உலர்ந்த செல், எண்ணெய் பிசுக்கு…
அழுக்கு போக்கும் முல்தானிமட்டி!
–––––––––––––––––––––––––––––
முல்தானிமட்டியைக் குழைச்சு முகத்தில் பூசினால், பளிச்னு இருக்கும்’ என, பாட்டி வைத்தியத்தில் தொடங்கி பியூட்டி பார்லர் வரை முல்தானி மட்டிக்கு நல்ல ஆதரவு. ‘முல்தானிமட்டினா என்ன?’ என்று யாரிடமாவது கேளுங்கள். ‘அது ஒரு பவுடர்…’ என்பதற்கு மேல் வேறு எந்தத் தகவலும் தெரியாமல் விழிப்பார்கள்.
முல்தானிமட்டி என்பது, ஆற்றுப்படுகைகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகை மண். முல்தான்’ என்பது, பாகிஸ்தானில் ஆற்றோரம் இருக்கும் ஒரு ஊர். மட்டி’ என்றால் மண். இந்த மண்ணுக்கும், களிமண்ணுக்கும் சிறிதளவுதான் வித்தியாசம். இதன் வேதிப் பெயர், அலுமினியம் சிலிகேட். இந்த மண்ணில், மக்னீசியம், துத்தநாகம், சிலிகான் போன்ற முக்கியமான தாதுக்கள் உள்ளன. பாறையில் இருந்து வரும் முல்தானிமட்டி, சிறுசிறு கட்டிகளாக இருக்கும். வெள்ளை, தந்த நிறம், மஞ்சள் எனப் பல வண்ணங்களில் கிடைக்கிறது. அரை வெண்மை நிறத்தில் இருப்பதுதான் தரமானது. மேலும், பட்டுப் போல மென்மையாக இல்லாமல், கொஞ்சம் நெருநெருவென இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டும்.
முல்தானிமட்டி, ஒரு க்ளீனிங் ஏஜென்ட். அந்தக் காலத்தில் வீட்டுக்கு வெள்ளை அடிப்பதற்கும், வண்ணம் தீட்டுவதற்கும் இந்த மண்ணை உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். நீரேற்று நிலையங்களில், தண்ணீரில் இருக்கும் ஃப்ளோரைடு என்னும் வேதிப்பொருளை உறிஞ்சி எடுக்க, முல்தானி மட்டி பயன்படுகிறது.
சருமத்தை சுத்தப்படுத்தவும், வெளுப்பாக்கவும் (ப்ளீச்சிங்), உலர்ந்த செல்களை நீக்கவும் (ஸ்கிரப்பிங்), எண்ணெய் பிசுக்கு மற்றும் அழுக்கை உறிஞ்சி எடுக்கவும், முல்தானி மட்டி முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் இருக்கும் துத்தநாகம், சருமத்தில் பருக்களால் ஏற்படும் காயங்களை ஆற்றும் திறன் கொண்டது. ஆனால், இதை அதிகமாகப் போட்டுத் தேய்த்தாலோ, அதிக நேரம் வைத்து இருந்தாலோ, முக சருமத்தின் மேலே உள்ள அதி மென்மையான அடுக்கு (Superfine layer), பாதிக்கப்படும்.