தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
(பிறப்பு: 1901, ஜன. 8- மறைவு: 1980, ஆக. 27)
1901, ஜனவரி 8-ம் நாள் தமிழுலகம் ஒரு தவப்புதல்வனைக் கண்டெடுத்தது. ஆம்! அந்த நாள்தான் தெ.பொ.மீ. உலகைக் கண்திறந்து பார்த்த நாள்.
சென்னை- சிந்தாதிரிப்பேட்டையில் தமிழ்ப்பற்றும், இறைப்பற்றும் ஒருங்கே பெற்ற பொன்னுசாமி கிராமணியார் இவரை மகவாகப் பெற்ற நாள். தமிழ் இலக்கிய உலகில் பேராசிரியர் தெ.பொ.மீ.யின் இடத்தை இன்னொருவரால் நிரப்ப முடியாது என்பது முற்றிலும் உண்மை.
பொன்னுசாமி கிராமணியாருக்கு தமிழின் மீதும் தமிழறிஞர்களின் மீதும் இருந்த காதலால் தான், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் பெயரைத் தன் மகவுக்கு இட்டார்.
.
இவர் தெ.பொ.மீ. எனத் தமிழுலகில் அழைக்கப்பெற்றவர். இவரது தமையனார் தெ.பொ. கிருஷ்ணசாமி பாவலர், நாடகத்தின் வாயிலாக நாட்டிற்கு உழைத்த தொண்டர். தெ.பொ.மீ.யும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுப் புகழ் பெற்றவர்.
.
சென்னை மாநகராட்சியிலும், பல்வேறு துறைகளில் தலைவராகவும், மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும், மகரிஷி மகேஷ்யோகியின் அமைப்பைத் தென்னாட்டில் பரப்பும் பணிக்குப் பொறுப்பாளராகவும் பணியாற்றித் தமது நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தியவர்.
.
தமிழக அரசால் ‘கலைமாமணி’ விருதையும் மத்திய அரசால் ‘பத்மபூஷண்’ விருதையும் பெற்ற பேராசிரியர் தெ.பொ.மீ. வரலாறு, அரசியல், சட்டம் முதலிய துறைகளில் பட்டம் பெற்றவர். தமது இடையறாத முயற்சியால் தமிழ் இலக்கியம், இலக்கணம், மொழியியல், சமயம், தத்துவம், ஒப்பிலக்கியம், காந்தியியல் முதலிய பல்வேறு துறைகளில் கற்றுத்தேர்ந்து அனைவரும் வியக்கும் வகையில் இணையற்ற அறிஞர் ஆனார்.
.
அதோடன்றி பல்வேறு பரிணாமங்களால் துறைதோறும் தலைவர் ஆனார். எதைக் கற்றாலும் கசடறக் கற்றமையால் எல்லாத் துறையும் தலைமைத் தன்மை கொடுத்து அவரைப் போற்றியது. பதினெட்டு மொழிகளைக் கற்றிருந்தாலும், ஈராயிரம் ஆண்டு தமிழ் மொழியிலும் இலக்கியங்களிலும் அவர் பெற்ற புலமைக்கு ஈடில்லை. மொழியின் மீது அவர் கொண்ட நேசிப்பும் வாசிப்புமே இதற்குக் காரணம்.
.
1920-ல் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்று, 1922-ல் பி.எல். பட்டமும் பெற்றார். பெரும்பாலும் சட்டம் பயின்ற வல்லுநர்கள் தமிழார்வலர்களாக இருந்தமையை தமிழ் வரலாறு காட்டும். அவர்களுள் தெ.பொ.மீ.யும் ஒருவர்.
.
1923-ல் எம்.ஏ. பட்டம் பெற்றார். வரலாறு, பொருளியல், அரசியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1923-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தன்னைப் பதிவு செய்து கொண்டார். எனினும் தமிழ் கற்பிக்கும் பேராசிரியராகவே இவர் பணி பின்னாளில் தொடர்ந்தது.
.
1924-ல் சென்னை நகராண்மைக் கழக உறுப்பினராகப் பணியாற்றினார். 1925-ல் அலுமினியத் தொழிலாளர் சங்கத் தலைவராய் இருந்து தொண்டு புரிந்தார். தமிழ் இலக்கிய இலக்கண ஆர்வத்தால் 1934-க்குள் பி.ஓ.எல், எம்.ஓ.எல். பட்டங்களும் பெற்றார். 1941-ல் நாட்டு உரிமைக்காக மறியல் செய்து சிறை சென்றார்.
.
இவரது தமிழ்ப் புலமையைக் கண்ட அண்ணாமலை அரசர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு இவரைப் பேராசிரியராக நியமித்தார். 1944-ல் பேராசிரியராகப் பொறுப்பேற்ற தெ.பொ.மீ., 1946-ம் ஆண்டு வரை அங்கு பணியாற்றினார்.
.
மீண்டும் 1958-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல், இலக்கியத் துறைகளின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். இவரது தமிழ்ப் புலமையை உலகுக்கு அடையாளம் காட்டிய பெருமை, அண்ணாமலை அரசரையே சாரும். மொழிப்புலமை இவரை அயல்நாட்டுப் பல்கலைக்கழகமான சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1961-ல் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்க வைத்தது.
.
1973,74-ஆம் ஆண்டுகளில் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் கழகச் சிறப்பாய்வாளராக பொறுப்பேற்றார். 1974 முதல் ஆழ்நிலைத் தியானத் தேசியக் குழுவில் உறுப்பினராக இருந்து தொண்டு செய்துள்ளார். தருமபுர ஆதீனம் ‘பல்கலைச் செல்வர்’ என்றும், குன்றக்குடி ஆதீனம் ‘பன்மொழிப் புலவர்’ என்றும் விருதுகள் அளித்துச் சிறப்பித்தன.
.
அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று தமிழின் புகழ் பரப்பிய பெருமகனார் தெ.பொ.மீ. யுனெஸ்கோவின் ‘கூரியர்’ என்னும் இதழ்க் குழுவின் தலைவராக விளங்கிய இவர், ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் எனில் மிகையில்லை.
.
தமிழ் படித்தவர்கள் தமிழ்மொழியை மட்டுமே கற்க முடியும், பிற மொழிகள் அவர்களுக்கு வராது என்பதை மாற்றி, மொழியியல் என்ற புதிய துறையின் புதுமையைத் தமிழுக்குக் கொண்டுவந்து அதை வளரச்செய்த முதல் முன்னோடி பல்கலைச் செல்வர் தெ.பொ.மீ.தான்.
.
தமிழ்மொழியின் மரபு சிதையாமல், மாண்பு குறையாமல், மாசுநேராமல் நவீனப்படுத்தி உலகை ஏற்றுக் கொள்ளச் செய்த தமிழ்த்தொண்டர் தெ.பொ.மீ. உலகப் பல்கலைக்கழகங்கள் பலவற்றிலும் மதிக்கப்பட்டு, பட்டங்களையும் பாராட்டுகளையும் பெற்ற பெருந்தகை.
.
“தமிழின் முக்கியத்துவம், அது பழமைச் சிறப்பு வாய்ந்த ஒரு செவ்வியல் மொழியாக இருப்பதுடன் அதே வேளையில் வளர்ந்து வரும் நவீன மொழியாகவும் ஒருங்கே விளங்குவதில் தான் சிறப்புப் பெறுகிறது” என்பது பன்மொழிப் புலவரான தெ.பொ.மீ.யின் கருத்து.
.
செவ்வியல் மொழியான தமிழுக்கு நாம் செய்திருக்க வேண்டிய பணி குறித்து தெ.பொ.மீ, “ஏராளமாகத் தமிழில் படைக்கப்பட்டுள்ள படைப்புகள் பிற ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப் படாமையால் பரவலாக அறிஞருலக ஆய்வுக்குக் கிடைக்காமல் இருக்கின்றன” என்று செவ்வியல் மொழியான தமிழுக்கு நாம் செய்திருக்க வேண்டிய பணியை நினைவூட்டியுள்ளார்.
.
இவர் மிகச் சிறந்த இலக்கியத் திறனாய்வாளராகவும் விளங்கியவர். தமிழுக்குப் பல புதிய சிந்தனைகளைத் தன் ஆய்வின் மூலம் தந்தவர். ஆராய்ச்சி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்தம் நூல்கள் காட்டுகின்றன. இதனால் அவர் ‘மின்வெட்டுப் பேராசிரியர்’ என்றே பிறரால் அழைக்கப்பட்டார்.
.
இலக்கியத் துறையில் இருட்டாக இருந்த இடங்களைத் தன்னுடைய பேரறிவால், திறனாய்வுப் பார்வையில் விளங்கச் செய்தவர் தெ.பொ.மீ. திறனாய்வுத் துறையில் பல புதிய தடங்களைப் பதித்தவர்.
.
“ஒரு மொழியின் இலக்கியத்தைச் சிறந்தது எனச் சொல்ல வேண்டுமானால், பிறமொழி இலக்கியங்களைப் பற்றிய அறிவும், சிறப்பெனக் குறிப்பிடும் இலக்கியத்தின் மொழியில் நுண்மாண் நுழைபுலமும் பெற்றிருக்க வேண்டும். பிறவற்றை அறியாமலோ, தன்னுடையதை முழுமையாக உணராமலோ புதிய தடங்களைக் காண முடியாது” என்று கூறியுள்ளார் தெ.பொ.மீ.
.
உலகக் காப்பியங்களோடும், உலக நாடகங்களோடும் சிலப்பதிகாரத்தை ஒப்பிட்டுப் பார்த்து, அதை ‘நாடகக் காப்பியம்’ என்றும் ‘குடிமக்கள் காப்பியம்’ என்றும் ஒரு வரியில் கூறியவர். சிலப்பதிகாரத்துக்கு இவரைப் போன்று வேறு யாரும் திறனாய்வு எழுதியதில்லை.
.
“தமிழ்மொழி உயர வேண்டுமானால் தமிழன் உயரவேண்டும்” எனச் சங்கநாதமிட்ட முதல் சான்றோர் தெ.பொ.மீ. தன்னலம் கருதாத மாமனிதர் தெ.பொ.மீ.இவரது எழுத்துகள் தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் பெருமையும் புகழும் சேர்ப்பன.