Home » சிறுகதைகள் » ஒரு பைசாவின் அருமை!!!
ஒரு பைசாவின் அருமை!!!

ஒரு பைசாவின் அருமை!!!

திருக்குறள் கதைகள்:

ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு மகன் பிறந்தான்.தவமிருந்து பெற்ற பிள்ளை என்று சபாபதி மிகவும் செல்லமாக வளர்த்தார். அதனால் அந்தச் சிறுவன் மிகவும் கர்வமும் அடங்காப் பிடாரித் தனமும் கொண்டு வளர்ந்தான்.

ஒரு நாளைக்குப் பத்துத்தரமாவது “கதிர்வேலு  கதிவேலு” என்று தன் மகனை அழைக்காமல் இருக்கமாட்டார் சபாபதி.இதுமட்டுமல்லாமல் அவன் பள்ளியில் செய்து விட்டு வரும் விஷமங்களை எல்லாம் கண்ணன் செய்த திருவிளையாடல் போல் ரசித்தார்.அவன் செய்யும் தவறுகளையும் சுட்டிக் காட்டித் திருத்தாது  மன்னித்து மறந்து வந்தார். அதனால் கதிர்வேலு மிகவும் பொல்லாத்  தனத்துடன்  வளர்ந்தான்.

சில வருடங்கள் கழிந்தன.கதிர்வேலுவின் கெட்ட செயல்களும் வளர்ந்தன. நிறைந்த செல்வம் இருந்ததால் அவன் செய்யும் தீய செயல்களையெல்லாம் செல்வ பலத்தால் மறைத்துவந்தான்.

சாகும் தருவாயில் சபாபதி மகனிடம் இனியேனும் யார் வம்புக்கும் போகாமல் தான் சேர்த்து வைத்திருக்கும்  நிறைந்த செல்வத்துடன் சுகமாக இரு என்று அறிவுரை சொன்னார்.

ஆனால் சபாபதி இறந்த பிறகும் கதிர்வேலு தன் தீய குணங்களை விடவில்லை.தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் அல்லவா?

இவன் அடிக்கடி தவறு செய்து விட்டு நீதிமன்றம் வருவதும் செல்வ பலத்தால் தண்டனை பெறாமல் தப்புவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.அவ்வூர் நீதிமன்ற நீதிபதி இவனுக்கு எப்படியும் தண்டனை வழங்கி அதை இவன் அனுபவிக்கும்படி செய்யவேண்டும் என நினைத்தார். ஆனால் பொய் சாட்சிகளை வைத்து குற்றங்களிலிருந்து மீண்டு விடுவான்.

ஒரு முறை அவ்வூரில் இருந்த விவசாயிக்குக் கடன் கொடுத்ததாகப் பொய் வழக்குப் போட்டான். அவன் நிலத்தை அபகரிக்கத் திட்டம் போட்டான். வழக்கு நீதி மன்றத்திற்குச் சென்றது.

நீதிபதி வழக்கை விசாரித்தார். இதை நேரில் பார்த்ததாகச் சொன்ன  விவசாயியை அழைத்து வந்து விசாரித்தார். அவனும் கதிவேலுவிடம் பணம் வாங்கிக் கொண்டு பொய்சாட்சி சொல்வதற்காக நீதிபதிமுன் நின்றான்.

அப்போது கதிர்வேலுவின் பணியாள் கட்டுக் கட்டாகப் பணத்தைக் கதிர்வேலுவிடம் கொடுப்பதை நீதிபதி கவனித்தார். இவன் அபராதப் பணத்துடன் வந்துள்ளான்.எனவே இவன் குற்றம் செய்தவன் என்பது தெரிகிறது. இம்முறை இவனைத் தப்பவிடக்கூடாது என முடிவு செய்தார்.

கதிர்வேலு அழைத்து வந்திருந்த பொய் சாட்சியை  நீதிபதி விசாரணை செய்தார். அந்த விவசாயி பலநாட்களாக மனதுக்குள் கதிர்வேலுவுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தான். அதனால் நீதிபதியிடம் உண்மையைக் கூறியதோடு தனக்கு அவன் லஞ்சம் கொடுத்துக் கூட்டிவந்ததையும் கூறினான்.

“பொய் சாட்சி சொல்ல பணம் வாங்கிக் கொண்டாயா?”

“ஐயா, மன்னிக்கணுங்க. நான் பணம் வாங்கினது நிஜம் ஆனா, நான் வரலையின்னா வேறே ஆள் வந்து இவனுக்கு சாதகமா சாட்சி சொல்லிடுவானே. அதனால நானே வந்திட்டனுங்க. இதோ இருக்குதுங்க அவரு கொடுத்தபணம்.” என்று ரூபாயை நீதிபதியிடம் கொடுத்தான்.

நீதிபதி கதிர்வேலுவிடம் “இப்போது உன் குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா இல்லையா?”என்று கேட்க கையும் களவுமாகப் பிடிபட்டதால் கதிர்வேலு அமைதியாக நின்றான்.

“நீ செய்த குற்றத்திற்கும் லஞ்சம் கொடுத்து பொய் சாட்சியை அழைத்து வந்ததற்கும் உனக்கு அபராதம் விதிக்கப் போகிறேன்.” என்றார்.

அதுவரை கவலையோடு நின்றிருந்தவன் நீதிபதியின் இந்தச் சொற்களைக் கேட்டு முகம் மலர்ந்தான். “ஐயா,இந்தக் குற்றத்துக்கு நீங்க எவ்வளவு வேணும்னாலும் அபராதம் விதிங்க ஐயா. நான் இப்பவே கட்டிடறேன்.” என்றான் கர்வமாக.

அவன் மடியில் கட்டுக் கட்டாகப் பணம் இருந்ததே அதுதான் காரணம்.

நீதிபதி புன்னகையுடன், “நீ யாரிடமும் கேட்கக் கூடாது. உன்கையிலிருந்து பணத்தைக் கட்டவேண்டும் .பிறகு பின்வாங்கக் கூடாது.”என்றார்.

சரியென்று தலையை அசைத்தான் கதிர்வேலு.

“அப்படியானால் ஒரே ஒரு பைசாவை அபராதமாகக் கட்டிவிட்டுப்போ. இல்லையென்றால் ஒரு வருடம் சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டும்.”

திடுக்கிட்ட கதிர்வேலு தன் பையைத் துழாவினான். சட்டை மடியென எங்கு தேடியும் அவனுக்கு ஒரு பைசா கிடைக்கவில்லை. நோட்டுக் கட்டுக்களாக இருந்தனவே தவிர ஒரு பைசா காசு  அவனுக்குக் கிடைக்கவே இல்லை.

புன்னகை புரிந்த நீதிபதி, “இப்போது ஒரு பைசா உனக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது பார்த்தாயா. அதுபோலத்தான் மனிதர்களுக்குள் ஏழை என்றும் எளியவன் என்றும் துச்சமாக எண்ணி அவர்களைத் துன்புறுத்தக் கூடாது. இந்த உண்மையை சிறைவாசம் செய்தபிறகாவது புரிந்து நடந்துகொள். உன்னைத் திருத்தத்தான் இந்த சிறைத் தண்டனை”என்றார்.

அதுநாள் வரை தான் தவறாக நடந்து வந்ததற்காக வருந்தியபடியே சிறைச்சாலைக்குச் சென்றான் கதிர்வேலு.

இனி அவன் திருந்திவிடுவானல்லவா?

ஒரு பைசாதானே என எளிதாக எண்ணியதால் அதுவே அவன் சிறைசெல்லக் காரணமாக அமைந்தது. ஏழைகள் என்று பிறரை எண்ணி ஏளனமாக நடத்தியதால் குற்றவாளியென்று நிரூபிக்கப் பட்டான்.

அதனால் உருவத்தைப் பார்த்தும் செல்வ நிலையை வைத்தும் மனிதரை நாம் மதிப்பிடக் கூடாது.

இதையே வள்ளுவரும்,
” உருவுகண்டு  எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து”
என்றார்.

ஒரு தேரின் அச்சாணி சிறிதாக இருந்தாலும் அதன் பயன்பாடு மிகப் பெரிதன்றோ. அதனால் உருவத்தைப் பார்த்து யாரையும் மதிப்பிடக் கூடாது. செல்வத்தின் பெருமையை ஒரு பைசாவின் மூலம் கதிர்வேலுவும் தெரிந்து கொண்டிருப்பான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top