Home » சிறுகதைகள் » சந்தனமா? சவுக்கா?
சந்தனமா? சவுக்கா?

சந்தனமா? சவுக்கா?

ஒரு அரசன் வேட்டைக்கு வந்தபோது கூட்டத்திலிருந்து பிரிந்துவிட்டான். அவனுக்குத் தாகமும் பசியும் வாட்டியது. அதுவோ அடர்ந்த காடு. மனிதர்கள் கிடைப்பார்களா என் அலைந்தான். தூரத்தில் ஒருவன் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அவனருகில் சென்றான்.
“தாகத்துக்கு நீர் கிடைக்குமா?” என்று வினவினான். அந்த ஆள் தன்னுடைய குடுவையிலிருந்த நீரைக் கொடுத்ததோடு தான் கொணர்ந்திருந்த கம்பங்கூழையும் தந்தான்.
வறுமையிலும் இரக்கக்குணத்தோடு இருந்த அவனுக்கு ஏதாவது உபயோகமான பரிசை அளிக்க விரும்பினான் அரசன்.
தனக்குச் சொந்தமான சந்தனவனத்தைக் காண்பித்து, “வேண்டிய மரங்களை வெட்டிக்கொள்!” என்று அனுமதிச் சீட்டும் வழங்கினான்.
அதற்குள், அவனது பரிவாரங்களும் அவனைப் பார்த்துவிட்டன. அரசன் அவர்களோடு சென்றான். ஆறு மாதம் கழித்து மீண்டும் வேட்டையாட வந்தான். காட்டானை அவன் கண்கள் தேடின.
அவனும் அரசனைப் பார்த்ததும் ஓடிவந்து, “நல்லாயிருக்கீங்களா? உங்க உதவிக்கு ரொம்ப நன்றிங்க!” என்றான்.
“இப்போ வசதியாயிருக்கியா?” என்று விசாரித்தான் அரசன்.
“ரொம்ப சவுகர்யமா இருக்கேங்க. ஒருவேளை அரிசிச்சோறு சாப்பிடுகிறேன். முதல் நாள் மரத்தை வெட்டினப்போ அதிகாரிங்க வந்துட்டாங்க! அனுமதிச்சீட்டைக் காண்பிச்சதும், “நீ சிரமப்படாதே நாங்களே வெட்டிக்கறோம்’ன்னுட்டாங்க. முந்தி தினம் கால்ரூவா கிடைக்கும். இப்ப ஒரு ரூபாய் தராங்களே! அதோட வேலை செய்த கை சும்மா இருக்குமா? கூடமாட வெட்டறதுதான்!” என்றான் அப்பாவியாக.
அரசன், “ஏமாற்றுப்பேர்விழிகள் இல்லாத இடமே இல்லையா?” என்று அயர்ந்துபோனான். சந்தனமரத்துக்கும் சவுக்குமரத்துக்கும் வித்தியாசம் காணாதவன் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தான். இதனால் உலக அறிவும் அதிர்ஷ்டத்தைப் புரிந்து பயன்படுத்திக்கொள்வதும் முன்னேற்றத்துக்கு முக்கியம் என்பது புரியுதா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top