Home » பொது » சுவாமி விவேகானந்தரின் இன்றைய அவசியம்
சுவாமி விவேகானந்தரின் இன்றைய அவசியம்

சுவாமி விவேகானந்தரின் இன்றைய அவசியம்

சுவாமி விவேகானந்தர்
(பிறப்பு: 1863  ஜன. 12- மறைவு:  1902, ஜூலை 4)

நமது தேசத்தின் மகத்தான ஒரு துறவியின் 150 ஆவது பிறந்த வருடத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் நம்மில் சிலருக்கு ஒரு கேள்வி எழலாம். “மாறி வரும் தற்போதைய நவீன சூழ்நிலையில் சுவாமி விவேகானந்தரின்  கருத்துக்களுக்கான அவசியம் என்ன?”

ஏனெனில் அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த சூழ்நிலைகள் முற்றிலும் வேறானவை. கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காலத்தில் நமது நாடு பெருமளவு மாறியுள்ளது. அரசியல், சமூகம், பொருளாதாரம் என வெவ்வேறு தளங்களிலும் மிகப் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த நூறாண்டு காலத்தில் உலகம் முழுவதிலுமே பல முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவை தொடர்ந்து நிகழ்ந்தும் வருகின்றன. சுவாமி விவேகானந்தர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் செல்வச் செழிப்பில் கண்ட பல பணக்கார நாடுகள் இன்று பொருளாதார நெருக்கடியில் உள்ளன. உலகம் முழுமைக்கும் மேற்கத்திய நாடுகளால் முன்வைக்கப்பட்ட அவர்களின் இரண்டு முக்கிய பொருளாதார சித்தாந்தங்களும் தோல்வியைத் தழுவிவிட்டன.

மேலும் அவர்களின் சமூகக் கோட்பாடுகள், சிந்தனை முறைகள் மற்றும் வாழ்க்கை முறை எனப் பலவும்  கேள்விக்குறியாகி வருகின்றன. எனவே அந்த நாடுகளின் உலகளாவிய தாக்கமும் செல்வாக்கும் அண்மைக் காலமாக குறைந்துகொண்டே வருகின்றன. ஆகையால் இப்போது அவர்கள் உலக நாடுகளுக்குத் தீர்வுகள் கொடுக்கும் சூழ்நிலையில் இல்லை.

அதே சமயம் இந்தியா உலக அளவில் முக்கியமான நாடாக மேலெழுந்து வருகிறது. சர்வதேச அளவிலான எல்லாக் கணிப்புக்களும் உலகப்  பொருளாதாரத்தில் மிக முக்கியமான இடத்தை இந்தியா வருங்காலத்தில் எட்டும் எனச் சொல்லி வருகின்றன.

கடந்த ஐந்து வருடங்களாக பெரிய பணக்கார நாடுகள் எல்லாம்  கடும் சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருக்கும் போது, இந்தியா மட்டும் தொடர்ந்து பெரிய பிரச்னைகள் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருப்பது உலகம்  முழுவதையும் நம்மைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

அதனால் ஆய்வு நிறுவனங்களும், பிரபல பல்கலைக் கழகங்களும் இந்தியாவைப் பற்றித் தெரிந்துகொள்ள இங்கே வந்துகொண்டுள்ளன. இந்தியப் பொருளாதாரம், சமூகங்கள், தொழில்முறைகள் எனப் பலவற்றைப் பற்றியும் அறிந்துகொள்ள அவர்கள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.

உலக அளவில் முக்கியமான முடிவுகளை எடுக்கக் கூடிய  ‘ஜி-20′ என்னும் இருபது செல்வாக்கான நாடுகளின் அமைப்பில் இந்தியா இடம் வகித்து வருகிறது. இந்தியத் தொழில்களும், தொழில் நிறுவனங்களும் சர்வதேச அளவில் பரவி வருகின்றன. எனவே உலகின் கவனம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கித் திரும்பிக் கொண்டுள்ளது. இந்த சமயத்தில் சுவாமி விவேகானந்தரின் அன்றைய வார்த்தைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும்?

சுவாமி விவேகானந்தரின் காலம் (1863-1902) நமது தேச வரலாற்றில் மிக ஏழ்மையானதும் சோகமானதுமாகும். அந்தச் சமயத்தில் பஞ்சமும் பட்டினியும் தலை விரித்தாடின.

ஆங்கிலேயர்களின் மிகக் கொடூரமான  அணுகுமுறைகளாலும், அப்போதைக்கு சில ஆண்டுகளுக்கு முன் இந்திய நாட்டின் ஆட்சிப் பொறுப்பு அரசிக்கு மாறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுரண்டல்களாலும் நாடு மிகவும் வறுமையில் இருந்தது. முந்தைய நூற்றாண்டு தொடங்கி பல லட்சக் கணக்கான பேர் பட்டினியால் ஏற்கனவே உயிர் விட்டிருந்தனர்.அப்போதும் பல பகுதிகளில் பெரும்பான்மையான மக்கள் பசியால் வாடிக் கொண்டிருந்தனர்.

அந்தச் சமயத்தில் தான்  விவேகானந்தர் நாட்டின் பல பகுதிகளையும் சுற்றிப் பார்க்கிறார். பலதரப்பட்ட மக்களிடமும் அவர்களிடத்துக்கே நேரில் சென்று பேசுகிறார். சாதாரண மக்களின் நிலைமையை எண்ணி மனம் வெதும்புகிறார். நாட்டின் அப்போதைய சூழ்நிலையை முந்தைய காலகட்டங்களுடன் எண்ணிப் பார்க்கிறார். பிறகு மேற்கத்திய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழில் முன்னேற்றம் ஆகியவற்றுடன் ஒப்பிடுகிறார்; இந்திய தேசத்தை உலக அரங்கில் மீண்டும் முதன்மையான இடத்தில் உட்காரவைக்க வேண்டும் என அறைகூவல் விடுக்கிறார்.

வரலாற்றின் மிக மோசமான காலகட்டத்தில், அடிமை வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கும் போது, தேசத்தை மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்ப்பது என்பது மற்றவர்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத காரியமாகும். ஆனால் சுவாமி விவேகானந்தர் அது சாத்தியம் என நம்பினார்.

இன்றைய இந்தியாவுக்குப் பலமான அஸ்திவாரங்கள் உள்ளன. நாடு நிறைய வலிமைகளைப் பெற்றுள்ளது. அபரிமிதமான இயற்கை வளங்கள்,  பரந்த நிலப்பரப்பு, காடுகள், மலைகள், நதிகள், இனங்காண முடியாத அளவு உயிரினங்கள், செடி கொடிகள், வருட முழுவதும் ஆதவனின் கதிர்வீச்சு, மண்ணுக்கு மேலே மட்டுமன்றி கண்ணுக்குத் தெரியாமல் கீழேயும் மதிப்பிட முடியாத மூலப்பொருள்கள் எனப் பலவிதமான அனுகூலங்கள் நமக்கு உள்ளன.

மனித இனத்தின் ஆறில் ஒரு பகுதி மக்கள் இங்கு தான் வாழ்ந்து கொண்டுள்ளனர். மேலும் தற்போது உலகில் உள்ள இளைஞர்களிலேயே அதிகம் பேர் இங்கு தான் உள்ளனர். மிகப் பெரும்பாலான மக்கள் எளிமை, கடின உழைப்பு, குடும்பப் பற்று, முயற்சி, அமைதியை நாடும் குணம் ஆகிய நல்ல தன்மைகளைக் கொண்டவர்களாக உள்ளனர்.

இந்தியாவின்  குடும்ப அமைப்பு முறை நமது முக்கியமான சொத்தாகும். நமது குடும்பங்கள் தான் நல்ல மக்களை உருவாக்கி, நாட்டுக்குத் தேவையான சேமிப்புகளைப் பெருமளவு ஏற்படுத்தி, தமது முயற்சியினால் புதிய தொழில்களை உண்டாக்கி, சமூகத்தில் அமைதியை நிலைநாட்டி வருகின்றன.

மக்கள் நிம்மதியாக வாழவும் பொருளாதார முன்னேற்றத்தை அடையவும், சமூகங்கள் உறுதுணையாக அமைகின்றன. நமது நாட்டில் சமூக மூலதனம் அதிகமாக உள்ளது.

நமது குடும்பங்களும் சமூகங்களும் அடுத்தவரைச் சார்ந்து நிற்காமல் சொந்தமாக இயங்கும் தன்மை பெற்றவை. மேற்கத்திய நாடுகளைப் போல அவை எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தைச் சார்ந்து நிற்பதில்லை. சுதந்திரத்துக்குப் பிந்தைய கடந்த  அறுபது ஆண்டு கால வளர்ச்சி மக்களாலேயே பெருமளவு முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பல சமயங்களில் அது அரசு இயந்திரங்களை மீறிய வளர்ச்சியாகவும் உள்ளது.

இந்தியக் கலாசாரம் உயர் தரமானது; தனித்தன்மைகள் நிறைந்து நிற்பது. உலகமே ஒரு குடும்பம் என்னும் சிந்தனையில் அமைந்தது. உயிரில்லாத பொருள்களிலும் தெய்வீகத்தைக் காண்பது. கண்ணுக்குத் தெரியாத இந்தக் கலாசாரம் தான் இன்றைக்கும் நமது நாட்டின் அடித்தளமாக விளங்கி வருகிறது. இந்திய வாழ்க்கை முறையில் குடும்பங்களும், சமூகங்களும், அவற்றுக்கு ஆதாரமான கலாசாரமும் மிக முக்கியமான பங்கினை ஆற்றி வருகின்றன.

ஆயினும் நமது நாடு, அதன் வளங்கள் மற்றும் திறமைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி முழுமையான பலன்களைப் பெற முடியவில்லை. அதனால் தேசம் பல விதமான சிரமங்களை அனுபவித்து வருகிறது.

இதற்கு முக்கியமான ஒரு காரணம் படித்த நமது மக்களின் தேசம் பற்றிய அறிவுப் பற்றாக்குறையாகும். இந்தியர்கள் இன்று உலக அளவில் அதிக எண்ணிக்கையில்  படித்து, பல்வேறு நிலைகளில் உள்ளனர். சாதாரண நிலைகளில் உள்ள மக்களே  பெரும்பான்மையானவர்கள். பொதுவெளியில் அவர்களின் கருத்துக்களுக்குப் பெரிய மதிப்பில்லை. மேலும் அவர்களுக்கு சுலபமாகக் கருத்துக்களை வெளிப்படுத்தத் தெரியாது. எனவே படித்தவர்கள் தான் அவர்களுக்குமான பிரதிநிதிகளாக உள்ளனர். ஆகையால் படித்தவர்களின் பொறுப்பு அதிகம். அவர்களால் தான் நாட்டைப் பற்றி சரியான முறையில் விஷயங்களை எடுத்துவைக்க முடியும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஆங்கிலேயரால் திணிக்கப்பட்ட கல்விமுறையின் தாக்கம், சுதந்திரம் பெற்று இவ்வளவு ஆண்டுகளுக்குப் பின்னர், இன்னமும் அப்படியே பெரும்பாலும் நீடித்துக் கொண்டுள்ளது. அதனால் நமது நாட்டைப் பற்றி சரியான புரிதல் இல்லை.

நமக்கான ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ளது. உலகிலேயே அதிக செல்வச் செழிப்பான நாடாக, வரலாற்றில் அதிக காலம் நாம் தானிருந்தோம். தொழில்கள், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், வர்த்தகம், இலக்கியம், கண்டுபிடிப்புகள் எனப் பல துறைகளிலும் உலகுக்கே முன்னோடியாக விளங்கி வந்துள்ளோம்.

பொருளாதாரச் செழிப்பின் உச்சத்தில் இருந்தபோதும், ஆன்மிகத்தின் அடித்தளத்திலேயே கால்களைப் பதித்து  வைத்திருந்த சிறப்பினை உடையது நமது தேசம். இது உலகின் எந்த நாட்டிலும் காணப்படாத அதிசயமாகும்.

நமது வரலாற்றைச் சரியாகப்  படிக்கும்போது இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான எத்தனையோ நல்ல விஷயங்களை  நாம் சுலபமாக எடுத்துக்கொள்ள முடியும். தவறுகளிலிருந்து பாடமும் கற்றுக் கொள்ளலாம். அவையெல்லாம்  நமது முன்னோர்கள்  நமக்குச் சேர்த்துவைத்துச் சென்ற சொத்து.

நமது தேசத்தின் தற்போதைய நடைமுறைகள் மற்றும் அதற்கான அடிப்படைகள் ஆகியவை பற்றியும் நமக்குச் சரியான புரிதல்கள் இல்லை. எந்த ஒரு விஷயமானாலும் அதை மேற்கத்திய அணுகுமுறைகளைக் கொண்டே பார்க்கும் பழக்கமே நம்மிடம் மிகுந்துள்ளது. ஏனெனில் நமது பாடப் புத்தகங்களில் தொடங்கி நாம் செய்திகளுக்காகத் தினசரி நாடும் ஊடகங்கள் வரை பெரும்பாலும் அப்படிப்பட்ட அணுகுமுறைகளை மையமாக வைத்தே அமைந்துள்ளன. எனவே நமது வலிமைகள் நமக்குப் புரிவதில்லை. சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட பிற நாடுகளை நகலெடுத்துச் செய்யும் பழக்கம் தொடர்கிறது.

இந்தியப் பொருளாதாரத்துக்கு பிற நாடுகளை விட வலிமைகள் இருப்பது நமது கண்ணுக்கு முன்னால் நன்றாகத் தெரிகிறது. கடந்த சில  வருடங்களாக மேற்கத்திய நாடுகள் பெரும் சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டுள்ளன. அவற்றிலிருந்து மீள்வதற்கு அவர்களுக்கு எந்த வழியும் தென்படவில்லை. அதே சமயம் நமது பொருளாதாரம் எத்தனையோ குழப்பங்களுக்கு இடையிலும் வலுவாக உள்ளது. ஆயினும்  இதனுடைய அடிப்படை குறித்து நாம் அதிகம் சிந்திப்பதில்லை.

பணக்கார நாடுகள் பலவற்றில் ஆணும் பெண்ணும் முறையாக இணைந்து வாழ்வதே வெகுவாகக் குறைந்து வருகிறது; சமூகங்கள் சீரழிந்து வருகின்றன. ஆனால் எவ்வளவோ தாக்கங்களுக்கு அப்புறமும் நமது குடும்ப மற்றும் சமூக அமைப்பு முறைகள் பெருமளவு சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டுள்ளன. ஆனால் அவற்றின் தன்மைகளைப் பற்றி நாம் முழுமையாகத் தெரிந்து கொள்வதே இல்லை.

அதாவது, வரலாற்றை மட்டுமன்றி நிகழ்காலத்தைப் பற்றியும் சரியாகத் தெரியாதவர்களாகவே நாம் இருந்து வருகிறோம். நமது படிப்புகளும் பட்டங்களும் பதவிகளையும் பணத்தையும் கொடுக்கின்றன. ஆனால் நம்மைத் தாங்கி நிற்கும் அடிப்படைகளைப் பற்றியோ, சுற்றியுள்ள சூழ்நிலைகளைப் பற்றியோ முழுமையாகத் தெரிந்துகொள்ள உதவி புரிவதில்லை. அதனால் நமது சுயத்தன்மையை இழந்து அந்நிய சிந்தனைகளுக்கு ஆட்பட்டே வாழ்க்கையை நகர்த்தி  வருகிறோம்.

இந்த வேளையில் தான் சுவாமி விவேகானந்தர் நமக்குத் தேவைப்படுகிறார். அவர் ஒரு பெருமை மிக்க துறவி மட்டுமல்ல; ஒரு தீர்க்கதரிசி. எதிர்காலத்தில் நிகழக் கூடியவற்றை முன்னமே கண்டறியும் வல்லமை பெற்றவர்; பன்முகத் திறமைகளைக் கொண்ட  ஆளுமையைப் பெற்றவர்; ஒரு உயர்ந்த தலைவராகவும் தலைசிறந்த அமைப்பாளாராகவும் விளங்கியவர். அவரால் நிறுவப்பட்ட நிறுவனங்கள் இன்று உலகின் பல பகுதிகளிலும் பரந்து விரிந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவதைப் பார்க்கும் போது அவர் எவ்வளவு பெரிய அமைப்பாளர் (Organizer) என்பது  புரியும்.

கடவுளைக் காண நாட்டம் கொண்டு குருவைத் தேடிச் சென்று, பின்னர் ஆன்மிகத்தில் ஈடுபட்டு துறவறம் பூண்டிருந்தாலும், அவரது நோக்கம் தனிப்பட்ட முறையில் தான் முக்தி பெற வேண்டும் என்பதல்ல. மாறாக ஒட்டுமொத்த மக்களின் வாழ்வு சிறக்க வேண்டும் என்பதேயாகும்.

அதனால் தான் அவர் சேவைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார்; சாதாரண மக்கள், ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், வலிமை குறைந்தவர்கள் ஆகியோரின் முன்னேற்றத்தை வலியுறுத்தினார். அறிவியல் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், பெண் கல்வி, சமூக மேம்பாடு எனப் பல விஷயங்கள் குறித்தும் ஆழமான கருத்துகளை எடுத்துரைத்தார்.

அவரது தேசப்பற்று அபரிமிதமானது. மற்ற எல்லாவற்றையும் விட அவர் தேச நலனையே முக்கியமாகக் கருதினார். தேசத்தைத் தாய்மையின் வடிவமாகவும், பராசக்தியின் வடிவமாகவும் போற்றினார். அவரது வார்த்தைகள்  பல லட்சக் கணக்கான மக்களின் மனங்களில் தேச பக்தியை ஊட்டின. திலகர், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், ரவீந்தரநாத் தாகூர் உள்ளிட்ட எண்ணிலடங்காத மகத்தான மனிதர்கள் அவரால் உத்வேகம் பெற்றனர். நாட்டில் சுதந்தர வேட்கை ஏற்பட அவர் முக்கியமான காரணமாக விளங்கினார்.

தனியொருவராக அமெரிக்காவில் நடைபெற்ற சர்வ மத சபையில் பேசி, குறிப்பிட்ட சமயம்  மட்டுமே சரியானது என்னும் மேற்கத்திய நாடுகளின் எண்ணம் ஒட்டுமொத்த உலக நலனுக்கு ஏற்புடையதல்ல என்பதை எடுத்துக் காட்டினார். பின்னர் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு மேலாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பிரயாணம் செய்து, மக்களுடன் உரையாடி இந்திய கலாசாரத்தின் பெருமைகளை அவர்களுக்கு உணர்த்தினார்.

சுவாமி விவேகானந்தர் நமது நாட்டில் உதித்த ஒரு மிகப் பெரிய உந்து சக்தி. அன்று முதல் இன்று வரை தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள பல லட்சக் கணக்கான மக்களை ஆட்கொண்டு வருபவர்.

நாடு முழுவதிலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்களை சுவாமி விவேகானந்தருடன் மானசீகமாக இணைத்துக் கொள்வது இன்றளவும் நடந்து வருகிறது. அவர்கள் எல்லாம் வெவ்வேறு விதமான பின்னணிகளைக் கொண்டவர்கள். அவர்களின் மாநிலங்கள், மொழிகள், தொழில்கள், படிப்புகள் எனப் பலவும் வேறு. ஆனால் அவர்கள் அனைவருமே சுவாமி விவேகானந்தரின் கருத்துகள், செயல்பாடுகள் அல்லது அவரது ஆளுமை ஆகியவற்றால் கவரப்பட்டவர்கள். எனவே நாடு முழுவதும் அதிகம் பேரால் பரவலாக அறியப்பட்ட உதாரண புருஷராக அவர் இன்றளவும் விளங்கி வருகிறார்.

இன்றைய காலகட்டம் உலக வரலாற்றில் மிகவும் முக்கியமானது. கடந்த இருநூறு வருடங்களுக்கு மேலாகக் கோலோச்சி வந்த மேற்கத்திய நாடுகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. அதேசமயம் எத்தனையோ பிரச்னைகளை எல்லாம்  மீறி உலக அரங்கில் இந்தியா மீண்டெழுந்து வந்து கொண்டுள்ளது. இந்த சமயத்தில் நமக்கெல்லாம் ஒரு முக்கியமான பணி காத்துக் கிடக்கிறது. அது நமது நாட்டைப் பற்றிச் சரியாகப் புரிந்துகொண்டு, நாட்டின் நலனுக்காகச் செயல்படுவதாகும்.

சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகளுக்கு மேலாகியும் தீர்க்கப்படாத பல முக்கிய பிரச்னைகள் நம் முன்பு உள்ளன. அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு அடிப்படைத் தேவைகளைக் கூட வழங்க இயலாத நிலையில் நாம் உள்ளோம். நாட்டுக்கே உணவளிக்கும் விவசாயத் துறை கடும் சிரமங்களில் உள்ளது. வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இவற்றுக்கெல்லாம் காரணமாக அமைவது நமது தவறான கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகளே.

மேலும் நாட்டுப்பற்றுக் குறைந்த சுயநலவாதிகள் பொது வாழ்க்கையை ஆக்கிரமித்து வருவதும் நமது பெரிய குறைபாடாக உள்ளது.

எனவே நம்மிடத்தில் தேசப்பற்று உருவாக வேண்டும். நமது நாட்டை எல்லாத் திசைகளிலும் முன்னேற்றப் பாதையில் கொண்டுசென்று அதன்மூலம் அனைவரும் நன்றாக வாழும் சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். நமது தேசத்தின் பெருமை உலகெங்கும் பரவுவதற்கு நாம் பங்களிக்க  வேண்டும். அதற்கு சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை, லட்சியங்கள், கருத்துக்கள் ஆகியவை சரியான வழி காட்டும். ஏனெனில் அவரிடம் நம் அனைவரையுமே ஒட்டுமொத்தமாகத் தட்டி எழுப்பும் பேராற்றல் நிறைந்துள்ளது.

சுவாமி விவேகானந்தரின் வாழ்வும் வார்த்தைகளும் அமரத்துவம் பொதிந்தவை. எனவே அவர் இன்றைக்கும் நமக்குப் பொருத்தமானவர். முந்தைய காலங்களை விடவும் இன்றைக்கு அவரே மிகவும் அவசியமானவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top