Home » பொது » ஓமந்தூரார்!!!
ஓமந்தூரார்!!!

ஓமந்தூரார்!!!

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
(பிறப்பு: 1895, பிப். 1 – மறைவு:  1970, ஆக. 25)

எளிமையும் பணிவும் ஒருங்கே பெற்று வாழ்வில் உயர்ந்தவர்களில் ஒருவர் தமிழக முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். இவர் ஒருமுறை திண்டிவனம் விருந்தினர் மாளிகையில் தனது பணியின் காரணமாக தங்கிவிட்டு சென்னை திரும்புகிறார்.
மறுநாள் காலையில் அவரது காரோட்டி ஒரு பலாப்பழத்தை நறுக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அது ஏது என்று  விசாரித்தார். அதற்கு அந்த காரோட்டி, அதை திண்டிவனம் விருந்தினர் மாளிகை தோட்டத்திலிருந்து பறித்து எடுத்து வந்ததாக கூறினார்.

உடனே முதலமைச்சரான ஓமந்தூரார் தனது பையிலிருந்த இரண்டு ரூபாய் எடுத்து காரோட்டியிடம் கொடுத்து, உடனே திண்டிவனம் போய் அந்த பலாபழ்த்தை கொடுத்துவிட்டு வர உத்தரவிட்டார். ( அந்த நாளில் சென்னையில் இருந்து திண்டிவனம் போய் வர இரண்டு ரூபாய் தான் பேருந்துக் கட்டணம்). மேலும் அந்த இரண்டு ரூபாய் காரோட்டியின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

அதிர்ந்து போன காரோட்டி, “அந்த பலாபழத்தின் விலையே ஒரு ரூபாய் தான் அதை கொடுப்பதற்கு இரண்டு ரூபாய் செலவு செய்ய வேண்டுமா? என்றார்.

அதற்கு ஓமந்தூரார் உறுதியாகவும், தெளிவாகவும் பதிலளித்தார்: “இந்த இரண்டு ரூபாய், நீ அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்ததற்கான  அபராதம்” என்றார்.

அதிகாரத்தில் இருந்தபோதும்  தவறான  வழியில் சம்பாதிப்பதை அநீதியாகவும் ஒரு ரூபாய் மதிப்புள்ள பலாப்பழமாக இருந்தாலும் அதைப் பயன்படுத்துவது அதிகார துஷ்பிரயோகம் என்றும்  வாழ்ந்த ஓமந்தூராரைப் போல பல அரசியல் தலைவர்களை, தியாகிகளைப் பெற்ற பாரத அன்னை, இன்று  அதிகாரத்திலிருக்கும் அரசியல்வாதிகளின்   ஊழல்களைக்   கண்டு  பெருமூச்சு  விடுவதை  நம்மால் உணர முடிகிறது.

சமீபத்திய வானவில் (ஸ்பெக்ட்ரம்) அலைக்கற்றை மோசடியில் மட்டும் 1.76  லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய மத்திய அமைச்சர் ஆ.ராசாவை விலக்க முடியாமல் பிரதமர் வேடிக்கை பார்த்த பரிதாபத்தையும் நாம் கண்டிருக்கிறோம்.

நிர்வாகத் திறனும் எளிமையான வாழ்வும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாத பண்பும் சுயநலத்திற்கு இடம் கொடுக்காத தன்மையும் கொண்ட சர்தார் வல்லபாய் படேல்,  லால் பகதூர் சாஸ்திரி,  காமராஜர்,  ஓமந்தூரார், கக்கன்  போன்ற தேசியத் தலைவர்களை இனிவரும் அரசியல் களத்தில் காண்பதென்பது கனவாகிப் போகுமோ?

நல்ல முன்னுதாரணங்களை மறுபடியும் மறுபடியும் அனைவருக்கும் சொல்வோம். நற்கனவுகள் பலிக்கும் நாளுக்காகக் காத்திருக்காமல், அதனைப் படைக்கும் உள்ளங்களை சமைப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top