Home » படித்ததில் பிடித்தது » வலது கை, இடது கை!!!
வலது கை, இடது கை!!!

வலது கை, இடது கை!!!

“அப்பா,கோயிலின் கதவின் முன்னால் என்னப்பா எழுதி இருக்கு?”
ஐந்து வயது பையனைக் கூட்டிக் கொண்டு கோவிலுக்கு வந்த இடத்தில், வாசலில் ஸ்வாமி தெரியாமல் பெயர் பொறித்து இருந்த இரும்பு கதவைப் பார்த்து தான் பையன் கேட்டான்.
“அது ஒன்னும் இல்லப்பா, இந்த கதவை கோவிலுக்கு தானமா கொடுத்தவங்க பேர் அதிலே போட்டுருக்காங்க. அவ்வளவு தான்.”
“அதுக்காக உள்ளே இருக்கிற ஸ்வாமி கூட தெரியாமல் பேரப் போடணுமா அப்பா?”
“உனக்குத் தெரியுது, அவங்களுக்குத் தெரியலேயே. அங்க இருக்கிற விளக்கைப் பார், வெளிச்சம் தெரியாம பேர் போட்டு இருக்காங்க. அப்பத்தானே அவங்க பேரு எல்லாருக்கும் தெரியும்”
ஐந்து வயது பையன் சமாதானம் ஆன மாதிரித் தெரியலே.
“இதெல்லாம் இப்பத்தான்பா. முன்னை எல்லாம் இப்படிக் கிடையாது. உனக்கு ஒரு கதை சொல்றேன் கேளு.”

“குரும்பருத்த நம்பி என்பவர் திருமலையில் குயவனாக இருந்தார். தினம் மண் பானைகள் செய்து வியாபாரம் செய்து வந்தார். தினமும் மீதி இருக்கும் மண்ணில், மண் புஷ்பம் செய்து திருமலையப்பனுக்கு சமர்ப்பித்து வந்தார். திருமலையப்பனும் அவன் கொடுத்த புஷ்பத்தை
உகந்து தன் தலையில் சூட்டிக் கொண்டான்.

அந்த சமயம் அந்த ஊரை ஆண்டு வந்த தொண்டமான் சக்ரவர்த்தி தினமும் திருமையப்பனை தரிசனம் செய்வதை குறிக்கோளாகக் கொண்டிருந்தான். தினமும் அவரை அப்படி அனுபவிப்பான். சில நாட்களாக திருமலையப்பனிடம் வித்தியாசத்தை உணர்ந்தான். ஆம், அவரின்  தலையில் மண் புஷ்பத்தைக் கண்டு ஆச்சர்யப்பட்டு, தன் சந்தேகத்தை அவரிடமே கேட்டு விடுவோம், “ஸ்வாமி, தங்களிடம் சில நாட்களாக வித்தியாசம் தெரிகிறதே?” என்று கேட்டான்.
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே?”
“இல்லை ஸ்வாமி, தங்கள் சிரசிலே புதிதாக மண் புஷ்பம் காணப்படுகிறதே? அதுவும் அழகாகத் தெரிகிறதே? எனக்குத் தெரியாமல் தங்களுக்கு அணிவிப்பது யார் என்று நான் தெரிந்து
கொள்ளலாமா?”
“அதுவா, அது ஒரு அன்பன் எனக்கு ஆசையாக கொடுத்தான். அவன் சூட்டும் போது என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளான்.”
“அப்படி என்ன சுவாமி நிபத்தனை விடுத்துள்ளான், என்னிடம் கூறக் கூடாதா?”
“அவன் அனுமதி இல்லாமல் யாருக்கும் அவனைப் பற்றி சொல்லகூடாது.எதற்கும் நாளை அவனிடம் அனுமதி கேட்டு உனக்குச் சொல்கிறேன்”
மறுநாள் தொண்டைமான் சக்ரவர்த்தி வந்து கேட்டுவிடுவானே என்று, திருமலையப்பனும் குயவன், எப்போதும் போல மண் புஷ்பத்தைக் கொடுக்கும் போது,

“குயவா, ஒரு நிமிஷம் இரு, உன்னிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டும்.”
“ஸ்வாமி,என்னிடமா?”

“ஆமாம், தொண்டமான் சக்ரவர்த்தி இந்த புஷ்பம் யார் கொடுக்கிறார்கள் என்று கேட்கிறான். நீ தான் சூட்டுகிறாய் என அவனிடம் தெரிவிக்கலாமா?”
“வேண்டாம் ஸ்வாமி. நான் தான் புஷ்பம் சூடுகிறேன் என்பது யாருக்கும் தெரிய வேண்டாம்.
நான் செய்வது சாதாரண தொண்டு, அதை உலகம் அறியச் செய்யவேண்டுமா? வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூடத் தெரியக் கூடாது என்று இருக்கும் போது, சாதாரண ஒரு புஷ்பம் கைங்கர்யம் யாருக்கும் தெரியப்படுத்தாதிர்கள் ஸ்வாமி. அப்படி தெரியப் படுத்தணும் என்றால் எனக்கு உடனே நீங்கள் முக்தி கொடுக்கவேணும்” என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டான் நம்பி.
தர்மசங்கடத்தில் ஆழ்ந்தார் திருமலையப்பன். காலையில் எப்போதும் போல தொண்டமான் சக்ரவர்த்தி வந்தார்,. திருமலையப்பன் நேற்று நடந்த விஷயத்தைக் கூறி, தான் அவனுக்கு முக்தி கொடுக்க தீர்மானித்து விட்டு, மன்னரிடம் புஷ்பம் யார் சமர்ப்பிக்கிறார்கள் என்று கூறினார். இப்படியெல்லாம் கூட மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்து தொண்டமான் சக்ரவர்த்தி ஊர் முழுதும் அறியும்படி செய்தான்.”
பையனுக்கு ஒரு நல்ல நீதி போதனைக் கதையை சொல்லிய திருப்தியில் பையனைப் பார்த்தார். பையனும் திருப்தி அடைந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top