“என்ன சொன்னே… டெலிபோன் டைரக்டரியைப் புரட்டி நம்பர் தேடிட்டிருந்தாரா?”
இன்ஸ்பெக்டர் மல்ஹோத்ரா குரலை உயர்த்திக் கொண்டு கேட்க, பேரர் யாதவ் தலையசைத்தான்.
“ஆமா ஸாப்!’
“நம்பர் கிடைச்சு போன் பண்ணினாரா?”
“இல்லை. சாப்பாட்டுத் தட்டை நான் உள்ளே கொண்டுபோய் டீபாய் மேலே வெச்சதும் டைரக்டரியை அப்படியே போட்டுட்டுச் சாப்பிட வந்தார். நான் கீழே கேட்டரிங் செக்ஷனுக்குப் போய்ப் பால் கொண்டு வர்றதுக்குள்ளே, அவர் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு டெலிபோனுக்குப் பக்கத்துல உட்கார்ந்து டயல் எண்களைத் தட்டிக்கிட்டு இருந்தார். நான் அவர் சாப்பிட்ட இடத்தைச் சுத்தம் பண்ண ஆரம்பிச்சேன்…”
“போன்ல ஹரிஹரன் யார்கிட்டயாவது பேசினாரா?”
“அவருக்கு வேற ஏதாவது தேவைப்படுமான்னு கேட்கறதுக்காக ஒரு நிமிஷம் தயங்கி நின்னபோது, அவர் டெலிபோன் எக்ஸ்சேஞ்சுக்கு டயல் பண்ணி, ஒரு பேரைச் சொல்லி நம்பர் கேட்டுக்கிட்டிருந்தார்…”
ரமணி பதட்டமாகக் குறுக்கிட்டான்.
“ஹரிஹரன் யாரோட பேரைச் சொன்னார்?”
யாதவ் தன் நெற்றியையும் மூக்கையும் யோசனையாகத் தேய்த்துவிட்டுத் தலையாட்டினான்.
“ஞாபகமில்லை ஸாப்!”
“கொஞ்சம் யோசி!”
“அவர் டெலிபோன்ல பேசும்போது வேகமா இங்கிலீஷ்ல பேசினார் ஸாப். காதுல சில வார்த்தைகள் விழவேயில்லை. ஆனா, ஏதோ ஒரு போன் நம்பரைத் தெரிஞ்சுக்க முயற்சி பண்றார்னு மட்டும் புரிஞ்சுது.”
“அவர் கேட்ட நம்பர் கிடைச்சுதா?”
“கிடைச்சதுன்னுதான் நினைக்கிறேன். ஏன்னா, நான் ரூமைவிட்டு வேளியே வரும்போது அவர் போன்ல தன்னோட குரலை உயர்த்தி ‘ம்… அதே பெயர்தான். நம்பர் சொல்லுங்க மேடம்… நோட் பண்ணிக்கிறேன்னு’ சொல்லிக்கிட்டு இருந்தார்.”
“நம்பரை எதுல நோட் பண்ணினார்?”
“தெரியலை ஸாப்! கையில் பால்பாயிண்ட் பேனா வெச்சிருந்தார். எதுல நோட் பண்ணினார்னு நான் கவனிக்கலை.”
மல்ஹோத்ரா தன் சதைப்பிடிப்பான கன்னத்தை இடதுகை விரல்களால் நிரடிக்கொண்டே ரமணியையும் திவாகரையும் ஏறிட்டார்.
“கையில் பால்பாயிண்ட் பேனா வெச்சிருந்த ஹரிஹரன், எக்ஸ்சேஞ்சில் சொன்ன டெலிபோன் நம்பரை, பாத்துக்கிட்டிருந்த டைரக்டரியிலேயோ அல்லது ரூம்ல கிடைச்ச ஏதாவது துண்டுப் பேப்பரிலேயோ எழுதியிருக்கலாம்னு நினைக்கிறேன்.”
“ரூம்ல போய்ப் பார்த்துடலாமா ஸாப்?”
“வாங்க…”
பேரர் யாதவைக் கூட்டிக்கொண்டு லிஃப்ட் இருந்த பக்கமாக மூன்று பேரும் நகர்ந்தார்கள்.
லிஃப்ட்டில் முப்பது விநாடிப் பயணம்!
ஐந்தாவது மாடி வந்தது.
ஹரிஹரன் தங்கியிருந்த 527-ஆம் எண் அறையின் நுட்பமான லாக், மல்ஹோத்ராவின் கையிலிருந்த சாவிக்குக் கட்டுப்பட்டுச் சத்தமில்லாமல் பின்வாங்கியது.
உள்ளே நுழைந்தார்கள்.
பெரிய அறை. சோபாவைத் தாண்டிக் கீழே பரப்பியிருந்த கம்பளத்தை மிதித்துக்கொண்டு டெலிபோனுக்குப் பக்கமாகப் போனார் மல்ஹோத்ரா. டீபாயின்மேல் டெலிபோன் டைரக்டரி தெரிய, வலது பக்கமாய் மேஜை… நீள்செவ்வகத்தில் ஒரு நிலைக்கண்ணாடி.
“ஹரிஹரன் எங்கே உட்கார்ந்து போன் பண்ணினார்…?” என்று மல்ஹோத்ரா கேட்க, யாதவ் பாலிவினைல் நாற்காலியைக் காட்டினான்.
“இதுல உட்கார்ந்துதான் ஸாப்!”
மல்ஹோத்ரா அந்த நாற்காலியில் சாய்ந்து, டெலிபோனைத் தொட்டு ரிஸீவரை எடுத்துக்கொண்டார். வலதுகைக்கு பால்பாயிண்ட் பேனாவைக் கொடுத்தார்.
“இந்தப் போஸ்தானே…?”
“ஆமா ஸாப்!”
“மிஸ்டர் ரமணி!”
“சார்…”
“உங்க பிரதர் ஹரிஹரனோட ஹேண்ட்ரைட்டிங் உங்களுக்குப் பரிச்சயம்தானே?”
“ஆமா சார்!”
“அந்த டெலிபோன் டைரக்டரியை எடுத்து, அட்டையிலிருந்து கடைசிப் பக்கம் வரைக்கும் கொஞ்சம் நிதானமாப் புரட்டிப் பார்த்து, ஹரிஹரனோட கையெழுத்துல ஏதாவது நம்பர் இருக்கான்னு பாருங்க!”
ரமணி டெலிபோன் டைரக்டரியை எடுத்துக்கொள்ள, மல்ஹோத்ரா திவாகரை ஏறிட்டார்.
“மிஸ்டர் திவாகர்! யூ டூ ஒன் திங்… இந்த ரூமைக் கொஞ்சம் அலசி, நம்பர் எழுதப்பட்ட துண்டுப் பேப்பர் ஏதாவது கிடைக்குதான்னு பாருங்களேன்!…”
திவாகர் தலையசைத்து வார்ட்ரோப் பக்கம் போக, மல்ஹோத்ரா கையில் பால்பாயிண்ட் பேனாவோடு பார்வையைச் சுற்றும்முற்றும் போட்டார்.
‘ஹரிஹரன் அந்த டெலிபோன் நம்பரை அவசரத்துக்கு எங்கே குறித்து வைத்திருப்பான்…?’
பால்பாயிண்ட் பேனா பிடித்திருந்த கை எட்டுகிற தூரத்தில் உள்ள டீபாயையும் மேஜையையும் உற்றுப் பார்த்தார். ரோஸ்வுட்டில் செய்யப்பட்ட அந்த இரண்டுமே பாலீஷ் பூச்சோடு பளபளப்பாய், ஒரு கீறல் இல்லாமல் தெரிந்தன! எண்கள் எதுவுமே தட்டுப்படவில்லை.
அறைக்குள் சில நிமிடங்களுக்கு வேண்டாத நிசப்தம். ரமணி டெலிபோன் டைரக்டரியைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்க, திவாகர் சோபாவுக்கு அடியில் குனிந்து, துண்டுப் பேப்பர் ஏதாவது தட்டுப்படுகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.
கைகளைக் கட்டியபடி சுவரோரமாக நின்றிருந்த பேரர் யாதவ், தன் பங்குக்குப் பார்வையைச் சுழற்ற… இரண்டாவது சுற்றில் பார்வை சட்டென்று ஆணியடித்த மாதிரி நின்றது!
உதடுகள் அனிச்சைச் செயலாக வார்த்தைகளை உதிர்த்தன.
“ஸாப்… அங்கே பாருங்க!”
ஹரிஹரனை நெருங்கி, அவன் முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு ஜோஷியை ஏறிட்டாள் ஆர்யா.
“இது மெட்ராஸ் எலியா சார்?”
“ஆமா!”
“பெரிய இடம் மாதிரி தெரியுது…”
“மிகப் பெரிய இடம்… கைவசம் நாலஞ்சு கம்பெனி இருக்கு. எல்லாமே ரெப்யூட்டட் கன்சர்ன்ஸ். வெளிநாட்டுக்கு அடிக்கடி பறக்கிற ஜாதி. பிஸினஸ் ரீதியா கடந்த ரெண்டு மாசமாத்தான் என்கூடப் பழக்கம்.”
“கொஞ்சம் காஸ்ட்லி எலியாத் தெரியுது… பின்னாடி ஏதும் பிரச்சினை வந்துடாதே சார்?”
“வராது.”
“சார், இன்னிக்கு டாக்டருக்கும் சரி… எனக்கும் சரி… நாள் சரியில்லை. ஏதேதோ பிரச்சினைகள். ராகினியை வெச்சு ஜீன் டிரான்ஸ்ஃபர் முயற்சிகளைப் பண்ணிட்டிருக்கும்போதே நிஷா வந்தா… அவளை ஃபேஸ் பண்ணி கேஜ் ரூம்ல அடைச்சதும், விட்டல் முளைச்சான்…
அவனை ஹேண்டில் பண்ணும்போது விபரீத மரணம்… விட்டலோட பாடியை டிஸ்போஸ் பண்றதுக்காக உங்ககிட்ட வந்தா, நீங்க ஒரு எலியை வெச்சுக் காத்துக்கிட்டிருக்கீங்க… இந்த ராத்திரி கழிஞ்சு பொழுது விடியறதுக்குள்ளே, இன்னும் எத்தனை பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்குமோன்னு அடி வயித்துல ஒரு கலக்கம்.”
ஜோஷி நெற்றி சுருங்க நிமிர்ந்தார்.
“விட்டலா… யாரது…?”
“நிஷாவைத் தேடிக்கிட்டு வந்தவன்… நிஷாவைக் காதலிக்கிற முயற்சியில் அவ எங்கே போனாலும் ஃபாலோ பண்ணிக்கிட்டிருந்த ரோமியோ… டாக்டர் பங்களாவுக்கு நிஷா வந்தபோது அவனும் பின்தொடர்ந்து வந்திருக்கான்… உள்ளே போன நிஷா வெளியே வரலைன்னு தெரிஞ்சதும் ஆர்வம் தாங்காம உள்ளே வந்து பார்த்திருக்கான்…”
“லாப்புக்குள்ளே நுழைஞ்சவன் அவன்தானா?”
“ஆமா! உயிரோடு பிடிச்சு கேஜ் ரூமுக்குக் கொண்டு போக நினைச்சோம்… முடியலை! டாக்டரோட துப்பாக்கித் தோட்டாவுக்கு எலி எதிர்பாராதவிதமா பலியாயிடுச்சு. பாடியை பங்களாவுக்குள்ளே வெச்சுக்கிட்டிருக்கிறது ஆபத்துன்னு டாக்டர் அபிப்பிராயப்பட்டு, அதை டிஸ்போஸ் பண்ற வேலையை உங்ககிட்ட ஒப்படைக்கச் சொன்னார்.”
“பாடி எங்கே?”
“கார் டிக்கியில்!”
“டாக்டர் பங்களாவிலேயே இருந்துக்கிட்டாரா?”
“ஆமா! ராகினியை வெச்சு இன்னிக்கு ஆரம்பிக்க இருந்த எக்ஸ்பரிமெண்ட் ஷெட்யூலை இந்த ராத்திரிக்குள்ளே நடத்தி முடிக்கலைன்னா, எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காது. ஸோ… எக்ஸ்பரிமெண்ட்டை கன்டினியூ பண்ண டாக்டர் பங்களாவிலேயே இருந்துக்கிட்டு, என்னை மட்டும் அனுப்பி வெச்சார்.”
ஜோஷி புன்னகைத்தார்.
“நீ செத்த எலியைக் கொண்டு வந்திருக்கே… நான் உனக்காக இங்கே உயிரோடு இருக்கிற ஒரு எலியோடு காத்துக்கிட்டிருக்கேன்… எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்கலாமா?”
ஹரிஹரனை ஒரு தடவை பார்த்துவிட்டு ஜோஷியை ஏறிட்டாள் ஆர்யா.
“பொறி வெச்சுப் பிடிச்ச எலியா? இல்லை, தானாக வந்து மாட்டிக்கிட்ட எலியா?”
ஜோஷியின் புன்னகை பெரிதாயிற்று.
“தானாக வந்து மாட்டிக்கிட்ட எலி.”
“எப்படி…?”
“உனக்குத்தான் தெரியுமே ஆர்யா… மார்கெட்டுல எந்தக் கம்பெனியோட ப்ராடக்ட் ஃபாஸ்ட்டா மூவ் ஆகுதோ, அதே மாதிரி போலி ப்ராடக்ட்டைத் தயார் பண்ணி மார்க்கெட்டுல விட்டுப் பணத்தைச் சம்பாதிக்கிறது என்னோட வியாபாரக் கொள்கைன்னு…”
“ஆமா…”
“அதே மாதிரி ஹரிஹரனோட கம்பெனி ப்ராடக்ட் ஒண்ணை மார்க்கெட்டுல தயார் பண்ணி விட்டிருக்கேன். ஜெர்மனிக்குப் புறப்பட்டுப் போக பம்பாய்க்கு வந்த ஹரிஹரன், அது சம்பந்தமா என்கிட்டே பேசறதுக்காக போன் பண்ணிப் பார்த்திருக்கான்… போன்ல நான் கிடைக்காததுனால நேர்லேயே வந்துட்டான். ஆரம்பத்துல பேச்சுவார்த்தை காஷுவலாகத்தான் இருந்தது. போகப் போக ஹரிஹரன் பேச்சுல உஷ்ணம். ஒரு கட்டத்துல கைகலப்பு. சத்தம் கேட்டு உள்ளே வந்த வாட்ச்மேன் வால் சந்த், கையிலிருந்த தடியால ஹரிஹரன் மண்டையில ஒரே போடு… ஆள் பேச்சுமூச்சில்லாம சாய்ஞ்சுட்டான்” சொன்ன ஜோஷி, வெளிப்பக்கம் பார்த்துக் குரல் கொடுத்தார்.
“வால் சந்த்..!”
அவன் உடனே வந்தான். இந்தியில் பவ்யமாக, “ஐயா…! என்றான்.
“பக்கத்துல வா!”
போனான்.
“ஆர்யா வந்த காரோட டிக்கியைத் திறந்து, உள்ளே இருக்கிற பாடியைக் கொண்டாந்துடு!”
“சரிங்கய்யா!”
“அந்தக் காரியத்தைச் செஞ்சு முடிச்சதும், இந்த ஆளைக் கொண்டுபோய் கார் பின்ஸீட்டுக்குக் கீழே சொருகிடு!”
“சரிங்கய்யா!” வால் சந்த் தலையசைத்துவிட்டு வெளியேற, ஜோஷியிடம் திரும்பினாள் ஆர்யா.
“சார்… இந்த ஹரிஹரன்… இன்னிக்கு ராத்திரி இங்கேயே இருக்கட்டும். நாளைக்குக் காலையில் நானும் டாக்டரும் வந்து
எடுத்துக்கிட்டுப் போயிடறோம்.”
“ஏன்?”
“கார்ல போகும்போது ஹரிஹரனுக்கு எந்த நிமிஷமும் நினைவு திரும்பலாம். அப்படி நினைவு திரும்பும்போது, காரை ஓட்டிக்கிட்டுப் போற என்னால அவனைச் சமாளிக்க முடியாது.”
“எனக்கு அது தெரியாதா என்ன? வால் சந்த் உனக்குத் துணையா பங்களா வரைக்கும் வந்து, ஹரிஹரனை டாக்டர்கிட்ட ஒப்படைச்சுட்டுத்தான் வருவான்.”
ஆர்யாவின் முகத்தில் ஒரு இன்ஸ்டன்ட் நிம்மதி பரவியது. “அப்படீன்னா சரிதான்.”
“அந்த விட்டலைப் பொழுது விடியறதுக்குள்ளே டிஸ்போஸ் பண்றது என்னோட வேலை… இந்த ஹரிஹரனை ஜீன் டிரான்ஸ்ஃபர் எக்ஸ்பரிமெண்ட்டுக்கு உபயோகப்படுத்திக்கிட்டு உடம்பை இல்லாமப் பண்றது உங்க வேலை… எந்தக் காரணத்தைக் கொண்டும் ஹரிஹரன் தப்பிவிடக்கூடாது!”
ஆர்யா சின்னதாகப் புன்னகைத்தாள்.
“டாக்டர்கிட்ட எந்த எலி மாட்டினாலும் சரி… அதுக்கு ரெண்டு நாள்ல கபாலமோட்சம்தான். அந்த ஒரு வழிப்பாதையில் போன எந்த எலியும் இதுவரைக்கும் திரும்பி வந்ததே இல்லை.”
வால் சந்த், ரத்தம் தோய்ந்த விட்டலின் உடலை அலட்சியமாகத் தோளில் போட்டுக்கொண்டு வந்தான்.
“ஐயா… எங்கே கிடத்தறது?”
“வேண்டாத சாமான்கள் போட்டு வெச்சிருக்கிற பின்னாடி ரூம்ல கிடத்திட்டு உடனே வா! இந்த ஹரிஹரனை உடனடியாக டாக்டர் பங்களாவுக்குக் கொண்டுட்டுப் போகணும்.”
வால் சந்த் தலையசைத்துவிட்டு வேகமாக பங்களாவின் பின்பக்கம் நோக்கிப் போக, ஜோஷியிடம் ஏதோ கேட்க வாயைத் திறந்தாள் ஆர்யா.
அந்த முனகல் சத்தம் கேட்டது.
“ம்… ம்… ம்…”
துணுக்குற்று இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.
சுவரோரமாக விழுந்திருந்த ஹரிஹரன், இரண்டு கைகளாலும் நெற்றியைப் பிடித்தபடி எழுந்து உட்கார முயற்சித்துக் கொண்டிருந்தான். ஜோஷி, கண்களில் கோபச் சிவப்பு பரவ… ஹரிஹரனை நோக்கி வேகமாய்ப் போனார்!
–தொடரும்…