பம்மல் சம்பந்த முதலியார்
(பிறப்பு: 1873, பிப். 1 – மறைவு: 1964, செப். 24)
தமிழுக்குப் பெருமை தருவது நாடகக்கலை. முத்தமிழில் நாடகம் இயலையும், இசையையும் தன்னகத்தே கொண்டது. நாடகத்தின் வெற்றிக்குக் காரணம், நல்ல கதை, கதைப் பாத்திரங்களுக்கேற்ற நடிப்பு, உணர்ச்சியைத் தக்க சமயத்தில் வெளிப்படுத்தும் ஆற்றல். நாடகக்கலையின் அறிவுபூர்வமான வளர்ச்சியே திரைப்படம்.
மேடையில் வெற்றிபெற்ற நாடகங்களின் உரிமையை விலைக்கு வாங்கித் திரைப்படமாகத் தயாரித்தனர். ஆனால், மேடையில் நடிக்கப்பட்ட நாடகங்கள் சிற்சில தவிர, மற்றவை சிறப்பாகப் பாடக்கூடியவர்களால் வெற்றியடைந்தன. பெண் பாத்திரங்களை ஆண்களே ஏற்கும் நிலை இருந்தது. பெரும்பாலும் புராணப் படங்களே மேடையில் நடிக்கப்பட்டன.
சங்கரதாஸ் சுவாமிகளும், பம்மல் சம்பந்த முதலியாரும் நாடகத் துறையில் காலடி எடுத்து வைத்த பிறகே தமிழில் நாடகத்துக்கு மதிப்பு ஏற்பட்டது.
சென்னையில் பம்மல் என்ற கிராமத்தில் 1873, பிப். 1 ம் தேதி பிறந்தார். தந்தையார் பெயர் விஜயரங்க முதலியார். தாயார் பெயர் மாணிக்கவேலு அம்மாள். “நாடக உலகப் பிதாமகர்” என்று அழைக்கப்பட்டு நடிகர்களால், நாடகத் தயாரிப்பாளர்களால் போற்றப்பட்ட சம்பந்த முதலியார், பிறந்த சிற்றூரான பம்மலுக்குப் பெருமையும் புகழும் சேர்த்தவர்.
சென்னை, மாநிலக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். சட்டம் படித்து வழக்குரைஞரானார். தந்தை, சிறுவயதில் பயிற்றுவித்த ஒழுக்கம், கட்டுப்பாடு, சத்தியம் தவறாமை இவற்றை என்றும் விடாது கடைப்பிடித்தார். அதனால், அவர் 1924ஆம் ஆண்டு சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியானார்.
வழக்குரைஞராக, நீதிபதியாக புகழ் பெறுவதற்கு முன்பாகவே அவர் நாடகத்துறையில் பேரும் புகழும் பெறவேண்டியிருக்கும் என்று அவரோ, வீட்டில் உள்ளவர்களோ நினைத்துப் பார்த்தது கிடையாது. 1891, ஜூலை 1ம் தேதி அவர் வாழ்க்கையில் முக்கியமான நாள். அவர் தமிழ் நாடகங்கள் எழுதுவதற்கும் நடிப்பதற்கும் உந்து சக்தியாக இருந்த “சுகுண விலாஸ சபை” அன்றுதான் நிறுவப்பட்டது.
பல்லாரி கிருஷ்ணமாச்சாரி என்பவர் ஆந்திர மாநிலம் பல்லாரி என்ற ஊரிலிருந்து சென்னைக்கு வந்து, விக்டோரியா நினைவு மண்டபத்தில் (மெமோரியல் ஹால்) தெலுங்கு மொழியில் நான்கைந்து நாடகங்கள் நடத்தினார். அவை இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தன. இதனால், நாடக சபை ஒன்றைச் சென்னையில் நிறுவ வேண்டும் என்று சில இளைஞர்கள் விரும்பினார்கள். அதுபோன்ற எண்ணம் கொண்டவருள் சம்பந்த முதலியாரும் ஒருவர்.
அவர் எண்ணத்தை ஊக்குவிக்க, அவரின் இளம் வயது நண்பர் வெங்கட கிருஷ்ணநாயுடு என்பவர், (சிறுவயதிலிருந்தே நாடகம் பார்ப்பதில் ஈடுபாடு கொள்ளாத சம்பந்தனாருக்கு, பல்லாரி நாடகமே காரணம் என்பதை அறிந்தார்) சம்பந்தனாரின் ஆவலுக்குத் தூண்டுகோலாக இருந்தார். அவர்கள் எண்ணம் நிறைவேறத் தொடங்கப்பட்டதுதான் “சுகுண விலாஸ சபை”.
அச்சமயம் சம்பந்தனார், “சகுந்தலா” என்ற நாடகத்தைத் தமிழாக்கம் செய்துகொண்டிருந்தார். அந்த நாடகத்தைத் தயாரித்து, சுகுண விலாஸ சபையில் அரங்கேற்ற அன்பர்கள் ஆதரவு தந்தார்கள். அப்போது, அவருக்கு வயது பதினெட்டு. பி.ஏ. தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தார்.
அங்கத்தினர்கள் ஒத்துழைப்போடு சுகுண விலாஸ சபை சிறப்பாக வளர்ந்தது. சம்பந்தனாரின் நாடகக் கனவு நிறைவேறி வந்தது. நாடகத்தில் நடிப்பவர்களின் தரம் குறைந்திருந்த காலத்தில் சம்பந்தனாரின் நாடகங்கள் கண்ணியமானவை என்ற பெயர் பெற்றது. பாடல்கள் நிறைந்தனவாகவும், உரையாடல்கள் பெரும்பாலும் செய்யுள் நடையிலும் இருந்தன. சமூகத்துக்கு நீதி புகட்டும் கதையைத் தேர்ந்தெடுத்தே நாடக வடிவமாக்கினார் சம்பந்தனார். அதை, சமூகத்தில் உயர் தட்டில் உள்ளவர்கள், அறிஞர்கள், புலவர்கள் பாராட்டி வாழ்த்துக் கடிதங்கள் எழுதினார்கள்.
மனோன்மணீயம் நாடகம் எழுதிய சுந்தரம்பிள்ளை, சி.வை.தாமோதரம் பிள்ளை, அஷ்டாவதானம் பூவை.கலியாணசுந்தரம் பிள்ளை முதலிய அறிஞர்கள் சம்பந்தனாரின் நாடகத்தைப் பார்த்துப் பெரிதும் பாராட்டினார்கள். தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் “சாற்றுக் கவிதை” எழுதி அனுப்பினார். சம்பந்தனாரைவிட பரிதிமாற் கலைஞர் வயதில் இளையவர் என்றாலும், அவர் நாடகம் நடத்தும் முறை, உரையாடல்கள் போன்றவற்றைப் பாராட்டினார்.
நாடகம் வெற்றியடைய ஒவ்வோர் நிலையிலும், சம்பந்தனார் மிகவும் கவனம் செலுத்தினார். நாடகத்தில் தந்திரக் காட்சிகள் அமைத்து, நாடகம் பார்க்க வருவோரின் கரவொலியையும் பாராட்டுதலையும் பெற்றதனால் சம்பந்தனாரின் புகழ் பரவியது. கதைக்கேற்ற பாத்திரங்களைத் தேடி அவர்களுக்குச் சிறப்பாக ஒத்திகை செய்வித்த பிறகே மேடை ஏற்றுவார்.
அவரது முதல் நாடகம் “புஷ்பவல்லி”. அவர் எழுதிய நாடகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவையாக இருந்தாலும், மிகவும் புகழ்பெற்ற நாடகம் “மனோகரா”.
மனோகரா நாடகத்தை எழுதத் தொடங்கியபோது அவரது தந்தை நோய்வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு ஏதாவது நேர்வதற்குள் நாடகத்தை எழுதி அரங்கேற்றிவிட வேண்டும் என்று தீவிர முயற்சியில் இருந்தார். ஆனால், முதல் காட்சி எழுதியவுடனேயே தந்தை உயிர் நீத்தார். மறுநாளே சம்பந்தனார் நாடகத்தின் இரண்டாவது காட்சியை எழுதுவதில் முனைந்தார். இதுபோலத்தான் தன் தாயும், மனைவியும் இறந்தபோதும் செய்தார்.
“என் துக்கத்தை மறக்க, நாடகம்தான் சிறந்த மருந்து” எனக் கூறி, தான் எழுதிய காட்சிகளை வழக்கம்போல் நண்பர்களுக்குப் படித்துக் காட்டத் தொடங்கிவிடுவாராம். நாடகம் அவருடைய லட்சியமாக – உயிராக விளங்கியது.
மனோகராவின் நாடகக் காட்சி ஒவ்வொன்றையும் அவர் மிகக் கவனத்துடன் அமைத்தார். கதை அவருடைய சொந்தக் கற்பனை. நாடக ஆசிரியர் சம்பந்த முதலியார், தன் “நாடக நினைவுகள்” வரலாற்றில் குறிப்பிட்டதை அவர் எழுத்திலேயே தருவதில் தான் சிறப்பு இருக்கிறது.
“என் நண்பர் ஜெயராம நாயகருடைய வீட்டில் முழு ஒத்திகை நடைபெற்றது. அதில் முக்கியமாக எனக்கு ஞாபகம் இருக்கும் விஷயம் என்னவென்றால், இந்த நாடகத்தில் தற்காலத்தில் “இரும்புச் சங்கிலிக் காட்சி” என்று வழங்கிவரும் முக்கியக் காட்சியில் என் முழு தேக வலியுடன் மிகுந்த உரத்த சப்தத்துடன் “ஆக்டு” செய்ததனால், அக்காட்சியின் முடிவில் சற்றேறக்குறைய வாஸ்தவத்திலேயே மூர்ச்சையானேன். அவ்வளவு நாள் தேக சிரமப்பட்டது அனாவசியம் என்றே இப்பொழுது யோசிக்கும்போது தோன்றுகிறது” (நாடக மேடை நினைவுகள் – நூலை வெளியிட்ட ஆண்டு 1932).
மனோகரா நாடகம் சுகுண விலாஸ சபையாரால் 1895ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் நாள் விக்டோரியா நினைவு அரங்கில் நடைபெற்றது. நாடகத்தைக் கண்டு களித்த பெருமக்கள் மிகவும் பாராட்டினர். அந்தப் பாராட்டுதலும் வரவேற்பும் திரைப்படமாக ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்தபோதும் ஏற்பட்டன. இந்த நாடகம் பல நாடகச் சங்கங்களால் நடிக்கப்பட்டது.
சம்பந்தனார் எழுதிய நாடகங்கள் மொத்தம் 94. அவைகளில் வெற்றிகரமாகத் திரையேறிய நாடகம் சபாபதி. பம்மல் சம்பந்த முதலியார் வாழ்ந்த காலத்தில் நாடகத் தொழிலுக்கு மரியாதை குறைவு. நடிப்பவர்களை கூத்தாடிகள் என்றே அழைப்பார்கள். நாடகங்களில் பாடல்கள் அதிகம். நாடகத்துக்குச் சென்றுவந்தால் இசைக் கச்சேரிக்குச் சென்றுவந்த உணர்வுதான் ஏற்படும். அந்தச் சூழலை – நிலையை மாற்றியவர் சம்பந்தனார்தான்.
“நாடகத் தந்தை” என்று அவரைக் கூறுவதைவிட “நாடகக்கலைப் பிதாமகர்” என்று அழைப்பதே பொருத்தமாகும். அந்த அளவுக்கு மிக கவனத்தோடு நாடகக்கலையை வளர்த்தார். 1959ஆம் ஆண்டு இவருக்கு “பத்மபூஷண்” விருதை பாரத அரசு வழங்கிச் சிறப்பித்தது. (முன்பே ஆங்கில அரசு ராவ் பகதூர் பட்டத்தை வழங்கியிருந்தது).
தெய்வ பக்தியும், பெற்றோரிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த ஒழுக்க சீலரான பம்மல் சம்பந்த முதலியார், 91வது வயதில், 1964, செப். 24 ம் தேதி இறைவனடி சேர்ந்தார்.
நாடகக் கலைக்கே தனிச் சிறப்பும் மரியாதையும் ஏற்படுத்திய பம்மல் சம்பந்த முதலியார் நினைவு, நாடகக்கலை உள்ளளவும் அழியாது.