இடுப்புப் வலி ஓர் நரம்பியல் கோளாறு. காலையில் நீங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது, திடீரென்று ஒரு நரம்பு வலி, இடுப்பிலிருந்து கிளம்பி, தொடை வழியே பரவி காலின், ஆடுகால் சதையை தாக்கும். நரம்பை சுண்டி இழுப்பதை போல வலி ஏற்படும். இழுப்பு, வலி பயத்தை உண்டாக்கும். இதற்கு நிவாரணங்கள் உள்ளன. முதுகெலும்பு பிரச்சனையால், இந்த ‘இழுப்பு’ ஏற்படுகிறது.
இதற்கான வீட்டு வைத்தியம்:
• விளக்கெண்ணையை சிறிது சூடுபடுத்தி, பாதிக்கப்பட்ட காலின் பாதங்களில் தடவலாம். இதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.
• பூண்டு 5 பற்களை எடுத்து, 50 மி.லி. நல்லெண்ணையில் போட்டு, காய்ச்சி ஆற வைத்து, இளம் சூட்டில், பாதிக்கப்பட்ட, வலியுள்ள இடங்களில் தடவலாம்.
• புளிச்சாறெடுத்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு, களிம்பு போல் தயாரிக்கவும். இந்த களிம்பை தடவலாம்.
• சூடான நல்லெண்ணை + உப்பு – மசாஜ் செய்தால் வலி குறையும். மசாஜ் செய்யும்போது, அழுத்தி செய்யாமல், மிதமாக செய்யவும்.
• விளக்கெண்ணை ஒரு தேக்கரண்டி, தேங்காய் எண்ணை 1 தேக்கரண்டி + உலர்ந்த இஞ்சிப் பொடி 1/4 தேக்கரண்டி – இவற்றை ½ கப் சூடான நீரில் கலந்து, தினமும் இரவில் சாப்பிடவும்.
• ‘வெண் நொச்சி’ மூலிகை, இடுப்புப் பிடிப்பை குணப்படுத்தும். இதன் இலைகளால் செய்யப்படும் கஷாயத்தை, தினம் 3 லிருந்து 4 தேக்கரண்டி வீதம், எடுத்துக் கொள்ளவும்.
உணவு கட்டுபாடும் உதவும். காரம், எண்ணெய், அதிக புளி, கிழங்கு வகைகள், பொறித்த வறுத்த உணவுகள் இவற்றை தவிர்க்க வேண்டும்.
அத்துடன், போதுமான நல்ல ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் படுக்கையிலேயே முடங்கி விட வேண்டாம். அவ்வப்போது எழுந்து சிறு நடை பயிலுங்கள். குப்புற படுக்கக் கூடாது. நெடுநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணி செய்கின்ற போது, முதுகெலும்பு அதிக அழுத்தத்திற்கு ஆளாகிறது. குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாகிலும், இருக்கையை விட்டு நிமிட நேரம் நின்று, சிறிது தூரம் நடந்து பின்னர் வந்து அமருங்கள். நெடுநேரம் இருக்கையில் அமர வேண்டி வந்தால் சாய்ந்தோ அல்லது தொய்வாகவோ இராமல் நன்கு நிமிர்ந்து உட்காரப் பழகுங்கள்.
அதேபோல், உங்கள் பணி நிமித்தம் நெடுநேரம் நிற்க வேண்டி வந்தால், அது உங்கள் இடுப்பு மூட்டுக்களையும், முதுகு எலும்பையும் பாதிக்கக் கூடும். ஒரு காலை நேராகவும், மற்றொரு காலைச் சற்று மடக்கிய நிலையிலும் வைத்து நிற்கலாம். சிறிய பலகை அல்லது குட்டி ஸ்டூலின் மேல் ஒரு காலை வைத்துக் கொள்ளலாம். இயன்றவரை மிகத் தட்டையான தலையணை ஒன்றைப் பயன்படுத்தி, மல்லாந்த நிலையில் படுத்துத் தூங்குவது நல்லது. ஸ்பாஞ்ச், இலவம் பஞ்சு நிறைந்த மென்மையான மெத்தைகளைத் தவிர்த்து தேங்காய் நார் மெத்தைகளில் படுப்பது நல்லது.