Home » பொது » நினைவில் வாழும் வெற்றித் திருமகன்
நினைவில் வாழும் வெற்றித் திருமகன்

நினைவில் வாழும் வெற்றித் திருமகன்

பீல்ட் மார்ஷல் மானேக்ஷா
(பிறப்பு:  1914, ஏப். 3- மறைவு: 2008, ஜூன் 27)

  40 ஆண்டுகால ராணுவ சேவையில் 5 போர்களைச் சந்தித்தவர். பாகிஸ்தானுடனான போரின்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன்  முரண்பட்ட போதும்,   போர்க்குணத்துடன் போராடி பாகிஸ்தானைத்   தோற்கடித்து சரணடையச் செய்தவர். வங்கதேசம் எனும் தனிநாடு உருவாகக் காரணமாகி,  இன்றுவரை அந்த நாட்டினரால் தங்களது தேசத்தின் மீட்பராக நினைவு கூரப்படுபவர். இரும்பு மனிதர் என்று போற்றத்தக்க உறுதி படைத்தவர் சாம் ஹோர்முஸ்ஜி பிரேம்ஜி ஜாம்ஷெட்ஜி  மானெக்ஷா   என்ற பீல்டு மார்ஷல் சாம் மானெக்ஷா.

இந்திய ராணுவத்தில் 2 பேர்தான் ‘பீல்டு மார்ஷல்’ என்ற தகுதிநிலைக்கு உயர்ந்தவர்கள். ஒருவர்,  பீல்டு மார்ஷல் கரியப்பா, மற்றவர் பீல்டு மார்ஷல் மானெக்ஷா.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் ஹோர்முஸ்ஜி மானெக்ஷா- ஹீராபாய் என்ற பார்சி இன தம்பதியினருக்கு மகனாக ஏப். 3, 1914 -ல் பிறந்தார் சாம் மானெக்ஷா.

பள்ளிப் படிப்பு முடிந்ததும் இங்கிலாந்து சென்று மருத்துவம் படிக்க அனுப்புமாறு தனது தந்தையிடம் கேட்டார் மானெக்ஷா. ஆனால் சிறு வயதாக இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த அவர் டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரிக்கு விண்ணப்பித்தார். இங்கு படிக்க முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட 40 பேரில் அவரும் ஒருவர்.  1934-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய ராணுவத்தில் இரண்டாம் லெப்டினென்டாக சேவையைத் துவங்கினார் மானெக்ஷா.

1942-ம் ஆண்டு பர்மாவில் பணியாற்றியபோது இரண்டாம் உலகப் போர் மூண்டது. மூர்க்கத்துடன் வந்த ஜப்பானியப் படைகள் மீது நடத்திய எதிர்த்  தாக்குதலில் ஏராளமான இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அப்போது ஒரு போர்முனையைப் பிடிக்க எடுக்கப்பட்ட எதிர் நடவடிக்கையின்போது அவர் மீது இயந்திரத் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இதில் பலத்த காயமடைந்தபோதும், அந்த முனையை அவர் பிடித்தார். அப்போதைய ராணுவத் தளபதி டி.டி.கவன், மானெக்ஷாவின் உறுதியையும், துணிந்த நெஞ்சத்தையும் பாராட்டி போர்முனையிலேயே ‘மிலிட்டரி கிராஸ்’ விருதை அளித்தார்.

படுகாயமடைந்த பின் உடல்நலம் தேறியதும் குவெட்டாவில் உள்ள பணியாளர் கல்லூரிக்கு பயிற்சியாளராக அனுப்பப்பட்டார். பிறகு மீண்டும் பர்மாவில் போர்முனையில் பணியாற்றச் சென்றபோது மீண்டும் குண்டுக் காயம் அடைந்தார். போர் முடிவடையும் தறுவாயில் 10 ஆயிரம் போர்க் கைதிகளின் மறுவாழ்வுக்காக உதவி செய்தார். பிறகு ஆஸ்திரேலியாவில் 1946-ம் ஆண்டு சுற்றுலா சென்றார்.

தேசப் பிரிவினைக்குப் பிறகு ராணுவத்தில் ஏராளமான நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இதனால் 1947- 48ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் நடவடிக்கையில் வெற்றி கிடைத்தது. இதன் பிறகு கர்னலாக பதவி உயர்வு பெற்றார். நாகாலாந்தில் ஏற்பட்ட உள்நாட்டு கிளர்ச்சியை வெற்றிகரமாக முறியடித்தார். இதையடுத்து 1968-ம் ஆண்டு ‘பத்ம பூஷண்’ விருது வழங்கப்பட்டது.

7 ஜூன், 1969-ம் ஆண்டு சாம் மானெக்ஷா இந்தியாவின் ராணுவத் தளபதியாக பதவியேற்றார். 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரில் தனது ராணுவ அனுபவத்தின் மூலம் இந்தியாவை வெற்றி பெறச் செய்து வங்கதேசம் உருவாகக் காரணமானார்.

இந்திய ராணுவ வீரர்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்தி, தன்னம்பிக்கையுடன் போராட வைத்து பாகிஸ்தான் ராணுவத்தை வெறும் 14 நாள்களில் சரணடையச் செய்தார் மானெக்ஷா. இந்த நடவடிக்கையின்  போது 93 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் சிவிலியன்களை போர்க் கைதிகளாக இந்தியா சிறைபிடித்தது. இந்திய ராணுவ வரலாற்றில் மிகப் பெரிய வெற்றியாகவும், மிக வேகமான ராணுவ வெற்றியாகவும் இது போற்றப்படுகிறது.  இதையடுத்து  ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தத்தின் மூலம் வங்கதேசம் உருவாக்கப்பட்டது.

அவரது சேவையைப் பாராட்டி 1972-ம் ஆண்டு ‘பத்ம விபூஷண்’ விருது நமது  அரசால் வழங்கப்பட்டது. 1973, ஜன. 1-ம் தேதி அவருக்கு ‘பீல்டு மார்ஷல்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.
ராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டத்தில் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ கன்டோன்மென்டில் தங்கி இருந்தார்.

இந்திய ராணுவத்தில் ஒப்பற்ற சேவைகளைச் செய்து இந்தியாவின் தங்க மகனாகத் திகழந்த பீல்டு மார்ஷல் சாம் மானெக்ஷா 2008, ஜூன் 27-ம் தேதி காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top