சடையனார் நாயனார்(திருநட்சத்திரம்: மார்கழி -திருவாதிரை)
(ஜனவரி 5)
திருநாவலூரில் ஆதி சைவ குலத்தில் உதித்தவர் சடையனார். இவரது இல்லறத் துணைவி இசைஞானியார். மழலை பாக்கியம் இல்லாத சடையனார், பரம்பரையாக செய்து வரும் சிவத்தொண்டு தடைபடாமல் இருக்க ஒரு புத்திரனை தந்தருளுமாறு ஈசனை வேண்டினார்.
அவரின் வேண்டுகோளை ஏற்ற ஈசன் கயிலையில் தம் அணுக்கத் தொண்டராக இருந்த ஆலால சுந்தரர், சடையனாருக்கு மகனாகப் பிறக்குமாறு அருள் புரிந்தார். அந்த மகனின் ஆற்றலால் கவரப்பட்ட அந்நாட்டு மன்னனின் அறிவுரைப்படி நரசிங்க முனையரையர், சுந்தரருக்கு உபநயனம் செய்வித்து, தக்க வயதில் திருமணமும் செய்ய ஏற்பாடு செய்தார்.
ஈசன் சுந்தரரை தடுத்தாட் கொண்டார். அவ்வளவு மகிமை மிக்கவரை தாம் மகனாகப் பெற்றதை எண்ணி எண்ணி மிஞ்சிய தம் வாழ்நாள் முழுதும் சிவத்தொண்டாற்றி இறுதியில் முக்தியும் பெற்றார், சடையானார்.
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல் .
-என்ற திருக்குறளுக்கு (குறள்- 70) சடையானார் வாழ்வு உதாரணம்.
சிவனுக்கு பணிவிடை செய்ய உகந்த மகான் சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்றெடுத்த காரணத்தால் தந்தை சடையனாரும் தாய் இசைஞானியாரும் நாயனார்கள் ஆனது, நமக்கெலாம் வழிகாட்டி.