பரமபதம்
ராமானுஜர் நமக்குக் காட்டிய வைனவநெறியானது உன்னதமானது. நமது சனாதான தர்மங்களின் அடிப்படையில் எழுப்பட்ட நெறியாகும்.
ஸ்ரீவைணவத்தில்ல் ஏழை -பணக்காரன், உயர்ந்த குடியில் பிறந்தவன்- தாழ்ந்தகுடியில் பிறந்தவன் என்ற பேதம் கிடையாது என்பதை உரக்கக் கூறியது.
ஒருவிதத்தில் கிரிமிகண்டன் என்னும் மன்னன் நல்லது செய்தான் என்றுதான் கூறவேண்டும். அந்த மன்னனின் கொடியகரங்களிலிருந்து தப்பிக்கவே ராமானுஜர் சாளுக்கிய மட்டும் ஹொய்சாள மன்னர்களின் சமஸ்தானங்களுக்குச்சென்றார். இதன்மூலம் அங்குள்ள வைணவத் தலங்களில் நமது திராவிட வேதமான நாலாயிர திவ்ய பிரபந்தத்தை முழங்கச் செய்தார்.
கிரிமிகண்டன் மறைந்துவிட்டான் என்ற செய்தியை கேட்டு ராமானுஜர் தனது இருபத்திரண்டு வருட தலைமறைவு வாழ்க்கையை விட்டு தமிழகம் திரும்ப முடிவு செய்கிறார். திருவரங்கம் செல்ல நாள் குறிக்கிறார். மேல்கோட்டை வைணவப்பெருமக்கள் வருந்துகின்றனர். அவர்கள் வருத்தத்தைப் போக்க தன்னைப் போலவே ஒரு உலோகப்பிரதிமையை செய்து அதனுள் தனது சக்தி முழுவதைய்ம் பிரவேசிக்க செய்து அதனை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார்.
ராமானுஜர் தனது சீடர்களுடன் கிட்டத்தட்ட அறுபது வருடங்கள் திருவரங்கத்தில் இருந்து வைணவ நெறியைத் தழைத்தோங்க செய்தார்.
இவ்வாறு ஸ்ரீரங்கத்தில் தம் தொண்டர்களுடன் குழுமியிருந்தபோது ஒருநாள் யதிராஜர் அசையாமல் மோனத்தில் ஆழ்ந்திருந்தார். கூடியிருந்த தொண்டர் குழாம் காரணம் கேட்க ராமானுஜர் “ஸ்ரீபெரும்புதூரில் என் அன்பர்கள் என் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்து அதற்கு கண்மலர் திறந்துகொண்டிருக்கிறார்கள். நான் அந்தச் சிலையில் எழுந்தருளிவிட்டு வந்தேன்” என்றாராம். அதைக் கேட்டு பக்தர்களின் கண்களில் ஆனதைக் கண்ணீர் பெருகியது. தனது அந்திமக்காலம் நெருங்கிவிட்டதை ராமானுஜர் குறிப்பால் உணர்த்தினார்.
அவருடைய பக்தர்கள் அவர்மேல்கொண்ட பக்தியை கணக்கிடவே முடியாது. அவரருளிச் செய்த நெறிகள் அவர்களது வாழ்வின் கோட்பாடுகளாகவே மாறியிருந்தன. அவரை தரிசித்தும். அவருடைய பொன்மொழிகளை கேட்டும் தங்கள் வாழ்க்கையை அவர்கள் மேம்படுத்திக் கொண்டனர். எனவே அவருடைய பிரிவைத் தாங்கும் சக்தியின்றி கதறி கண்ணீர் விட்டனர். ராமானுஜர் அவர்களைச் சமாதனம் செய்கிறார்.
“தேவரீர்! நீங்கள் சொல்வதெல்லாம் நிஜம். இருப்பினும் தங்கள் திருமேனியைப் பிரிந்திருக்கும் வேதனையை எங்களால் தாள முடியவில்லை. இன்னும் சில நாட்கள் எங்களுக்காக இந்தத் திருமேனியைக் காத்தருள வேண்டும்” என்று வேண்டிக்கொண்டதற்கிணங்க மேலும் மூன்று நாட்கள் இந்தப் பூவுலகில் வாழ சம்மதிக்கிறார்.
பிறகு இந்த மூன்று நாட்களில் தமது சீடர்களுக்கு எழுபத்திநான்கு இரத்தினங்கள் என்று போற்றப்படும் உபதேசங்களை அருளிச் சென்றார்.
பின்னர் சீடர்கள் கேட்டுகொண்டதற்கிணங்க தனது திருமேனியை மூன்றே நாட்களுக்குள் சிலையாக வடிக்க அனுமதி அளிக்கிறார். மூன்றே நாட்களின் யதிராஜரின் சிலைவடிவம் சித்தமாகியது. பிறகு அந்தச் சிலைவடிவை காவேரி நீரில் நீராட்டி அதை பீடத்தில் ஏற்றினார்கள். ராமானுஜர் பிரம்ம மந்திரத்தின் மூலம், தனது சக்தியை அந்த சிலைவடிவினுள் பிரயோகித்தார்.
பிறகு தனது பக்தர்களை பார்த்து “குழந்தைகளே எனக்கும் இந்தச் சிலைக்கும் வேறுபாடு இல்லை. இதில்தான் இனிமேல் நான் வாசம் செய்யப்போகிறேன்” என்று கூறிவிட்டு அவருடைய சீடர்களில் ஒருவரான எம்பார் என்பவரின் மடியில் தலையையும், வடுகநம்பி என்பவரின் மடியில் திருவடியையும் வைத்துக் கொண்டே சக ஆண்டு 1059 ( கி.பி.1137) மாக மாதம், சுக்லபட்சம் தசமி திதியில் பரமபதம் அடைந்தார்.
ராமானுஜர் நமக்கு அருளிச் சென்றுள்ள 74 நன்னெறி ரத்தினங்களையும் பூரணமாகக் கற்று அவற்றின் வழி நடப்பதே நாம் இறைவனுக்கு செய்யும் தொண்டாகும்.
திருமால் திருவடிகளே சரணம்!
(நிறைவு)