கே. பாலச்சந்தர் பிறந்த தினம்..!!
‘இயக்குனர் சிகரம்’ கே. பாலச்சந்தர் என அழைக்கப்படும் கைலாசம் பாலச்சந்தர் அவர்கள், 1930 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள “நன்னிலம்” என்ற இடத்தில் தண்டபாணி என்பவருக்கும், சரஸ்வதிக்கும் மகனாக ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு கிராம அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
பள்ளிப்படிப்பை தன்னுடைய சொந்த ஊரிலேயே முடித்த கே. பாலச்சந்தர் அவர்கள், 1949 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி விலங்கியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், சென்னையில் உள்ள ஏ.ஜி அலுவலகத்தில் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்த அவர், பணியில் இருந்து கொண்டே நாடகங்களில் நடித்து வந்தார். ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘எதிர் நீச்சல்’, ‘நாணல்’, ‘வினோத ஒப்பந்தம்’, போன்றவை அதிக வரவேற்பைப் பெற்ற நாடகங்களாகும்.
மேடைநாடகத் துறையில் இருந்து திரைப்படத்துறையில் கால்பதித்த கே. பாலச்சந்தர் அவர்கள், 1965 ஆம் ஆண்டு வெளியான “நீர்க்குமிழி” திரைப்படத்தை இயக்கினார். நாகேஷ் இதில் கதாநாயகனாக நடித்திருப்பார். மனித உணர்வுகளுக்கிடையிலான சிக்கல்களைக் கதைக் கருவாகக்கொண்டு இவர் இயக்கிய இத்திரைப்படம் இவருக்கு ஒரு மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது.
இத்திரைப்படம், தமிழ் சினிமாவில் சில மாறுதல்களை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது. இதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை இயக்கிய கே. பாலச்சந்தர் அவர்களுக்கு, ‘அபூர்வ ராகங்கள்’, ‘சிந்து பைரவி’, ‘இருகோடுகள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘தில்லு முல்லு’ போன்றவை மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தது.
இதில், ‘இருகோடுகள்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ ஆகிய நான்கு படங்களும் இவருக்கு ‘தேசிய விருதை’ பெற்றுத்தந்தன. தமிழில் மட்டுமல்லாமல், ஹிந்தியில் “ஏக் துஜே கேலியே” மற்றும் தெலுங்கில் “மரோ சரித்ரா” மற்றும் “ருத்ர வீணா”, கன்னடத்தில் “அரலிதா ஹூவு” போன்ற மிகச்சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
மேலும், ‘கவிதாலயா’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தாயாரித்து இருக்கிறார்.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி அரசிடமிருந்து ‘கலைமாமணி விருது’, ‘அண்ணா விருது’, ஆந்திரபிரதேச அரசிடம் இருந்து ‘நந்தி விருது’, ‘எம்.ஜி.ஆர் விருது’, ‘கலைஞர் விருது’, ‘திரைப்பட உலக பிரம்மா’, ‘பீஷ்மா விருது’, ‘கலையுலக பாரதி’ என மேலும் பல விருதுகளையும் வென்றுள்ளார். இவர் உடல் நலக் குறைவால் டிசம்பர் 23 2014-ல் மறைந்தார்.
இயக்குனராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடைநாடக இயக்குனர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ‘சகலகலா வல்லவராக’ விளங்கிய கே. பாலசந்தர் அவர்கள், தமிழ் திரையுலகில் தோன்றிய இயக்குனர்களில் மிக முக்கிய இடத்தை பிடித்தவராவார்.