Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » நீல நிற நிழல்கள் (6)

நீல நிற நிழல்கள் (6)

பெரிய குங்குமப்பொட்டோடு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவில் சிரித்த அண்ணி கீதாம்பரியைப் பார்த்ததும் ரமணியின் கண்களை நீர் கீறியது. இதயத்தின் ஓரம் அறுபட்டது.

ரமணியின் தோளைத் தொட்டார் மல்ஹோத்ரா. “போட்டோவில் இருக்கிறது மிஸஸ் ஹரிஹரன்தானே?”

ரமணி தலையசைத்தான்.

“எனி கிட்ஸ்…?”

“நவ் ஷீ ஈஸ் கேரியிங்.”

“பாப்ரெ!” நெற்றியைக் கீறிக்கொண்டார். ரமணி, தொண்டையடைக்கிற குரலில் கேட்டான்.

“பாடி எப்போ கிடைக்கும் சார்?”

“இன்னும் போஸ்ட்மார்ட்டம் முடியலை. எப்படியும், பி.எம் முடிஞ்சு உங்க கைக்கு பாடி கிடைக்க சாயந்திரம் ஆறு மணியாயிடும். பட், பாடியை நீங்க மெட்ராஸுக்குக் கொண்டுபோக முடியாதே!”

“இல்லை; இங்கேயே தகனம் பண்ணிட்டுப் போகத்தான் வந்திருக்கோம்.”

“ஃபேமிலி மெம்பர்ஸ் வேற யாரும் வரலையா?”

“வரலை; நாங்க ரெண்டு பேர் மட்டும்தான்.”

“ஹரிஹரன் தங்கியிருந்த சில்வர் ஸாண்ட் ஓட்டலுக்குப் போனீங்களா?”

“இல்லை.”

“நீங்க உடனே கிளம்பி அங்கே போங்க! ஹரிஹரன் ரூம்ல இருந்த அவரோட திங்க்ஸையெல்லாம் கலெக்ட் பண்ணிக்குங்க! பாடியை வாங்கித் தகனம் பண்ணின பிறகு உடனடியா நீங்க மெட்ராஸுக்குக் கிளம்ப முடியாது. இந்த ஆக்ஸிடெண்ட் கேஸை ஃபைல் பண்ணி ஃபர்தர் ப்ரொஸீடிங்க்ஸுக்கு அனுப்ப வேண்டியிருக்கிறதுனால உங்க உதவி தேவைப்படும்.”

“எத்தனை நாள் இங்கே இருக்க வேண்டி வரும்?”

“அதிகபட்சமா ஐந்து நாள். அதுக்கப்புறமா கேஸ் கோர்ட்டுக்குப் போன பின்னாடி மாசத்துக்கு ஒரு தடவை வரவேண்டியிருக்கும்.”

“இன்ஸ்பெக்டர்!”

“என்ன?”

“இந்த ஆக்ஸிடெண்ட் கேஸை ஃபைல் பண்ண வேண்டாமே!”

“அதெப்படிப் பண்ணாம இருக்க முடியும்? அந்த டாங்கர் லாரிக்காரனைக் கோர்ட்டுல வைத்துத் தண்டனை வாங்கித் தர்றது எங்க ட்யூட்டியாச்சே!”

மார்ச்சுவரியை விட்டு வெளியே வந்தார்கள்.

“நீங்க ஓட்டல்ல போய் இருங்க! போஸ்ட்மாட்டம் முடிஞ்சு உங்களுக்கு போன் பண்றேன். வந்து பாடியை வாங்கிக்கலாம்.”

ரமணியும் திவாகரும் தலையாட்டிவிட்டுக் கனத்த இதயங்களோடு ஹாஸ்பிட்டலின் நுழைவுவாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். திவாகர் கேட்டான்.

“ரமணி! உங்கப்பாவுக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொல்ல வேண்டாமா?”

“அடுத்த வேலை அதுதான். வெளியே போனதும் ஒரு எஸ்.டீ.டி பூத்துக்குள்ளே நுழையணும்.”

********

சென்னை…

டெலிபோன் மணி அடித்தது. நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடியிருந்த மாசிலாமணி பதற்றமாய் நிமிர்ந்து, கைகள் நடுங்க ரிஸீவரை எடுத்துக் காதுக்குக் கொடுத்தார்.

“ஹலோ!…”

“அப்பா! நான் ரமணி பேசறேன்.”

மாசிலாமணியின் பதற்றம் அதிகரித்தது. “ரமணி! ஒரு நிமிஷம் லைன்லயே இரு!” சொன்னவர், சுவரில் சாய்ந்து அழுத கண்களோடு உட்கார்ந்திருந்த மனைவி திலகத்திடம் திரும்பினார்.

“திலகம்! பம்பாயிலிருந்து ரமணி பேசறான். கீதாம்பரி வீட்டுல எங்கே இருக்காள்னு பாரு!”

திலகம், அழுத கண்களைச் சேலைத் தலைப்பால் துடைத்துக்கொண்டே அறைக்கு வெளியே சென்று எட்டிப்பார்த்துவிட்டு மறுபடியும் உள்ளே வந்தாள். “சிட்அவுட்ல உட்கார்ந்து ஒயர் பேக்கைப் பின்னிட்டிருக்கா.”

“அவளை ஒரு பார்வை பார்த்துக்க! நான் போன்ல ரமணிகூடப் பேசிடறேன்.”

திலகம் கண்ணீரோடு தலையாட்டிக் கொண்டே அறை வாசலில் நின்றுகொள்ள, மாசிலாமணி டெலிபோனில் பேச ஆரம்பித்தார்.

“சொல்லு ரமணி!”

“அப்பா! நானும் திவாகரும் இப்போ பம்பாய் ஜி.ஹெச்சுக்கு வெளியே இருக்கிற டெலிபோன் பூத்திலிருந்து பேசிட்டிருக்கோம். அண்ணனோட பாடி இன்னுமும் போஸ்ட்மார்ட்டம் ஆகலை. பாடி கைக்குக் கிடைக்க எப்படியும் சாயந்திரம் அஞ்சு மணியாயிடும் போலிருக்கு.”

மாசிலாமணி தொண்டை அடைத்துக்கொண்ட குரலில் கேட்டார். “ஆக்ஸிடெண்ட் எப்படி நடந்ததுன்னு கேட்டியா?”

“கேட்டேன். நேத்து ராத்திரி பத்தேகால் மணி சுமாருக்கு ப்ரீப்கேஸை எடுத்துட்டு அண்ணன் வெளியே கிளம்பியிருக்கார். டாக்ஸி ஸ்டாண்டுக்குப் போறதுக்காக ஓட்டலுக்கு எதிரேயிருந்த ரோட்டை க்ராஸ் பண்ணும்போது வேகமா வந்த டாங்கர் லாரி மோதியிருக்கு.”

“ராத்திரி பத்தேகால் மணிக்குமேல யாரைப் பார்க்கறதுக்காக ஹரி வெளியே போனான்?”

“பிஸினஸ் விஷயமா யாரையாவது பார்க்கப் போயிருக்கலாம்பா.”

அறை வாசலில் நின்றிருந்த திலகம் சட்டென்று குரல் கொடுத்தாள்.

“என்னங்க! கீதாம்பரி சிட் – அவுட்டிலிருந்து எந்திரிச்சு வர்றா. போனை வெச்சுடுங்க!”

“வரட்டும் திலகம்! ரிஸீவரை அவகிட்ட குடுத்து ரமணியை, ஹரி பேசற மாதிரி பேசச் சொல்லலாம்.”

“இந்த விஷப் பரீட்சையெல்லாம் வேண்டாங்க! எனக்கு உடம்பெல்லாம் நடுங்கறது.”

“வேண்டாம்னா எப்படி திலகம்? பம்பாயிலிருந்து ஹரி போன் பண்ணிப் பேசுவான்னு காலையில ஆறு மணியிலிருந்து கீதாம்பரி காத்துக் காத்து அலுத்துப் போயிட்டா. இனியும் ஹரி போன் பண்ணலைன்னா அவ சும்மா இருக்கமாட்டா. உன்னையும் என்னையும் துளைச்சு எடுத்துடுவா.”

“நான் உள்ளே போயிடறேன். எனக்கு ‘வெட வெட’ன்னு வருது.” திலகம் அழுகிற குரலில் சொல்லிக்கொண்டே பக்கத்து அறைக்குள் நுழைந்துவிட, மாசிலாமணி டெலிபோனில் பேசினார்.

“ரமணி! உன் அண்ணி வந்துட்டிருக்கா. அவ கையில ரிஸீவரைக் கொடுக்கப்போறேன். நீ ஹரி மாதிரி பேசிடு.”

“அ… அப்பா…!” மறுமுனையில் ரமணி திணற,

“போன்ல யாரு மாமா?”

கீதாம்பரி பின்னிய ஒயர்பேக்கோடு அறைக்குள் வந்தாள்.

********

டாக்டர் சதுர்வேதி, நிஷாவின் காதுக்குப் பக்கத்தில் குனிந்து சிரித்தார்.

“நாங்க ஒரு முக்கியமான எக்ஸ்பரிமெண்ட்டைக் கவனிக்க வேண்டியிருக்கு நிஷா. அதனால உனக்கு ஒரு நாலு மணி நேரத்துக்குக் கட்டாயத் தூக்கம். கலர் கலராக் கனவு வரும். தூங்கிடு!”

நிஷாவுக்கு உடம்பு தன்னைவிட்டுக் கழன்று போவதைப் போன்ற உணர்வு. கண்களுக்குள் ஒரு கிறக்கம் ஸ்லோமோஷனில் பரவ… கண்ணிமைகளை ஷட்டர்களைப் போல யாரோ கீழே இழுத்துப் பூட்டுப்போட்டார்கள். ஏதோ பேச முயன்று முடியாமல் அப்படியே தலை துவண்டாள்.

சதுர்வேதி, ஆர்யாவைப் பார்த்துச் சிரித்தார்.

“ஆர்யா!”

“டாக்டர்!”

“இதுவரைக்கும் நம்ம சோதனைச்சாலைக்கு வந்த எலிகளிலேயே இதுதான் ஆரோக்கியமான எலி.”

“புத்திசாலியான எலியும் கூட.”

“நம்ம அதிர்ஷ்டம், வலிய வந்து மாட்டியிருக்கு.”

“உள்ளே கொண்டுபோய்க் கேஜ்ல படுக்க வெச்சுடலாமா டாக்டர்?”

“ம்! நீ போய்க் கேஜ் ரூமைத் திறந்து வை! நான் அவளைத் தூக்கிட்டு வர்றேன்.”

ஆர்யா தலையாட்டிவிட்டு லாபரட்டரியின் கோடியில் இருந்த ஓர் அரைக்கதவை நோக்கிப்போக… சதுர்வேதி, நாற்காலியிலிருந்த கப்லிங்குகளை விடுவித்து நிஷாவை ஒரு புஷ்பம் போல ஏந்திக்கொண்டார்.

“வா, என் அழகான எலியே!”

நடந்தார்.

வலைக்கம்பிகளால் சூழப்பட்ட கேஜ் அறை வந்தது. ஆர்யா கட்டிலைச் சுத்தப்படுத்தி ஒரு பெட்ஸ்பிரெட்டை விரித்துப் போட்டிருக்க, அதன் மேல் படுக்க வைத்தார்.

அதே விநாடி…

பங்களாவுக்கு வெளியே காம்பெளண்ட் கேட்டுக்குப் பக்கத்திலிருந்து ஒரு கார் ஹார்ன் சத்தம் எழுந்தது.

“பீங்க்க்…”

ஆர்யாவைக் குழப்பமாகப் பார்த்தார் சதுர்வேதி.

“யாரு… இந்த நேரத்துல?”

“டெல்லிக்குப் போயிருந்த உங்க சன் விக்ரம் வந்திருப்பார்னு நினைக்கிறேன் டாக்டர்.”

“விக்ரமா? இருக்க முடியாது. காலையிலதான் டெல்லியிலிருந்து எனக்கு போன் பண்ணிப் பேசினான். பம்பாய்க்குத் திரும்ப இன்னும் நாலைஞ்சு நாள் ஆகும்னு சொன்னான்.”

“பீங்க்க்…”

மறுபடியும் கார் வெளியே இருந்து கூப்பிட்டது. இந்தத் தடவை சற்று நீளமான ஹார்ன் பிளிறல்.

“ஆர்யா! நீ கேஜ் ரூமைப் பூட்டிட்டு வா! நான் யார்ன்னு போய் பார்க்கிறேன். நமக்குப் பரிச்சயமானவர்களா இருந்தா மட்டும் நீ முன்னாடி வரலாம். இல்லேன்னா லாப்புக்குள்ளேயே இருந்துடு!”

“யெஸ் டாக்டர்!”

சதுர்வேதி, காரில் வந்திருப்பது யாராக இருக்கும் என்கிற குழப்பத்தை மனசின் மையத்தில் ஒட்டவைத்துக்கொண்டு, அறைகளைக் கடந்து பங்களாவின் முன்பகுதிக்கு வந்தார்.

மழையின் சீற்றம் கண்ணாடி ஜன்னல்களில் தெரிந்தது. கதவைத் திறந்து கொண்டு வெளியே எட்டிப்பார்த்தார். மழை மேகங்கள் சூழ்ந்த அந்தச் சாயந்திர இருட்டில், காம்பெளண்ட் கேட்டுக்கு வெளியே ஒரு கார் தெரிந்தது.

குடையை விரித்துக்கொண்டு, மழையில் இறங்கிக் காம்பெளண்ட் கேட்டை நோக்கிப் போனார்.

பக்கத்தில் போனதும் வெட்டிய மின்னலில் காரின் உடம்பு அடையாளம் தெரிந்தது.

கருநீல நிறக் கண்டஸா.

இது ஜோஷியின் கார் அல்லவா!

பதற்றமாய்க் கையிலிருந்த சாவியை உபயோகப்படுத்திப் பூட்டுக்கு விடுதலை கொடுத்து, கதவை விரியத் திறந்து விட்டுக் காருக்குப் பக்கத்தில் போனார். காரின் கண்ணாடி இறங்க… ட்ரைவிங் ஸீட்டில் இருந்த ஜோஷியின் முகம் தெரிந்தது. பளபளப்பான பணக்கார முகம். இந்தி பேசினார்.

“என்ன டாக்டர்… கேட்டை அதுக்குள்ளே பூட்டிட்டீங்க?”

“உள்ளே ஒரு முக்கியமான எக்ஸ்பரிமெண்ட். யாரும் வந்து தொந்தரவுபடுத்திடக்கூடாதுன்னு சீக்கிரமாவே கேட்டைப் பூட்டிட்டேன்.”

“நான் வந்து தொந்தரவு கொடுத்துட்டேனா?”

“அதெல்லாம் ஒன்றுமில்லை. நான் மேற்கொண்டிருக்கிற இந்த எக்ஸ்பரிமெண்ட் எல்லாமே உங்களுக்காகத்தானே? உள்ளே போய்க் காரை நிறுத்துங்க! கேட்டைச் சாத்திட்டு வர்றேன்.”

கார் உள்ளே போக…

சதுர்வேதி கேட்டைச் சாத்திவிட்டுப் போர்டிகோவுக்கு வந்தார். ஜோஷி கீழே இறங்கித் தன் வழுக்கை மண்டையில் ஒட்டியிருந்த மழைத்துளிகளைக் கர்ச்சீப்பால் ஒற்றிக் கொண்டிருந்தார்.

“வாங்க ஜோஷி!”

உள்ளே போனார்கள். “இன்னும் நாலைஞ்சு நாளைக்கு மழை விடாது போலிருக்கு.”

“பம்பாய் சாக்கடையாயிடும்!”

“ஆர்யா எங்கே?”

“ஐயாம் ஹியர் ஜோஷி சார்!” உள்ளேயிருந்து சிரித்துக்கொண்டே வெளிப்பட்டாள் ஆர்யா.

“எப்படியிருக்கே?”

“ஃபைன் சார்!”

வரவேற்பறையில் இருந்த சோபாக்களில் முக்கோணமாய் உட்கார்ந்தார்கள். ஜோஷி கண்ணாடியைக் கழற்றிக் கோட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டே கவலையான கண்களோடு சதுர்வேதியை ஏறிட்டார்.

“டாக்டர்! உங்க ஜீன் ட்ரான்ஸ்ஃபர் எக்ஸ்பரிமெண்ட் எந்த அளவில் இருக்கு?”

“சக்ஸஸ் ரேட் இப்போதைக்கு முப்பது பர்சென்ட். அடுத்த மாசத்துக்குள்ளே அதை அறுபது பர்சென்ட் பண்ணிடலாம்.”

“அப்படீன்னா, அடுத்த மாசம் என்னோட சன் நகுலை மூளைக்கோளாறிலிருந்து குணப்படுத்திடுவீங்களா?”

“ஷ்யூர்! உங்க சன் நகுலை ஜீன் ட்ரான்ஸ்ஃபர் மூலமா மூளைக்கோளாறிலிருந்து விடுதலை பண்ணி, அவனைப் பழைய நிலைமைக்குக் கொண்டுவரத்தானே இவ்வளவு எக்ஸ்பரிமெண்ட்டும்…”

“டாக்டர்! என்னோட கோடிக்கணக்கான சொத்துக்கு ஒரே வாரிசு நகுல்தான். அவனை மட்டும் நீங்க குணப்படுத்திட்டா, என்னோட ஃபீஸா ஒரு கோடி ரூபாயை உங்க காலடியில் கொட்டத் தயாராயிருக்கேன்.”

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top