திருக்குறள் கதைகள்:
தர்மலிங்கம் திருநின்றவூரில் பல ஆண்டுகளாக ஒரு ஜவுளிக் கடை நடத்தி வந்தார். கடைத்தெருவில் அவருடைய ஜவுளிக்கடை மட்டுமே இருந்ததால், நகரத்து மக்கள் அவரது கடையிலிருந்தே துணிமணிகள் வாங்கி வந்தனர். தர்மலிங்கம் வியாபாரத்தை சிறப்பாக செய்து ஏராளமாக செல்வம் சேர்த்தார்.
ஒருநாள் அதே கடைத்தெருவில் அவருக்குப் போட்டியாக மாணிக்கம் என்ற வெளியூர் இளைஞன் ஜவுளிக்கடையைத் திறந்தான். இளைஞர்களையும், பெண்களையும் கவரும் படி புதிய வகை துணிகளை அவன் விற்பனை செய்ததால், மக்கள் அங்கு குவிந்தனர். தர்மலிங்கத்தின் வியாபாரம் மந்தமாகியது.
மாணிக்கத்தின் மீது பொறாமை கொண்ட தர்மலிங்கம், அவன் வியாபாரத்தைத் தடுப்பதற்காக, விலை உயர்ந்த நவீன துணிமணிகளை இறக்குமதி செய்தார்.
கடையையும் பெரிதாக்கி, கண்கவரும் வகையில் அலங்காரம் செய்தார். சினிமா கலைஞர்களை வரவழைத்து தன் கடைக்கு விளம்பரம் செய்தார். இதனால் அவரது சொத்துக்கள் பெருமளவில் கரைந்தன.
ஆனாலும் குறைந்த லாபத்தில் அதிக விற்பனை என்ற கொள்கையைக் கொண்டிருந்த மாணிக்கத்தின் கடையில் தான் அதிகமாக வியாபாரம் நடந்தது.
அழுக்காறென ஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்
விளக்கம்: மற்றவர்கள் மீது பொறாமை கொள்ளும் ஒருவன், தன் செல்வத்தையெல்லாம் இழந்து தீய வழிகளில் செயல்பட்டு சீர்குலைவான்.