Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » நீல நிற நிழல்கள் (15)

நீல நிற நிழல்கள் (15)

யக்கம் தெளிந்து எழ முயற்சித்துக் கொண்டிருந்த ஹரிஹரனை நோக்கி வேகமாய் நகர முயன்ற ஜோஷியைக் கையமர்த்தினாள் ஆர்யா.

“சார்! அந்த ஆளை இப்போ என்ன பண்ணப் போறீங்க?”

“இவனோட வாய்க்குப் பிளாஸ்டர் ஒட்டி, ரெண்டு கையையும் பின்னுக்கு மடக்கிக் கட்டணும். இல்லேன்னா கார்ல அவனை டாக்டர் வீட்டுக்குக் கொண்டுட்டுப் போறது சிரமமாயிடும்.”

“அந்த இம்சை அவனுக்கு வேண்டாம்…”

“பின்னே…?”

“அவனை மறுபடியும் மயக்கத்துக்குக் கொண்டுட்டுப் போயிடலாம்.”

“எப்படி?”

“கார் டேஷ்போர்டுக்குள்ளே எப்பவுமே ஸெடடீவ் இஞ்செக்ஷன் ரெடியா இருக்கும். ஒரு ஆம்பியூல் இஞ்செக்ஷன் போட்டாப் போதும்… மூணுமணி நேரத்துக்கு மரக்கட்டைதான். எந்த நிமிஷத்திலும் லாபரட்டரி பரிசோதனைக்கு எலிகள் கிடைக்கலாம்ங்கிற எண்ணத்துல டாக்டர் தன்னோட கார் டேஷ் போர்டுகளுக்குள்ளே இந்த ஸெடடீவ் இஞ்செக்ஷனை வெச்சிருப்பார்.”

ஜோஷி மலர்ந்தார்.

“நல்லதாப் போச்சு… போய்க் கொண்டா!”

ஆர்யா போர்டிகோவில் நின்றிருந்த காருக்குப் போய், அந்த நிமிஷம் முடிவதற்குள் இஞ்செக்ஷனோடு திரும்பி வந்தாள்.

இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு சோர்ந்த கண்களோடு எழ முயன்ற ஹரிஹரனை ஜோஷி எளிதாய் மல்லாத்தி இறுக்கமாய்ப் பிடித்துக் கொள்ள, ஆர்யா இஞ்செக்ஷன் மருந்தை சிரிஞ்சில் ஏற்றி, ஹரிஹரனின் தோள்பட்டையைப் பற்றிக் கொண்டு ஊசியைச் செருகினாள்.

பத்தே விநாடிகள்தான்!

ஹரிஹரனின் தலை ஒருபக்கமாய்த் தொய்ந்தது. ஆர்யா புன்னகைத்தாள்.

“இனி கவலையில்லை சார். மூணு மணி நேரம் கழிச்சுத்தான் இவன் ரத்தத்தில் கலந்திருக்கிற மருந்தோட வீரியம் குறையும். அதுவரைக்கும், இவனோட உடம்பைத் துண்டுத் துண்டாய் வெட்டினாலும் ஒரு சின்ன சத்தம்கூட வெளியே வராது.”

வால் சந்த் உள்ளிருந்து வெளிப்பட்டான். ஜோஷி அவனை ஏறிட்டார்.

“என்ன, பாடியைப் பத்திரமாப் போட்டு வெச்சியா?”

“வெச்சிட்டேங்கய்யா!”

“சரி… இவனைக் கொண்டுபோய் ஆர்யாவோட கார் பின்ஸீட்டுக்குக் கீழே படுக்க வை! நீயும் டாக்டர் வீட்டு வரைக்கும் துணைக்குப் போயிட்டு வந்துடு!”

“சரிங்கய்யா!”

ஹரிஹரனை ஒரு குழந்தையைப் போல இரண்டு கைகளாலும் தூக்கிக் கொண்ட வால் சந்த், போர்டிகோவில் நின்றிருந்த காரை நோக்கிப் போனான்.

ஜோஷியிடம் நிமிர்ந்தாள் ஆர்யா.

“நான் வரட்டுமா சார்!”

“ஒரு நிமிஷம்!” ஜோஷி கையமர்த்தினார்.

“என்ன சார்?”

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.”

“தாராளமா!”

“நான் இப்போ பேசப் போறதைப் பத்தி டாக்டர்கிட்ட நீ எதுவும் சொல்லிடக் கூடாது!”

“நீங்க சொல்ல வேண்டாம்னு சொன்ன பிறகு நான் சொல்ல மாட்டேன்.”

“இப்படி உட்காரு ஆர்யா!”

ஆர்யா உட்கார்ந்ததும் ஜோஷியும் பக்கத்து இருக்கையை ஆக்கிரமித்தார். சில விநாடி தயக்கத்துக்குப் பிறகு வாயைத் திறந்தார்:

“டாக்டர் சதுர்வேதியோட ஜீன் டிரான்ஸ்ஃபர் ஆராய்ச்சியைப் பத்தி உன்னோட உண்மையான அபிப்ராயம் என்ன?”

“அற்புதமான ஆராய்ச்சி. நாளைய மருத்துவ உலகமே வியக்கப் போகிற ஆராய்ச்சி.”

“நாளைய மருத்துவ உலகம் வியக்கறது இருக்கட்டும் ஆர்யா… அந்த ஜீன் டிரான்ஸ்ஃபர் ஆராய்ச்சியோட இப்போதைய நிலைமை என்ன? ஆராய்ச்சி வெற்றி பெறுமா… பெறாதா?”

“அ… அது… வந்து…”

“உன்னோட மனசுக்குப் பட்டதை சொல்லு!”

“டாக்டர் சதுர்வேதி ஆராய்ச்சியோட ஆரம்பக்கட்டங்களைத் தாண்டி வந்துட்டார். சீக்கிரமே வெற்றிக் கோட்டைத் தொட்டுடுவார்னு நினைக்கிறேன்.”

“உன்னோட நினைப்புல நிஜம் கலந்திருக்கா… இல்லை அதோடு சந்தேகமும் கலந்திருக்கா?”

ஆர்யா புன்னகைத்தாள்.

“சார்! உங்களுக்கு டாக்டர் மேலே நம்பிக்கை வரலைன்னு நினைக்கிறேன்.”

“ஓரளவுக்கு.”

“யூ ஆர் ராங் சார்! ஜீன் டிரான்ஸ்ஃபர் ஆராய்ச்சியில் டாக்டர் எதிர்பார்க்கிற ரிசல்ட் கிடைத்ததும் உங்க சன் நகுலோட மூளைக்கோளாறை அடுத்த ஒரு மாசத்துக்குள்ளே நிச்சயம் குணப்படுத்திடுவார்.”

ஜோஷி பெருமூச்சுவிட்டார்.

“நம்பவே எனக்குக் கஷ்டமாயிருக்கு.”

“நம்புங்க சார்! ஜீன் டிரான்ஸ்ஃபர் ஆராய்ச்சியில் டாக்டர் சதுர்வேதிக்கு மகத்தான வெற்றி கிடைக்கதான் போகுது.”

“எனக்கு இன்னொரு சந்தேகம் ஆர்யா…”

“என்ன சார்?”

“ஜீன் டிரான்ஸ்ஃபர் மூலமா என்னோட சன் நகுலுக்கு மூளைக்கோளாறு குணமாயிட்ட பின்னாடி, அவனோட உடம்புக்கு வேற
தொந்தரவுகள் வந்துடாதே?”

ஆர்யா பெரிதாய்ப் புன்னகைத்தாள். “சார்! இந்த ஆராய்ச்சியைப் பத்தி நீங்க சரியாப் புரிஞ்சுக்கவேயில்லை. டாக்டர் சதுர்வேதி உங்க மகன் நகுலுக்கு என்ன பண்ணப் போகிறார் என்பதைப் புரியும்படியாவே உங்களுக்குச் சொல்லிடறேன். மூளையின் பிட்யூட்ரி சுரப்பியில் லட்சக்கணக்கான செல்கள் இருக்கிற விஷயம் உங்களுக்குத் தெரியும். அந்த செல்களுக்கு உள்ளே இருக்கும் டி.என்.ஏ சமாசாரத்தின் ஒரு பகுதிதான் இந்த ஜீன். நமது உடம்பில் நடக்கும் எல்லாவித இயக்கங்களுக்கும், ஒரு மனிதன் நடந்துகொள்கிற குணாதிசயங்களுக்கும் இந்த ஜீன்தான் பிரதான காரணம்.

உங்கள் மகன் நகுலுக்கு ஏற்பட்டிருக்கிற மூளைக் கோளாறுகூட இந்த ஜீன் செய்த திருவிளையாடல்தான். மூளைக் கோளாறுக்குக் காரணமான அந்தக் குளறுபடியான ஜீன்களை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக மற்றொரு ஆரோக்கியமான நபரின் பிட்யூட்ரி சுரப்பியில் உள்ள நல்ல ஜீன்களை எடுத்துப் பொருத்துகிற வேலையைத்தான் டாக்டர் செய்யப் போகிறார்.

நகுலின் மூளைப் பகுதியில் அந்த ஆரோக்கியமான நல்ல ஜீன்கள் பரவிப் பெருக்கமடைந்து, ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் மூளைக் கோளாறு சரியாயிடும். பக்க விளைவுகள் வர வாய்ப்பே இல்லை.”

ஜோஷியின் முகத்துக்குச் சந்தோஷம் வந்தது.

“டாக்டர்கிட்டே இந்தச் சந்தேகங்களையெல்லாம் கேட்டா அவர் எரிச்சலடைவார்ங்கிற காரணத்துக்காகத்தான் உன்கிட்ட கேட்டேன் ஆர்யா.”

“சார்! உங்க மகனைப் பற்றின கவலையே உங்களுக்கு வேண்டாம்! இப்போ கைவசம் நிஷா, ஹரிஹரன் என்கிற இரண்டு ஆரோக்கியமான எலிகள் இருக்கு. இதுல ஏதாவது ஒரு எலியோட பிட்யூட்ரி சுரப்பி ஜீன்களை எடுத்து டாக்டர் சதுர்வேதி, நகுலுக்குப் பொருத்திடுவார். ஆராய்ச்சியோட உச்சக்கட்டத்துக்கு டாக்டர் வந்தாச்சு” சொன்ன ஆர்யா, குரலைத் தாழ்த்திக் கொண்டு கேட்டாள்:

“உங்க சன் நகுல் இப்போ எங்கே இருக்கார் சார்?”

“புனேக்குப் பக்கத்தில் இருக்கிற லோனாவாலா கெஸ்ட் ஹவுஸ் பங்களாவில், ஃபேமிலி டாக்டர் ஒருத்தரோட மேற்பார்வையில் இருந்துட்டிருக்கான். நகுலுக்கு ஏற்பட்டிருக்கிற மூளைக்கோளாறு வெளியுலகத்துக்குத் தெரியறதுக்கு முந்தியே ஜீன் டிரான்ஸ்ஃபர் மூலமா அவனுக்குக் குணமாயிடணும்.”

ஆர்யா புன்னகைத்தாள். “கவலையே வேண்டாம் சார்! டாக்டர் சதுர்வேதி உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவார். அவர் இந்த ஆராய்ச்சி முயற்சிகளில் தோற்கமாட்டார்.”

வால் சந்த் வியர்வை முகமாய்த் திரும்பி வந்தான். “ஐயா! நீங்க சொன்னபடி அந்த ஆளை அம்மாவோட கார் பின்ஸீட்டுக்குக் கீழே படுக்க வெச்சுட்டேன்.”

ஜோஷி ஆர்யாவை ஏறிட்டார்.

“வால் சந்த்தைக் கூட்டிக்கிட்டு நீ கிளம்பு ஆர்யா! நான் நாளைக்குக் காலையில வந்து டாக்டரைப் பார்க்கிறேன்.”

“சார்… விட்டலோட பாடி?”

“நாளைக்குக் காலையிலே அந்த விட்டலோட பாடி, அரை மூட்டை சாம்பலாகித் தோட்டத்துல இருக்கிற ரோஜாச் செடிகளுக்கு உரமா மாறியிருக்கும்.”

டாக்டர் மனோரஞ்சிதம் லேபர் வார்டுக்குள் நுழையும் வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டுத் திரும்பிய மாசிலாமணி தனக்கு வெகு அருகில் திலகமும் நிற்பதைப் பார்த்துத் திடுக்கிட்டார். திலகத்தின் முகம் ஓர் இறுக்கத்துக்கு உட்பட்டிருந்தது.

“தி… ல… கம்…”

“டாக்டர்கிட்ட என்ன பேசிட்டிருந்தீங்க?”

“அது… வந்து… வந்து…”

“ம்… சொல்லுங்க!”

“பெரிய உயிர், சின்ன உயிர் ரெண்டையும் எப்பாடுபட்டாவது காப்பாத்திக் கொடுக்கச் சொன்னேன்.”

“பொய்…”

“தி… திலகம்…”

“நீங்க டாக்டர்கிட்ட பேசினதை நான் கேட்டுட்டேன்.”

“தி… திலகம்…”

“பெரிய உயிர் போனாலும் பரவாயில்லை… ஆபரேஷன் செய்து குழந்தையை எப்படியாவது காப்பாத்துங்கன்னு சொல்றதுக்கு
உங்களுக்கு எப்படி மனசு வந்தது?”

“தி… திலகம்… நான் எதுக்காக அப்படி டாக்டர்கிட்ட சொன்னேன்னா…”

திலகம் குரலைத் தாழ்த்திக்கொண்டு ஆவேசமாய்க் குறுக்கிட்டாள்: “இதுவே உங்க பொண்ணாயிருந்தா இப்படியொரு வார்த்தை உங்க வாயிலிருந்து வருமா?”

மாசிலாமணி அதிர்ந்துபோய்ப் பேச வாயெழாமல் நிற்க, திலகம் கண்களில் புதிதாய்ச் சுரந்துவிட்ட நீரோடு தொடர்ந்தாள்: “நம்ம மகன் ஹரிஹரன் இறந்துபோன விஷயத்தை கீதாம்பரியால தாங்கிக்க முடியாதுன்னு நீங்களாகவே நினைச்சுக்கிட்டு டாக்டர்கிட்ட இப்படிச் சொன்னது சரியில்லை.”

“டாக்டரம்மா ரெண்டு உயிரையுமே காப்பாத்த முயற்சி எடுத்துக்கறேன்னு சொல்லிட்டுத்தானே லேபர் வார்டுக்குப் போயிருக்காங்க?”

“ஒருவேளை டாக்டரம்மாவுக்கு மனசு மாறிட்டா…?”

“திலகம்… நீ என்ன சொல்றே?”

“ஆபரேஷன் சிக்கலாகிப் பெரிய உயிரா, சின்ன உயிரான்னு கேள்வி எழும்போது டாக்டரம்மா நீங்க சொன்னதை மனசுல வெச்சுக்கிட்டு ஒருவேளை குழந்தையை மட்டும் காப்பாத்த முடிவெடுத்துட்டா…?”

“டாக்டரம்மா அப்படிப் பண்ணமாட்டாங்க!”

“ஒருவேளை பண்ணிட்டா…?”

“அந்த அம்மா பேசினதைத்தான் நீ கேட்டியே? டாக்டர் தொழிலோட கெளரவத்தை சிதைக்கிற மாதிரி அவங்க நடந்துக்க மாட்டாங்க.”

“நடந்துட்டா…?”

மனைவியை வெறித்தார் மாசிலாமணி.

“இப்ப என்னை என்ன பண்ணச் சொல்றே?”

“கீதாம்பரியோட உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படக்கூடாதுன்னு உள்ளே போயிருக்கிற டாக்டருக்குத் தகவல் கொடுங்க!
ஆபத்தானது என்றால் ஆப்ரேஷனை நிறுத்தச் சொல்லுங்க!”

“திலகம்… உன்னோட பயம் அநாவசியமானது. எந்த உயிர் முக்கியம்னு டாக்டருக்குத் தெரியாதா என்ன?”

“எனக்கு நம்பிக்கை இல்லீங்க. மனசு பூராவும் ‘பக்… பக்’ன்னு இருக்கு. லேபர் வார்டுக்குள்ளே இன்டர்காம் வசதி இருக்கும். முன்னாடி இருக்கிற டெலிபோன் ஆபரேட்டர் ரூமுக்குப் போய் அங்கிருந்து லேபர் வார்டில் இருக்கிற டாக்டரம்மாகிட்ட இன்டர்காம் மூலமா பேசிடலாமே…”

“திலகம்… இது தேவையில்லாதது. நீ பயப்படற மாதிரி எதுவும் நடக்காது.”

“இப்ப நீங்க போகப் போறீங்களா… இல்லை நான் போய்ப் பேசட்டுமா?”

“நா… நானே போறேன்.”

“போங்க… சீக்கிரமாப் போங்க!”

மாசிலாமணி வேக நடை போட்டு, ஒரு நிமிஷ நடையில் வராந்தாவை விழுங்கி, டெலிபோன் ஆபரேட்டர் இருந்த அறைக்கு வந்தார்.

மாத நாவல் படித்துக் கொண்டிருந்த டெலிபோன் ஆபரேட்டர் பெண் நிமிர்ந்தாள்.

“யெஸ்…”

“லேபர் ரூம்ல இருக்கிற டாக்டரம்மாகிட்டே இன்டர்காம்ல பேசணும்”

“ஸாரி சார்! காலையிலேருந்தே இன்டர்காம் ஏதோ ரிப்பேர். வேலை செய்யலே. நர்ஸ் யாராவது வெளியே வந்தா டாக்டரம்மாவுக்குத் தகவல் சொல்லி அனுப்புங்க!”

–தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top