2003 – உலக கோப்பை
3–வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றிய அணி என்ற பெருமை ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்தது. 8–வது உலக கோப்பை போட்டியை தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, கென்யா இணைந்து நடத்தின.
கங்குலி தலைமையிலான இந்திய அணி இந்த உலக கோப்பையில் மிகவும் சிறப்பாக ஆடியது. ஆனால் இறுதிப்போட்டியில் சொதப்பியதால் 2–வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பு பறிபோனது.
முதல் அரை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா 48 ரன்னில் இலங்கையை வீழ்த்தி 5–வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரை இறுதியில் இந்தியா 91 ரன்னில் கென்யாவை வீழ்த்தியது.
இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அதிரடியாக விளையாடி இந்தியாவை நசுக்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 359 ரன் குவித்தது. பாண்டிங் 140 ரன் (அவுட் இல்லை), எடுத்தார். பின்னர் ஆடிய இந்தியா 234 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 125 ரன்னில் வென்று 3–வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.
எட்டாவது உலக கோப்பை போட்டித் தொடர் தென் ஆப்ரிக்காவில் நடந்தது. கனடா, நெதர்லாந்து, நமீபியா, கென்யா உள்பட மொத்தம் 14 அணிகள். 1999ல் கடும் குழப்பத்தை ஏற்படுத்திய சூப்பர் சிக்ஸ் சுற்று இந்த முறையும் தொடர்ந்தது. லீக் சுற்றில் எடுத்த புள்ளிகள் அடுத்த சுற்றுக்கு கணக்கில் கொள்ளப்படாது என்று அறிவித்தது ஓரளவு ஆறுதல் அளித்தது. அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக கென்யா, ஜிம்பாப்வேயில் நடந்த லீக் ஆட்டங்களை சில அணிகள் புறக்கணித்தன. வங்கதேசம், கனடா, இலங்கை அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்ற கென்ய அணி, நியூசிலாந்து விளையாட முன்வராததால் கிடைத்த 4 புள்ளிகளும் சேர்ந்துகொள்ள அரை இறுதிக்கு முன்னேறியது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. லீக் சுற்று சீக்கிரம் முடியாமல் ஜவ்வு மாதிரி இழுத்துக் கொண்டு போனது (42 ஆட்டங்கள், 2 ரத்து). சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, கென்யா, இலங்கை, நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகள் தகுதி பெற்றன. சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் நெதர்லாந்து, ஜிம்பாப்வே, நமீபியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவுடன் செஞ்சுரி யன் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில், 41.4 ஓவரில் 125 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. சச்சின் அதிகபட்சமாக 36 ரன், ஹர்பஜன் 28, கும்ப்ளே 16 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 22.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்து எளிதாக வென்றது. இந்த உலக கோப்பையிலும் பாகிஸ்தானை பந்தாடியது இந்திய ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது. டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 273 ரன் குவித்தது. தொடக்க வீரர் சயீத் அன்வர் 101 ரன் விளாசினார். கடினமான இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் கங்குலி தவிர்த்து (டக் அவுட்) மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவித்து வெற்றிக்கு உதவினர். அமர்க்களமாக விளையாடிய சச்சின் 98 ரன் விளாசி (75 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) ரசிகர்களை மகிழ்வித்தார். சேவக் 21, கைப் 35, டிராவிட் 44*, யுவராஜ் 50* ரன் விளாச இந்தியா 45.4 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 276 ரன் எடுத்து அபாரமாக வென்றது.
சூப்பர் சிக்ஸ் சுற்றில் கென்யா, இலங்கை, நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறியது. போர்ட் எலிசபத்தில் நடந்த முதலாவது அரை இறுதியில் ஆஸ்திரேலியா 48 ரன் வித்தியாசத்தில் (டி/எல் விதி) இலங்கையை வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரை இறுதியில் கென்யாவுடன் மோதிய இந்தியா, டாசில் வென்று முதலில் பேட் செய்தது. சச்சின் 83, கேப்டன் கங்குலி 111* ரன் விளாச, 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 270 ரன் குவித்தது இந்தியா. அடுத்து களமிறங்கிய கென்யா 46.2 ஓவரில் 179 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்தியா 91 ரன் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஜோகன்னஸ்பர்கில் நடந்த பைனலில் இந்திய பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. தொடக்க வீரர்கள் கில்கிறிஸ்ட் 57, ஹேடன் 37 ரன் எடுத்து ஹர்பஜன் சுழலில் ஆட்டமிழந்தனர்.
மூன்றாவது விக்கெட்டுக்கு கேப்டன் பான்டிங் , டேமியன் மார்டின் ஜோடி ஆட்டமிழக்காமல் 234 ரன் சேர்த்து அசத்தியது. பான்டிங் 140 ரன் (121 பந்து, 4 பவுண்டரி, 8 சிக்சர்), மார்டின் 88 ரன் (84 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர். ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 359 ரன் குவித்தது.
இந்திய அணி சேசிங்கில், சச்சின் 4 ரன் எடுத்து கிளென் மெக்ராத் பந்துவீச்சில் அவரிடமே பிடிபட்டது அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. சேவக் 82, டிராவிட் 47, கங்குலி, யுவராஜ் தலா 24 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஏமாற்றமளித்தனர். இந்தியா 39.2 ஓவரிலேயே 234 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி கோப்பை வெல்லும் வாய்ப்பை வீணடித்தது. ஆஸ்திரேலிய அணி 3வது முறையாக உலக சாம்பியனாகி ஆதிக்கத்தை நிலைநாட்டியது. பைனலுக்கான ஆட்ட நாயகன் விருதை ஆஸி. கேப்டன் பான்டிங்கும், தொடர் நாயகன் விருதை இந்தியாவின் சச்சினும் தட்டிச் சென்றனர்.
* ரன் குவிப்பில், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 11 போட்டியில் 673 ரன் குவித்து (அதிகம் 152, சராசரி 61.18) முதலிடம் பிடித்தார். கங்குலி 465 ரன் (அதிகம் 112*, சராசரி 58.12), பான்டிங் 415 ரன்னுடன் (அதிகம் 140*, சராசரி 51.87) அடுத்த இடங்களைப் பிடித்தனர்.
* டர்பன் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த லீக் ஆட்டத்தில், கணுக்கால் காயத்துடன் விளையாடிய இந்திய வேகம் ஆசிஷ் நெஹ்ரா தொடர்ச்சியாக 10 ஓவர் பந்துவீசி 23 ரன் னுக்கு 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
* இந்தியாவுக்கு எதிராக பைனலில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 359 ரன் குவித்தது, அணியின் அதிகபட்ச ஸ்கோராகும்.
* ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை (11 ஆட்டம்).
* விக்கெட் வேட்டையில் இலங்கை வேகம் சமிந்தா வாஸ் 10 போட்டியில் 23 விக்கெட் கைப்பற்றி முதலிடம் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ (22 விக்கெட்), மெக்ராத் (21), இந்தியாவின் ஜாகீர் (18 விக்கெட்) அடுத்த இடங்களைப் பிடித்தனர்.
* ஜிம்பாப்வே வீரர் கிரெய்க் விஷார்ட் ஹராரே மைதானத்தில் நமீபியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் 172 ரன் விளாசியது தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. மொத்தம் 21 சதங்கள் அடிக்கப்பட்டன. சச்சின் 152 ரன் விளாசி 2வது இடம் பிடித்தார். கேப்டன் கங்குலி 3 முறை ஆட்டமிழக்காமல் சதம் விளாசி அசத்தினார் (107*, 111*, 112*).
சர்ச்சை
லீக் சுற்றுக்கு முன்பாகவே, ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஸ்பின்னர் ஷேன் வார்ன் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதை அடுத்து திருப்பி அனுப்பப்பட்டார். ஸ்பான்சர் நிறுவனங்களின் சின்னங்களை அணிந்து விளையாடுவது தொடர்பாக இந்திய வீரர்களுக்கும் கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே மோதம் ஏற்பட்டது. ஜிம்பாப்வே அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆண்டி பிளவர், ஹென்றி ஒலாங்கோ இருவரும் கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.