ஆமாம்! ப்ரவீணா என்னோட மக மாதிரி! இங்கேயே வளந்தவ! அவ செத்து போனது இயற்கையா இருந்தா ஒண்ணும் செஞ்சிருக்க போறது இல்லே! அவளை அநியாயமா கொன்னு போட்டாங்க படுபாவிங்க! அவங்க சாகனும்! அதுதான் அவனுங்களுக்கான தண்டனை! அந்த தண்டணையை கொடுக்க வந்த ப்ரவிணாவை நான் தடுப்பதா? அதான் தடுக்கலை!
பாய் சொல்லிக்கொண்டே வர வினோத் மறித்தான். பாய் நீங்க தப்பு பண்ணறீங்க! தப்பு செஞ்சவங்களை தண்டிக்க நாம கடவுள் கிடையாது. அவங்களுக்கு தண்டனை தர கோர்ட் இருக்கு சட்டம் இருக்கு போலீஸ் இருக்கு! இப்படி ஒவ்வொருத்தரும் பழிவாங்க ஆரம்பிச்சிட்டா உலகமே சண்டை போட்டுகிட்டுதான் சாகனும்.
இதெல்லாம் பேச்சுக்கும் எழுத்துக்கும் வேணா சரிப்பட்டு வரலாம் தம்பி! உங்க சொந்தத்துல இப்படி ஏதாவது நடந்திருந்தா அப்ப நீங்களும் கொதிச்சு எழுந்திருப்பீங்க! ஆனா ப்ரவீணா யாரோ ஒருத்திதானே! அவளுக்கு நடந்த கொடுமை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?
பாய்! எல்லாம் ஒத்துக்கறேன்! ஆனா இப்படி பழிவாங்கற ப்ரவீணாவோட ஆத்மா செல்வியோட உடம்புல இல்லே இருக்கு! இதனால உடல் ரீதியா மட்டும் இல்ல மனரீதியாகவும் அவதானே பாதிக்கப்படறா?
வாஸ்தவம்தான்! ஆனா இதுவரைக்கும் செல்வியோட உடம்புக்கு ஒண்ணும் ஆகலை! இனியும் ஒண்ணும் ஆகாது.
எப்படி சொல்றீங்க!
ப்ரவீணா பழிவாங்க நினைச்சவங்க எல்லோருமே அவங்களாவே செத்து போயிட்டாங்க! இன்னும் ஒரே ஆள்தான் பாக்கி! அவனும் தானாவே செத்திருவான்.
அப்ப ஏன் ப்ரவீணா செல்வியோட உடம்புல இருக்கா?
அவ பழிவாங்க நினைச்சவங்களை பயமுறுத்த செல்வியோட உடம்பை ஒரு கருவியா பயன்படுத்திகிட்டா அவ்வளவுதான்.
அப்ப செல்வி யாரையும் கொலை பண்ணலை?
செல்வி மட்டும் இல்லே ப்ரவீணாவும் யாரையும் கொலை பண்ணலை!
இது எப்படி சாத்தியம்! கொலை பண்ணலை! ஆனா பழிவாங்கிட்டா! இது எப்படி?
நேர்ல போய் கத்தி எடுத்து குத்தியோ துப்பாக்கியாலே சுட்டாத்தான் கொலை! இல்ல அடிச்சு போடனும். இது வரைக்கும் செல்வி அதான் ப்ரவீணா சாகடிச்ச ஒருவர் மீதும் அவளோட சுண்டு விரல் கூட படலை!
அப்புறம் எப்படி அவங்க செத்தாங்க?
அது அவங்களாவே மிரண்டு போய் உயிரை விட்டிருக்காங்க!
அதான் எப்படி?
அநியாயமா கொலை பண்ணவங்களோட மனசாட்சின்னு ஒண்ணு இருக்கும் இல்லையா? அது அவங்களை உறுத்திகிட்டே இருந்திருக்கும் நாளைக்கு நமக்கும் இப்படித்தான் நடக்கும் என்று ஒரு பயம் இருந்து கிட்டு இருக்கும் அப்போ திடிர்னு ப்ரவீணா அவங்க முன்னாடி போய் நின்னா என்ன ஆகும்.
இவ நம்மளை பழி வாங்க வந்திருக்கான்னு பயந்துருவாங்க! இப்படியே தொடர்ந்து ஒரு ரெண்டு நாள் சிலருக்கு ஒரே நாள் இவளை பார்த்ததுமே அந்த அதிர்ச்சியிலேயே உயிரை விட்டிருவாங்க!
நம்ம உயிர் அவ்வளவு நுட்பமானதா?
ஆமாம், தம்பி! இந்த எண்சான் உடம்புக்கு சிரசே பிரதானம்! அங்க இருக்குற மூளையில் இருக்கிற சின்ன சின்ன பள்ளங்கள்தான் நம்ம நினைவுகளை புதுப்பிச்சு தருது. அதே சிரசு ப்ரதானமா இருந்தாலும் நம்ம ப்ராணன் இந்த ஓட்டை உடம்புல சுத்திகிட்டு இருக்கு. இது சீரா இருந்தாதான் மூளை சரியா இயங்க முடியும். நவ துவாரங்கள் நம்ம உடம்புல இருக்கு! இதுல எந்த வழியா வேணாலும் நம்ம உசிர் போகலாம்.
சிலருக்கு கண்வழியா போகும் சிலருக்கு வாய்வழியாக சிலருக்கு மூக்குவழியா இன்னும் சிலருக்கு பின்பக்கமா கூட உயிர் போகலாம். திடீர்னு ஒரு அதிர்ச்சி ஏற்படும் போது திடிர்னு நம்ம ப்ராணன் நம்ம கிட்ட இருந்து விடைபெற்று விடலாம்.
வினோத் அதிசயத்துடன் கேட்டுக் கொண்டிருக்க பாய் மேலும் சொன்னார். இன்னிக்கு நடந்த ஆக்ஸிடெண்ட் கூட இயற்கையா நடந்த மாதிரி இருக்கும். ஆனா இத நடத்தினது செல்விதான்!
அது எப்படி?
ஆள் அரவமற்ற சாலையில் வேகமா வந்திட்டிருக்கிற ஒரு வண்டி முன்னாலே இவ திடீர்னு போய் நின்னா என்ன ஆகும்.
யாரோ எதிரே வராங்கன்னு சடன் பிரேக் போட வேண்டியிருக்கும்.
போட முடியலைன்னா?
ஆள்மேல ஏற்ற வேண்டியதுதான்!
அப்ப ஆள் மறைஞ்சி எதிரே வேற ஒரு வண்டியோ மரமோ வந்தால் என்ன ஆகும்?
இவன் மோத வேண்டியதுதான்!
அப்படித்தான் இன்னிக்கு நடந்த ஆக்ஸிடெண்டும்! இன்னிக்கு ஆக்ஸிடெண்ட் ஆன லாரியோட டிரைவர் ஏற்கனவே ப்ரவீணாவை பழிவாங்கிய ஒருத்தன். அதனால காத்திருந்து அவனை பழிவாங்கிட்டா!
யாரு இந்த ப்ரவீணா? அப்படி அவளுக்கு என்னதான் நடந்தது ?
பாய் சொல்லத்தொடங்கினார்! அதைக் கேட்ட வினோத்தின் உதடுகளும் துடித்தன! அவன் கண்கள் கலங்கின! இவங்க சாக வேண்டியவங்கதான் பாய்! என்று முணுமுணுத்தான்!
தொடரும்….