கோடிகளுக்கு ஆசைப்பட்டு ‘கம்பி’ எண்ணுகிறார்
அமெரிக்காவில் இயோவா மாகாணத்தில், 2010 டிசம்பரில் ஒரு பெட்ரோல் நிலையத்தில் விற்ற லாட்டரி சீட்டுக்கு 14.3 மில்லியன் டாலர் (சுமார் ரூ.86 கோடி) பரிசு விழுந்தது. ஆனால் நீண்டகாலம், அந்தப் பரிசுக்கு சொந்தம் கொண்டாடி யாரும் வரவில்லை. ஆனால் கடைசி நிமிடத்தில் நியூயார்க்கை சேர்ந்த வக்கீல் ஒருவர், தனது கட்சிக்காரர் ஒருவருக்கு பரிசு விழுந்திருப்பதாக லாட்டரி சீட்டுடன் வந்தார். ஆனால் அவரைப்பார்த்து, சந்தேகித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பியபோது, அவர் நழுவி விட்டார். உடனே விசாரணை முடுக்கி விடப்பட்டது.
விசாரணையில் லாட்டரி சீட்டு வாங்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்த லாட்டரி வெளியீட்டு நிறுவனத்தின் உயர் அதிகாரியான எத்தீ டிப்டன் என்பவர் மோசடி செய்து, பரிசுத் தொகையை பெற முயற்சித்தது அம்பலத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல கோடிகளுக்கு ஆசைப்பட்டவர், இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
ரூ.288 கோடியில் விலங்குகளுக்கு விமான முனையம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஜான் எப்.கென்னடி விமான நிலையம், உலக பிரசித்தி பெற்றது. சர்வதேச அளவில், மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் இதுவும் ஒன்று. இந்த விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்வோர், வந்திறங்குவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு 5 கோடி. இந்த விமான நிலையம் இன்னுமொரு சிறப்பைப் பெறப்போகிறது.
விலங்குகளுக்கான உலகின் முதலாவது விமான முனையம், இந்த விமான நிலையத்தில் உலக தரத்தில் உதயமாக இருக்கிறது என்பதே இந்த சிறப்பு. இந்த முனையம் 14.4 ஏக்கர் நிலத்தில், 48 மில்லியன் டாலரில் – அதாவது ரூ.288 கோடி மதிப்பில் 1 லட்சத்து 78 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படுகிறது.
இந்த விமான முனையத்தை ‘ரேஸ்ப்ரூக் கேபிட்டல்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அங்கமான ஆர்க் டெவலப்மென்ட் நிறுவனம் அமைக்கிறது. இந்த விமான முனையம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர், ஆண்டுக்கு 70 ஆயிரம் குதிரைகள், செல்லப்பிராணிகள், பறவைகள், கால்நடைகள் ஏற்றுமதி, இறக்குமதியில் முக்கிய அங்கம் வகிக்கும்.
2016-ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த விமான முனையம் திறக்கப்பட்டு விடும்.