ஆர்யா ஆச்சரியப்பட்டாள்.
‘கார் ஹார்ன் கொடுத்தும் டாக்டர் ஏன் வெளிவரவில்லை?
ஒருவேளை தூங்கிவிட்டாரோ?
மாட்டாரே!’
காரின் பின்ஸீட்டில் உட்கார்ந்திருந்த வால் சந்த் கேட்டான்:
“அம்மா, நான் வேணும்னா சுவரேறிக் குதிச்சு உள்ளே போய் டாக்டருக்குக் குரல் கொடுக்கட்டுமா?”
“பொறு வால் சந்த்! டாக்டர் லாபரட்டரியில் எதாவது ஒரு முக்கியமான வேலையா இருக்கலாம். ரெண்டு நிமிஷம் வெயிட்
பண்ணிப் பார்ப்போம்!”
மூன்றாவது தடவையாக நீளமாய் ஒரு ஹாரனைக் கொடுத்துவிட்டு ஆர்யா காத்திருக்க ஆரம்பித்தாள்.
நிமிஷங்கள் ஐந்து கரைய… ஆர்யாவின் இதயக்கடலில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி நெற்றிமேட்டில் வியர்வைச் சரங்களை அரும்ப வைத்தது. மெள்ள வால் சந்திடம் திரும்பினாள்.
“டாக்டர் இப்படி மெளனம் சாதிக்க மாட்டாரே?”
“நான் உள்ளே போய்ப் பார்க்கட்டுமாம்மா…?”
“ம்…” ஆர்யா தலையசைத்ததுமே வால் சந்த், காரின் கதவைத் திறந்து கொண்டு இறங்கினான்.
“பார்த்து வால் சந்த்… உள்ளே சேறும் சகதியுமா இருக்கும். கரண்ட் இல்லை. இருட்டுல நிதானமா நடந்து போகணும்.”
“சரிங்கம்மா!”
“காலிங் பெல் வேலை செய்யாது. பங்களாவோட வலது பக்கவாட்டுல ரெண்டாவது ஜன்னலுக்குப் பக்கத்துல போய் நின்னுக்கிட்டுக் குரல் குடு!”
“சரிங்கம்மா…” வால் சந்த் தலையாட்டிக்கொண்டே கேட்டுக்குப் பக்கத்தில் இருந்த காம்பெளண்ட் சுவரை நெருங்கினான். எம்பி அதன் உச்சியைப் பிடித்துக் கொண்டவன், உடம்பில் இருந்த பலம் அனைத்தையும் திரட்டிக்கொண்டு தாவினான்.
சுவரின் உச்சிக்குச் சுலபமாக வந்து மறுபக்கம் இருட்டில் இடம் பார்த்துக் குதித்தான்.
“ச்சொத்…”
வேகமாக மழைச் சேறு சிதறியது.
மெள்ள நடந்து பங்களாவின் போர்டிகோ பகுதிக்கு வந்தான். இருட்டும் நிசப்தமும் ஏதோ பார்ட்னர்ஷிப் கையெழுத்துப் போட்டுவிட்ட மாதிரி ஒன்றுக்கொன்று கை கோத்திருந்தன.
வால் சந்த் போர்டிகோ படியேறி, முன்பக்கக் கதவை நெருங்கி இழுத்துப் பார்த்தான்.
அது இறுக்கமாக மெளனம் சாதித்தது.
குரல் கொடுத்தான்:
“ஐயா!… டாக்டர் ஐயா!”
உள்ளே… நிசப்தம்!
ஒரு நிமிஷம் காத்திருந்தவன், பின் மெதுவாக நகர்ந்து பங்களாவின் வலது பக்கவாட்டுக்குப் போனான்.
இரண்டாவது ஜன்னலை நெருங்கினான்.
ஜன்னலின் கதவுகள் லேசாகத் திறந்திருக்க, அடிக்கின்ற மழைக்காற்று அதை ‘க்ரீச் க்ரீச்’சென்ற சத்தத்தோடு அசைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
நர்ஸ் யாராவது லேபர் அறையிலிருந்து வெளிப்படமாட்டார்களா என்கிற தவிப்போடு அறைக்கதவையே பார்த்தபடி நின்றிருந்தார் மாசிலாமணி. பதற்றத்தில், வெப்பமடைந்த ரத்தம் அவருடைய மூளைப் பகுதிக்குள் தத்தளித்துக் கொண்டிருந்தது.
‘கதவைத் தட்டி விஷயத்தைச் சொல்லிவிடலாமா?
டாக்டருக்குக் கோபம் வரும்!
வரட்டுமே…!’
எண்ணத்தைச் செயல்படுத்தலாமா வேண்டாமா என்கிற யோசனையில் தத்தளித்துக் கொண்டிருக்கும்போதே அந்த டெலிபோன் ஆபரேட்டர் பெண் ஓடிவந்தாள்.
“சார்… உங்களுக்குப் போன்.”
திலகத்தை அங்கேயே நிற்க வைத்துவிட்டு, அந்த ஆபரேட்டரின் பின்னால் போனார் மாசிலாமணி.
“போன் யார்கிட்டேயிருந்து…?”
“உங்களுக்குப் பக்கத்து வீட்லேயிருந்து மகேஷ்பாபுன்னு ஒருத்தர் சார். அக்ரி காலேஜ்ல புரபஸராம்.”
“ஹலோ…”
“மாசிலாமணி சாரா?”
“ஆமா…”
“சார்! நான் மகேஷ்பாபு…”
“சொல்லுங்க மிஸ்டர் மகேஷ்பாபு…”
“சார், பூட்டியிருந்த உங்க வீட்டுக்குள்ளே டெலிபோன் மணி அடிச்சுக்கிட்டே இருந்தது. ஜன்னல் பக்கம் டெலிபோன் இருந்ததினால நான் போய் ரிஸீவரை எடுத்து அட்டெண்ட் பண்ணினேன். அது ஒரு பாம்பே கால். உங்க சன் ரமணி பேசினார். நான் அவர்கிட்ட, டெலிவரிக்காக கீதாம்பரி ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருக்கிற விஷயத்தைச் சொல்லி ஹாஸ்பிடலோட போன் நம்பரும் கொடுத்திருக்கேன். அவர் உங்ககிட்ட ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேசணுமாம். ஹாஸ்பிடல் டெலிபோனுக்குப் பக்கத்திலேயே உங்களை இருக்கச் சொன்னார். எந்த நிமிஷமும் உங்களுக்கு போன்கால் வரலாம். டெலிபோனுக்குப் பக்கத்திலேயே இருங்க சார்!”
“தேங்க்யூ வெரிமச் ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேஷன் மகேஷ்பாபு!”
“கீதாம்பரிக்கு டெலிவரி ஆயிடுச்சா சார்?”
“இன்னும் இல்லை. இப்ப லேபர் ரூம்லதான் இருக்கா.”
“நான் ரிஸீவரை வெச்சுடறேன் சார். உங்க சன், போன்ல ரொம்பவும் எமோஷனலா இருந்தார்” சொன்ன மகேஷ்பாபு மறுமுனையில் ரிஸீவரை வைத்துவிட, மாசிலாமணியும் ரிஸீவரை வைத்துவிட்டுக் காத்திருந்தார்.
நிமிஷ நேரம்தான்.
டெலிபோன் அடித்தது.
ரிஸீவரை அள்ளினார்.
“ஹலோ…”
“அப்பா! நான் ரமணி.”
“என்ன… உன்னோட போனையே காணோம்? பம்பாயிலிருந்து நீயும் திவாகரும் எப்போ புறப்பட்டு வர்றீங்க?”
“அப்பா! ஒரு சந்தோஷத் தகவல். மொதல்ல அம்மாகிட்ட சொல்லுங்க… லாரி விபத்துல இறந்து போனது அண்ணன் ஹரிஹரன் இல்லை.”
“ம… ணி…! நீ… நீ… எ… என்னடா சொல்றே…?!”
“ஆமாம்ப்பா… லாரி மோதி இறந்தது அண்ணன் இல்லை. துவாரகநாத்னு ஒரு திருடன். அண்ணன் ஓட்டல் ரூம்ல இல்லாத நேரமா பார்த்துக் கள்ளச் சாவிபோட்டு உள்ளே நுழைஞ்சு, அண்ணனோட ப்ரீஃப்கேஸை எடுத்துக்கிட்டு, அவரோட சஃபாரி டிரெஸ்ஸையும் மாட்டிக்கிட்டு வெளியே வந்திருக்கான். லாரி அவன் மேலத்தான் மோதியிருக்கு. போலீஸ் விசாரணையில எல்லா உண்மையும் வெளியே வந்துடுச்சு.”
“கடவுளே!” பசுவின் மடியை மோதும் கன்றுக்குட்டியாக மாசிலாமணிக்குள் சந்தோஷம் முட்டியது.
“ர… ரமணி! நீ சொல்றது உண்மையா…?!”
“ஆ… ஆமாப்பா…! இறந்தது அண்ணன் இல்லை.”
“அப்படீன்னா ஹரிஹரன் எங்கே…?”
“எங்கே போனார்னு தெரியலை. அதான் போலீஸ் உதவியோடு இப்ப தேடிக்கிட்டிருக்கோம்.”
“ஹரிஹரனோட உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டிருக்காதே?”
“ஒண்ணும் தெரியலேப்பா… ஹரிஹரன் பம்பாய்க்கு வந்ததும் லாயர் ஒருத்தருக்கு போன் பண்ணி, நம்ம கம்பெனி ப்ராடக்ட்ஸ் மாதிரியே ஃபோகஸ் ப்ராடக்ட்ஸ் தயார் பண்ணிய ஒருத்தர் மேல வழக்குப் போடறதைப் பத்திப் பேசியிருக்கார். ஆனா லாயர்
‘அது விஷயமா கோர்ட்டு கேஸுன்னு போக வேண்டாம். சம்பந்தப்பட்ட பார்ட்டியை நேர்ல போய்ப் பார்த்துப் பேசிப் பாருங்க’ன்னு சொல்லியிருக்கார். அண்ணன் ஒருவேளை அந்தப் பார்ட்டியைத்தான் பார்க்கப் போயிருக்கணும்னு இன்ஸ்பெக்டர் அபிப்பிராயப்படறார்.”
“அந்த ஃபோகஸ் ப்ராடக்ட் பார்ட்டி யார்னு தெரிஞ்சுதா?”
“தெரியலைப்பா.”
“லாயர்கிட்ட சொல்லலையா?”
“சொல்லலை.”
“ஜெர்மனிக்குப் புறப்பட்டுப் போக பம்பாய்ல இறங்கினவன் இந்த வேலையெல்லாம் எதுக்காகப் பார்த்தான்? மெட்ராஸ்ல இருக்கிற வரை ஃபோகஸ் ப்ராடக்ட்டைப் பத்தி ஹரிஹரன் பேசவே இல்லையே?”
“ஒருவேளை பம்பாய் வந்து சேர்ந்த பின்னாடி அண்ணனுக்கு அந்த விஷயம் தெரிஞ்சிருக்கக்கூடும். அது சம்பந்தமா என்ன நடவடிக்கை எடுக்கலாம்னு லாயர்கிட்ட கன்ஸல்ட் பண்ணியிருக்கலாம். அவர் சொன்ன யோசனையின் பேர்ல பார்ட்டியை நேர்ல பார்த்துப் பேசப் போயிருக்கலாம்.”
“நீ சொல்றதைப் பார்த்தா… அந்தப் பார்ட்டியைப் பார்க்கப் போன இடத்துலதான் ஹரிஹரனுக்கு ஏதாவது அசம்பாவிதம்
நடந்திருக்கணும்.”
“இன்ஸ்பெக்டரும் அதே கோணத்துலதான் விசாரணையை முடுக்கி விட்டிருக்கார். அண்ணிக்கு டெலிவரி ஆயிடுச்சாப்பா?”
“இன்னும் இல்லை.” சொன்ன மாசிலாமணிக்கு, டாக்டர் மனோரஞ்சிதத்தை உடனடியாகப் பார்த்து ஹரிஹரன் உயிரோடு இருக்கிற விஷயத்தைச் சொல்லவேண்டும் என்று தோன்றவே ரிஸீவரில் படபடத்தார்:
“ரமணி! நீ ஒருமணி நேரம் கழிச்சு மறுபடியும் போன் பண்ணு. மேற்கொண்டு பேசிக்கலாம்.”
“அப்பா…” ரமணி குரலை இழுத்தான்.
“என்ன?”
“அண்ணனைப் பத்தின நல்ல நியூஸ் கிடைக்கிற வரைக்கும் அண்ணிக்கு எதுவும் தெரிய வேண்டாம்!”
“தெரியாதபடி நான் பார்த்துக்கறேன். நீயும் திவாகரும் போலீஸ் உதவியோடு ஹரிஹரனைத் தேடிக் கண்டுபிடிக்க முயற்சி எடுத்துக்குங்க!”
“சாயந்தரத்திலிருந்து அதே வேலையாத்தான் சுத்திக்கிட்டு இருக்கோம். எப்படியும் அண்ணனைக் கண்டுபிடிச்சுடுவோம். தைரியமா இருங்கப்பா!”
“சரி! நீ ஒருமணி நேரம் கழிச்சு மறுபடியும் இதே ஹாஸ்பிடலுக்கு போன் பண்ணு” மாசிலாமணி ரிஸீவரை வைத்துவிட்டு லேபர் வார்டை நோக்கி ஓடாத குறையாக நடந்தார்.
‘ஹரிஹரன் உயிரோட இருக்கிற விஷயத்தை முதலில் டாக்டருக்குத் தெரியப்படுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால் பெரிய உயிரா சின்ன உயிரா என்கிற சிக்கல் வரும்போது, டாக்டர் நான் வைத்த கோரிக்கைக்கு ஆதரவாகச் செயல்பட்டுவிட்டால் ஆபத்து!’
லேபர் அறைக்கு எதிரே இருந்த சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்த திலகம், கணவரைப் பார்த்ததும் எழுந்தாள்.
“போன்ல யாருங்க?”
“பம்பாயிலிருந்து ரமணி பேசினான் திலகம். நம்ம ஹரி ஆக்ஸிடெண்ட்ல சாகலையாம். செத்தது வேற யாரோவாம்!”
திலகத்தின் உடம்பு சந்தோஷத்தில் பதறியது.
“நீ… நீங்க… என்ன… சொ… சொல்றீங்க…?!”
“எல்லாத்தையும் அப்புறம் விவரமா சொல்றேன். மொதல்ல டாக்டருக்கு இந்த விஷயத்தைத் தெரியப்படுத்தணும்.”
“எ… எப்படீங்க?”
“கதவைத் தட்டியாவது சொல்லியாகணும்…”
மாசிலாமணி கதவை நோக்கி வேகமாக நகர முயன்ற விநாடி…
“ப்ளக்”
லேபர் அறையின் தாழ்ப்பாள் விலகியது.
கதவு ஸ்லோமோஷனில் திறந்தது.
டாக்டர் மனோரஞ்சிதம் வெளிப்பட்டாள். கண்களில் உச்சபட்சக் கவலை உட்கார்ந்திருந்தது.
இன்ஸ்பெக்டர் மல்ஹோத்ரா விசாரணையைத் தீவிரப்படுத்தி, ஹரிஹரனைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக டெலிபோன் எக்ஸ்சேஞ்சிலிருந்து மறுபடியும் ஓட்டல் சில்வர் ஸாண்டுக்கு வந்தபோது கெளண்ட்டரில் இருந்த ரிசப்ஷனிஸ்ட் கூப்பிட்டாள்.
‘சார்… ஒரு நிமிஷம்!”
ரமணி, திவாகர் பின்தொடர மல்ஹோத்ரா ரிசப்ஷனிஸ்ட்டை நெருங்கினார்.
“யேஸ்?”
“இங்கே தங்கியிருந்த மிஸ்டர் ஹரிஹரன் நேற்று இரவு எங்கே போனார் என்கிற கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது.”
மூவர் முகங்களிலும் கோடி சூரியப் பிரகாசம்.
“ஈஸிட்…? என்ன விடை…?”
“அவர் மலபார்ஹில்ஸ் போயிருக்கிறார். ஆனால் யாரைப் பார்க்க என்பது தெரியவில்லை!”
“இந்தத் தகவல் யார் மூலமாகக் கிடைத்தது?”
ரிசப்ஷனிஸ்ட் வரவேற்பறை சோபாவைச் சுட்டிக்காட்ட… மல்ஹோத்ரா, ரமணி, திவாகர் மூன்று பேரும் பார்வைகளைத் திருப்பினார்கள்.
சோபாவில் உட்கார்ந்திருந்த அந்த நபர் பவ்யமாக எழுந்து கும்பிட்டான்.
(தொடரும்)