நியூயார்க்,
அமெரிக்காவில், நியூயார்க் நகரில் காமர்ஸ் வீதி அருகே நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு மெட்ரோ வடக்கு ரெயில் ரோடு ரெயில், ஏராளமான பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த பகுதியில் அமைந்திருந்த லெவல் கிராசிங்கை ஒரு கார் கடந்து செல்ல முற்பட்டது. ஆனால் அதற்குள் ரெயில் வந்து விட்டது. இதனால் ரெயிலும், காரும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் கார் 400 அடி தொலைவில் போய் விழுந்தது.
இந்த பகுதியில் நடந்த மிக மோசமான விபத்தாக இந்த விபத்து கருதப்படுகிறது. இந்த விபத்தின் காரணமாக அந்த பகுதியில் ரெயில் சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டன.
சம்பவ இடத்திலேயே ரெயில் பயணிகளில் 6 பேரும், கார் டிரைவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக மீட்புப்பணி முடுக்கி விடப்பட்டது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்தின் காரணமாக ரெயிலில் பயணம் செய்த பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள ஒரு உடற்பயிற்சி நிலையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர். பின்னர் பஸ்கள் மூலமாக அவர்கள் போக வேண்டிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.