தைபே,
தைவானில் 31 பேரை பலி கொண்ட விபத்தில், கட்டிடங்கள் மீது விமானம் மோதாமல் விமானி சாதுரியமாக சமாளித்தார். இதனால் பெரும் உயிர்ச்சேதம், பொருட்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
விமான விபத்து
தைவான் நாட்டின் தலைநகர் தைபே விமான நிலையத்திலிருந்து, கின்மென் தீவு நோக்கி, 58 பேருடன் நேற்று முன்தினம் (புதன்கிழமை) டிரான்ஸ் ஏசியா ஏர்வேஸ் விமானம் புறப்பட்டு சென்றது. ஆனால் மூன்றே நிமிடங்களில் அந்த விமானம், விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது.
அந்த விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராத வகையில், வாகனங்கள் பயணிக்கக் கூடிய நெடுஞ்சாலைக்கு செங்குத்தாக வந்து, அதில் சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது உரசி, பாலத்தில் மோதி, பின்னர் ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் 26 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 31 ஆகும். 15 பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டு விட்டனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தரப்படுகிறது.
12 பேர் கதி என்ன ஆனது என்பது இதுவரை தெரியவில்லை.
விமானியின் சாதுரியம்
இதற்கிடையே அந்த விமானம், வானிலிருந்து கீழே விழுந்தபோது, மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியில் அமைந்த கட்டிடங்கள் மீது மோதாமல், விமானி மிக சாதுரியமாக செயல்பட்டு, பாலத்தில் உரசியவாறு ஆற்றில் விமானத்தை விழச்செய்தார், இதனால் பெரிய அளவில் உயிர்ச்சேதங்களும், பொருட்சேதங்களும் தவிர்க்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
விமானம் கீழே விழுந்தது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் விமானம் சாங்ஷான் விமான நிலையத்தின் அருகேயுள்ள கட்டிடங்களுக்கு மிக அருகில் சென்று, மயிரிழையில் மோதாமல், கீழே விழுந்து காரிலும், பாலத்திலும் உரசியவாறு ஆற்றில் விழுந்தது துல்லியமாக தெரியவந்துள்ளது.
விமானிக்கு பாராட்டு
இது தொடர்பாக தைபே நகர மேயர் கோ வென் ஜே நேற்று கூறுகையில், “ தன்னால் இயன்ற அத்தனையையும் அந்த விமானி கடைசி நேரத்தில் செய்திருக்கிறார். கட்டிடங்கள் மீது விமானம் மோதுவதை மயிரிழையில் அவர் தவிர்த்திருக்கிறார். இதனால் பெரிய அளவு பாதிப்பு நேராமல் தடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதேபோன்று இந்த விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரு பயணியின் சகோதரரான கிறிஸ் லின் என்பவர், “விமானி மின்னல் வேகத்தில் செயல்பட்டு, பலரது உயிர்களை காப்பாற்றி விட்டார். நானும் ஒரு விமானிதான். இந்த மாதிரி நேரத்தில், எப்படி கண நேரத்தில் முடிவு எடுத்து செயல்பட வேண்டும் என்பதை நான் அறிவேன்” என கூறினார்.
அனுபவசாலி
விமான போக்குவரத்து ஆய்வாளர் ஜெப்ரி தாமசும், விமானி விமானத்தை கட்டிடங்கள் மீது மோதாமல் தவிர்த்துள்ளார் என தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, “எனினும் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என்பதை விமானி அறை ஒலிப்பதிவு கருவி, விமான ஒலிப்பதிவு கருவி தகவல்களை ஆராய்ந்து தான் கூற முடியும்” என்றார்.
இந்த விமான விபத்தில் பலியான 31 பேரில் விமானி லியாவோ சியென் சங்கும் (வயது 42) ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே 4, 914 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவசாலி. இவர் இணை விமானியாகவும் 6,922 மணி நேரம் செயல்பட்டுள்ளார்.