வாசுதேவ் பல்வந்த் பட்கே
(பிறப்பு: 1845, நவ. 4 – பலிதானம்: 1883, பிப். 17)
இந்திய ஆயுதப் புரட்சிக் குழுக்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர், மராட்டிய மாவீரன் வாசுதேவ் பல்வந்த் பட்கே. ஆங்கிலேய ஆட்சியால் சீர்குலையும் இந்தியப் பொருளாதாரம் கண்டு பொருமிய அவர், ஆயுதக் குழுக்களை உருவாக்கி வெள்ளையர் கஜானாவைக் கொள்ளையடித்து ஆதிக்க ஆட்சியை அதிர வைத்தார்.
மகாராஷ்டிராவின் ராஜ்காட் மாவட்டம், பன்வேல் வட்டம், ஷிர்தான் கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில், மராட்டிய சித்பவன் பிராமண வகுப்பில், 4.11.1845-ல் பிறந்தார் வாசுதேவ் பல்வந்த் பட்கே. சிறுவயதிலேயே மல்யுத்தம் உள்ளிட்ட உடற்பயிற்சி சாகசங்களில் நாட்டம் கொண்டிருந்த பட்கே, உயர்நிலைப் பள்ளியில் இடைநின்றார். எனினும், புனாவில் இருந்த ராணுவ கணக்குத் துறையில் எழுத்தராகப் பணி புரிய வாய்ப்பு கிடைத்தது. அங்கு அவர் 15 ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போது ஆங்கிலேயே ஆட்சியின் அநியாயங்களை நேரில் காணும் வாய்ப்பு பெற்றார்.
அப்போது புரட்சிவீரர் லாஹுஜி வஸ்தாத் சால்வே உடன் பட்கேவுக்கு தொடர்பு ஏற்பட்டது. சால்வே நடத்திய உடற்பயிற்சிசாலை சென்ற பட்கே, அங்கு தேசபக்திப் பிரசாரங்களை அறிந்தார். அதே சமயம் மராட்டியத்தில் புகழ் பெற்று விளங்கிய மகாதேவ கோவிந்த ரானடேவின் சொற்பொழிவுகளையும் அவர் கேட்டார். அப்போது, நமது நாட்டின் பொருளாதார வளம் ஆங்கிலேய அரசால் கொள்ளையடிக்கப்படுவது பட்கேவுக்குப் புரிந்தது. இதற்கு மாற்றாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உள்ளக் கிடக்கையில், ‘ஐக்கிய வர்த்தினி சபா’ என்ற அமைப்பை 1870 ல் நிறுவினார் பட்கே.
அதன்மூலமாக இளைஞர்களை பட்கே ஒருங்கிணைத்தார். சால்வே உடனான் தொடர்பால், பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சார்ந்த மக்களுடன் இணைந்து பணி புரிவதன் வாயிலாகவே ஆங்கிலேயரை எதிர்க்க முடியும் என்று உணர்ந்தார் பட்கே.
இந்நிலையில் தான் பட்கேயின் வாழ்வில் திருப்புமுனையான சம்பவம் நடந்தது. அவரது தாய் மரணத் தறுவாயில் இருந்தபோது அவரைக் காண விடுமுறைக்கு விண்ணப்பித்தார் பட்கே. ஆனால், விடுமுறை மறுக்கப்பட்டது. அதனால் தாயின் இறுதிக்கணத்தில் அவரால் உடனிருக்க முடியாமல் போனது. இதனால் மனம் வெகுண்ட பட்கே அரசுப் பணியிலிருந்து விலகினார். ஏற்கனவே அவரது நெஞ்சில் கனன்ற சுதந்திர தாகம், எரிமலையாய் வெடித்தது.
1875 ல் பரோடா சமஸ்தானத்தின் கெய்க்வாட் மன்னர் ஆங்கிலேய அரசால் பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதனை எதிர்த்து பட்கே மக்களிடம் தீவிரமாக பிரசாரம் செய்தார். அந்தச் சமயத்தில் தக்காணப் பீடபூமியில் கடும் பஞ்சம் நிலவியது. ஆங்கிலேய அரசு நாட்டைச் சுரண்டுவதில் காட்டிய அக்கறையை நாட்டு மக்களைக் காப்பதில் காட்டுவதில்லை என்பதை உணர்ந்த பட்கே, பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் துடித்தார். அதற்காக ஆங்கிலேய அரசின் கருவூலங்களைக் கொள்ளையடிக்கவும் துணிந்தார்.
மராட்டியத்தின் ராமோஷி, கோலிஸ், பில்ஸ், தாங்கர்ஸ் ஜாதி மக்களை திரட்டிய பட்கே, அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 300 இளைஞர்களைக் கொண்டு ஒரு தாக்குதல் படையை உருவாக்கினார். அவர்களுக்கு துப்பாக்கியால் சுடுதல், குதிரையேற்றம், தற்காப்பு உத்திகளைப் பயிற்றுவித்தார். இந்தப்படை முதன்முதலாக ஆங்கிலேய அரசுக்கு செலுத்துவதற்காக வசூலித்து வைக்கப்பட்டிருந்த கப்பப் பணம் ரூ. 400 ஐ ஒரு வர்த்தகர் வீட்டிலிருந்து கொள்ளை அடித்தது. அந்தப் பணம் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்கு பயன்படுத்தப்பட்டது.
அரசுப் பணத்தைக் கொள்ளையடித்த கும்பல் மீது அரசு தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டது. ஆனால், உள்ளூர் மக்களின் ஆதரவு காரணமாக, பட்கே குழுவினரைப் பிடிக்க முடியவில்லை. இவ்வாறு பல இடங்களில் அரசு பணத்தைக் கொள்ளையடித்த பட்கே குழு ஆங்கிலேய அரசுக்கு சிம்ம சொப்பனம் ஆனது.
எனினும், பட்கேவின் தளகர்த்தரான தவுலத்ராவ் நாயக் என்னும் ராமோஷி இனத் தலைவர் சிக்காலி என்ற இடத்தில் அரசு கஜானாவில் ரூ. 1.5 லட்சம் அரசுப் பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பியபோது அரசுப் படைகளால் சூழப்பட்டார். இரு தரப்புக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தவுலத்ராவ் நாயக் கொல்லப்பட்டார். பட்கேவின் முயற்சிகளுக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டது.
கொள்ளைக் கும்பலின் தலைவனான பட்கேவுக்கு ஆங்கிலேய அரசு வலை விரித்தது. அவர்களிடமிருந்து தப்பி ஸ்ரீசைலம் சென்ற பட்கே, மல்லிகார்ஜுனர் கோயிலில் தலைமறைவாக சில நாட்கள் இருந்தார். அங்கிருந்தபடி, மீண்டும் 500 இளைஞர்கள் கொண்ட மற்றொரு படையை உருவாக்கினார் பட்கே. எனினும் பெரும் ஆயுத பலம் கொண்ட ஆங்கிலேய அரசு முன் பட்கேவின் முயற்சிகளுக்கு பெரும் பலன் கிடைக்கவில்லை. கானூர் என்ற இடத்தில் பிரிட்டீஷ் ராணுவம் மீது பட்கே குழு நடத்திய நேரடித் தாக்குதல், அரசுக்கு எச்சரிக்கையாக அமைந்தது.
ஆங்காங்கு கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த வாசுதேவ் பல்வந்த் பட்கேவைப் பிடித்துத் தருவோருக்கு வெகுமதி அழைப்பதாக அரசு அறிவித்தது. இதற்கு பதிலடியாக, பம்பாய் மாகாண ஆளுநரைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு பரிசளிப்பதாக பட்கே அறிவித்தார்!
ஆங்கில அரசின் தேடுதல் வேட்டையிலிருந்து தப்பிய பட்கே, ஹைதராபாத் சமஸ்தானத்திற்கு சென்றார். அங்கும் அவர் புரட்சிப் படைக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுவந்தார். ஆனால், இரவும் பகலும் பலநூறு ஆங்கிலேய போலீசார் பட்கேவை வலைவீசித் தேடி வந்தனர். நிஜாம் அரசின் காவலர்களும் அவர்களுக்கு உதவியாக பட்கேவைத் துரத்தினர். இறுதியில் பந்தர்ப்பூர் செல்லும் வழியில், காட்டிக்கொடுத்த துரோகி ஒருவனின் உதவியுடன் பட்கேவை கலாட்சி என்ற இடத்தில் 20.7.1879-ல் கைது செய்தனர் பிரிட்டீஷ் போலீசார்.
புனா கொண்டுசெல்லப்பட்ட பட்கேவும் அவர்தம் தோழர்களும் ஆங்கிலேய அரசின் விசாரணைக்குப் பிறகு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர். பட்கே அடேன் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். ஆனால், சிறைக்கதவை உடைத்து தப்பினார் பட்கே (13.2.1883). அதன்மூலமாக மராட்டியம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினார். எனினும் மிகக் குறுகிய காலத்தில் பட்கேவை மீண்டும் கைது செய்த பிரிட்டீஷ் போலீசார், மீண்டும் சிறைக்கு அனுப்பினர்.
சிறையில் அவருக்கு பயங்கர கொடுமைகள் இழைக்கப்பட்டன. அவற்றைக் கண்டித்து, சிறைக்குள் உண்ணாவிரதத்தைத் துவக்கினார் வாசுதேவ் பல்வந்த் பட்கே. தொடர் உண்ணாவிரதத்தின் முடிவில், 17.2.1883 -ல் உயிர்நீத்தார் பட்கே.
பட்கேவின் உயிர்த்தியாகம் ஆங்கிலேய அரசுக்கு ஒருவாறாக நிம்மதி அளிப்பதாக அமைந்தது. ஆயினும் பிற்காலத்தில் நாட்டில் தோன்றிய புரட்சிப் படைகளுக்கு பட்கேவின் வீரம் உந்துசக்தி அளிக்கும் காவியமாக மாறியது.