Home » பொது » சைவம் போற்றும் அன்னை
சைவம் போற்றும் அன்னை

சைவம் போற்றும் அன்னை

காரைக்கால் அம்மையார்

சைவம் வளர்த்த 63  நாயன்மார்களுள் பெண்களுக்கும் இடமுண்டு. அவர்களுள் தலையாயவர் காரைக்கால் அம்மையார்.  பொது யுகத்திற்குப்  பின்  300- 500 காலப்பகுதியில் வாழ்ந்தவர் இவர் என அறிஞர்கள் கருதுகிறார்கள். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் இவரது இயற்பெயர் புனிதவதியார் ஆகும்.  நாயன்மார்களில் காலத்தால் மூத்தவர் இவர். இறைவனால் ”அம்மையே” என்று அழைக்கப் பெற்ற பெருமை உடையவர் என்பர்.

இவர் இயற்றிய பாடல்கள் – அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள், திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டு (20 பாடல்கள்), திரு இரட்டை மணிமாலை 20 பாடல்கள். தேவார காலத்துக்கு முந்தி இயற்றப்பட்ட இவரது பதிக முறையைப் பின்பற்றி, பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் அமைந்தன. இவரது சரிதம் இதோ…

காரைக்காலில் தனதத்தன் எனும் வணிகர் குலத்தலைவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு புனிதவதி என்று பெயர் சூட்டினார்கள். இவர் இளவயதிலேயே சிவபெருமானிடம் பக்தி கொண்டிருந்தார். சிவனடியார்களை வணங்கி உபசரிப்பார். இவருக்கு திருமண வயது எட்டியது.

நாகப்பட்டினத்தில் நிதிபதி எனும் வணிகத்தலைவன், தன் மகன் பரமதத்தனுக்கு புனிதவதியைத் திருமணம் செய்ய விரும்பினான். அதன்படி தனதத்தனுடன் பேச, புனிதவதியார்-பரமதத்தன் திருமணம் நடந்தேறியது. தனதத்தன் தன் மகளைப் பிரியாமல் இருப்பதற்காக, காரைக்காலிலே அவர்களை குடியமர்த்தினான். பரமதத்தன், வாணிபத் துறையை பெருக்கி புனிதவதியாருடன் இல்லறத்தை இனிது நடத்தினான்.

ஒருநாள் பரமதத்தனைக் காண வந்த வணிகர்கள், அவனுக்கு இரண்டு மாங்கனிகளைக் கொடுத்தனர். பரமதத்தன் அவற்றை வீட்டிற்குக் கொடுத்தனுப்பினான். அப்பழங்களை புனிதவதியார் வாங்கி வைக்கும்போது ஒரு சிவனடியார் பசியுடன் வந்தார். அவருக்கு புனிதவதியார், அமுது படைத்தார். அப்போது தன் கணவர் கொடுத்த இரு மாங்கனிகளுள் ஒன்றை சிவனடியாருக்கு படைத்தார். சிவனடியார், புனிதவதியாரை வாழ்த்திவிட்டுச் சென்றார்.

பரமதத்தன் மதியம் உணவருந்த விட்டிற்கு வந்தான். புனிதவதியார் அவருக்கு அமுது பரிமாறி, மீதமுள்ள ஒரு மாங்கனியையும் வைத்தார். பரமதத்தன் மாங்கனியை ரசித்து சாப்பிட்டான். கனியின் சுவையால் கவரப்பட்டு ‘மற்றுமொரு கனியையும் கொண்டு வா’ என்றான். உடனே சமையலறை சென்ற புனிதவதியார், உற்றவிடத்து உதவும் பெருமானே என சிவபெருமானை வேண்ட, உடனே புனிதவதியாரின் கையில் ஒரு மாங்கனி வந்தது. அந்தக் கனியை பரமதத்தனுக்கு படைத்தார்.

முன்சாப்பிட்ட கனியைவிட மிகச் சுவையாய் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தான் பரமதத்தன். உடனே தன் மனைவியிடம் இதற்கான காரணத்தைக் கேட்டான். புனிதவதியாரோ, கணவனிடம் உண்மையை மறைத்தல் தவறென்று நடந்தது அனைத்தையும் கூறினார்.

பரமதத்தனுக்கோ ஆச்சரியம். ‘சிவனருளா! அப்படியாயின் இன்னொரு கனி கொண்டுவா பார்ப்போம்!’ என்றான். உடனே புனிதவதியார் மீண்டும் இறைவனை வேண்ட, இறைவன் மேலும் ஒரு மாங்கனியை அருளினார். இதனைக் கண்ட பரமதத்தன், ‘இவள் தெய்வம். இவளை விட்டு நீங்குதல் வேண்டும்’ என அஞ்சி, புனிதவதியாரோடு தொடர்பின்றி வாழ்ந்து வந்தான்.

சில நாட்கள் கழித்து வாணிபத்திற்காக பாண்டிய நாடு சென்றான். அங்கு வாணிப குலப்பெண்ணை மணந்து, ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தான். அந்தப் பெண் குழந்தைக்கு, புனிதவதி எனப் பெயரிட்டு வளர்த்தான்.

பரமதத்தன் பாண்டிய நாட்டிலிருப்பதை அறிந்த உறவினர்கள் பரமதத்தனுடன் புனிதவதியாரை சேர்த்து வைக்க ஒரு பல்லக்கில் ஏற்றி பாண்டிய நாட்டுக்கு அனுப்பினார்கள். புனிதவதியாரின் வரவை அறிந்த பரமதத்தன் தன் மனைவி, மகளுடன் வந்து வணங்கி, உம் திருவருளால் இனிது வாழ்கிறேன். இக்குழந்தைக்கு உமது திருநாமத்தையே சூட்டியுள்ளேன் என்று கூறி அம்மையார் காலில் விழுந்து எழுந்தான்.

இதனைக் கண்ட அவர் சுற்றத்தினர், ‘என்ன இது? உன் மனைவியை ஏன் வணங்கினாய்?’ என கேட்க, ‘இவள் தெய்வம். இவர் மானிடரே அல்ல’ என நடந்தது அனைத்தையும் க்ப்ப்ரினான் பரமதத்தன்.

புனிதவதியார் உடனே இறைவனிடம், ”ஈசனே, இவருக்காக தாங்கிய மனித உடலை எடுத்துக் கொண்டு, பேய் வடிவை அருள்வாயாக!” என வேண்டி, பேய் உருவம் பெற்றார்.

இவருக்கு திருக்கயிலாயத்தைக் காண வேண்டும் எனும் ஆவல் உண்டானது. அதனால் கயிலையை நோக்கி, காலால் நடப்பதைத் தவிர்த்து, தலையால் கயிலை மலை மீது ஏறினார். இதைக் கண்ட உமாதேவியார் சிவனிடம் கேட்க, இவள் நம்மைத் துதிக்கும் பொருட்டு இப்பேய் உருவை வேண்டி பெற்றார்  என்று கூறினார்.

பின்னர் புனிதவதியாரைப் பார்த்து. ”அம்மையே வா” என்றழைத்தார். இறைவனின் திருவடியின் கீழ் எப்போதும் இருக்க வேண்டும் என வேண்டினார் புனிதவதியார்.  ”அம்மையே, தென்திசையில் திருவாலங்காடு எனும் ஊரில் நாம் நடனம் புரிவோம். அதைக் கண்டு இன்புற்று நம்மைப் பாடிக்கொண்டு இருப்பாயாக!” என்று அருளினார்.

உடனே திருக்கயிலையை விட்டு, தலையினால் நடந்து சென்று திருவாலங்காட்டை அடைந்தார். அங்கு ஆண்டவனின் திருநடனத்தைக் கண்டு வணங்கி, ‘கொங்கை திரங்கி’, ‘எட்டி இல்லம்’ எனும் இரண்டு மூத்த திருப்பதிகங்களைப் பாடினார். பின்னர் இறைவன் திருவடியின் கீழ் என்றும் சிவ ஆனந்தத்தை நுகரும் பேறு பெற்றார். அன்றுமுதல் இவர் ‘காரைக்காலம்மையார்’ என்று அழைக்கப்படுகிறார்.

காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வெறும் கதையல்ல. அவர் இயற்றிய தமிழ் நூல்கள் சாகா வரம் பெற்றவை. இறைவன் மீதான பக்தியில் தன்னை உருக்கிக் கொண்டு வாழ்ந்தவர் அவர் என்பதும், அதற்காகவே இல்லற வாழ்வைத் துறந்தவர் என்பதும், நாம் புரிந்துகொள்ள வேண்டிய சேதிகள். தமிழின் தெய்வீக ஆற்றலுக்கு சான்று பகர்கின்றன இவரது பாடல்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top