பக்கிம் சந்திர சட்டர்ஜி
(பிறப்பு: 1838, ஜூன் 27 – மறைவு: 1894 ஏப்ரல் 8)
‘வந்தே மாதரம்’
-இந்த வார்த்தைகள் விடுதலைப் போராட்டக் காலத்தில் சுதந்திர எழுச்சியை, உத்வேகத்தை ஊட்டிய மந்திர வார்த்தைகள்.
அன்று மட்டும் அல்ல, இன்றும் ‘வந்தே மாதரம்’ என்றால் நாடி நரம்பெல்லாம் தேசபக்தி கணல் பாய்கிறது.
இந்த வார்த்தைக்கு சொந்தக்காரர், இந்த நாட்டை நம் அனைவருக்கும் சொந்தமாக்க விதை தூவியவர், பக்கிம் சந்திர சட்டோபத்யாய என்னும் பக்கிம் சந்திர சட்டர்ஜி.
1838 ஜூன் மாதம் 27 -ஆம் தேதி, வங்க மாகாணத்தில், வடக்கு 24 பர்கானாவில் உள்ள கனந்தல்பரா என்ற ஊரில் பிறந்தார். 1894 ஏப்ரல் 8 -ஆம் தேதி மண்ணைவிட்டு விண் சென்றார்.
பக்கிம் சந்திர சட்டர்ஜி, எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்தார். பிரிட்டிஷ் இந்தியாவில் நீதிபதியாகவும், கலெக்ட்டராக பணியாற்றினார்.
இவர் 13 நாவல்கள் எழுதியுள்ளார். நகைச்சுவை, அறிவியல் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவரது படைப்புகள் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
நமது நாட்டின் தேசிய கீதம் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ‘ஜன கண மன’ என்ற பாடல் ஆகும். அதைப்போல நமது நாட்டின் தேசப் பாடலாக ‘வந்தே மாதரம்’ பாடலும் உள்ளது.
சுதந்திரப் போராட்ட காலத்தில் மக்கள் மத்தியில் சுதந்திரக் கணலை எழுப்பிய பக்கிம் சந்திர சாட்டர்ஜியின் ‘ஆனந்த மடம்’ நாவலில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடல் ‘வந்தே மாதரம்’. ஜாதுனாத் பட்டாச்சார்யா என்பவரால் மெட்டு அமைக்கப்பட்டு புகழ் பெற்றது. இந்தப் பாடல் துர்க்கையை வாழ்த்திப் பாடுகிறது. இஸ்லாமியர் மனம் புண்படுகிறது என்று பாடலை தேசிய கீதமாக ஏற்க முடியாது என்ற எதிர்ப்புக் குரல் இப்போதும் ஆங்காங்கே உள்ளது.
பக்கிம் சந்தரர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவும், வந்தேமாதரம் பாடல் இடம் பெற்ற ஆனந்த மடம் நாவலை எழுதவும் விதை போட்டவர் ராமகிருஷ்ணர் பரமஹம்சர்.
ஆம். ஒருமுறை பக்கிம் சந்திர சாட்டர்ஜி வங்காளத்தில் துணை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவர் தட்சிணேஸ்வரம் சென்று ராமகிருஷ்ணரிடம் ஆசி பெற்றார்.
அப்போது ராமகிருஷ்ணர், இவரின் பெயரைக் கேட்டார். இவரும், ‘பக்கிம் சந்திரர்’ என்று பதிலளித்தார்.
வங்காள மொழியில் பக்கிம் என்றால் ‘வளைந்த’ என்று பொருள். அதாவது வளைந்த சந்திரன். ‘பிறைச் சந்திரன்’ என்று அர்த்தம்.
இவரின் பெயரைக் ராமகிருஷ்ண பரஹம்சர் சிரித்தார். “ஆங்கிலேய அரசில் பணிபுரிபவன் தானே! ஆங்கிலேயனின் பூட்ஸ் காலால் மிதிபட்டதில் வளைந்து போய் விட்டாயா?” என்று கேட்டார்.
இந்த வார்த்தையால் சட்டர்ஜி வருத்தமுற்றார். வீடு வந்து சேர்ந்த்தும் அவர் செய்த முதல்வேலை ராஜினாமா கடிதம் எழுதியதுதான். தனது துணை ஆட்சியர் பதவியை ராஜினாமா செய்தார்.
அத்ன்பிறகு தீவிரமாக தேச விடுதலை பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ‘ஆனந்த மடம்’ நாவலை எழுதினார். அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராக சாதுக்கள் செய்யும் கலகத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் புதினம், ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடுமாறு மக்களைத் தூண்டுவதாக அமைந்ததாகும்.
சுதந்திரப் போராட்டப் புரட்சிக்குழுக்களுக்கு பக்கிம் சந்திர சட்டர்ஜியின் படைப்புகள் உத்வேகம் ஊட்டின. பக்கிம் சந்திர சட்டர்ஜியின் எழுத்தில் இடம்பெற்றிருந்த ‘அனுசீலன் சமிதி’ என்ற என்ற இயக்கம் ஆகும்.
பிபின் சந்திர பால் ஆகஸ்ட் 1906-இல் தேசப்பற்றை வளர்க்க ஒரு பத்திரிகை தொடங்க முடிவு எடுத்தபோது ‘வந்தே மாதரம்’ என்றே பெயரிட்டார். லாலா லஜபதி ராயும் இதே பெயரில் ஒரு பத்திரிகை நடத்தினார்.
பாரதியார் வந்தேமாதரத்தை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பக்கிம் சந்திரரின் பல படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
வந்தேமாதரம் அன்று மட்டும் அல்ல, இன்றும் ஒவ்வொருவரின் நாடி நரம்புக்களை தட்டி எழுப்பும் விதமாக அமைந்துள்ளது. நமது நாட்டின் 50-ஆவது பொன்விழா சமயத்தில் வந்தே மாதரத்தை தமிழில் ‘தாய் மண்ணே வணக்கம்’ என்று ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்தபோது மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.