வேசம் போட்டாலும் நிஜத்தில எங்க அக்கா பேயா வந்துதானே பழிவாங்கிட்டா! ரொம்ப சந்தோஷமா இருக்குடா! என் அக்காவை பார்க்கனும் போல இருக்குடா! என்று ரவி சொல்ல
இதோ! உன் பக்கத்துலேயே இருக்கேன் ரவி! நீ அழாதே! தைரியமாய் இருக்கனும்! இனி எப்பவும் நான் உன் கூட இருப்பேன்!
முகேஷ் திடுமென பெண்குரலில் ப்ரவீணாவின் குரலில் பேச
ரவி, முகேஷ்! என்னடா ஆச்சு! ஏன் இப்படி பேசற?
நான் முகேஷ் இல்லை! ப்ரவீணா உங்க அக்கா! என்று முகேஷ் கூற அக்காவா? நீ நீதான் திருப்பதியிலேயே போயிட்டயே! ரவி நடுங்கியபடியே சொல்ல
முகேஷ் கண்ணடித்தபடி சொன்னான் பேய்கள் ஓய்வதில்லை!
முற்றும்.