Home » பொது » உலகளந்தான்!!!
உலகளந்தான்!!!

உலகளந்தான்!!!

ஆச்சார்ய வினோபா பாவே
(பிறப்பு: 1895 செப். 11, – 1982 நவ. 15 )

தம்மைக் காட்டிலும் காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக்கொண்டவர் என்று மகாத்மா காந்தி இவரைப் பற்றிக் கூறியுள்ளார். தனது வாழ்நாளில் 13 வருடங்களில் 34,000 கி.மீ.களுக்கு மேல் கால்நடையாக, கிராமம் கிராமமாக இந்திய நிலப்பரப்பு முழுவதும் நடந்தே கடந்தவர். புரட்சிகரமான பூதான இயக்கத்தைத் தொடங்கி வழிநடத்தியவர். சர்வோதய இயக்கத்தின் ஆணி வேர்களில் ஒருவர். இவர் தான் ஆச்சார்யா வினோபா பாவே.

பூதான இயக்கத்தின் தோற்றம்:

1951- ஆம் ஆண்டில் சர்வோதய மாநாடு ஆந்திரத்தில் உள்ள சிவராம்பள்ளியில் நடந்தது. தனது வார்தா ஆசிரமத்திலிருந்து நடந்தே அங்கு வந்து சேர்கிறார். அப்பொழுது தெலுங்கானா பகுதியில் நக்சல் இயக்கத்தினர் பெறும் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். வன்முறையைப் பிரயோகித்து செல்வந்தர்களிடத்திலிருந்து நிலங்களைப் பிடுங்கி எளியவர்களுக்கு வழங்கினர். அவர்களது வன்முறையை ஒடுக்க அரசு காவல் துறையை அனுப்பியது. கிராமங்கள் பகலில் போலீஸ் பிடியிலும் இரவில் நக்சல் பிடியிலும் சிக்கிச் சிதைந்து கொண்டிருந்தன.

சுமார் இருநூறு கிராமங்கள் முழுமையாக நக்சல்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. அரசு தனது பலத்தைப் பிரயோகித்து ஓரளவு வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர முயன்றது,  ஆனால் அங்கு நிலவிய அடிப்படை பிரச்சினை தீர்ந்தபாடில்லை. மாநாடு முடிந்தது’ வினோபா பதட்டத்துக்குரிய அப்பகுதிக்குள் பயணிக்கத் திட்டமிடுகிறார். சிறையில் உள்ள நக்சல் இயக்கத் தலைவர்களைச் சந்திக்க அனுமதி கோரி,  ராம நவமியன்று அவர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.

வினோபாவிடம் எந்தத் திட்டமும் இல்லை;  ஆனால் மக்களோடு மக்களாக கலந்து நடந்து கீதை சொல்லும் செய்தியை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஒரே உள்ளுணர்வு அவரிடத்தில் இருக்கிறது. எதைப் பற்றியும் அவர் கவலைப்படவில்லை.

காந்தி வினோபா குறித்து வினோபாவின் தந்தைக்கு ஓர் கடிதம் எழுதுகிறார்  “இச்சிறு வயதிலேயே வினோபாவிற்கு மிக உயர்ந்த ஆன்மிக அனுபவமும் பக்குவமும் வாய்த்திருக்கிறது.  இந்த நிலை எனக்கு பல வருட கடின உழைப்பிற்குப் பின்னரே சாத்தியமானது”. வினோபா எங்கு சென்றாலும் அவர் காந்தியின் மைந்தராக,  துறவு பூண்ட ஓர் ஞானியாக மக்களால் மதிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டார்.

வினோபா அவரது குழுவோடு ஏப்ரல் 18 அன்று போச்சம்பள்ளி எனும் கிராமத்தை அடைகிறார். அங்கு மக்களைச் சந்தித்து உரையாடும் பொழுது, அந்த ஊரில் வாழும் நிலமற்ற ஏழை ஹரிஜன மக்கள் வினோபாவிடம்  ‘எங்களுக்கு நாற்பது ஏக்கர்,  நஞ்சை நாற்பது ஏக்கர் புஞ்சை நிலம் வேண்டும்,  நக்சல்கள் கொடுக்க வேண்டாம், அரசிடம் கேட்டு வாங்கிக் கொடுங்கள்’ என்று முறையிடுகிறார்கள்.

வினோபா கிராம மக்களின் கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்தப் பிரச்சினைக்கு என்ன செய்வது ? எப்படி இதைத் தகர்ப்பது என்று கேள்வி எழுப்பினார்.  ஒருக்கால் அரசு நிலம் ஏற்பாடு செய்யவில்லை என்றால், கிராமத்தினரே அவர்களுக்குள் எதுவும் செய்துகொள்ள முடியுமா என்று கேட்கிறார். பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படவில்லை;  தான் சர்ச்சைக்குரிய பகுதிகளில் பயணம் மேற்கொள்வதால் ஒருவேளை இதுவே கடைசிச் சந்திப்பாக இருக்கக் கூடும் என்கிறார்.

அப்பொழுது அந்தக் கூட்டத்தில் அமர்ந்திருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ராமசந்திர ரெட்டி எழுந்தார் “நான் அவர்களுக்கு எனது நிலம் 100 ஏக்கரைக் கொடுக்கிறேன்” என்றார். மீண்டும் மாலை நடந்த பிரார்த்தனைக் கூட்டத்திலும் உணர்ச்சி மிகுதியோடு அதையே கூறினார்.  இது யாரும் எதிர்பாராதது.

அஹிம்சையின் வழியில் அன்பின் வலிமை கொண்டு இந்த பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று வினோபா நம்பினார். நிலத்திற்காக ரத்தம் சிந்தி கொண்டிருக்கும் நிலபரப்பில் மனமுவந்து ஒருவர் நிலத்தை தானமாகக் கொடுப்பது மிகப் பெரிய செயலாகும். நிலத்தைப் பெற்றவர்களோ  ‘எங்களுக்கு எண்பது ஏக்கர் போதுமானது. அதைக் காட்டிலும் ஒரு ஏக்கர் கூட கூடுதலாகத் தேவையில்லை’ என்று உறுதியாக நின்றனர். இது மற்றுமொரு ஆச்சரியம்.  இதனை இறைவனின் திட்டமாக, ஓர் சமிக்ஞையாக உணர்ந்தார்.  எல்லாம் துலக்கம் பெற்றது . அங்கிருந்து தொடங்கியது தான் பூதான இயக்கம் .

வினோபாவும் அவரது சகாக்களும் அதிகாலை மூன்று மணிக்கு எழுவர், அவரது குழுவில் – லட்சியவாதிகள், இளைஞர்கள்,  வெளிநாட்டு ஆர்வலர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் பொதுவாக இருப்பார்கள். காலை எழுந்து அவர்களுக்குள் ஓர் சிறிய பிரார்த்தனைக் கூட்டம் நடத்தி முடித்துவிட்டு,  நடக்கத் தொடங்குவார்கள்.

நாளுக்கு பனிரெண்டு மைல் கணக்கு. ஒவ்வொரு கிராமத்திலும் திரளாக மக்கள் வரவேற்றனர்;  உணவும் இருப்பிடமும் கொடுத்து உபசரித்தனர். வினோபா மக்களிடம் பூமிதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஊர் மக்களுக்கு உரை நிகழ்த்துவார். அவரது தொண்டர்கள் அங்கு கிராமத்தினரைச் சந்தித்து நிலங்களைப் பெற்று வந்தனர்.

தெலுங்கானா முழுவதும் அவர் நடந்தார்; மக்கள் சாரைசாரையாகத்  திரண்டு நிலங்களை வழங்க முன்வந்தனர். உள்ளார்ந்த கருணையின் ஒரு சிறு தீப்பொறி இந்தியா முழுவதும் பற்றிக்கொண்டது.

நிலக்கிழார்களிடத்திலும் விவசாயிகளிடத்திலும், “நான் தங்களது கடைசி மகன். எனது பங்கு நிலங்களை பிரித்துத் தாருங்கள்”  என்று போகுமிடமெல்லாம் கோரிக்கை வைத்தார். இந்தியாவில் நிலமற்று வாழும் விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஐம்பது மில்லியன் ஏக்கர் நிலங்கள் வேண்டும் என்று கணக்கிட்டார். அதற்கான முயற்சிகளில் இறங்கினார். ஆனால் அவரால் ஒரு பனிரெண்டு வருட காலத்தில் இந்தியா முழுவதும் நான்கு மில்லியன் ஏக்கர் நிலத்தை மட்டுமே பூதான இயக்கம் மூலம் பெற்றளிக்க முடிந்தது. ஆயினும் கூட இது ஓர் மகத்தான சாதனை தான்.

நதிமூலம்:

விநாயக் என்ற இயற்பெயருடைய வினோபா 1895-ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று,  மகாராஷ்டிரத்தின் கொலோபா மாவட்டத்திலுள்ள ககோடா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். அவரது தாயார் ருக்மிணி தேவி, அவரது சகோதரர் பாலகோபா சிவாஜி ஆகியோர் விநாயக்கை வெகுவாக பாதித்தனர். அவரது சகோதரர் துறவு பூண்டு வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாக மக்களுக்குத் தொண்டாற்றினார்.

தனது இளம் வயதிலேயே வினோபாவிற்கு அபாரமான ஆன்மிக முதிர்ச்சி சாத்தியமானது. இன்டர்மீடியட் பரீட்சைக்கு மும்பைக்கு செல்வதாக இருந்த அவர் அதைக் கைவிட்டு வாரணாசி புறப்படுகிறார். அங்கு சமஸ்கிருதப் பாடங்களை ஊன்றிக் கற்றுத் தேறுகிறார்.

அப்பொழுது காசி இந்து பல்கலைக்கழகத்தில் காந்தி உரையாற்றுகிறார், அதன்பால் ஈர்க்கப்பட்டு அவருக்கு கடிதங்கள் எழுதுகிறார். காந்தி அவரை தனது அகமதாபாத் ஆசிரமத்திற்கு சந்திக்க அழைக்கிறார். அவரது மனதில் ஆன்மிகத் தேடலுக்காக இமயத்திற்குச் செல்வதா?  சுதந்திரப் புரட்சி பற்றி எரிகிற வங்காளத்துக்குச் செல்வதா? என்று பெறும் குழப்பம் ஏற்பட்டது.  ஜூன் 1916 -ல் காந்தியைச் சந்திக்கிறார் வினோபா;  அவரது அக கொந்தளிப்புகள் முடிவுக்கு வருகின்றன.

பிற்காலத்தில் அந்தச் சந்திப்பைப் பற்றிச் சொல்லும் பொழுது  “நான் காசியில் இருந்த காலத்தில் இமயத்திற்குச் செல்வதே எனது லட்சியமாக இருந்தது. அதே சமயம் வங்காளம் செல்ல வேண்டும் என்று ஆத்மார்த்தமாக வேண்டினேன். எனது இந்த இரண்டு ஆசையும்  நிராசையான.  விதி என்னை காந்தியிடத்தில் இட்டுச்சென்றது. காந்தியிடம் நான் இமயத்தின் பேரமைதியை மட்டும் உணரவில்லை;  வங்காளத்தின் புரட்சியின் கனப்பையும் உணர்ந்தேன்”.

வினோபா மூன்று விதமான மனிதர்களை தெலுங்கானாவில் சந்தித்ததாக எழுதுகிறார், எளிய மக்கள்,  ஊரிலிருந்து துரத்தப்பட்ட பெறும் செல்வந்தர்கள்,  கம்யூனிஸ்டுகள். இந்த மூன்று தரப்பினரிடத்திலும்  வினோபா தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருந்தார்.

கம்யூனிஸ்டுகளிடம்  “உங்களது நோக்கம் எத்தனை உயர்வாக இருந்தாலும், உங்கள் சித்தாந்தம் முன்வைக்கும் லட்சிய சமூகத்தை இதுவரை எந்த தேசமும் உருவாக்க முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவும் அதற்கு வன்முறை வழியில்லை, அதுவும் தற்பொழுது தான் இந்தியா சுதந்திரம் அடைந்துள்ளது. இந்த நேரத்தில் வன்முறையைப்  பிரயோகிப்பது நிச்சயம் தவறாகும்” என்றார். இவ்விளக்கம் அவர்களை திருப்திப்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.

அதே போல தலைமறைவு வாழ்க்கை வாழும் நிலக்கிழார்களைச் சந்தித்,து துணிவுடன் ஊருக்குச் சென்று ஏழை மக்களுக்கு சேவை செய்யுமாறு அறிவுறுத்தினார்;  ‘ஒளிந்து வாழ்வதைக் காட்டிலும் மரணம் மேலானது’ என்றார்.

‘பூதானம் ஓர் வேள்வி’ என்றார் அவர். மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகம், தமிழகம் என்று தொடர்ந்து பயணித்தார் வினோபா. முதல் ஏழு வருடங்கள், அதாவது 1957 வரை வெகு முனைப்பாக இந்த பூதான இயக்கம் செயல்பட்டது.

கிராம தானத் திட்டம்:

பூதானத்தின் அடுத்த பரிணாமம்  ‘கிராம தானத் திட்டம்’.  மே 1952- ல் உத்தரப்பிரதேசத்தில் பயணிக்கும் பொழுது மன்க்ராத் எனும் ஒட்டுமொத்த கிராமமே தானமாக கொடுத்தனர். தங்களது தனி சொத்தான நிலங்களை கிராம பொதுசபைக்கு மக்கள் எழுதிக் கொடுத்தனர். இதுவும் ஓர் மிகப் பெரிய லட்சியக் கனவாகும். தனி நபர் பூமி தானத்தைக் காட்டிலும் ஊரே இயைந்து வாழும் கிராம தானத் திட்டம் சிறப்பானதாகும்.

இந்தியா முழுவதும் அப்படி சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் கிராமங்கள் கிராம தான இயக்கத்திற்கு கீழ் வந்தது.அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த கிராமங்களில் மூன்றில் ஒரு பங்கு. இந்திய அரசு கொண்டுவந்த நில உச்சவரம்பு சட்டத்தைக் காட்டிலும் பூதான இயக்கம் செறிவாகச் செயல்பட்டது அப்பட்டமான உண்மை. அரை மில்லியன் குடும்பங்களேனும் இதில் பயன்பெற்றன என்று ஒருகணக்கெடுப்பு சொல்கிறது.

காந்தியின் தீவிரமான சீடராக வினோபா திகழ்ந்தார். அவருக்கும் இவருக்குமான உறவு இருவரும் வாழும் வரை சீராகவே இருந்தது. 1923-ல் நாக்பூரில் சத்யாகிரகம் செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் காந்தி அவரை வைக்கம் போராட்டத்திற்கு அனுப்பினார். பின் மீண்டும் 1932-ல் சிறைவாசம். 1940-ல் காந்தி வினோபாவை முதல் தனிமனித சத்யாகிரகியாகத் தேர்ந்தெடுத்தார்.

கிராமியப் பொருளாதாரம் மற்றும் காதியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர் என்று காந்தியால் பாராட்டப்பெற்றவர். பின்னர்  ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். கீதை காட்டும் பாதையில் வாழ்ந்தார் வினோபா. தங்கத்தைத் துறந்து வாழ ஓர் இயக்கத்தைத் தொடங்கினார்; அதேபோல் பண்டைய காலத்து ரிஷிகள் போல் எருதுகளைப் பயன்படுத்தாமல் உழும் முறையை பிரபலபடுத்தினார்.

சிரமதானம்- பொது வேலையில் பங்கெடுப்பது,  சாந்தி சேனை, ஜீவ தானம் – தனது உயிரையே உயர்ந்த லட்சியத்திற்காகக் கொடுக்கத் துணிவது போன்றவை அவர் தொடங்கிய முன்னோடி இயக்கங்கள்.

லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் விநோபாவால் ஈர்க்கப்பட்டு ஜீவ தானம் செய்துகொண்டார். இத்தனையும் சாதித்தவர் அறுபது வயதை நெருங்கிக் கொண்டிருந்த- வயிற்று புண்,  வயிற்றுப்போக்கு,  மலேரியா போன்ற நோய்களால் நீண்டகாலமாக பாதனையில் உழன்ற-  எளிய மனிதர். அவரது வயிற்றுப் புண்  காரணமாக அவரது உணவே தேன், தயிர், மற்றும் பால் ஆகியவை மட்டும் தான்.

பூதான இயக்கம் உலகமெங்கும் கவனம் பெற்றது.  அமெரிக்காவின் லூயிஸ் பிஷர்,  “அண்மைய காலத்தில் கிழக்கிலிருந்து நமக்குக் கிடைத்த மிக சிறந்த படைப்பூக்கம் மிக்க திட்டங்களில் ஒன்று கிராம தானம்” என்றார். ஹல்லாம் டென்னிசன், பிரபல ஆங்கிலக் கவிஞர் ஆல்பிரெட் டென்னிசனின் பெயரன், வினோபாவுடன் தான் இந்திய கிராமங்களுக்கு ஊடாக பயணித்ததை ‘தி செயின்ட் ஆன் தி மார்ச்’ எனும் பெயரில் புத்தகமாக வெளியிட்டார்.

‘இந்தியாவின் பூதான இயக்கம் கம்யூனிசத்திற்கு சிறந்த மாற்று’ என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செஸ்டர் போவ்லேஸ் தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார். பிரித்தானிய தொழிலதிபர் எர்னஸ்ட் பார்டர், பூதான இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, காந்திய அறங்காவல முறையை ஏற்றுக்கொண்டு  தனது நிறுவனத்தின் தொண்ணூறு பங்கு லாபத்தை தொழிற்சாலைத் தொழிலாளிகளுக்குக் கொடுத்தார். ‘டைம்’ பத்திரிக்கை அட்டையில் வினோபா படத்தை வெளியிட்டு கௌரவித்தது .

சம்பல் பள்ளத்தாக்கில் பதுங்கிக் கொள்ளையடிக்கும் ஒரு கும்பல் ஆயுதங்களைத் துறந்து அவரிடம் சரணடைந்தது. உண்மையில் இது அஹிம்சையின் மாபெரும் வெற்றி.

வாழ்க்கை முழுவதும் பயணித்தார்; பல ஆயிரம் மேடைகளில் உரையாற்றினார்;  பதிமூன்று வருட சுற்றுப் பயணங்களை முடித்துக்கொண்டு மீண்டும் ஊர் திரும்பினார். பின்னர் ஒரு நான்கு வருடம் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் பின்பு பசுவதைக்கு எதிராக ஓர் இயக்கத்தை முன்னெடுத்தார்.

1974- 1975 வரை அவரது பௌனர் ஆசிரமத்தில் மௌன விரதத்தில் ஆழ்ந்தார். மெல்ல தனது வெளியுலக தொடர்புகளைத் துண்டித்துக்கொள்ளத் துவங்கினார். அவரது ஆன்மிகப் பசி அவரை ஆட்கொண்டது.

சில புகார்கள்:

பூதான இயக்கம் ,  வினோபா மீது பல குற்றசாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.  ‘கிராமதான இயக்கத்தில் அனேக கிராமங்கள் உறுதிமொழியில் எளிதாக கையெழுத்திட்டனர், ஆனால் நடைமுறையில் அத்தனை கிராமங்களும் அப்படி மாறிவிடவில்லை. 1970-களில் வெகு சில ஆயிரம் சிறிய கிராமங்களே நிலத்தை கிராமசபைக்கு ஒப்படைத்தன. அதுவும் அநேகமாக ஓர் இனக்குழுவாக, ஒரே சாதியாக வாழ்ந்து வந்த கிராமத்தினரே அப்படிச் செய்தனர்.  நான்கு லட்சம் ஏக்கர் நிலம் தானமாக அளிக்கப்பட்டாலும்  சுமார் ஒன்றே முக்கால் லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே உரியவர்களைச் சென்றடைந்தது. மீதி நிலங்கள் சட்டச் சிக்கல்களாலோ அல்லது வேறு காரணங்களாலோ பயனற்றுப் போயின. நிலம் கொடுத்த நிலக்கிழார்கள் அனைவரும் வேண்டி விரும்பிக் கொடுத்தனர் என்று சொல்ல முடியாது;  பலரும் நக்சல்களிடத்திளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள,  பயந்து கொடுத்தனர்’ என்றெல்லாம் கூறப்படுகிறது.

காந்தியை அதீதமாக நகலேடுக்கிறார் என்றும்,  காந்தி சொல்வதை எந்த ஒரு விவாதமும் இன்றி ஏற்றுக்கொள்வார் என்றும் வினோபா விமர்சிக்கப்பட்டார். அனைத்தையும் காட்டிலும் ஜெயபிரகாஷ் நாராயணன் இந்திரா அரசுக்கு எதிராக நடத்திய இயக்கத்தை அவர் ஆதரிக்கவில்லை; இந்திரா கொண்டுவந்த அவசர கால சட்டத்தை, அது நாட்டிற்கு தற்பொழுதைய தேவை என்று ஆதரித்தது பலருக்கும் பெறும் அதிர்ச்சியை அளித்தது.

சில குறைகள் இருப்பினும் கூட , இந்தியாவில் காந்திக்குப் பிறகு, காந்திய வழிமுறைகளின் வலிமையை- அதன் முக்கியத்துவத்தை-  உலக மக்களுக்கு வினோபா உணர்த்தினார். அவரது அணுகுமுறையால் கவரப்பட்ட ஜெ.பி.  தன் வாழ்நாள் முழுவதும் சர்வோதய அமைப்புக்காகப் போராடுவேன் என்று உறுதி பூண்டார்.

காந்தியத்தை இன்றளவிலும் உயிர்ப்புடன் வைத்திருக்க வினோபா ஓர் முக்கிய ஆளுமையாகும்.  உலக அளவில் பூதான இயக்கம் அஹிம்சை வழியில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட மிகச் சிறந்த இயக்கங்களில் ஒன்றாகும். அது ஓர் மிகப் பெரிய கனவு- நிறைவேறா கனவு தான்- ஆனால் அர்த்தமற்ற கனவில்லை.

நீர், சூரியன், வானம், காற்றைப் போல் நிலமும் இயற்கை ஒட்டுமொத்த உயிரினங்களுக்குக் கொடுத்த கொடை என்றே அவர் எண்ணினார். மக்கள் சக்தியே அரசின் சக்தியைக் காட்டிலும் மகத்தானது என்றார். காந்தியின் கனவுகளைச் சுமந்து திரிந்தார். கிராமம் கிராமமாக, கால்நடையாக, அன்பையும் கருணையும் அவரோடு கொண்டு சென்றார்.

1982 -ஆம் ஆண்டு நவம்பர் 15 அன்று உடல் உயிரைத் துறப்பதற்கு முன், ஒரு வார காலம் உபவாசமிருந்து அவரது உயிர் உடலை துறந்தது.  மற்றும் ஒரு மகாத்மா நம் புலன்களுக்கு அப்பால் புறப்பட்டார்.

‘க்ரோக்கடைல் தண்டி’ என்ற ஓர் ஆங்கில திரைப்படம் சில வருடங்களுக்கு முன் வந்தது.  அதில் கதாநாயகன்- ஆஸ்திரேலிய அபாரிஜின்.  அமெரிக்க நாயகி அவனிடம் கேட்பாள் “அபாரிஜிங்களுக்கு நிலம் சொந்தமாக வேண்டும் என்று கருதுகிறார்களே, அரசு அதை எதிர்க்கிறது.  உங்கள் நிலைப்பாடு என்ன?”  என்று. அதற்கு அந்த நாயகன் பதிலளிப்பான், “ஓர் நாயின் மேல் இரண்டு உண்ணிகள் அமர்ந்து கொண்டு இந்த நாய் தனது என்று சொந்தம் கொண்டாடுவது போல்”. ஆம் அபத்தமானது தான். இயற்கையை தாம் ஆதிக்கம் செலுத்துகிறோம் என்று எண்ணும் தோறும் மனிதன், இயற்கையின் கண்களுக்கு ஆகச் சிறந்த கோமாளியாகவே தென்படுகிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top