1. ஒவ்வொரு வேளை உணவுடனும், ஒரு பச்சை நிறக் காய் அல்லது கனியைக் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறக் காய் அல்லது பழத்தைச் சாப்பிடுவது கூடுதல் நலம்.
2. நடுத்தர வயதில், தோல் பராமரிப்புக்கு, கண்டிப்பாக வைட்டமின் இ தேவை. முளை கட்டிய தானியங்கள், பாதம், பிஸ்தா போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், வேர்க்கடலை சாப்பிட்டால், இளமை உங்கள் கைவசம்.
3. அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு செலினியம், துத்தநாகம் எளிதில் கிடைத்துவிடும். சைவம் சாப்பிடுபவர்கள் அதற்கு மாற்றாக எள் மற்றும் கொட்டைப் பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.
4. வெற்றிலையில் குரோமியம் மிக அதிக அளவில் உள்ளது. தினமும் இரண்டு வெற்றிலைகளை மென்று சாப்பிட வேண்டும். இளமையைத் தக்க வைப்பதுடன், சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
5. சுத்திகரிக்கப்படாத நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் மட்டுமே நல்லது. மற்ற எண்ணெய்களுக்கு, கூடிய விரைவில் குட்பை சொல்லுங்கள்.
6. காலையில் குடம் குடமாகத் தண்ணீர் குடிக்க வேண்டாம். தினமும், ஒரு மணி நேரத்துக்கு ஒரு டம்ளர் என்ற அளவில் குடித்தாலே போதுமானது.
7. முகம் கழுவியதும் அல்லது குளித்ததும், டவல் அல்லது கைக்குட்டையால், மேலிருந்து கீழ்நோக்கி அழுந்தத் துடைக்கக் கூடாது. வயது ஏற ஏற, நம் சருமம் தளர ஆரம்பிக்கிறது. அதை, நாமும் அழுத்தினால், சீக்கிரமே முகம் தொங்கிவிடும். எப்போதுமே, முகம் கழுவிய பின், ஒற்றி எடுப்பது தான் சிறந்தது. இல்லையெனில், அப்படியே விட்டுவிடலாம்.
8. குளிக்கும்போது, சோப்பைக் கைகளில் தேய்த்துக்கொண்டு, அந்த நுரையை உடல், முகம், கை, கால்களில் கீழிருந்து மேல்நோக்கித் தடவ வேண்டும். சோப்புக்குப் பதில், கடலைமாவு, பயத்தமாவு போட்டால், இன்னும் நல்லது. இவற்றில் எண்ணெய்த் தன்மை இருப்பதால், முகத்தில் வறட்சி நீங்கி, பளபளப்பு கிடைக்கும்.