Home » சிறுகதைகள் » நளதமயந்தி பகுதி-6

நளதமயந்தி பகுதி-6

தேவர்கள் சென்ற பிறகு, நளன் மன்னர்கள் தங்கியிருந்த அரண்மனைக்குப் போய்விட்டான்.தமயந்தி ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தாள்.யாரைக் காதலித்தோமோ, அவனே, மற்றவர்களுக்கு என்னைக் காதலியாக்க தூதாக வந்தது எவ்வளவு பெரிய கொடுமை! இவன் என்ன மனிதன்! அன்னப்பறவை சொன்னது முதல் இவனே கதியென இருந்தோமே! இப்போதோ இவன் தூதனாகி விட்டான். இவனை நாடி என் மனம் செல்வதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்படிப்பட்டவன் கடைசி வரை என்னைக் காப்பாற்றுவானா? அவள் தனக்குள் அரற்றினாள். மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது. சந்தேகப்பூக்கள் அவளது மனதுக்குள் பூத்தாலும், ஆசை மட்டும் விடவேயில்லை. அவன் எவ்வளவு பெரிய கட்டழகன். ஆண்மை அவனோடு பிறந்தது. காதலையே துறக்க முடிவெடுத்த இவனைத் தியாகி என்று நினைக்க என் மனம் ஏன் நினைக்கவில்லை? அவனைப் பார்க்கும் முன் என் உள்ளம் தான் நிடதநாட்டை நோக்கிப் போயிற்று! அவனைப் பார்த்த பிறகு, உயிரும் போய்விட்டதே! தீயிலே விழுந்த இளம் தளிர் போல என் மனம் தவிக்கிறதே! கொக்குகளாலும், நாரைகளாலும் கொத்தி தின்னப்படும் மீன் போல் துடிக்கிறேனே! என் அன்பரே! தாங்களா இப்படி ஒரு வார்த்தை சொன்னீர்கள். உங்களுக்காக என் உயிர் வேண்டுமானால் போகும். ஆனால், என் காதல் என்றும் ஜீவித்திருக்கும், என்று புலம்பியவள் அவ்வப்போது மயக்கநிலைக்கும் சென்று திரும்பினாள்.அப்போது மாலைப் பொழுது வந்துவிட்டது.

தமயந்தியின் புலப்பம் அதிகமாயிற்று.இந்த வானத்தைப் பாருங்களேன்! ஓரிடத்தில் பிறை நிலா இருக்கிறது. ஆனாலும், நிலவின் குளிரால் அதற்கு எந்த பயனுமில்லை. அந்த வானத்தில் அப்படி என்ன தான் வெப்பமோ? கொப்புளங்கள் பல தோன்றியிருக்கின்றன.நட்சத்திரங்களைத் தான் சொல்கிறேன். அந்த வானத்தின் நிலை போல் தான் என் மனமும் புண்பட்டிருக்கிறது. அந்த நிலவுக்கு என் மேல் கோபமோ தெரியவில்லை, அதன் கதிர்கள் என் உள்ளத்தை நெருப்பாய் சுடுகின்றன. அதென்னவோ தெரியவில்லை. இன்றைய இரவுப் பொழுது வெகுவாக நீளுமென்றே நான் கருதுகிறேன், என்றாள்.

அந்த இரவில் நளன் தன்னுடன் யாருமறியாமல் இருந்திருந்தால் காதல் மொழி பேசி இனிய இரவாக கழிந்திருக்குமே என ஏக்கப்பெருமூச்சு விட்டாள். பஞ்சணையில் படுத்தாள். அது முள்ளாய் குத்தியது. உலகிலேயே கொடிய வியாதி காதல் தான் போலும்! காதலனை நினைத்து விட்டால் காதலியருக்கு தூக்கமே கிடையாது என்று அவள் படித்திருக்கிறாள். இப்போது அதனை அவளே உணர்கிறாள். என்னைத் துன்பத்திற்குள்ளாக்கும் இரவே போய் விடு. கதிரவனே விரைந்து வா! விடியலுக்குப் பிறகாவது என் வாழ்விலும் விடியல் ஏற்படுகிறதா பார்ப்போம், என எண்ணியபடியே, ஒவ்வொரு நொடியையும் தள்ளினாள்.

ஒரு வழியாய், அந்த விடியலும் வந்தது. விடிய விடிய கண் விழித்ததால், குவளை மலர் போன்ற அவளது கண்கள் சிவந்திருந்தன.அன்றைய தினம் தான் சுயம்வரம். மனதுக்குப் பிடித்தவன் மணாளனாக அமைந்தால் தான் சுயம்வரம் இனிக்கும். காதலனோ காதலைத் தியாகம் செய்துவிட்டான். யார் கழுத்தில் மாலை அணிந்தால் என்ன! ஏதோ, ஜடம் போல் மாலையைத் தூக்கிக் கொண்டு உணர்வற்றவளாய் மண்டபத்துக்குள் நுழைய வேண்டியது தான்! அவளும் இதோ நுழைந்து விட்டாள். அவளது காதில் அணிந்திருந்த முத்துக்கம்மல் அவளது எழிலை அதிகமாக்கியிருந்தது.மன்னர்களெல்லாம் தமயந்தியின் அழகை ரசிக்க அப்படியும், இப்படியுமாய் தலையை தூக்கி பார்க்க முயன்றனர். ஆனால், தோழிகள் அவளைச் சுற்றி நின்றதால் அவள் அவர்களின் பார்வையில் படவில்லை. அந்த மண்டபத்தில் இந்திரன், எமன், அக்னி முதலான தேவர்களும் மன்னர்களின் வரிசையில் எழில் பொங்க வீற்றிருந்தனர்.

நளன் எவ்வித உணர்வும் இல்லாமல் ஒரு ஆசனத்தில் அமர்ந்திருந்தான். தோழிப்பெண் தமயந்தியிடம் ஒவ்வொரு மன்னரையும் அறிமுகம் செய்து வைத்தபடியே முன்சென்றாள். தமயந்தி அழகிய மாலையுடன் அவள் சொல்வதைக் கேட்க விரும்பாமல் பின்சென்றாள்.

தமயந்திக்கு முதலில் அறிமுகப்படுத்தப்பட்டவன் சோழ மன்னன். காவிரிநதி தீரத்துக்குச் சொந்தக்காரன். அந்த ஆற்றிலே ஓடுவது தண்ணீரல்ல! அமுதம், அதற்கு பொன்னி என்றும் பெயருண்டு என்று எடுத்துச் சொல்கிறாள். அடுத்து பாண்டிய மன்னனை அறிமுகப்படுத்துகிறாள். இவன் சொக்கநாதரின் அருள்பெற்ற வம்சத்தில் பிறந்தவன். முன்னொரு காலத்தில் இவனது முன்னோர் செண்டால் மேரு மலையையே அடித்துப் பிளந்தார்களாம், என்று அவனது வீரத்தைப் புகழ்ந்தாள். கங்கைக்கரையிலுள்ள காந்தார நாட்டின் மன்னனும் சுயம்வரத்துக்கு வந்திருந்தான். அவனது தேசத்தின் பெருமையையும் சொல்லி பாராட்டினார்கள். அடுத்து சேரநாட்டின் மன்னனை அறிமுகம் செய்தாள். அடுத்து குருநாடு, அவந்தி நகரத்து மன்னன் என்று பட்டியல் நீண்டு கொண்டே போனது. ஓரிடத்தில் தோழி அயர்ந்து நின்று விட்டாள்.ஏனெனில், நளனைப் போலவே உருவம் கொண்ட நான்கு பேர் அமர்ந்திருந்தனர். தமயந்தியும் அவர்கள் நால்வரும் நளனைப் போலவே இருப்பது கண்டு அசந்துவிட்டாள். இதெப்படி சாத்தியம்? ஒரே வடிவத்தில் நால்வரா? இந்த உ<லகத்திலா இந்த அதிசயம்? அப்படியானால், இவர்களில் யார் என் நளன்? ஐயோ! இது தேவர்களின் வேலையாகத்தான் இருக்க வேண்டும். என்னை விரும்பிய தேவர்கள், என் நளனை என்னிடமே தூது அனுப்பியது போதாதென்று இப்போது இப்படி வந்து அமர்ந்திருக்கிறார்களே! இந்த இக்கட்டான நிலையில் என் நளனை எப்படி கண்டுபிடிப்பது? என்று சிந்தித்த தமயந்திக்கு, ஒரு பொறி தட்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top