இன்றைய தினத்தில் கிரிக்கெட் உலகில் நமது வீரர்கள் (ஆண்கள்) உலக சாதனையோ, உள்ளூர் சாதனையோ செய்தால் நாம் அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். அரசு முதல் விளம்பர நிறுவனங்கள் என எல்லா தரப்பினரும் பாராட்டும், பரிசும் அறிவிக்கிறார்கள்.
ஆனால் இந்திய கிரிக்கெட்டில் பெண்கள் அணி என ஒன்று இருப்பதே நம்மில் சிலர்? பலர் அறியாமல் இருப்போம். இந்திய பெண்கள் அணியில் ஒருவர் வரலாற்று சாதனை படைத்துள்ளார். என்னவென்று அறிந்து கொள்ள வாசியுங்கள்.
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வெஸ்ட்இண்டிஸ் அணிக் கெதிராக விளையாடி வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் போட்டியில் நமது பெண்கள் அணியின் திருஷ் காமினி முருகேசன் என்ற வீரர் ஓர் வரலாறு படைத்துள்ளார்.
துவக்க வீரராக களமிறங்கி நூறு ரன்கள் அடித்து பெண்கள் உலக கோப்பை இந்திய வரலாற்றில் சதம் அடித்த முதல் பெண் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இச் சாதனை படைத்த இவருக்கு நமது அரசும், இந்திய கிரிக்கெட் அமைப்பும் போதிய பாராட்டோ, பரிசோ அறிவிக்கவில்லை என ஒரு தின பத்திரிக்கையில் வாசித்த போது நாம் எந்த அளவு பெண்கள் கிரிக்கெட் மீது அக்கறை வைத்துள்ளோம் என்பது தெரிய வருகிறது.
திருஷ் காமினி பற்றி:
சென்னையில் வாழும் இவர், தனது ஒன்பது வயதில் கிரிக்கெட் விளையாட துவங்கினார். தனது 16 வயதில் ஆசிய கோப்பை (2006) தொடரில் அறிமுகமானார். பி.சி.சி.ஐ., சார்பில் வழங்கப்படும் சிறந்த “ஜூனியர்’ வீராங்கனை (2007-08), சிறந்த “சீனியர்’ வீராங்கனை (2009-10) விருதுகளை வென்றுள்ளார்.
உலக கோப்பை போட்டியில் முதல் சதம் அடித்து வரலாறு படைத்த திருஷ் காமினி அவர்களுக்கு நம்மால் இயன்ற அளவு பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவிப்போம் நண்பர்களே.